Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்!

சவூதியில் மனிதாபிமானமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்ட ரிசான நபீக்கிற்கு அனுதாபம் தெரிவித்து விடுதலைக்கான பெண்கள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது  அந்த அறிக் கை வருமாறு:

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் இந்தச் சம்பவம். ஆகவே ரிசானாவின் பிரச்சினை குறித்து விரிவான சமூக உரையாடலொன்று உருவாக வேண்டியிருக்கின்றது. 'அய்யோ பாவம்" என்று ஒதுங்கிக் கொள்ளும் நிலை  இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை எங்களில் யாருக்குமே கிடையாது. ரிசான நபீக்கின் மரணத்திற்கு பாரிய  சமூகக் கொடுமைகள்தான் காரணமாக இருக்கின்றன.

இலங்கை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு செல்வது 1977 நவ தாராளமய முதலாளித்துவம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு ஒரேபாய்சலாக அதிகரித்தது. 35 வருடங்களுக்குப் பின்னர்  பெண்களை பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலமாகவே  இலங்கை பெருமளவு வெளிநாட்டு செலவானியை பெற்றுக் கொள்கின்றதேயன்றி, கைத்தொழில் ஏற்றிமதி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி அல்லது உற்பத்திச் சேவைகள் மூலமாக அல்ல. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெண்களின் பணத்தைக் கொண்டே ஆசியாவின் ஆச்சரியத்தை காட்டப் போகிறது. ஆச்சரியத்தின் பெயரால் கட்டியெழுப்பப்படும் இந்த அதிவேக பாதைகள் மற்றும் நகர அலங்கரிப்புகள் ஆகியவற்றுக் கீழ் ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட பெண்களின் உதிரம். கண்ணீர், மற்றும் வியர்வை தேங்கி நிற்கிறது. அவற்றுக்காக விலை கொடுப்பது அவர்கள்தான்.

அவர்களது பணத்தால் விளையாட்டு காட்டும் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களின் உயிர் பாதுகாப்பிற்காகவும், சிறந்த சேவை நிபந்தனைகளுக்காகவும் எந்த முன்னேற்பாடுகளையும் செய்வதில்லை. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சில பெண்கள் அடிமை முகாம்களில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள், மேலும் பலர் சதாகால அங்கவீணர்களாகவோ, உயிரற்ற உடல்களாகவோ தான் இங்கு வருகிறார்கள். இல்லாவிட்டால் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனநோயாளர்களாகவும் உடல் உபாதைகளுக்கு ஆளானவர்களாகவும் வருகிறார்கள். அரசாங்கம் 'நாட்டின் வீரர்கள்" என்று பட்டம் சூட்டிக் கொண்டு அலங்காரமான பொய்களை சொன்னாலும் அவர்களுக்காக தமது கடமைகளை செய்வதில்லை. ரிசானாவின் மரண தண்டணை சம்பந்தமான பிரச்சினையின்போது ஊடக கண்காட்சிகள் நடத்தப்பட்டனவேயன்றி தேவையான தலையீடுகள் செய்யப்படவில்லை.

ரிசானா விடலைப் பருவத்தில் இருக்கும்போதே தனது குடும்ப வறுமையை போக்குவதற்காக பொய் வயதைக் காட்டி வெளிநாட்டுக்கு சென்றார். அவர்களுக்கு உள்நாட்டிலேயே தொழிலையும், வருமானத்திற்கான வழியையும் பெற்றுக் கொடுக்க இலங்கையின் பொருளாதாரத்தினால் முடியவில்லை. பெண்களை அடிமைத் தொழிலுக்கு விற்பதன் மூலமாகவே இலங்கை வருமானத்தை தேடிக்கொள்கிறது. அவர்களுக்கு வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க இந்த நாற்றமெடுக்கும் சமூக முறையால் முடியவில்லை. இது, பாரிய சமூகக் கொடுமையின் இன்னுமொரு பலி மாத்திரம்தான். ஒவ்வொரு வினாடியிலும் பெண்கள் அதற்குள் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ரிசானாவின் மரணத்தைக் கேட்டு வேதனைப்படுவதோடு, அந்த சமூகக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வினாடியாக இதனை ஆக்கிக் கொள்வோம். ரிசானாவிற்கும், பாலைவனத்தில் பாடுபடும் ஒடுக்கப்பட்ட இலங்கை பெண்களுக்கு அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.

 விடுதலைக்கான பெண்கள் அமைப்பு

-நன்றி: லங்கா வியூஸ்