Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

மே - இல் தொழிலாளர்களோடு தெருவெங்கும் கார்ல்மார்க்சும், ஏங்கெல்சும். (1.5.2013)

தனி ஒருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவிற்கு ஓழிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு ஒருதேசம் பிறிதொரு தேசத்தை சுரண்டுதலும் ஓழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கப்பகைமை எந்த அளவிற்கு மறைகிறதோ, அதே அளவிற்கு தேசங்களுக்கிடையிலான பகையும் இல்லாது ஒழியும். ( கார்ல்மாக்சு . எங்கெல்சு )

1, மே யில் இந்த மாமனிதர்கள் முதன்மையாளர்கள்.. ஏனெனில் இன்று தெருவில் இறங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் எவ்வாறு சுரண்டிக் கொள்கிறார்கள்? அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, எவ்வாறு ஆள்கிறார்கள் என்பதை மிகதெளிவாக, முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் அடங்கிப்போகும் அளவிற்கு அன்றும் இன்றும் அந்த மாமனிதர்களின் அரசியல் பொருளாதார சமூக ஆய்வு பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் செழிப்பாகி வளர்ந்து வருகிறது.

மாக்சியமானது அரசியல், சுரண்டல், கம்யூனிசம் என்ற விடயங்களைத்தானே பேசுகிறது. ஆதலால் அவர் அவர் தமக்கு தெரிந்த மாக்சிய அறிவோடு அல்லது அறிவில்லாமலும் மாக்சியத்திற்கு வறட்டுத் தத்துவம் என்று தீர்ப்பு வழங்கி விடுகின்றனர்.

பல்வேறு தத்துவஞானிகளின் வறட்டும், வறுமையும் கொண்ட தத்துவங்களில் இருந்துதான் மாக்சியம் செழிமை பெற்று வளர்ந்தது. பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வாக பலதத்துவஞானிகள் அன்பு, இரக்கம், மனச்சாட்சி போன்ற மத அடிப்படை சார்ந்த கோசங்களைத்தான் மீளவும் உரைத்தனர். ஆனால் தாம் முற்போக்கானவர்கள் என்ற மாயயை தோற்று வித்தனர். இவ்வாறானவர்களில் பலமேற்கத்தைய தத்துவவியலாளர்களை நாம் அறிந்திருக்கா விட்டாலும், கீழைத்தேச நாடுகளில் புத்தர் முதற்கொண்டு அவரது அடித்தோன்றலாக விவேகானந்தர், ஓசோ போன்றவர்கள் பற்றி பேசப்படுகின்றன.

இவர்கள் மூலமாக சொல்லப்படுவது ஆசைகளைத் துற பிச்சையும் மெடு, சகிப்புத்தன்மைகொள், ஆணவத்தை விலக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக உன்னையே மாய்த்துக் கொள், நீயே உயர்ந்த ஞானி - எத்தனை ஆண்மீகவாதிகள் தோன்றினாலும், அன்றுதொட்டு இன்றுவரை இதுதான் பேச்சும், ஆட்டமும்.

அடிப்படையில் வாழ்வின் தளத்தை மறுதலித்து ஒருசொட்டும் நடமுறையை எண்ணி பார்க்காத இவர்கள் சொல்வதுதான் வறட்டுத்தத்துவம். இதை கோயில் குளம் ஆன்மீகம் எனப்பேசுபவர்களின் நடைமுறை முரண்பாட்டில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முற்றிலும் மாறாக இவ்வாறான எல்லா போக்குகளையும் மாக்சியம் மிகத் தெளிவாகவும் சமூக விஞ்ஞானம் சார்ந்தும் விளக்குகின்றது. அதாவது மனிதனின் எண்ணங்களின் தோற்றுவாய் என்பது சுற்றுச்சுழலே, வாழ்வின் தளமே என்கின்றது. நாம் ஒருபொருளை பார்க்கும் பொழுது அதாவது புலன்உணர்வுக்கு ஆளாகிய நிலையில் அந்த எண்ணப்பதிவுகள் மனதில் சிந்தனைகளைத் தோற்றுவிக்க எவற்றையாவது செய்வதற்கும் அல்லது அது பற்றி மேலும் சிந்தனையை விரிவுபடுத்துவதற்கும் விழைகின்றோம்.

மொழி என்பது பயன்பாட்டு தேவையின் தொடர் விளைபயிர், உழைப்பின் மொத்த கட்டுமானம் என்கிறது மாக்சியம். சுற்று சுழல் என்னும் போது அதில் முதன்மை பெறுவது வாழ்கைக்கான நடவடிக்கையே உதாரணமாக பசியை போக்க உணவைப் பெறுவதைக் குறிப்பிடலாம். மனிதன் விலங்கு பறவை போன்ற எல்லாமே இதற்குள் அடங்கும்.

ஆனால் மனிதன் வாழ்வதற்காக இயற்கையோடு போராடினான் உற்பத்தி முறைமாறியது. முரண்பாடு, வர்க்கம், அரசு, அதிகாரம், அடிமைமுறை, எனப்பல மாற்றங்கள் உருவாகின. புராதன ஐக்கிய வாழ்வு சிதைந்தது.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் பணத்தின் முக்கியத்துவம் வரம்பை மீறியது. அதற்காகவே எல்லா உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டன. சந்தைக்கும்- மூலப்பொருட்களுக்கும் மலிந்த உழைப்பாளியைத் தேடியும் எத்தனையோ யுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

சமூக உறுப்பினர் மத்தியில் பணமே எல்லா உறவுகளின் அச்சாணியாகியது. அன்றாட வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாகியது. அதுதான் நாளாந்த வாழ்வின் செயற்பாடாகிறது. இதற்காகவே ஊழல- மோசடி- கலப்படம்- கொiலை- கொள்ளை-குழந்தை உழைப்பு - விபச்சாரம் - குடும்ப முரண்பாடு அரசியல் பொறுக்கித்தனம். மேலும் இது போன்ற எல்லாவற்றுக்குமே காரணமாகிவிடுகிறது.

இவ்வாறு தான், வாழ்வின் தளத்தின் இயங்குநிலை யதார்தம் காணப்படுகிறது. ஆன்மீகவாதிகள் சொல்வதுபோல் அன்பு - இரக்கம் - மனச்சாட்சி - பெறுக மாந்தரே என்பதுதான் வறட்டுத்தத்துவம். தொண்டு நிறுவனப்பணி செய்தல் மட்டுமே முற்போக்கு என பெருமைப்படுவதும், முதலாளித்துவத்தை பூசி மெழுகும் விளம்பரமான தொடர் சேவையே. மாக்சின்.. ஆய்வின் பின்னர் தோற்றுப்போன அந்த பொய்களை உயரப்பிடிப்பதும் தலையில் வைத்தாடுவதும்தான் அறியாமையும் முட்டாள்தனமுமாகும்.

மாக்சியமானது புதிய வழியை சொல்கிறது. தற்போதைய முதலாளித்துவ உற்பத்தி முறையை விலக்கி அதன் இடத்தில் சோசலிச பொருளாதார உற்பத்தி முறையை அமைப்பது. அதாவது முதலாளிகளிடம் இருக்கும் எல்லா உற்பத்தி சாதனங்களையும் பறிமுதல் செய்து பொது உடமையாக்குவது. இனிமேல் உழைப்பில் கிடைக்கும் வருவாய் உழைப்பாளிக்கும், சமுகநலத்திட்டங்களுக்கும் மட்டுமேயாகும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதால் பணத்தை மையமாக கொண்ட எல்லா அதிகார திமிர்களும் மறைந்து போக அதனுடாக வளர்க்கப்படும் சமூகமானது புதிய எண்ணப்பாங்குகளைக் கொண்ட புதியகலாச்சார பரிமாணங்களோடு உருவாகும்.

டார்வினின் உயிரினப்பரிமாண கோட்பாடும் - கலிலீயோவின் கிரக மண்டல இயங்குநிலை கோட்பாடும் இன்னும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் மதவாதிகளின் கொடூரங்களையும் மீறி வளர்ந்து நிற்பதைப் போல், கார்ல்மாக்சு -பல கொடுமைகளுக்கு மத்தியிலே தனது ஆய்வுகளுக்கு முகம் கொடுத்தார். பல நெருக்கடிகளையும் - திரிபுகளையும் தாண்டி வளர்ந்து வரும் மாக்சிய விஞ்ஞானத்தை கோட்பாடாக புரிந்து கொள்வதே சமூக நெருக்கடியை தீர்க்கும் மாபெரும் வழிமுறையாகும்.

-திலக்