Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது

altகடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம் தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள். மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு மொழியை, மதத்தை, சாதியை இன்னும் பல அடையாளங்களைக் கொண்ட மனித இனத்தை அழிக்க முற்பட்டதில்லை.

ஆதிகால மனிதன் தனது தேவையை கூட்டாகவே ஈடு செய்து கொண்டான் காலம் கடந்தது வேட்டையாடிய மனிதன் நதிக்கரையை அண்டிய பிரதேசங்களில் குடியேறத்தொடங்கினான். அது அவனை விவசாயம் செய்யும் அளவிற்கு இட்டுச்சென்றது. மற்றொருசாரார் எலும்புகளாலும் கற்களாலும் ஆயுதங்களை செய்யத்தொடங்கினர். இதனால் ஒருபுறம் விவசாயம் செய்யும் கூட்டமும் இன்னொருபுறம் ஆயுதம் செய்யும் கூட்டமும் உருவாகின. காலப்போக்கில் இவைகளே வர்க்கங்களாகப் பிரிந்திருக்கின்றன. பின்னர் மனிதன் தன்னை பிரித்துப் பார்க்க முற்படுகின்றான். அதில் உழைப்பைச் செலுத்தும் ஒரு கூட்டமும் உழைப்பைச் சுரண்டும் ஒரு கூட்டமும் உருவாகின்றது. இதுவே நாகரிக உலகத்தில் முதலாளி தொழிலாளி என்று அழைக்கப்படுகின்றது. அன்று உழைப்பைச் செலுத்திய மனிதன் தனது ஊதியம் கிடைக்காது போனபோது வறுமையில் துவழத்துவங்கினான். மறுபக்கத்தில் உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் ஊதியம் கிடைக்காமைக்குக் காரணம் கடவுள் செயல் என்ற மாயைற்குள் அவனை வைத்துக்கொண்டது. பன்னெடுங்காலமாக இது நீண்டு கொண்டே சென்றது.

விஞ்ஞானம் வளரத் தொடங்கியது. மனிதன் புதியவற்றை சிந்திக்கத் தொடங்கினான். கடவுள் என்ற மாயை மெது மெதுவாக விலகத் தொடங்கியது. ஒரு சிறு கூட்டம் சுகமாக வாழ்வதற்கு மாபெரும் மனிதக் கூட்டமும் உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. இதனை எதிர்த்து உழைப்பாளிகள் போராடத்தொடங்கினர். தனித்தனியாக குழுக்களாகத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர். இப்படியான போராட்டங்கள் வலுப்பெற்று அமைப்பாகச்சேர்ந்து போராடும் அளவுக்கு வந்தது. இதனைக் கண்டு பயமுற்ற முதலாளி வர்க்கம் அன்று கடவுள் மாயைச் சொன்னது போல் இன்றுள்ள சூழ் நிலைக்கேற்ப பலவாறான யுக்திகளை கையாளத் தொடங்கியது. அதன் பொருட்டு அரசு, சட்டம் மற்றும் பல விதிமுறைகளை வகுத்துக் கொண்டது. இப்படியாக தங்களை எதிர்த்தவர்களை முதலாளித்துவ அரசாங்கம் கூட்டாகச் சேர்ந்து தாக்கியது, வதை செய்து கொலையும் செய்தது. நாளடைவில் அதனது இருப்பைத் தக்க வைக்க இன்னும் பலவாறான அம்சங்களை அதனுள் புகுத்தியது நாடு என்றும் மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேசங்கள் என்றும் எல்லைகளை வகுத்துக் கொண்டது. கூடுதலாக உழைப்பைச் சுரண்டிய நாடுகள் உழைப்பைச் செலுத்தும் நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இதனால் இரண்டு உலக மகா யுத்தங்கள் நடந்து முடிந்திருக்கின்றது.

அப்போது இயற்கையிலிருந்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்த மனிதன் இப்போது முடியாமல் தவிக்கிறான் இந்த முதலாளித்துவ வர்க்கம் இயற்கையையே தனதாக்கிக் கொண்டுள்ளது. இவ்வாறாக சுரண்டுவதற்கு ஏதுவான அனைத்தையும் முதலாளி வர்க்கம் செய்து கொண்டிருக்கின்றது. ஒரு பக்கத்தில் பிரச்சினைகள் உற்பத்தி செய்யப்படுக்ன்றது. மறுபக்கத்தில் தீர்வுகளும் தங்களிடமே உள்ளதென்று இருந்த முதலாளி வர்க்கம் கூறித்திரிகின்றது. இயற்கை முறைகளுக்கு அப்பால் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை உட்கொள்வதால் சுகயீனம் ஏற்படுகின்றது. இதனால் மருத்துவத்தின் தேவை அவசியமாக உள்ளது. ஒரு பக்கம் வைத்தியசாலைகள் உருவாகத் தொடங்குகின்றது. இந்நாட்களில் அதுவும் விற்பனைப் பண்டமாக மாறுகின்றது. இப்படி ஒவ்வொரு பிரச்சினைகளையூம் உற்பத்தி செய்யும் இந்த முதலாளித்துவ அரசு எதிர்பார்ப்பது உழைப்புச் சுரண்டலே அன்றி வேறொன்றுமில்லை. இப்படியாகப் பல உதாரணங்களைக் கூறலாம் இப்படி வந்த பிரச்சினைகளுள் ஒன்றுதான்,

இந்த மாகாண சபைப் பிரச்சினை கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் இன, மத, பால் வேறுபாடின்றி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இறுதியாக யுத்தத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்டார்கள். இவைகளையெல்லாம் செய்த பின் அவற்றுக்கெல்லாம் தீர்வு வடமாகாண சபைத் தேர்தலிலேதான் இருக்கின்றது என்று மீண்டுமொரு முறை மக்களை தனது மாயைற்குள் ஒழித்துக்கொள்ள இந்த முதலாளித்துவ அரசு எத்தனிக்கின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது இலாபங்களை தேடிக்கொள்ள மக்களைப் பிரித்தாளுகின்றார்கள். இப்போது நாட்டு மக்களுக்கு என்ன தேவை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய சுபீட்சமான வாழ்வு தேவை. காணாமல் போன, கடத்தப்பட்ட தங்களது உறவினர்களின் விடுதலை தேவை. கொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். இதற்குத் தீர்வு மாகாண சபைக்குள்ளோ அரசியல் கட்சிகளுக்குள்ளோ (13,18,19) ஆகிய திருத்தச் சட்டங்களுக்குள்ளோ இல்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை ஏமாற்றும் இனவாதத்தை விதைக்கும் முதலாளித்துவ ஆட்சியை நடாத்திச் செல்ல முட்டுக்கொடுக்கும் கொடிய தமிழ், முஸ்லிம், சிங்கள தலைமைகளை எண்ணி ஏமாறாது, தாங்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொண்டு மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் ஒன்று பட்டு ஒரு அமைப்பாக இந்த ஆட்சி முறையை மாற்றிட முன்வர வேண்டும். அதில்தான் எமக்கு சமத்துவமான வாழ்வு கிடைக்கும்.