Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

காந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன்

அமரர் டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அமரர் சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள்

(எஸ்.ஏ.டேவிட்) டேவிட் ஐயா அவர்கள்.

இவர் ஒரு அமைதியான காந்தியவாதி, மென் சொல் பேசுபவர், மற்றையோர்களைக் குறைபேசத் தெரியாதவர். எந்த வேலையைப் பொறுப்பெடுத்தாலும் அதனைச் செவ்வனே நிறைவேற்றி விடுவார். 1973 இல் இருந்து 1982 வரை அவருடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நினைவுகளை மீட்க வேண்டுமேயாயிருந்தால் டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்காமல் இவரது பொது வாழ்வு பற்றிப் பேச முடியாது.

வவுனியாவில் டேவிட் ஐயா என்ன செய்தார். அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை அவர்களோடு ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்புப் கிடைத்தது. 1977 கலவரத்திற்கு பின்பு நான் இராசசுந்தரம் அவர்கள் வீட்டில்தான் தங்குவேன். இராசசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்ட அன்று நான் எனது ஊருக்குச் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நானும் நின்றிருந்தால் என்னையும் சிலவேளை கைது செய்திருப்பார்கள். அப்படிக் கைதாகியிருந்தால் 1983இல் நானும் 54வது ஆளாக இருந்திருப்பேன். இவர்கள் இருவரும் நேரடியாக எந்த அரசியலிலோ ஈடுபடவுமில்லை அல்லது அரசிற்கெதிராக போராடவும் செய்யவில்லை. இராசுந்தரம் பற்றி டேவிட் ஐயா குறிப்பிடும் போது

Dr. Rajasunderam of Vavuniya, a tireless energetic worker, in five years we had built up a sound network of District Centers throughout the traditional homelands of the Tamils in Sri Lanka, in Jaffna, Kilinochchi, Mannar, Mullaitivu, Vavuniya, Trincomalee and Batticaloa. At the time of our arrest, 450 pre schools with an average of thirty students each were providing daily milk and Samaposha and Kindergarten teaching facilities even to remote village children.

டேவிற் ஐயா அவர்கள் இறுதிவரை ஒரு உண்மையான பிரமச்சாரியாகவே வாழந்தார். “தனக்கென வாழாப் பிறர்குரியாளன்” என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழந்தவர். யாருக்குமே தான் பாரமில்லாமல் வாழ வேண்டும், ஆனால் தன்னால் எவருக்கும் எந்தெந்த நேரத்தில் எந்த உதவி செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்து கொண்டேயிருப்பார். தமிழ் மக்களின் நிலம் பறிபோய்விடக் கூடாது. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.

முதல் நில கபளீகரம் அம்பாறையிலேயே கல்லோயாத் திட்டத்தில் நடைபெற்றது. அதனை எமது தலைவர்கள் கண்டித்தார்கள், பாராளுமன்றில் பேசினார்கள். ஆனால் அரசுக்கெதிரான தமிழர் குடியேற்றங்களெதனையும் செய்யமுடிவில்லை. அம்பாறையில் சிறுபான்மையினராகினோம். திருகோணமலையை இழந்தோம், தம்பலகாமம், கந்தளாய், பன்குளம், தென்னமரவாடி, புல்மோட்டை, பதவியா, மணலாறு எனத்தொடர்ந்து செட்டிகுளத்தின் ஒருபகுதியான தந்திரிமலை, இறுதியில் நெடுங்கேணி அரசாங்க அதிபர் பிரிவின் கிழக்குப் பகுதியான டொலர்பாம், கென்ற்பாம், காகோபோட் டிஸ்பச் பாம் போன்றவற்றையும் இழந்து இன்று முல்லைத்தீவின் சில பகுதிகளையும்  கபளீகரம் செய்து அதளைத் தடுக்க முடியாமல் இழந்துவிட்டோம்.

வவுனியாவில் 1973இல் நடைபெற்ற கிளிநொச்சி காந்திய சேவா சங்கத்தின் கூட்டத்தன்றுதான் இராசசுந்தரம் அவர்கள் டேவிட் ஐயா அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். டேவிட் ஐயா அவர்கள் கொழும்பு Y.M.C.A இல்தான் வசித்து வந்தார். கொழும்பு செல்லும்போது காந்தியச் செயற்பாடுகள் சம்பந்தமாகக் கதைத்து வருவேன்.

டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்கள்

இராசசுந்தரம் அவர்களுக்கு இந்திய வம்சாவளியினரான தோட்டங்களில் இருந்து வவுனியா வந்து குடியேறிய மக்கள் மீது மிகுந்த பரிதாபத்துடன் கூடிய அன்பும், அவர்களுக்கும் அவர்களது எதிர் கால சந்ததியினரான அவர்களது பிள்ளைகளுக்கும் ஏதாவது சாத்தியபூர்வமான உதவிகள் செய்ய வேண்டும் என்பதனை ஒரு முறை எனக்குச் சொன்னார். அவரும் அவரது மனைவி சாந்தி டாக்டர் அவர்களும் மலைநாட்டு வைத்தியசாலையில் வேலைசெய்த போது அக்குழந்தைகளின் போஷணையின்மை அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பானை வயிறு (POT BELLY), அவர்களின் சுகாதரமற்ற லைன் வாழ்விடம், அவர்களது உழைப்பின் சுரண்டல்கள், சந்தாக்கார தொழிற்சங்கங்களின் ஏமாற்று வித்தைகள் யாவற்றையும் BBC யில் இருந்து வந்து விவரணப் படம் எடுத்த குழுவினருடன் (கிறனடா குழு என்று நினைக்கிறேன்) சேர்ந்து மேற்படி மக்களின் வாழ்ககை முறையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். இதனை BBC ஒளிபரப்பியவுடன் அது இலங்கை அரசுக்கு பெரிய அவமானமாகவும் தேயிலை வியாபாரத்தில் வீழச்சியும் ஏற்பட இலங்கை அரசு டாக்டர் இராசசுந்தரத்தின் செயற்பாடுகளில் சந்தேகங் கொண்டு இரகசியப் பொலிஸ் மூலம் அவருக்கு பல நெருக்குதல் கொடுத்து விசாரணைக்காக கைது செய்தும் சென்றனர். அவர் வவுனியா வந்து சொந்த கிளினிக் தொடங்கிய பின்னரும் இந்திய வம்சாவழியினருக்கு உதவும் மனப்பான்மையிலேயே இருந்தார். இவ்வாறாகவே இராசசுந்தரத்தின் பொது வாழ்வு ஆரம்பமானது.

காந்தியத்தின் தோற்றம்

இப்படியாக உதவிகள் செய்ய ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வேண்டும். அதனாலேயே 1973 பிற்பகுதியில் “காந்தியம்” என்னும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. அதன் முதல் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டப்பட்டது. ஏன் காந்தி சேவா சங்கத்தின் கிளையாக இயங்காமல் தனியான ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். எமது திட்டங்கள் சில அவர்களுடன் ஒத்துவராது என்பதனால் தனியாக இயங்க வேண்டும் அதாவது தீவிரமாகவும் (Radicals) காந்திய வழியிலும் இயங்க வேண்டும்.. காந்தியத்தின் குறிக்கோள்களாக பின்வருவன முடிவு செய்யப்பட்டன. அவையாவன Eradication of Poverty, Eradication of Ignorance and Eradication of decease; அதாவது வறுமை ஒழிப்பு, அறியமையை அகற்றல், நோயை விரட்டல் ஆகியனவாகும். கூட்டத்தின் அதன் தலைவராக திரு எஸ்.ஏ.டேவிட் அவர்களும் , டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்கள் அமைப்புச் செய்லாளராகவும் (Organizing Secretary ) மு.பாக்கியநாதன் (என்னை) நிர்வாகச் செயலாளராகவும் Administrative Secretary திரு. இராதாகிருஸ்ணன் பொருளாளராகவும் வேறு அறுவர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்களது முதலில் குடியேற்றங்கள் பற்றிய திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. முதலாவது கிராம விழிப்புணர்ச்சியாக வவுனியா நகரசபைக்குள் இருக்கும் நகரசுத்தித் தொழிலாளர்களது (தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட இந்திய வம்சாவழியினர்) வசிப்பிடமான சூசைப்பிள்ளையார் குளத்தில் ஒரு சிறுவர் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், போஷாக்கு விநியோகம், ஆரம்ப சுகாதார வகுப்பு போன்றன ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து வன்னியின் பழைய கிராமங்கள் தோறும், மலையக மக்கள் குடியிருந்த பகுதிகளைத் தெரிந்தெடுத்தும் மேற்படி சேவைகளை விஸ்தரித்தோம். (நாம் இதனைத் தொடங்கியபோது இனக்கலவரத்தினால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் தொடங்கப்படவில்லை) முதலில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளம் பெண்களைக் கிராமங்களில் இருந்து தெரிவு செய்து அவர்களுக்கு கிராம தலைமைத்துவம், பாலர் பாடசாலைப் பயிற்சி, சத்துணவு தயாரித்தல், குழந்தைகளுக்குப் பால் வழங்குதல் போன்றவையாகும். ஆரம்பத்தில் மேற்படி சேவைகளுக்கான பயிற்சியினை மொறட்டுவையில் உள்ள சர்வோதயத்தில் அதன் தலைவர் ஏ.ரி.ஆரியரட்ணாவின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது. சர்வோதயத்தினால் இரண்டரைக் கிலோ நிறையுடைய பால் மா ரின் ஒரு லொறி நிறைய அனுப்பப்பட்டது. உள்ளுர் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட காந்தியம் மேலும் வளர நிதி தேவைப்பட்டது அதற்கு இராசசுந்தரம் அவர்கள் ஒரு புறொஜெக்ற் றிப்போட் வரைந்து நோர்வேயில் உள்ள “நோவிப்” என்ற நிறுவனத்திற்கு அனுப்பியதன் பேரில் இருவர் வவுனியா வந்து டேவிட், இராசசுந்தரம் மற்றும் எமது அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் நானும் கலந்து கொண்டேன். நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை அவர்களை அழைத்துச்சென்று காண்பித்தோம். திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அதில் ஒரு கொண்டயினர் கொண்ட பால மா, ஒரு ஜீப் அடங்கலாக 6 சிறிய லொறிகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீண்டு வரும் செலவினத்திற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன. இவைகள் இராசசுந்தரம் அவர்களின் அபார சாதனையாகும். இதன் காரணமாக ஆசிரியைகள் தொண்டர்களாக மட்டுமல்ல அவர்களுக்கு ஒரு அலவன்சும் கொடுக்க வழி ஏற்பட்டது.

1977ஆம் ஆண்டு இராசசுந்தரம் அவர்களும் சாந்தி அவர்களும் சாந்தி அவர்களின் உயர் படிப்பிற்காக லண்டன் சென்றார்கள். அவர்களை வழியனுப்ப நானும் கொழும்பு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இரவு மெயில் ரயில் அனுராதபுரத்தில் தரித்து நிற்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் மெயில் ரயிலும் வந்து சேர்ந்தது. அப்போது அதிலிருந்து இறங்கிய சிலர் சிங்களத்தில் தெமுலு கானுவா தெமுலு கானுவா எனக் கத்திக்கொண்டு இறங்கி வந்து, எமது ரயிலில் வந்த பயணிகளைத் தாக்கினார்கள். ஏன்னோடு இராசசுந்தரத்தின் அண்ணரும் வந்திருந்தார். அவர் ஒரு நேவி காரர். அவர் உடனே யுனிபோமைப் போட்டு எமது கொம்பாட்மென்ருக்குள் யாரும் வர அனுமதிக்கவில்லை. பின்னர் 1 – ஒண்டரை மணித்தியாலத்தின் பின்னர் ஆமியும் பொலிசும் வந்து கலவரத்தை அடக்கினார்கள். அதில் பலருக்கு பலத்த அடியும் வெட்டும் விழுந்தது. அதிகாலை ஐந்து மணிபோல் ரயில் வெளிக்கிட்டு வவுனியா வந்து சேர்ந்தோம். அந் நிகழ்வே இலங்கை முழுவதும் பெரும் இனக் கலவரமாக வெடித்து பல அகதிகள் பஸ்களில் அனுராதபுரத்திலிருந்து வந்து சேர்ந்து கொண்டேயிருந்தனர். அப்போது இராசசுந்தரமும் இல்லை டேவிட் ஐயாவும் இல்லை. நானும் சில அங்கத்தவர்களும் சேர்ந்து அகதியாக வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தங்கவைத்து உணவும், பாலும் பரிமாறினோம். அரசாங்க அதிபரும் தமது உத்தியோகத்தர்கள் மூலமாக பல உதவிளைச் செய்தார்கள். வர்த்தக சமூகமும் பணம் சேர்த்து அவர்களும் உதவி செய்தார்கள். டேவிற் ஐயா அவர்களும் கொழும்பிலிருந்து ஒருவாறு வந்து சேர்ந்தபடியால் எமக்கு முடிவுகள் எடுக்கச் சுலபமாகியது. நிறைய இந்திய வம்சாவளியினர் நிர்க்கதியாக வந்து சேர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் தங்கள் இடம் நோக்கிப் பயணமாகினர்.

காந்தியத்திற்கென ஏற்கனவே பண்ணை அமைப்பதற்கென பாலமோட்டையில் 100 ஏக்கர் திருத்தப்பட்டும் திருத்தப்படாமலும் இருந்த காணி ஒன்று வவுனியா டி.எல்.ஓ வாகக் கடமையாற்றிய திரு சண்முகராஜா என்னும் நண்பர் மூலம் கிடைத்திருந்தது. அக்காணியைப் பயன்படுத்தி இராசசுந்தரம் லண்டனில் இருந்தும் அவர்களின் வழிகாட்டலில் டேவிட் ஐயா, நான் மற்றும் அங்கத்தவர்களுடைய உதவியுடனும் நொவிப் பண உதவியுடனும், அவர்களுக்கு உதவி செய்து கொட்டில் அமைத்துக் கொடுத்து ஆரம்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடியமர்த்தினோம்.

இவ்வேளையில் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது உடுப்பிட்டித் தொகுதியில் த.இராசலிங்கம் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி அபேட்சகராக நிறுத்தியிருந்தது. அவருக்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த பலர் வேலை செய்ய வந்திருந்தார்கள். எமது வீடு தேர்தல் காரியாலயமாக இயங்கியது. அங்கு வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தங்கியிருந்து பிரசாரப்பணியைச் செய்தார்கள். அதில் முக்கியமானவர் சந்ததியார், செந்தூர்ராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நான் அப்போதுதான் சந்ததியாரைச் சந்திக்கிறேன். இரவு அவரோடு கதைத்துக் கொண்டு இருக்கும் போது எமது காந்திய நடவடிக்கைகள், குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி விபரித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் ஈர்க்கப்பட்டு, இப்படியான வேலைகளைச் செய்வதற்கு என்னிடம் சில இளைஞர்கள் தயாராக உள்ளார்கள் அவர்களுக்கு உணவும் தங்குதிடமும் கொடுத்தால், அவர்கள் பண்ணை வேலைகள் அத்தனையையும் செய்வார்கள்.

இந்த இடையில் இராசசுந்தரம் தம்பதிகள் லண்டனிலிருந்து வந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து சந்ததியாரும் அவரது நண்பர்களும் ஒரு வானில் இராசசுந்தரம் அவர்களின் வீட்டில் வந்திறங்கினார்கள். அப்போது டேவிட் ஐயாவும் அங்கு இருந்தார். சந்ததியாரை அறிமுகம் செய்து வைத்தேன். அவரோடு சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்), (பாலமோட்டை) சிவம், பாலன், ராஜன் (சின்ன) வேறும் சிலர் வந்திருந்தனர். தற்போது எனக்குப் பெயர்கள் ஞாபகம் இல்லை. அவர்கள் டேவிட் ஐயா மற்றும் இராசசுந்தரம் அவர்கள் அவர்களுக்கு ஒரு சிறு சொற்பொழிவாற்றி, அவர்களை வானில் ஏற்றிக் கொண்டுபோய் பாலமோட்டையில் விட்டோம். சிறிது நாட்களில் பண்ணை ஒரு சிறந்த ஒழுங்கிற்கு வந்தது. கிணறு வெட்டப்பட்டது, விவசாயம் செய்தார்கள், அங்கு குடியேறியோர் சகலவற்றிலும் பங்கு கொண்டார்கள் நியாய விலைக் கடையை நிறுவி, அந்த ஊர்மக்களுக்கும் சேர்ந்து பல நன்மைகளைச் செய்தார்கள். ஆனால் இவர்கள் அடிப்படையில் இயக்க நடடிக்கைளில் ஈடுபடத் தொடங்கினர். அங்கு உமாமகேஸ்வரனும் வந்து போனார் என அறிந்தேன். ஆனால் என்னை ஒருநாளும் தங்கள் இயக்க நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனை நான் விரும்பவில்லை என்பது சந்ததியாருக்குத் தெரியும். சந்ததியாரும் நானும் பல இடங்களுக்கு ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வோம். ஆனால் புளொட் அங்கத்தவர்களுடன் என்னைத் தொடர்புபடுத்தவில்லை. நானும் அது பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனது நோக்கம் முழுவதும் அகதிகளுக்குத் தொண்டு செய்வதாகவே அமைந்தது. காந்தியம் சிறிது சிறிதாக அரசியல் மயப்படுவது பற்றி இராசசுந்தரத்துடன் விவாதித்தேன். அவர் கூறினார் நாம் தமிழ் பொலிட்டிக்ஸ் மட்டும் செய்கிறோம். அதுவும் அகிம்சை வழியில். ஆனால் எனக்குத் தெரிந்த மட்டில் இராசசுந்தரமோ அன்றி டேவிட் அவர்களோ துவக்குத்தூக்கிப் போராடவில்லை. வவுனியாவில் குடியேற்றம் செய்தார்கள். தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்காததனை அவர்கள் செய்தார்கள். எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுத்தோம்.

டேவிட் ஐயா காந்தியத்திற்கு வருவதற்கு முன்பு எல்லைக் கிராமமப் பாதுகாப்பு அவ்வாறான கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எழுதியும், பேசியும் செயலிலும் காட்டி வந்தார். முதலில் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தினை இளைப்பாறிய நீதியரசர் கிருஷ்ணதாசன், பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களும் இன்னும் சில படித்தவர்களுடம் சேர்ந்து திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்தார்கள். திருகோணமலை சிங்களவர் குடியேற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை ஆரம்பத்தில் வலியுறுத்தியவர்கள். இதனாலேயே அமையப் போகும் தமிழ் பல்கலைக்கழகம் திருகோணமலையில் அமைய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து அதற்கொன 3ஆம் கட்டையடியில் 5 ஏக்கரளவான நிலமும் வாங்கப்பட்டு, அதில் சிறிய கட்டிடமும் அமைத்திருந்தார்கள். அது இன்றும் வெற்று நிலமாக இருந்ததனைக் கண்டுள்ளேன். ஆனால் இன்றைய நிலையில் அது என்னவாயிற்றோ தெரியவில்லை. இதனைத் தொடர்ந்தே பதவியாவில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு தமிழ் நிலம் பறிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நெடுங்கேணி. பட்டிக்குடியிருப்பில் தமிழ் பல்கலைக்ககழக இயக்கம் சார்பில் நாவலர் பண்ணை என்ற ஒரு பண்ணையை டேவிட் ஐயா தொடங்கினார். ஆனாலும் ஒரு சிலரைத்தவிர அங்கு குடியேறுவதற்கு எவரும் முன்வரவில்லை, வுவனிக்குளம், விசுவமடு போன்று மக்கள் சென்று குடியேறியது போன்று இங்கு மக்கள் குடியேற முன்வரவில்லை. இதற்கு எமது அரசியல்வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்காதது வேதனையானதே.

1977 இனக் கலவரத்தை அடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் TRRO அமைக்கப்பட்டது. அதற்குத் தலைவராக திரு கே.சி.நித்தியானந்தா அவர்கள் தலைவராகவும் திரு கந்தசாமி, சட்டத்தரணி அவர்கள் செயலாளராகவும் இயங்கினர். (இவர் பின்னர் ஒரு இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்) இவர்கள் காந்தியத்துடன் சேர்ந்து குடியேற்றங்களை அமைத்தார்கள். முன்பு பெரிய தமிழ் வர்த்தக நிறுவனங்களுக்கு 500 ஏக்கர் வீதம் கொடுக்கப்பட்டு விவசாயம் செய்தார்கள். காலப்போக்கில் அவை வரிவராமல் போகவே அதனைக் கைவிட்டார்கள். அப்படியான காணிகளை டொலர் கோப்பறேசன், கென்ற் பாம் ஆகியவற்றினை அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரிஆர்ஆர்ஓ பொறுப்பெடுத்து குடியேற்றங்களைச் செய்தனர். முழுக்க முழுக்க தோட்டத்துறையிலிருந்து அகதியாக வந்த இந்திய வம்சாழியினரே குடியேற்றப்பட்டனர். பராமரிப்பதற்கு மட்டும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் இருந்து செயற்பட்டனர். காந்தியத்தின் சிறுவர் பாடசாலை, போஷாக்கு நிலையம் ஆகியன அமைக்கப்பட்டு நடந்து வரும்போது அங்கு ஏதோ பயங்கரவாத வேலைகள் நடப்பதாகக் கூறி ஆமி அங்கு சென்று பல முறை சோதனையிட்டது. அத்தோடு மக்களையும் தொண்டர்களையும் வருத்திக் கொண்டேயிருந்தது. இப்படியாகப் பலமுறை செய்யச் செய்ய குடியேறிய மக்கள் தாங்களாகவே அவ்விடத்தை விட்டுவேறிடம் நோக்கிச் சென்றனர்.

இதன் பின்பே அங்கு அரசாங்கத்தால் சிறைக் கைதிகள் அதில் காடையர், கடைப்புளியர், கொலைகாரர் யாவரும் கொண்ட குழுவினரைக் குடியமர்த்தினர். இவர்களையே விரட்டும் நோக்கில் ஒரு இயக்கம் சுட்டுக் கொன்று விரட்டியடித்தது. எனினும் மீளவும் அரசாங்கம் இராணுவ முகாமும் அமைத்து பாதுகாப்புடன் குடியேற்றம் செய்து அதனை பதவியா, மணலாறு ஆகியவற்றுடன் இணைத்ததோடல்லாமல் அப்பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டது.

எமது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் யாவுமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பகுதியின் ஒரு பகுதி கபளீகரம் செய்யப்பட்டு அனுராதபுரத்துடன் சேர்க்கப்பட்டதோடல்லாமல். இன்று அங்கு இராணுவ முகாமும் பதவியாவிலிருந்து சிறந்த றோட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களது கைதும் இராசசுந்தரத்தின் கொலையும்

டாக்டர் இராசுந்தரம் அவர்களதும் டேவிட் ஐயா அவர்களும் கைது, சட்டவிரோதமானதாகும் வேண்டுமென்றே காரணம் சோடிக்கப்பட்டதும் தேடிப்பிடிக்கப்பட்டதுமான காரணங்களாகும் என்று பல கட்டுரையானர்கள் கூறுகின்றனர். அவர்களது கைதுக்குக் கூறப்பட்ட காரணங்கள் மூன்றாகும் அவையாவன

1. உமாமகேஸ்வரனைச் சந்தித்ததும் அதுபற்றி பொலிசுக்கு அறிவிக்காததும்.

2. சந்ததியாரைச் சந்தித்ததும் அதுபற்றி பொலிசுக்கு அறிவிக்காதததும்.

3. உமாவையும், சந்ததியாரையும் இந்தியாவுக்கு அனுப்ப உதவியமை.

இவை மூன்றுமே அவர்கள் செய்த குற்றங்களாகச் சுமத்தப்பட்டன.

      • உமாமகேஸ்வரன் அடிக்கடி வவுனியா நகரத்திற்கு வந்து போறவர். நகர வாழ் மக்கள் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் பல இருந்துள்ளன. ஆனால் நகரின் மத்தியில் இருந்த பொலிசாரினால் ஏன் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
      • சந்ததியாரைப் பொறுத்தவரை அவர் பாலமோட்டை பண்ணையில் தான் வேலை செய்கிறார். நகருக்கு அடிக்கடி மோட்டார் சைக்கிளில் தனியே காந்தியம் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து போவார். யாரும் சந்திப்பதற்கு எளியனாக இருந்தார். இவர்களை இராசசுந்தரமும் டேவிட் ஐயா மட்டும் தான் கண்டு கதைப்பார்களா. அவர் தேடப்படுபவர் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்.
      • உமாவும் சந்ததியாரும் முன்பும் இந்தியா சென்று வந்தவர்களாயிருந்தும் இராசசுந்தரமும் டேவிட்டுமா வள்ளம் பிடித்து இரகசியமாக இந்திய அனுப்பினார்களாம் அவர்களுக்கு வள்ளம் பற்றி என்ன அறிவு தெரியும்.

காந்தியத்தையத்தை அழிக்க வேண்டியதேவை சிங்கள அரசுக்கும், அரசுக்காகச் சேவை புரியும் வவுனியா தெற்கு சிங்கள பகுதி உதவி அரசாங்க அதிபருக்கும், யு.என்.பி அமைப்பாளருக்கு, முப்படைகளுக்கும் குறிப்பாகப் பொலிசுக்குமிருந்தது. காந்தியம் வன்னியின் பழைய கிராமங்களில் யாவும் சென்று வேலை செய்வதனால் டொக்டர் மீது யு.என்.பி அமைப்பாளர் புலேந்திரன் அவர்களுக்கும் அவரைச் சார்ந்த அவரது ஆதரவாளர்களுக்கும் பயம் கலந்த கோபம் இருந்தது. காரணம் காந்தியத்தை வளர விட்டால் அது வளர்ந்து தனக்கு ஒரு அரசியல் எதிரியாக வந்து விடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள். ஆனால் இராசசுந்தரத்திற்கோ பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இருக்கவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவையாக நினைத்தார். அதனால் அவர் ஒருபோதும் தான் ஒரு எம்.பி யாக வரவேண்டும் என்று நினைக்கவேயில்லை. டேவிட் ஐயா ஒரு பேட்டியில் இராசசுந்தரம் வவுனியாவிற்கு எம்.பி யாக வரவேண்டும் என்று நினைத்திருந்தார் என்று குறிப்பட்டது தவறான செய்தியாகும்.

இராசுந்தரத்தோடும் அவரது குடும்பத்தாரோடும் ஒரு குடும்ப உறவினன் போல் பழகியவன் என்ற வகையில் அறிதியிட்டுக் கூறுகின்றேன், அவருக்கு அப்படியான எந்த எண்ணமும் இருந்ததில்லை. புலேந்திரன் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் காந்தியத்தில் பெண்கள் நிறைய தொண்டர்களாக வேலை செய்வதனால் மிகவும் கீழ்த்தரமான பிரசாரங்களைச் செய்தார்கள். எதனையும் நாம் பெரிது பண்ணவில்லை. காய்க்கிற மரம் கல்லடி படவே செய்யும். இராசுந்தரம் ஒரு முறை இரவு மெயிலில் கொழும்பு செல்வதற்காக வவுனியா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த புலேந்திரன் அவர்கள் இராசசுந்தரத்தோடு கதைவளிப்பட்டு பேச்சு முற்றிய நிலையில் அவருக்கு அடித்தும் விட்டார். இராசசுந்தரமும் தான் வைத்திருந்த சூட்கேசால் திருப்பித் தாக்கிவிட்டார். பின்னர் ஆட்கள் பிடித்து விட்டதனால் சண்டை தணிந்தது. இவ்வாறாகவே கோபத்தினைக் காட்டியதனால் அரசியல் பழிவாங்கல்களில் ஏன் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். அடுத்து சிங்களப் பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏ.ஜி.ஏ அவர்களும் காந்தியம் ஏதோ அரசாங்கத்திற்கெதிரான செயற்பாடுகளைச் செய்வதாகவே கருதி தனது அறிக்கைகளை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியும் வந்தார். காந்தியம் நடாத்திய பண்ணைகளில் ஏதோ அரசியல் போராட்ட பயிற்சிகள் நடைபெறுவதாகவே அவரது அறிக்கைகள் அமைந்தன. இதனால் பொலிசும் அடிக்கடி இராசசுந்தரத்தின் வீட்டில் வந்து விசாரித்துச் செல்வார்கள். வெளியிடங்களிலிருந்தோ அன்றி வெளிநாட்டிலிருந்தோ யாரும் அவர் வீட்டிற்கோ காந்தியத்திற்கோ வந்தால், உளவாளிகள் உளவு பார்த்துவிட்டு, அடுத்தநாள் விசாரணைக்கு யாராவுதல் வந்து போவார்கள். இராசசுந்தரத்தோடு யாரும் கதைத்து வெல்ல முடியாது எவரையும் கதைத்து தன்வழிப்படுத்தும் வல்லமையுடையவர்.

மார்ச் மாதம் 14, 1983 அள்று சிங்களப்பகுதி உதவி அரசாங்க அதிபரின் உத்தரவின்படி கூட்டு பொலிஸ் ஆமி நடவடிக்கை எடுக்கப்பட்டு பன்குளத்தில் உள்ள அகதிகளாக வந்து குடியேறிய இந்திய தமிழர்களின் குடியிருப்புக்கள் சோதனையிடப்பட்டு பயிர்கள் மற்றும் குடிசைகள் பல எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் திகதி 1983இல் காந்தியம் கூட்டுப் படையினரால் காந்தியம் தலைமைக் காரியாலயம் சோதனையிடப்பட்டது. காந்தியத்தின் அமைப்புச் செயலாளரான டாக்டர் எஸ்.இராசசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்டு குருநகர் காம்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றது. டேவிட் ஐயா அவர்களும் அன்றே அவர் வழமையாகத் தங்கியிருக்கும் வை.எம்.சி.ஏ இல் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்பு 4ஆம் மாடிக்குக் கொண்டு சென்று சித்திரவதை தொடர்ந்தது. இவர்கள் செய்தது ஏழை மக்களின் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டியதும், அவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கியதும், இனக்கலவரத்தினால் திக்கற்று தமிழ் நிலம் நோக்கி வந்த மக்களை அவர்களை நிம்மதியான வாழ்க்கை வாழ வசதி செய்து கொடுத்து விவசாயப் பண்ணைகளை உருவாக்கி அவர்களை வாழவைத்ததே அவர்கள் செய்த பிழையாகும். இப்படியான செயலையே சர்வோதையத் தலைவர் திரு ஏ.ரி.ஆரியரத்தினாவும் சிங்கள மக்களுக்குச் செய்து கொண்டிருந்தார். ஆனால் தமிழர்கள் இப்படியான குழந்தைகளை வளர்த்தெடுக்கும், பண்ணைகளை உருவாக்கி அகதிகளாக வந்த மக்களைக் குடியேற்றுவதனையே அரசியலாக்கி. காந்தியத்தையே அழித்தார்கள். இறுதியில் 1983இல் வெலிக்டைச் சிறையில் 53 பேருள் இராசசுந்தரத்தையும் கொலை செய்து தமது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள். காந்தியம் அரசால் முடக்கப்பட்டது காந்திய நிதிகள் முடக்கப்பட்டது. டேவிட் ஐயா இயங்க முடியாமல் தலைமறைவு வாழ்வு வாழ இந்திய சென்று அங்கு தனது காலத்தை முடித்துக்கொண்டு பொறுக்க முடியாமல் தனது இறுதிக்காலத்தை கிளிநொச்சியில் 3 மாதம் வாழ்ந்து கனவுகள் நிறைவேறாமலேயே தனதுயிரைத் துறந்தார்.