Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் பண்பாட்டுக் கொள்கை

மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் இம்முறை (14.05.2014) பௌர்ணமி ஒன்றுகூடலில் கழகத்தின் செயலாளர் பா. மகேந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் “பண்பாட்டுக் கொள்கை” பற்றிய அடிப்படை ஆவணம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு:

மக்கள் எனப்படுவோர்

உலக இயக்கத்துக்கு உந்து சக்தியான அதேவேளை தங்களின் உழைப்பின் பலாபலன்களில் இருந்து மூலதன உடைமையாளர்களினால் அந்நியமயப்படுத்தப்பட்டிருக்கும் பரந்துபட்ட ஏக பெரும்பான்மையான உழைப்பாளர்கள், தேசிய, இன, மத, பால், சாதி மற்றும் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு ஆதிக்க சக்திகளினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ விலங்கிடப்பட்டிருக்கும் அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கிய திரளை மக்கள் என்ற சொற்பதத்தில் அடங்குவதுடன் அவர்கள் அவ்விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை அடையும் பெருமூச்சுடன் செயற்படுபவர்களாவர்.

பண்பாடு என்பது

மனித குலத்தின் இருப்பை தீர்மானித்து நிற்கின்ற உற்பத்தியோடும் உற்பத்தி உறவுகளோடும் அதனை அடிப்படையாகக் கொண்டமைந்த சமூக உறவுகளோடும் இயற்கையோடும் சூழலோடும் பின்னிப் பிணைத்திருக்கும் மனிதனின் வாழ்வியல் அம்சங்களை பண்பாடு என்கின்றோம். அதாவது மனித குலத்தின் இருப்பை பிரதிபலிக்கின்ற அதேவேளை முன்னேற்றகரமான எதிர்காலத்தைப் சிருஷ்டித்து செழுமைப்படுத்தும் கல்வி, இலக்கியம், கலைகள், சுகாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், விளையாட்டு, அரசியல் போன்ற இன்னோரன்ன விரிந்து பரந்த வாழ்வியல் அம்சங்களின் தொகுப்பை பண்பாடு என்ற சிறிய சொல்லுக்குள் அடக்கி விடுகின்றோம். ஆனால் பண்பாடு என்பது சமூக அசைவியக்கத்தின் மேல்கட்டுமானமாக அமைவதுடன் இருக்கின்ற சமூக அமைப்பை பாதுகாப்பதாகவும் அமைகிறது. அதுவே தவிர்க்க முடியாத சமூக மாற்றத்திற்கான மேல்கட்டுமானமாக விளங்குகிறது. இது எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருளாதார அடிக்கட்டுமானத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டதாக இருப்பதும் இல்லை. இருப்பினும் அதனால் அடிக்கட்டுமானத்தின் ஆதாரம் தகர்க்கப்பட முடியாததாக இருக்கும். சமூக அமைப்பில் பண்பாட்டு அம்சங்களையும் அதன் தாக்கங்களையும் அறிவதன் மூலம் மக்களின் சமூக வாழ்வு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்வதுடன் சமூக அசைவியக்கத்தின் நேர்நிலை, எதிர்நிலை அம்சங்களையும் இயல்பாகவே நாம் புரிந்து கொண்டு முன்னோக்கி நகர முடியும்.

அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக மேலாத்திக்கம் செலுத்தும் மக்கள் விரோத கருத்துக்களுடன் ஆதிக்கம் செலுத்தும் பண்பாட்டையும், அதற்கு மாறான மாற்று கருத்துக்களுடனான மக்கள் நலன்சார் பண்பாட்டையும் மனித வரலாறு முழுவதிலும் எம்மால் தரிசிக்க முடியும். அதில் மக்கள் விரோத, மக்கள் நலன்சார்ந்த என்ற இரண்டு பொதுவான போக்குகளும் புலப்படும்.

மக்கள் நலன்சார்ந்த பன்பாட்டை கட்டுவதும் அதனை மக்கள் விரோத பண்பாட்டின் இடத்தில் நிலை நிறுத்துவதும் அதன் மேலாண்மையை நிலைநாட்டுவதும் எமது பண்பாட்டுப் பார்வை.

மக்கள் விரோத பண்பாடு

மக்களின் விருத்திக்கும் மேம்பாட்டிற்கும் விடுதலைக்கும் எதிரான பண்பாட்டு அம்சங்கள் வரலாறு முழுவதிலும் இருந்து வந்ததை மறந்துவிட முடியாது. இதில் மக்களின் வாழ்வை செலுமைப்படுத்த வேண்டிய கலை இலக்கியங்கள் வெறும் உருவம், அழகியல் சுலோகங்களாகவும் கலை கலைக்காக என்ற மேட்டுக்குடி வெற்று வாதங்களாகவும் பிற்போக்கு சக்திகளால் முன்னிறுத்தப்பட்டு சிதைந்து போயின. அதன் நிழல் பற்றிச் செல்லும் சமூக கூட்டத்தின் எச்ச சொச்சங்கள் இன்றும் உலாவுகின்றன. இது இவ்வாறு இருக்க புதுமை படைத்தல், மறு வாசிப்பு என்ற போர்வையில் மக்களின் வாழ்வியலின் ஆதாரத்தை மறுந்து “பேசா பொருளை”யெல்லாம் பேசவதாய் கூறி சமூகத்தை கூறுப்படுத்தும் பின்நவீனத்தும் நோக்கிலான கலை இலக்கியங்கள் மிரட்டுகின்றன. மறுபுறம் தனிமனித மேலாதிக்க விடயங்களை ஒப்புவிப்பதற்காக வரட்டு, சமரச, தனிநபர் வாதங்களும் மக்களின் விடுதலை பண்பாட்டிற்கு தடை கற்கலாக மக்கள் முன் நின்றகின்றன.

மக்கள் நலன்சார் பண்பாடு

நீதி, நியாயம், நேர்மை, உண்மை, அன்பு, பாசம், காதல், எல்லாமே பொருளாதார மனப்பான்மையினாலும் ஆதிக்கத்தினாலும் வித்தியாசப்படக்கூடியதே. பண்டைய காலத்தில் பொருள்வளம், அரசியல் அதிகாரம் கொண்டோரை மையப்படுத்தி இருந்த பண்பாடும் அதற்கு மாற்றை தேடும் பண்பாடும் நிலவின. மாற்றம் தேடும் பண்பாடு தர்மம், அறம் என்ற கருத்தியலின் அடிப்படையில் கலைகள் இலக்கியங்கள் விமர்சனங்களாக பண்டைய காலத்தில் படைக்கப்பட ஏதுவாகியது. இதைவிட மக்களின் யதார்த்தத்தை மறந்து குதூகலிக்கவும் அல்லது துன்பியலையும் கூட இரசனைக்குரியதாக கலை கலைக்காக என்னும் கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன

பாதிக்கப்படும் மக்கள் எதிரிடையான பாதிப்பை ஏற்படுத்துபவர்களிடமே நீதி பெற வேண்டும் என்றும் அல்லது பாதிப்பை ஏற்படுத்துவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே பொதுவான சமரச கருத்தியலின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

இதன் வளர்ச்சியாக காணப்பட்ட மனிதாபிமான கலை இலக்கிய அல்லது பண்பாட்டு சூழல் அனைத்து மக்களினதும் முழுமையான மீட்சி பற்றி கவலை கொண்டதாக இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் மனிதாபிமான பண்பாட்டில் பொறிக்கப்பட வில்லை என்று கூற முடியாததுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் பற்றிய உசாவலான அக்கறையாக மனிதாபிமான பண்பாட்டை கொள்ள முடியும். இது ஒரு வரலாற்று நகர்வு. தேச விடுதலை, அயலாரின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, சுய சார்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய பண்பாடும் இன்னொரு வரலாற்று நகர்வாகும்.

இவற்றைவிட பழைமைவாதம் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏற்பட்ட இன்னொரு சூழல் முற்போக்கு பண்பாட்டுச் சூழலாகும். இந்த மனிதாபிமான, தேசிய, முற்போக்கு பண்பாட்டுச் சூழல்கள் மக்கள் என்ற விரிந்த ஆழமான தளத்திற்கு எற்றவாறு தன்னளவில் மக்கள் பண்பாடாக வளர முடியவில்லை. அவை பிற்போக்கு சமூக அமைப்புகளுடன் சமரசம் செய்பவைகளாகவும் குறுகிய ஆழமற்ற தளத்தை கொண்டவைகளாகவும் இருந்துள்ளன. இருக்கின்றன. ஆனால் மேற்படி பண்பாட்டுச் சூழல்களிலும் மக்கள் பண்பாட்டு கூறுகள் இருந்துள்ளன. அக்கூறுகள் தொகுக்கப்பட்டு பலமான பண்பாடாக மக்கள் நலன்சார் பண்பாடாக மேலாண்மை செலுத்துவதாக கட்டப்பட வேண்டும். அதேவேளை மனிதாபிமான, தேசிய, முற்போக்கு பண்பாட்டுடன் சமரசம் செய்யாது அப்பண்பாட்டு சூழல்களின் வரலாற்று வகிபாகத்தை நிராகரிக்காது அவை பற்றிய விமர்சனங்களுடன் மக்கள் பண்பாட்டைக் கட்டியெழுப்புவது காலத்தின் கடமையாகும்.

மக்கள் பண்பாடு

பலருக்காக ஒருவரும் ஒருவருக்காக பலரும் என்பது மக்கள் சார் நிலைப்பாடு. ஒருவரின் இன்பமான வாழ்வுக்கு பலரும் பலரின் இன்பமான வாழ்விற்கு ஒருவரும் பங்களிக்கும் பண்பாடே மக்கள் பண்பாடு. குறிப்பிட்ட வர்க்கத்தினரின் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரானதே மக்கள் பண்பாடு. சுரண்டலற்ற, அடக்குமுறையற்ற, விஞ்ஞானபூர்வமான சமத்துவமான சமாதானமான சமூகத்தை படைக்கவல்லதும் அதனை பேணி செழுமைப்படுத்துவதுவே மக்கள் பண்பாடு.

இந்த மக்கள் பண்பாட்டை கட்ட பரந்துபட்ட ஆழமான மக்கள் பண்பாட்டு கோட்பாடு விருத்தி செய்யப்படவும் அதற்கான அதனூடான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஆத்மார்த்தமான வாழ்வியலும் படைப்புகளும் அவசியமாகின்றன.

வணிகம், சந்தை, நுகர்வு, தனிமனிதவாதம் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் இன்றைய மக்கள் விரோத நசிவு பண்பாட்டு சூழலுக்கு மாற்று மக்கள் பண்பாடே.

மக்கள் பண்பாட்டு பணிக்கான அழைப்பு..!

இந்த அடிப்படை நோக்கினை அடைவதை இலக்காகக் கொண்டே “மக்கள் பண்பாட்டுக் கழகம்” பிரசவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் தளத்தில் நின்று புரண்டு, தவழ்ந்து எழுந்து மக்களினதும் தம் வாழ்வையும் செழுமைப்படுத்த பெருமளவான பண்பாட்டு ஊழியர்கள் அணிதிரள்வதை சாத்தியமாக்கிக் கொள்ள மக்கள் பண்பாட்டுக் கழகம் வழிசமைத்திருக்கிறது. மக்கள் பண்பாட்டுக் கழகம் கருத்தாடலுக்கும் கள பணிக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறது.{jcomments on}