Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

டெட்ராய்ட் நகரின் வீழ்ச்சி: முதலாளித்துவ சிந்தனை முறையின் வீழ்ச்சி

டெட்ராய்ட் நகரம் இரும்பின் நகரம், தொழில் நகரம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம், உலகின் தலைவிதிகளை தீர்மானிக்கும் நகரம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், இன்று திவால் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த நகரம் வைத்திருக்கும் கடன் தொகையின் உத்தேச மதிப்பு 18.5 பில்லியன் டாலர்கள். திகைப்படைய வேண்டாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இருபது லட்சம் மக்கள் இருந்த இந்நகரில் இப்போது சுமார் ஐந்து லட்சம் பேர் இருக்கலாம் என்பது குத்து மதிப்பான மதிப்பீடு. சரியான கணக்கு எடுக்கக் கூட வழியில்லை. ஏன் என்றால் மக்கள் ஊரைக் காலி செய்து தினம் தோறும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடங்கள், காவல் இல்லாத போலீஸ் நிலையம், கருவிகள் இல்லாத தீயணைப்பு நிறுவனங்கள், விளக்குகள் இல்லாத மின்கம்பங்கள், குவிந்து கிடக்கும் குப்பை மேடுகள், இடிந்து தொங்கும் கட்டிடங்கள் இப்படி கண் கொள்ளா காட்சியை நகரின் பல பகுதிகளில் காணலாம். இந்த ஊரைக் காலி செய்து மக்கள் சிறு நகரங்களை நோக்கித் தப்பியோடும் அவலம் தொடங்கியது கடந்த முப்பது ஆண்டுகளில் தான்.

அமெரிக்க சொர்க்கம் அப்படி. இன்றைய சொர்க்கம் நாளைய நரகம்.

தமிழ் நாட்டோடு ஒப்பிட்டால், சில விஷயங்கள் நமக்கு இந்த கடன் விபரம் பற்றி புரிந்துகொள்ள முடியும். ஏழு கோடியே இருபது லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டு அரசாங்கத்தின் இன்றைய மொத்தக் கடனும், இந்த நகராட்சியின் கடனும் சமம். கடன் என்றால், அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் வெளியிடும் சேமிப்பு மற்றும், கடன்பத்திரங்கள், ஊழியர்களின் பென்சன், சேமிப்பு நல நிதி இப்படிப பல விதமான தொகைகள் அடக்கம்.

தற்சமயம் இந்த நகராட்சியிடம் செலவு செய்ய எந்தப் பணமும் இல்லை. கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கவும் வழி இல்லை. மீண்டும் கடன் கொடுக்கவும் ஆள் இல்லை. ஊழியர்களின் பென்சன் உட்பட அனைவருக்கும் பெரிய நாமம். ஐரோப்பாவில், நாடுகள் திவாலாகும் போது அமெரிக்காவில் நகரங்கள் திவால் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அமெரிக்கக் கனவு என்பது யாரோ கொடுத்த கடனில் நடக்கிறது என்று இங்கே புரிந்து கொள்ள வேண்டும். நிற்க.

அந்த நகரின் அரசாங்கம் அதாவது நகராட்சி இனிமேல் எந்த வேலையும் செய்ய இயலாது. அதன் வரவுக்கும் செல்வாக்கும் இடையில் பெரிய துண்டு விழுந்து அடைக்க முடியாத நிலையை அடைந்து விட்டது. நமது ஊர் மொழியில் சொன்னால் நகராட்சி மஞ்சள் கடுதாசி கொடுத்து தனது அலுவலகத்தை மூடிக் கொண்டு விட்டது.

நீதிமன்றங்கள் இனிமேல் யாராவது ஒரு ஆணையரை நியமித்து இருக்கும் சொத்தை விற்றுக் கடன்காரர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். எதை விற்கலாம் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நகரின் புகழ் மிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை விற்கலாம் என்று ஒரு முடிவும் இருக்கிறது. கட்டிடங்கள், இடங்கள் இவற்றுக்கு என்ன விலை என்று முடிவு செய்து வருகிறார்கள்.

இது எப்படி சாத்தியம். இது தான் முதாளித்துவ விதி.

குப்பை அள்ளுவது யார்?

ஒரு நகர அரசாங்கத்தின் வேலைகளை இனி யார் செய்வார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும். அனைத்தும் தனியார் மயமான இந்த காலத்தில் இனி யார் இந்த வேலைகளை செய்வார்கள் என்பதற்கு எந்த பதிலும் யாரிடமும் இல்லை. முதலாளித்துவ ஆட்சி முறையின் ஒரு பகுதியாக அனைத்தும் சந்தையாக்கப்பட்டதன் விளைவு இது. அடிப்படை வசதிகள் செய்து தரும் நகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள், அரசு நிறுவனங்கள் ஏதோ ஒரு தனியார் கடையை போல நடத்தப்பட்டதன் முடிவு இது.

இனிமேல் நகராட்சி இல்லாமல் குப்பை அள்ள வேண்டும், சாக்கடை தள்ளவேண்டும், குடிநீர் விநியோகம் செய்யவேண்டும், பள்ளிக் கூடம் நடத்த வேண்டும், தெரு விளக்குப் போடவேண்டும், மின்சாரம் தர வேண்டும், சுடுகாடுகளைப் பராமரிக்க வேண்டும். ஏன், நீங்களே உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் டெட்ராய்ட் மக்களுக்கு இட்டுச் சென்ற இந்தப்பாதை நரகத்தின் நேர் வழிப் பாதை.

‘அமெரிக்க சொர்க்கம்’என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புகழப்பட்ட ஊர் இன்று பேய்களின் நகரம் என்று அழைக்கபடுகிறது. மின்சாரம் இல்லாத இருண்ட வீடுகள், இடிந்த கட்டிடங்கள், இப்படியொரு நற்பெயரை இந்த நகருக்கு வழங்கியிருக்கின்றன.

அமெரிக்காவில் இப்படி நடப்பது கூட புதிய விஷயம் அல்ல. சில காலம் முன்பு, அமெரிக்காவின் பல கனவு நகரங்களையும் உலக கோடீஸ்வரர்களையும் கொண்டிருக்கும் கலிபோர்னிய மாநிலம் கூட இத்தகைய ஒரு அவல நிலையை அடைந்து தப்பிப் பிழைத்தது. பல அமெரிக்க மாநிலங்கள் இன்றும் இந்த நிலையில் தான் உள்ளன. நகரங்கள் திடீரென்று உருவாவது போல திடீரென்று சாவதும் முதலாளித்துவத்தின் விதி.

வீழ்ந்து வரும் அமெரிக்கா

பிரபல கார் கம்பெனி நிறுவனங்களான போர்டு, கிரிஸ்லர், ஜெனரல் மோட்டார் இப்படி பல கம்பெனிகள் இங்கு தான் பிறந்தன, வளர்ந்தன, உலகெங்கும் செல்வாக்கோடு விளங்கின. ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும் அழிவின் விளிம்புக்குச் சென்று ஏதோ ஒரு வழியில் தப்பி தங்களின் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்களின் தொடர் வீழ்ச்சியினால் அழிந்த தொழில்கள் பல. கடந்த முப்பது ஆண்டுகளில், இதில் வேலை செய்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு சீரழிந்து ஊரை விட்டு ஓடும் அவலத்தைக் கண்டது இந்த நகரம். இறுதியில் அதன் மரணத்தையும் சந்திக்க வேண்டிய நேரம் இது.

முதலாளித்துவ அறிஞர்களால் இது நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், டெட்ராய்ட் நகரின் அழிவு பலரையும் சிந்திக்கச் செய்ய இன்னொரு காரணம் உண்டு. முதலாளித்துவ அறிஞர்களின் மூளைகளையும் அவர்கள் சேவைகளையும் நிரந்தரக் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் சில அமெரிக்க நிறுவனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று போர்டு பவுண்டேசன் (Ford Foundation). தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற இன்ன பிற முதலாளித்துவ தத்துவ கொள்கைகளை உருவாக்கிய விச ஜந்துகளில் முக்கியமானது போர்டு பவுண்டேசன். அது இங்கு தான் பிறந்தது.

பிரபலமான கார் மற்றும் இரும்புக் கம்பெனியான போர்டு நிறுவனத்தின் உரிமையாளர் தன் சொத்தைத் தானமாக கொடுத்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் உலகெங்கும் வளர்ந்து வந்த சோசலிச புரட்சிகளுக்கு எதிரான வேலைகளை செய்ய தன் பெயரிலேயே இந்த அறக்கட்டளையை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் பிறகு அமெரிக்க முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படைகளை உலகம் பூராவும் இந்த போர்டு பவுண்டேசன் ஏற்றுமதி செய்து வந்தது. இன்றும் செய்து வருகிறது.

ஊருக்கு உபதேசம் சொன்ன போர்டு அறக்கட்டளையின் சொத்துகளே, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பங்கு மார்க்கெட் சூதாட்டத்தில் சிக்கிப் பல மடங்கு குறைந்து போய் விட்டது. உலகெங்கும் அவர்கள் பரப்பிய தத்துவ வித்தைகள் அவர்களுக்கே வேலை செய்ய வில்லை. அது பிறந்த மண்ணிற்கும் இன்று உதவவில்லை.

முன்னாள் இந்தியப் பிரதமர் ‘மாமா’ நேரு இந்த நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனத்தின் சேவையை இந்தியாவிற்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் பிரபலமான வட்டார வளர்ச்சி திட்டங்கள், வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல திட்டங்களை இந்த நிறுவனம் தான் உருவாக்கி தந்தது. பி.டி.ஒ (Block Development Officer), அக்ரி ஆபீசர் Agri officer) உட்பட பல விதமான இந்திய ஆபீசர்களை நமக்கு உருவாக்கித் தந்த அறிவாளிகள் இந்த போர்டு பவுண்டேசன் நிதியில் தான் உருவாக்கினார்கள். இன்றும் அவர்கள் உருவாக்கிய திட்டங்கள் அலுவலகங்கள் இந்தியாவெங்கும் நடை முறையில் உள்ளன. அதன் லட்சணத்தை நாம் அறிவோம். தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் நாட்டின் அறிவு ஜீவிகள், தன்னார்வ நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், ஏன் முற்போக்கு நாடகக் கம்பெனிகள் உட்பட பலர் இந்த போர்டு பவுண்டேசனிடம் உதவி பெற்றவர்கள் தான். இவர்களெல்லாம் இந்த நகரின் வீழ்ச்சி குறித்து இனி என்ன சொல்வார்களோ தெரியவில்லை.

அமெரிக்க சொர்க்கம், நரகமானதை இந்த நிறுவனங்களும் அறிவாளிகளும் எழுதி வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் வெளியிட மாட்டார்கள். நாம் தான் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.

- ஷர்மிலி