Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து இன ஒடுக்கப்படும் மக்களும் இணைந்து பேரினவாத ஒடுக்கு முறைக்கெதிராக போராட "சம உரிமை இயக்கம்" சார்பாக டென்மார்க்கில் தோழர் குமார் அழைப்பு

ஐரோப்பாவில் பரந்து வாழ்கின்ற இலங்கை மக்களின் மத்தியில், சம உரிமை இயக்கம் தனது கொள்கை பரப்புதலுக்கான அங்குரார்ப்பணக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் தற்போது டென்மார்க் கொல்ஸ்ரப்புறோ நகரில் தோழர்கள் குமார் குணரட்னம், சிறி மற்றும் முன்னணித் தோழர்களுடன் இக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது 35இற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

இலங்கையில் எமது மக்களின் வாழ்வியலுக்கான போராட்டம் சார்ந்ததும், கடந்தகால அனுபவங்கள் பற்றியும் இனிவரும் காலத்தில் எப்படியான போராட்டத்தினை அனைத்து இனவாத அரசியலுக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கான எதிர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், விமர்சனங்களையும், ஆதரவுகளையும் எந்தத் தங்குதடையுமின்றிச் சுதந்திரமாக முன்வைத்தனர்.

கூட்டத்தின் அதிகமானோரது ஆரம்பக் கேள்விகள் அனைத்து இன மக்களுக்குமான சம உரிமைப் போராட்டம் என்பது பலமுடைய எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டிச் செல்வதென்பது சாத்தியமாகுமா என்பதாகவே இருந்தது. அத்துடன் கடந்த 60பது ஆண்டுகால இலங்கையின் அனைத்து அரசியல் வரலாற்றில் வலதுசாரி இனத் துவேசிகளை மட்டுமல்லாது, இடதுசாரிகள் விட்ட தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்டன.

இலங்கை வாழ் மக்களை மதம் - மொழி - கலாச்சாரம் - பிரதேச ரீதியாக இனவாதத்தினூடு பிரித்து மோதவைக்கின்ற அரசியலை, இலக்கியங்களாகவும் - ஊடகக் கருத்துக்களாகவும் - தொன்மை சார்ந்த கீர்த்திகளாகவும் - அறிவுசார் சாதனங்கள் மூலமாகவும் இனப் பிளவுவாதக் கருத்துக்களை மக்களுக்குட் செலுத்தி, மக்களைப் பேரழிவு செய்த இனவாத அரசுக்கு ஒத்தாசை வழங்குகின்ற இடதுசாரிய வலது சந்தர்ப்பவாதிகளின் இருப்புப் பற்றியும், அவர்களது பிழையான நாடாளுமன்றப் போக்குகள் பற்றியும் பேசப்பட்டன.

கடந்த 45 வருடகால ஜே.வி.பியினரின் பிற்போக்குப் பாராளுமன்ற அரசியல் நிலைப்பாடு பற்றியும், அது தனது அரசியற் தடம்மாறி இனவாதத்திற்குள் வீழ்ந்தபோது அதற்குள் நடந்த உட்கட்சிப் போராட்டங்கள் பற்றியும், அதன் ஐந்தாவது வரையான மாநாட்டிலும் கூட அது தனது பிடிவாத இனவாதப் போக்குகளை மாற்றமுடியாத போது, 2012இல் சோஷலிச முன்னிலைக் கட்சியை தாம் உருவாக்கி ஓர் இடதுசாரி இயக்கத்தின் உண்மையான வேலைத் திட்டங்களை மக்களுக்கு முன்வைத்ததுடன் அனைத்து இன ஒடுக்கப்பட்ட மக்களின் புரிந்துணர்வில் நின்று சம உரிமை இயக்க மூலமாக ஓர் அரசியற் கலாச்சார மாற்றத்திற்கான, பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எவரும் இணைந்து போராடக்கூடிய குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தினை இங்கு தோழர் குமார் குணரட்னம் முன்வைத்தார்.

இக் காலகட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் பரப்புரை மூலமாக அமைக்கப்படுகின்ற சம உரிமை இயக்கத்தின் கருத்தாடல்கள் என்பது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கானது எனவும், இதில் இலங்கையிலிருந்தும் - இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்தும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களை நோக்கி இறக்குமதி செய்யப்பட்டோர் மூலமாக எமது மக்களை மீண்டும் மீண்டும் உசுப்பேத்திவிடும் இனவாத முரண்பாட்டுக் கருத்துகளுக்கு எதிராக சம உரிமை இயக்கம் போராடும் என்றார்.

அத்துடன் கொலைகளைச் செய்த அனைத்துக் குற்றவாளிகளிடம் போய் மண்டியிட்டு, கொலையுண்டோருக்கான நீதி தாருங்கள் என்ற ஏலாத்தன அரசியல் நகர்வினை முற்றிலும் ஏற்கமுடியாது என்றார்.

இது இலங்கை வாழ் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்டமைப்பாகும் என்பதன் துலக்கமான கருத்துகளை தோழர் சிறி முன்வைத்தார்.

இக் கூட்டத்தில் கலந்துகொண்டோரில் அதிகமானோர், தாம் இச் சம உரிமை இயக்கத்தினையும் இதன் போராட்ட வேலைத் திட்டத்தினையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியதுடன், தமது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

27.03.2013 டென்மார்க்