Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

மரணம் உங்கள் கண்ணெதிரே, இதோ... உங்கள் முகத்துக்கு நெருக்கமாக.

மனிதம் உறங்கியது மிருகம் விழித்துக் கொண்டது..- வெலிக்கடை சிறைச்சாலை பயங்கரம்

அன்று நவம்பர் 9ம் திகதி. வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள பாதையில் வாகனங்கள் வேகமாக போவதும் வருவதுமாக இருந்தன. விஷேட வாகனங்கள் சில திடீரென சிறைச்சாலை வாசலின் முன்னால் நிறுத்தப்பட்டன.

விஷேட அதிரடிப் படைக்குச் சொந்தமான வாகனங்கள் என்பதால் அனைனவரின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியது. அதிலிருந்து இறங்கிய STF வீரர்கள் திடு திடுவென சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள்.விஷேட அதிரடிப்படை (STF) போலிஸ் மா அதிபரின் கீழ் செயற்பட்டாலும், இந்த விஷேட நடவடிக்கைக்கு விஷேட அதிரடிப்படை வருவதை போலிஸ் மா அதிபர் இலங்ககோன் அறிந்திருக்வில்லை என்பது பிரபலமான தகவல்.

அப்படியானால் இந்த விடயம் யாருக்குத் தெரியும்? விஷேட அதிரடிப்படையின் கமாண்டர் S.R.A.C. ரணவக என்ற பிரதி போலிஸ் மாஅதிபரை, போலிஸ் மாஅதிபருக்கும் அறிவிக்காமல் இந்த முறைகேடான நடவடிக்கைக்கு நேரடியாக கட்டளையிடப்பட்டுள்ளது. ரணவக இந்த வேலையை உதவி போலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் ஜகத் விஜேசிங்கவிடம் ஒப்படைக்கிறார்.

சிறைச்சாலை வாசலில் காவலுக்கு நின்ற சிறைக் காவலர்கள் எஸ்.டீ.எப். வீரர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். இந்த திடீர் நுழைவை முதல் நிமிடத்திலேயே அவர்கள் தடுக்கிறார்கள். ஆனால் அதற்கான பதில் கடுமையாக இருந்தது.

' இது செகட்ரியின் ஓடர்"

இலங்கையின் தன்னிச்சையாக செயற்படும் செக்ரடரி யார் என்பது தெரியுமென்பதால், சிறையதிகாரிகள் மௌனமாகி விடுகிறார்கள். சிறைச்சாலைக்குள் எஸ்.டீ.எப். வீரர்கள் நுழைவதை பெரும்பாலான சிறையதிகாரிகள் விரும்பவில்லை. செகட்ரியின் ஓடர் என்றால் யாருடைய அனுமதி வேண்டும்? பொதுவாக சிறைக் கூடங்கள் மூடப்பட்ட பிறகுதான் போலிஸார் கூட சிறைச்சாலை பரிசோதனைதக்கு வருவார்கள். அதுவும் பின்னேரம் 5.00 மணிக்குப் பின்னர்தான். பரிசோதனைக்கு போலிஸார் வருவதாக இருந்தால் அதனை போலிஸ் மா அதிபர் சிறைச்சாலை அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். மிக மிக நம்பிக்கையான தகவல்களுக்கு ஏற்ப அப்படி ஒரு அறிவித்தல் அன்று வழங்கப்பட்டிருக்கவில்லை. சந்திரசிரி கஜதீர என்னதான் பல்டி அடித்தாலும் அதுதான் உண்மை.

இதில் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் கைதிகள் சிறைக் கூடங்களுக்கு வெளியே இருந்த போது பட்டப் பகலில் இவர்கள் வருகிறார்கள். அது மோதலுக்கான அறிகுறி என்பது தெரிந்தது. அதாவது, கைதிகளுடன் மோதிக் கொள்வதற்காகவே எஸ்.டீ.எப். வீரர்கள் வருகிறார்கள். அது மாத்திரமல்ல, பொதுவான பரிசோதனை என்றால் போலிஸார்தான வருவார்கள். விஷேட அதிரடிப் படையினர் வரமாட்டார்கள். இவர்கள் 'விஷேட" வேலையொன்றுக்குத்தான் வந்திருக்கறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.அதன் பின்னர் நடந்தவற்றை நாங்கள் சொல்லப் போவதில்லை. சம்பவங்களை நேரடியாகக் கண்ட ஒரு தடுப்புக்காவல் கைதி சிறைச்சாலைக்குள் இரத்தக் கறை படிந்த அந்த அனுபவத்தை சொல்கிறார்.

STF. வந்திருப்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். துரைமாரிடம் வேலை செய்யும் கைதிகள் தான் முதலாவதாக இந்தச் செய்தியை கொண்டு வந்தார்கள். எஸ் டீ எப் வீரர்களோடு அதிகாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் கிடைத்தது. அவர்கள் யாரையோ தேடுவதை நாங்கள் உணர்ந்தோம். சீருடை அணியாத சிலர் சீருடையில் வந்தவர்களுக்கு யாரையோ அடையாளம் காட்ட முயல்வது தெரிந்தது. அதன் பின்னர், எல் வாட்டில் இருந்த நான்கு பேரை அவர்கள் கொண்டு வந்திருந்த விலங்குகளைப் பூட்டி வெளியே எடுக்க முயற்சி செய்தார்கள். அப்போது அவ்விடத்தில் இருந்த ஒரு சிறைச்சாலை பாதுகாவலர் எஸ்.டீ.எப். அதிகாரியோடு வாக்கு வாதம் செய்தார். இதைப் பொறுக்காத எஸ்டீஎப் அதிகாரி ஜெயிலர் துரையை அடித்தார்.

அவ்விடத்திலிருந்த எமது சக கைதியொருவர் ஏதோ சொல்ல முற்பட்டார். அந்த எஸ்டீஎப் அதிகாரி துப்பாக்கிப் பிடியினால் அவரை தாக்கியதோடு காலாலும் உதைத்தார். பின்னர் அவரை கொடூரமாக சுட்டுக் கொன்றார். உடனே எங்களோடு இருந்த சக கைதிகள் குழப்பமடைந்தார்கள். கையில் விலங்கு போடப்பட்டிருந்த அந்த நான்கு பேரையும் STF வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள். அதன் பின்னர் எங்களைச் சேர்ந்த சிலர் திடீரென பாய்ந்து துப்பாக்கிகளை பறித்துக் கொண்டார்கள்." அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்களில் ஒரு பக்கத்தை நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் பார்க்காத இன்னொரு பக்கமும் இருக்கிறது. நீங்கள் பார்க்காத அந்தப் பக்கத்தில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

சிறைச்சாலையில் ஆயுதக் களஞ்சியத்தை கைதிகள் உடைத்தார்கள் என்பது அப்பட்டமான பொய். எல் வாட்டுக்குப் பக்கத்திலோ, செபல் வாட்டுக்குப் பக்கத்திலோ ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்பட்டிருக்கவில்லை. செபல் வாட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் நுழைவாயிலுக்கு பக்கத்திலேயே அது அமைந்திருக்கிறது. சம்பவம் நடக்கும் போது எந்தக் கைதியும் அந்தப் பக்கம் செல்லவில்லை. மற்றது. ஆயுதக் களஞ்சியம் இருக்கும் அறைச் சுவரை உடைத்து ஆயுதக் களஞ்சியத்துக்குள் கையை விட்டு இலேசாக ஆயூதங்களை எடுக்க முடியாது. 7, 8 பூட்டுக்கள் போடப்பட் களஞ்சியம் அது. அவ்வாறு சுவரை உடைத்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறு விதமாக திரும்பியிருக்கும். ஆயுதக் களஞ்சியத்தில் இருப்பவை எல்லமே டீ 56 துப்பாக்கிகள். அங்கே ஏ.கே 47 கிடையாது. ஆனால் கூரைக்கு மேல் இருந்த கைதிகளின் கைகளில் இருந்தவை ஏகே 47 துப்பாக்கிகள். அவற்றை சிறைச்சாலைக்குள் கொண்டு வந்தது எஸ் டீ எப்.

கைதிகளை துடிக்கத் துடிக்க கொன்று விட்டு கொலை வெறியர்கள் வெளியேறும்போது இராணுவத்தின் திடீர் தாக்குதல் படை உள்ளே நுழைகிறது.

துப்பாக்கி வேட்டுக்களை பொழிந்துக் கொண்டே சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள். அவர்களது வேட்டுச் சத்தத்தால் முழு சிறைச்சாலையூம் அதிர்ந்தது. பாரிய படுகொலை வேட்டை நடப்பதற்கான அறிகுறி தென்பட்டது. சிறைச்சாலையே அச்சத்தால் நிலை குலைந்தது. உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதி தர்மங்கள் - மனித உரிமைகள் குறித்த பிரகடனங்கள்- கைதிகள் மற்றும் சிறைச்சாலை குறித்த சர்வதேச விதிமுறைகள் அனைத்தும் துச்சமென தூக்கி வீசப்பட்டன. வெறிபிடித்த ஒருவனின் உத்தரவுகளை ஏற்று நடக்கும் அவர்கள் சிறைச்சாலைக்குள் நுழைகிறார்கள். சிறைச்சாலைக்குள் கேட்ட அந்த நாசமாய்ப் போன துப்பாக்கிகளிலிருந்து சீறிப்பாய்ந்த குண்டு மழையின் சத்தம் அந்தப் பிரதேசத்தையே கதிகலங்க வைத்தது. நடவடிக்கை அதோடு நின்றுவிடவில்லை. சூடு பட்டு கடைசி மூச்சு விட்டுக் கொண்டு இன்னும் ஒரு வினாடியாவது வாழ முடியுமா என்று முனகிக் கொண்டிருந்த பல கைதிகள் எந்த உதவியுமில்லாமல் உயிரிழந்தார்கள்.

அவர்களை எடுத்துச் செல்ல வர வேண்டிய ஆம்புலன்ஸ் வேண்டுமென்றே தாமதமாக அனுப்பட்டதுதான் அதற்குக் காரணம். நிலைமை கடடுப்பாட்டுக்குள்- அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாக 10ம் திகதி காலையில் அறிவிக்கப்பட்டாலும், உண்மை அதுவல்ல. 10ம் திகதி இரவு கூட சிறைச்சாலைக்கு மரண இரவு தான். தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தது 10 கைதிகளின் உடல்களை துப்பாக்கிக் குண்டுகள் பதம்பார்த்திருந்தன. 1500 ரூபா அபராதத்தை செலுத்த வழியில்லாமல் இரண்டு மூன்று நாட்களுக்க முன்ன தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தையான அஸ்வர்தீன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் என்ன பாவம் செய்தார்? அவரது குழுந்தை என்ன பாவம் செய்தது அனாதையாவதற்கு?

பிணம் தின்னும் நாட்டின் அரசாங்கம் இப்போது பல்வேறு கதைகளைக் கூறுகிறது. வெலிக்கடையில் நடத்திய மிருகத்தனமான படுகொலையை மூடிமறைக்க ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் கண்ணில் மண் தூவ முயற்சிக்கிறது. பிரபல அமைச்சர்கள் ஊடக சந்திப்புகளை நடத்தி மரணமடைந்த கைதிகளின் நடத்தையில் குறைபாடுகளைக் காட்டுகிறார்கள். இவர்கள் பாதாள கோஷ்டித் தலைவர்கள். - பல்வேறு குற்றங்களை செய்திருக்கிறார்கள்- இவர்கள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், இவர்கள் கொல்லப்பட வேண்டியவரகள் என்று இப்படியான கதைகளைக் கூறி வெலிக்கடை களியாட்டத்தை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

இங்கே கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள்.சிங்களவரோ, தமிழரோ முஸ்லீமோ கிடையாது. மனித உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்பட்டுள்ளன. சிறைச்சாலை சுவரில் "கைதிகளும் மனிதர்களே" என்று எழுதினால் மட்டும் மனித நேயம் வந்து விடாது. மனிதனை மனிதானாக மதிக்க வேண்டும். இந்த வெறிபிடித்த முதலாளித்துவ சர்வாதிகாரப் பேய்களுக்கு மனிதாபிமானத்தை என்ன விலைக்கு விற்க முடியும் என்பது மட்டும்தானே தெரியும். சிக்கிவிடாதீர்கள். ஏமாந்து விடாதீர்கள். கணப்பொழுது கூட தாமதிக்காது இந்த மிலேச்சத்தனத்துக்கு எதிராக செயல்படுங்கள். ஏனென்றால் மரணம் உங்கள் கண்ணெதிரே, இதோ... உங்கள் முகத்துக்கு நெருக்கமாக.

www.lankaviews.com/ta