Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் மகாதந்திரங்கள், நெருக்கடிக்குள் மக்கள்...! - திலக்

'குரானே எமது சட்டம் ஜிகாத்தே எமது வழி கடவுளுக்காக இறப்பது உன்னதமானது, அதற்காக நாம் எவ்விலை கொடுக்கவும் ஆயுத்தமாக உள்ளோம்" இவ்வாறு தான் ஜெனரல் சிசியின் படையினரால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, ஆர்பாட்டமுகாமும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் தமது மத அடிப்படைவாதத்தின் மீது முஸ்லிம் சகோதரர்கள் சத்தியம் செய்கிறார்கள்.

இஸ்லாமிய வசந்தம், புரட்சியென கொக்கரித்த ஒரு நிகழ்வை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்த கொஸ்னி முபாரக்கை தூக்கியெறிவதற்காக மிகப்பெருண்பாண்மையான மக்கள் தெருவில் இறங்கினார்கள். இந்த மனிதர் அமெரிக்காவின் கூட்டாளி, தனக்குப் பிறகு குடும்ப ஆட்சியைத் தொடர்வதர்க்காக தனது மகனான கமால் முபாரக்கை பதவிக்கு அமர்த்தப் போகும் கைங்கரியத்தைத் தொடங்கிவிட்ட மனிதர், இவ் ஊழல் பேர்வழியின் ஆட்சியில், வேலையில்லாப் பிரச்சனை, லஞ்சம், ஊழல், விலைவாசியுயர்வு, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை, அத்தோடு கருத்துச் சுதந்திரத்தையும் கோரியே மக்கள் போராடினார்கள். மக்கள் எழிச்சியைக் கண்டு அதிர்ந்த இராணுவத்தளபதிகள், முபாரக்கிற்கு கும்பிடு போட்ட இவர்கள் அதிகாரத்தை தமது பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். அதன்பிறகு நடந்த தேர்தலில் மூர்சி எகிப்தின்அதிபரானார்.

ஆரம்பத்தலிருந்தே இவர்மீது இஸ்லாமிய அடிப்படைவாதியென்ற விமர்சனம் பலமாக பலதரப்பாலும் முன்வைக்கப்படடது. ஆனாலும் அவர் தன்னை அவ்வாறு கருத வேண்டாம் தான் எல்லோருக்கமான பொதுவான ஆட்சியையே கட்டியெழுப்புவேன் என்றார். அவரது ஆட்சியின்கீழ், ஒன்றரை வருடங்களின் பின்னர் முபாரக் விட்டுச்சென்ற சமூக நெருக்கடிகள் மென்மேலும் அதிகரித்தன. அதாவது முபாரக்கின் ஆட்சியில் 3 வீதமாக இருந்த பொருளாதார வீழ்ச்சி நிலை மூர்சியின் அதிகாரத்தின் பின்னர் 13 வீதமாக அதிகரித்தது. அதே போல் வேலையில்லாத் திண்டாட்டமும் 13.2 வீதத்தால் அதிகரித்தது. 15 தொடக்கம் 25 வரையிலான வயதுடையவர்கள் 82 வீதம் வேலையில்லாது இருந்தனர். அத்தியாவசிய உணவுப்பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்வது மென்மேலும் நெருக்கடியாகியது. இதனால் மேலும் கட்டார், சவதிஅரேபியா போன்ற நாடுகளிடமிருந்து கடன்களைப் பெறவேண்டியதாகியது.

இவ்வாறு கடன் சுமை அதிகரிக்தனவே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எகிப்தியப் பெண்கள் தொடர்சியாக இலங்கை நாட்டுப் பெண்களைப் போன்று அராபிய நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்கு சென்றனர். எகிப்திய நாட்டில் திறமையான பொறியியலாளர்கள், வைத்தியர்கள் இருந்தும் அவர்களுக்கு வேலை வழங்கி அவர்கள் அவ் நாடுகளுக்கு அழைக்கப்படுவதில்லை என்று அல்லா அல்-அஸ்வானி என்ற எகிப்திய எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார். அதே போல் அங்கு செல்லும் எகிப்தியப் பெண்களை மத அடிப்படைவாதத்திற்குள் மூழ்கடித்து விடுவதாகவும் குறைபடுகிறார்.

ஆனால் எகிப்தில் இராணுவம் மட்டும் போசிக்கப்பட்டது. 443,500 இராணுவத்துக்கும் கிட்டத்தட்ட 358,000 ரிசேர்வ படைக்கும் எகிப்திய மக்களின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது இவ் இராணவக்குவிப்பானது மிக அதிகமானது எனச் சொல்லப்படுகிறது. இராணுவச் செலவீனங்களுக்கும், அதன் பராமரிப்புக்குமென அமெரிக்கா 1.3 மில்லியார்டன் டொலர்களை பலவருடங்களாக வழங்கி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மீது இராணுவத்தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டளையையும் அமெரிக்கா இட்டுள்ளது. அதேபோல் அரேபிய ஒருமைப்பாட்டு நாடுகளும் வருடத்திற்கு 12 மில்லியார்டன் அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றன.

புரட்சியென வர்ணிக்கப்பட முதலாளித்துவ மூர்சியின் ஆட்சியில் வங்குரோத்து மென்மேலும் அதிகரித்தது. மத அடிப்படைவாதம் மோசமாகியது. சிறுபாண்மையினரான கிறிஸ்த்தவர்கள் மீது கொலைத்தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவர்களது தேவாலயஙகள் பல அழிக்கப்பட்டன. ஒன்றரை வருடங்களில் மீண்டும் இடது சாரிகள், ஜனநாயகசக்திகள் தெருவில் இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான ஆர்பாட்டங்களை பொலிசை ஏவி அடக்குவதற்கு பதிலாக முதல் கட்டமாக அரச ஆதரவாளர்களை ஏவி எதிர் ஆர்பாட்டம் செய்யத் தூண்டவதும் அவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கி, பதட்டத்தை ஏற்படுத்தி மக்கள் எழிச்சிகளை அடக்க முனைவது முதலாளித்துவ ஆட்சியாளர்களின் ஒருதந்திரமாக இன்று கையாளப்படுகிறது.

மூர்சியின் அரசும் இவ்வாறு தான் ஆர்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த மூஸ்லிம் சகோதரர்கள் என்ற வட்டத்தைப் பயன்படுத்தியது. இராணுவம், தயாராக ஆர்பாட்ட முனைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவ்வேளையில் தான் இராணுவத்தளபதி சிசி பிரதமர் மூர்சியைக் கைது செய்து அதிகாரத்தை தனது பிடிக்குள் கொண்டு வருகிறார். முபாரக் விட்டுச் சென்ற எல்லா சமுக நெருக்கடிகளும் மென் மேலும் வளர காரணமாக இருந்தவர்களே இராணுவ ஆட்சியில் அங்கம் வகிப்பவர்கள் என்பது மறைந்து கிடக்கும் ஒரு வேடிக்கையான விடயம்.

மூஸ்லிம் சகோதரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தாங்களாகவே தீர்மானித்து எடுக்கப்பட்ட விடயமல்ல. அது எகாதிபத்தியவாதிகளின் தட்டிக்கொடுப்பு, மூர்சியை அகற்ற நல்ல சந்தர்பம் கிடைத்தவுடன் அமெரிக்க ஒபாமா அரசு துரிதமாகச் செயற்பட்டது. சூயஸ் கால்வாயின் முனைகளுக்கு யுத்தக்கப்பல்கள் செல்கின்றன. அன்னிய நாட்டு வான்பரப்பின் மேலால் அத்தமீறி யுத்த விமானங்கள் பறந்தன. அதன் பிறகு சிசியின் படைகளால் முஸ்லிம் சகோதரர்கள் பலர் மாண்ட பின்னர்தான், அரைமனதோடு ஓபாமா புலம்பினார். நாம் எகிப்தின் இராணுவச் செலவீனங்களுக்கு வழங்கும் உதவியை நிறுத்தி விடுவோம். சிசியின் தற்காலிக அரசு கடுமையான போக்கை நிறுத்த வேண்டும். மூர்சி; மக்களால் ஐனநாயக ரீதியாக தெரிவசெய்யப்பட்ட அரசையே நிறுவியிருந்தார் என்ற ஜனநாயகத்தை போற்றும் பம்மாத்தும் அடங்கியிருந்தது. (ஆனால் வெனிசுலாவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசைக்கவிழ்க்க சதியைச் செய்து கொண்டடிருக்கும் அமெரிக்கா, சிலியில் ஜனநாயகத் தேர்தல் முலம் தெரிவாகிய அலெண்டெயைக் கொன்ற அமெரிக்கா தேர்தல் ஜனநாயக அரசு பற்றிப் பேசுவது தான் புரியுமுடியாத ஜனநாயகம்!)

எகிப்து பற்றி, ஓபாமாவின் உலகத்தை ஏமாற்றும் ராஐதந்திர புலம்பலின் பின் எதுவும் நடக்கவில்லலை சிசி தொடர்ந்;தும் போசிக்கப்படுகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் எகிப்தில் இடதுசாரிகள் அடங்கலாக தனது மத எதிர்ப்பாளர்களைத் பலவீனப்படுத்தி அமெரிக்க இராணுவக் கல்லூரியில் படித்த சிசி அதிகாரத்திற்கு வந்திருப்பதையிட்டு அமெரிக்கா மகிழ்சியடையலாம். ஆனாலும் அவர் இராணுவ உடைக்குள் மறைந்திருக்கும் மதவாதிதான் என்பதை காலம் தான் உணர்த்தும். இடைக்கால அரசாங்கத்தை நிரந்தரமாக தனது பிடியில் தக்கவைக்கும் நோக்கில் சிசி அவர்கள் அண்மையில் அரச ஊழியர்களுக்கெல்லாம் அதிக சம்பளம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஏகிப்திய தொழிலாளி வர்க்கம் புரட்சியென்ற பேரில் நடக்கும் மோசடிகளைப் புரிந்து, தமது பங்கபளிப்பினை தெழிலாளி வர்க்க, புரட்சிகர சக்திகளுடன் இணைந்து வழங்குவதன் மூலமே தமது முழு விடுதலையையும் உரிமையாகப் பெறமுடியும்.

-திலக்

தகவல் ஆதாரம்

1-பத்திரிகைகள்-- Tages-Anzeiger(Deutsch)

2-புத்தகம்- Im Land Ägypten(Deutsch) ஆசிரியர்-Alaa al-Aswani