Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

இன்னொரு சர்வாதிகாரத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

ராஜபக்ஷ சர்வாதிகாரத்திற்குப் பதிலாக இன்னொரு சர்வாதிகாரத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதெனவும் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஒரு கெட்டதுக்குப் பதிலாக இன்னொரு கெட்டதை தெரிவு செய்யாமலிருப்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி சுட்டிக் காட்டுகிறது. அந்தக் கட்சியின் பிரச்சரச் செயலாளர் புபுது ஜயகொட இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டடவாறு கூறினார். புபுது ஜயகொட அவர்கள் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

தோழர் லலித் குமார் வீரராஜ் மற்றும் தோழர் குகன் முருகானந்தம் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் கடத்தப்பட்டார்கள். அது 2011செப்டம்பர் 9ம் திகதி. அவர்கள் இருவரையும் குறித்து அரசாங்கம் பல்வேறு சமிக்ஞைகளைக் காட்டியது. ஆனால், இது வரையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் விசாரணையும், அதனை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவும் தொடர்பிலான சம்பவங்களை எடுத்துக் கொண்டு சிலர் நீதிமன்றத்தின் சுயாதீனம் இல்லாமலாகிவிட்டது என்ற தோரணையில் பார்க்கின்றனர். ஆனால் ஜனநாயகம் சீரழிந்து வருவதைக் காட்டும் சம்பவங்களில் ஒன்றாகவே நாங்கள் இந்தச் சம்பவத்தையும் பார்க்கினறோம்.

கிடைத்துள்ள தகவல்களின்படி சிறைச்சாலையில் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு தேடிப் பிடிக்கப்பட்ட 27கைதிகள் சுட்டுச் சாகடிக்கப்பட்டார்கள். அந்த மரணங்கள் சம்பவிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை. சமூகம் இந்தப் பிரச்சினையில் உதாசீனமாக நடந்துக் கொள்கிறது. யாரும் கேள்வி கேட்பதில்லை.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் விளக்கேற்றினார்கள் என்று கூறி விடுதிகளுக்குள் நுழைந்து இராணுவம் தாக்கியது. அதனை எதிர்த்து மாணவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களை மிருகத்தனமாக தாக்கினார்கள். பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 4மாணவர்களை கைது செய்தார்கள். இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் 11பேரை தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கெதிரான பயங்கரவாத் செயல் தொடர்ப்பில் எந்த சாட்சியும் கிடையாது. தமது மறைந்த உறவினர்களை நினைவு கூர்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதே போன்று சமூகப் போராட்டமொன்றும் நடந்தது. அதன் நோக்கம் செயற்பாடுகள் போன்றவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அங்கு இறந்தவர்களை நினைவு கூறுவதை பலாத்காரமாக தடுக்க முடியாது. பிரச்சினைகளுக்கு அவ்வாறாக தீர்வுகாண முற்பட்டதனால்தான் 30வருட யுத்தம் நடந்தது. அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு நடந்துக் கொள்ளுமேயானால் மேலும் 60வருட யுத்தத்திற்கு வழி வகுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்குக் காரணம் அரசாங்த்தின் கருத்துக்களோடு அவர்கள் உடன்படாமை தான். அரசாங்கத்தின் அரசியலோடு உடன்படாத அரசியலில் ஈடுபட்டமையால்தான் லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டார்கள். அப்படியில்லாமல் அவர்கள் ஆயுதச் செயற்பாட்டிலோ சமூக விரோதச் செயல்களிலோ ஈடுபடவில்லை. பிரதம நீதியரசரின் விடயத்தை எடுத்துக் கொண்டாலும் நிலைமை இதுதான். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை இப்படியான பிரச்சினையொன்று இருக்கவில்லை. 18வது அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போதும், தொழிலானர் வேலை நிறுத்தப் போராட்டடங்களை களைக்கும் போதும் அவர் அரசாங்கத்துடனேயே இருந்தார். இந்த வருடம் 11தொழிலாளர் போராட்டங்கள் களைக்கப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளியும், ஒரு மீனவரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததன் பின்னர் இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்ய வேண்டும என்று ஆலோசனையும் வழங்கப்பட்டது. திவி நெகும சட்டமூலம் குறித்து மாற்றமான தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்ற எல்லா நேரங்களிலும் அரசாங்கத்தோடு இருந்தும் கூட ஒரு சட்டமூலத்திற்கு எதிராக செயற்பட்டமையால் நீக்க வேண்டுமென்று அரசாங்கம் எண்ணுகிறது.

குற்றவியல் விசாரணையைத் தயாரிக்கும் போது தெரிவிக்குழு விடயத்தில் தான்தோன்றித்தனமாக அரசாங்கம் நடந்துக் கொண்டது. குற்றவியல் நீதி விசாரணைக்கு ஒப்பமிட்ட நாடடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக ஒப்பமிட்டோமென்றே தெரியவில்லை. அவர்கள் வெற்றுத் தாள்களில் ஒப்பமிட்டுள்ளார்கள். பிரதம நீதியரசரோடு தனிப்பட்ட பிரச்சிணைகளைக் கொண்டுள்ள விமல் வீரவன்ச, ராஜித சேனாரத்ன ஆகியோர் தெரிவிக்குழுவுக்கு பெயர் குறிப்பிடப்பட்டனர். தெரிவுக்குழு முன்னிலையில சாட்சியமளிப்பதற்காக பிரதம நீதியரசர் வரும்போது மரியாதை செலுத்த வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பிற்போக்குத்தனத்தை அரசாங்கம் காட்டியது. அதன் உச்சக்கட்டம்தான் பிரதம நீதியரசரை அவமானப்படுத்தும் விதத்தில் வார்த்தைகளைப பயன்படுத்தி தெரிவுக்குழுவில் கதைத்தமை. விளக்கமளிப்பதற்குள்ள உரிமை கூட மீறப்பட்டது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச்சபை மற்றும் நீதிமன்றம் ஆகிய நிறுவனங்கள் சீரழிந்துள்ளன. அவைகளில் இருக்கும் நபர்களுக்கு ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற  குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எமது நாட்டின் எதிர்க் கட்சி இந்தப் பிரச்சினையில், நீதி மன்றத்தின் சுயாதீனம் என்று கூறிக் கொண்டு தேங்காய் உடைத்து தமது அதிகாரத்துக்கான திட்டத்தை செயற்படுத்த முயற்சி செய்தது.

இந்தப் பிரச்சிணைக்கான தீர்வு, நீதிமன்றத்தை வலுப்படுத்துவதனாலோ நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதனாலோ கிடைக்கப்போவதில்லை. நீதிமன்றத்தை சுயாதீனமாக்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. இந்த நிறுவனங்களால் மக்கள் பரமாதிபத்தியம் பிரதிநிதித்துவப்படுவதில்லை. ஆகவே, மக்கள் அதிகாரத்தை தமது கையில் எடுக்க வேண்டும். அதற்காக ஒருங்கிணைய வேண்டும். ராஜபக்ஷ சர்வாதிகாரத்திற்கு எதிராக இன்னொரு வித சர்வாதிகாரத்தைக் கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதனால், இந்தப் பிரச்சினையின் முன்னால் செயல்படாமல் இருக்கும் மக்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், மௌனமாக இருக்காமல் முன்னிலைக்கு வாருங்கள். செயல்படுங்கள். இல்லையாயின் ஜனநாயத்திற்காக நடத்தப்பட்டுவரும் போராட்டம் ஒரு கெட்டதுக்குப் பதிலாக இன்னொரு கெட்டதை நோக்கிச் செல்லக் கூடிய ஆபத்து இருக்கிறது. கவனமாக செயல்படுங்கள்" என்றார்.

லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டமைக்கு எதிராகவும் அவர்களை விடுதலை செய்யமாறு மற்றும் கடத்தல் காணாமலாக்குதலை நிறுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக நாளை பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் நடைப்பயணம் கோட்டை புகையிரத நிலையம்வரை சென்று ஆரப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாகவும் புபுது ஜயகொட கூறினார். இந்த ஊடகச் சந்திப்பின்போது கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த சில்வாவும் கலந்துக் கொண்டிருந்தார்.