Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

டேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம்: பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை

"காந்தீயம்" ஸ்தாபனத்தின் தலைவர் S.A. டேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம் கார்த்திகை மாதம் 15, 2015 கனடாவில் இடம் பெற்ற போது பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை

"காந்தீயம்" பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனமாக 1976 இல் ஆரம்பித்த இவ் அமைப்பு 1974 இல் தொடங்கியது பற்றி இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்றிருக்கும்; பாக்கியநாதன் அவர் விரிவாக எடுத்துக் கூறுவார் என நம்புகிறேன். நான் காந்தீயத்தில் பணியாற்றிய அப்பொழுது தனாதிகாரியாக இருந்த நல்லதம்பி ஜயா மூலம் சென்றேன். டேவிட் ஜயாவை 1979 அல் இருந்து அவர் இறக்கும் வரை அறிவேன். டேவிட் ஜயாவின் அறிவாற்றலுக்கு அவரே நிகர். டேவிட் ஜயா தலைவராகவும், Dr.இராஜசுந்தரம் செயலாளராகவும், தனாதிகாரியாக நல்லதம்பி ஜயாவும் காந்தீயம் அமைப்பில் பணியாற்றினார்கள். இவர்களுடன் சந்ததியார் தொண்டர்களை இணைத்து புணரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் தொண்டர்களுடன் தொண்டனாக அவரும் பணியாற்றினார்.

டேவிட் ஜயாவையும் Dr.இராஜசுந்தரத்தையும் முதுகெலும்பாகக் கொண்ட காந்தீயம் அமைப்பு ஆரம்ப கால கட்டங்களில் பல இடர்களை முகம் கொடுத்தே செயற்பட்டது. கொழும்பில் தங்கியிந்த டேவிட் ஜயா தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி வேலைத்திட்டங்களைத் தயாரித்து அதை Dr.இராஜசுந்தரத்திற்கு அனுப்பி வைத்தால் அதை னுச. இராஜசுந்தரம் அச்சு இயந்திரத்தின் உதவியுடன் அச்சடித்து கோர்வையாக்கி பலதரப்பட்ட தாபனங்களிடம் நன்கொடை பெற அனுப்பி வைப்பார். டேவிட ஜயாவின் சிந்தனைகளை செயற்படுத்தும் செயல் வீரனாக Dr.இராஜசுந்தரம் திகழ்ந்தார்.

டேவிட ஜயா மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். பின்தங்கிய மக்கள் சமூகங்களில் பணிபுரிய விரும்பினார். மனித உழைப்பை சுதந்திர உணர்வுடனும், தனிமனித சுதந்திரத்துடனும் செயற்பட வேண்டும் என்பதற்காக விவசாயத்தை தேர்ந்தெடுத்தார். விவசாயப் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். யாரையும் சாராது சிறு உதவியுடனும் கடும் உழைப்பு மூலமும் விவசாயத்தை செய்ய ஒரு தனிமனிதாரல் செய்ய முடியும் என நம்பினார். மேலாதிக்க சக்திகளையோ, அரசையோ; மக்கள் தங்கி நிற்கும் நிலை மாற வேண்டும் என டேவிட ஜயா விரும்பினார். இத்துடன் மட்டும் நின்றுவிடாது, அறிவு வளர்ச்சியை மேம்படுத்தும நோக்குடன் சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்தினர் டேவிட ஜயாவும் Dr.இராஜசுந்தரமும். வவுனியா மாவட்டத்தில் மட்டும் அப்பொழுது 60க்கும் மேற்பட்ட சிறுவர் பாடசாலைகளும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகளும் இருந்தனர். ஆசிரியைகளின் மேற்பார்வையாளராக ரட்ணேஸ் அக்கா (செல்வி நல்லதம்பி) செயற்பட்டார்.
டேவிட் ஜயா கொழும்பு YMCA கட்டடத்திலேயே வாழ்ந்து வந்தார். மாதம் ஒரு முறை மாதாந்தக் கூட்டத்திற்கு வருவார். வவுனியா வரும்போது காந்தீயப் பண்ணைகளுக்கு சென்று மேற்பார்வை இடுவார். "Holand Novib" ஸ்தாபனமே காந்தீயப் பண்ணைகளின் விவசாய வேலைத்திட்டங்களிற்கும் பிரயாணங்களுக்கும் பெரும் பண உதவியை வழங்கியது. சிறுவர் பாடசாலைகளுக்கான பால்மா Novib ஸ்தாபனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட வேளை அப்பால்மாவுடன் திரிபோஸா மாவும் பாடசாலை சிறுவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. காந்தீயம் நிறுவனத்திற்கான ஜீப் வண்டி, வான், நீரிறைக்கும் இயந்திரம், காற்றாடிச் சுழற்சி மூலம் நீர் பெறும் பொறிமுறை என்பனவும் Novib நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

வவுனியா, மன்னார் மட்டக்கிளப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் எனப்பல மாவட்டங்களிலும் 500 க்கும் சிறுவர் பாடசாலைகளை உருவாக்கியது காந்தீயம் அமைப்பு. அத்துடன் மட்டுமல்லாமல் பல இடங்களில் குடியேற்றத்திட்டங்களையும் சில இடங்களில் கூட்டுப்பண்ணை கூட்டுறவுக் கடை போன்றவற்றையும் உருவாக்கி பின்தங்கிய மக்களுக்கு காந்தியம் தனது சேவைகளைச் செய்து வந்நது. திட்டமிடல் என்னும் வேலையில் மிகவும் நேர்த்தியா செயல்பட்டார் டேவிட் ஜயா.

வவுனியாவில் பாலமோட்டை, கல்லாறு (செட்டிக்குளம்), மணியர் குளம், நாவலர் பண்ணை, கென் பண்ணை என பல இடங்களில் மக்கள் குடியிருப்புக்கள் காந்தீயத்தால் உருவாக்கப்பட்டது. கிராம மக்களுக்கு விவசாயத்திற்கான விதை தானியம், உரம், நீரிறைக்கும் இயந்திரம் என்பனவையும் காந்தீயத்தால் வழங்கப்பட்டது. கிராமிய மக்கள் பசும்பாலை நகரத்திற்கு கொண்டுவந்து கொடுக்க முடியாத நிலையில் இருந்த போது காந்தீயம் அமைப்பினர் தமது வாகனங்களில் பாலைச்சேகரித்து வவுனியா நகர விற்பனையாளர்களிடம் விநியோகித்து மக்களுக்கு உதவி புரிந்தனர்.

சிறுவர் பாடசாலை ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்புக்கள் Father Xaviear போன்றோரால் வழங்கப்பட்டது. ஆசிரியைகளுக்கு மக்களுடனும், சிறுவர்களுடனும் பழகும் முறைகள் பயிற்றுவிக்கப்பட்டது. ஆசிரியைகளின ஊதியம் அதிகம் இல்லாமையால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் "world Vision" ஸ்தாபனத்தின உதவி பெற்று கோழிப்பண்ணைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

டேவிட் ஜயா தனது வாழும் முறையிலும் மிகவும் எழிமையாக இருந்தார். தனது அன்றாட வேலைகளை நேரம் தவறாமல் செய்வது இயல்பு. அவர் இந்தியாவில் இருக்கும் போது காலையில் தினமும் கன்னிமாரா நூலகம் சென்று 11 மணிக்கே வீடு திரும்புவார். அவர் தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் தனது அறிவாற்றலை வளர்த்துக் கொண்டே இருந்தார்.

டேவிட் ஜயாவுக்கு அரசியலில் பெரும் ஈடுபாடு இருக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே அவர் விரும்பினார். தமிழையும் தமிழ் மக்களையம் அவர் நேசித்தார். தவறான போக்குகளுடனும் பிழைகளுடனும் செத்துப்போக மறுத்தார். அவற்றிருந்து ஒதுங்கி வாழ்ந்தார். இறுதிவரை தமிழ் மக்களின் நினைவிலேயே வாழ்ந்து மடிந்தார்.

டேவிட் ஜயாவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அவரது மருமகள் வண சகோதரி லூட்ஸ் கூட்டச்சென்றிருந்தார். அவர் கிளிநொச்சியில் சில காலம் இருந்தார். உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தொலைபேசியில் அவருடன் பேசினேன். இறுதிக் காலங்களில் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் நெருங்கிப் பழகிய சிலரைக்கூட தெரியாமல் இருந்தார்.

இணையத்தளங்களில் சில பிழையான தகவல்கள் டேவிட் ஜயா குறித்து வெளிவந்ததாக அறிந்தேன். அது குறித்து மிகவும் மனவேதனை அடைகிறேன். டேவிட் ஜயா தனது சொந்த வாழ்க்கையை அவரது சொந்தப் பணத்திலும், அவரது மருமகள் உதவியுடனுமே வாழ்ந்து வந்தார். டேவிட் ஜயாவிற்கு வெளியாரால் உதவி வழங்கப்பட்டால் அவ்வுதவியை ஈவேரா பெரியாரின் பத்திரிகையை அடிப்பதற்கும் பொது வேலைக்குமே பயன்படுத்தினார். 2003, 2004 காலகட்டத்தில் "உலகத் தமிழர்" வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். Dr.இராஜசுந்தரம், சந்ததியார் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட இலட்சினையுடன் கூடிய தபால் தலைப்புக்களில் தனது முயற்சிக்கு ஆதரவளிக்கும் படி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உட்பட பலருக்கும் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் அவரது இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க எவரும் முன்வரவில்லை. அவரது முயற்சி சாத்தியமாகவில்லை என்பதால் பெரிதும் மனமுடைந்தார். 2007ம் ஆண்டு அவரை இந்தியாவில் இறுதியாக சந்தித்தேன். மிகவும் மனவேதனையுடன் இருந்தார். எதுவும் செய்ய முயவில்லை என்பதே அவரின் ஆதங்கமாக இருந்தது. இந்தியாவில் இருந்த கடைசிக் காலகட்டங்களில் திரு.ஆனைமுத்துவுடன் சேர்ந்து இராமசாமிப் பெரியாரின் புத்தகங்களை அச்சிட்டார்.

டேவிட் ஜயாவின் சிந்தனை எப்பொழுதும் தமிழ் சமூகத்தை நோக்கியே இருந்தது. டேவிட் ஜயாவின் ஆத்ம சாந்திக்காகவும், Dr.இராஜசுந்தரம், சந்ததியாருடன் காந்தீயத்தில் பணியாற்றி இறந்த தொண்டர்கள் ஆத்ம சாந்திக்காகவும் வேண்டுகிறேன்.

பொன்னம்பலம் சரோஜினி