Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மேதினத்தில் அணி திரள்வீர்!

தோழர்களே!

உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் தேசம், இனம் என எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபட்டு தமது உரிமைக்காக உலகளவில் திரண்டெழும் இம் மேநாளில் சமவுரிமை இயக்கம், உங்களை இவ் உழைப்பாளர் தினத்தில் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து இனவெறிப் பிரச்சாரங்கள் மூலமாய் மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை இந்த அதிகாரப் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு வாழ் மக்களுக்கு வசந்தம் வழங்குவோமென்ற இந்த அரசானது வடக்கு மக்களை முன்னெப்போதையும் விட மோசமான இராணுவ ஆட்சிப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. வடக்கு மக்கள் இராணுவ ஆதிக்கப் பிடிக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

சட்டதிட்டத்தை மீறிய ஒழுங்கற்ற நாடாக மாறியிருக்கின்ற இலங்கையில் இன்று சந்தர்ப்பவாதிகளான, தேசப்பற்றாளர்கள் என்று போலி வேடமிடும் ஆட்சியாளர்களுக்கு குறுகிய இனவாதம் என்பது மக்களைப் பிளக்கும் ஒரு பலமிக்க கருவியாகியுள்ளது. அதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனவாதச் சக்திகளை தூண்டிவிடும் முயற்சிகளை அரசு செய்கிறது.

தேச மற்றும் சர்வதேசமெங்கும் பாட்டாளி மக்களின் நலன்களுக்காகத் திரண்டிருக்கும் அரசியற் தளம் மீது நாமும் தடம்பதிக்க இந்த மேநாளில் நாங்கள் ஒருங்கிணைவோம்.

வரலாற்றில் அன்றைய தொழிலாளத் தோழர்கள் சிந்திய இரத்தத்தாலும் வியர்வையாலும், கண்ணீராலும் நிரம்பிய போராட்டங்கள் விளைவித்தவையே இன்றைய தொழிலாளர்கள் அனுபவிக்கும் உரிமைகளாகும். தொழிலாளர் உரிமைகளுக்காய் தமதுயிர்களை ஈடாக்கி அவ் உரிமைகளை வென்று தந்தவர்கள் தொழிலாளர்கள். மனிதகுல வரலாறு என்பது இவ்வகைப் போராட்டங்களின் தியாக வரலாறேயொழிய வேறொன்றல்ல.

சர்வதேப் பாட்டாளி மக்களின் பலத்தை பறைசாற்றுவதற்காக உலகின் மூலை முடுக்கெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்கள் இந்த வரலாற்றுத் தினத்தில் கைகோர்த்து ஒருமித்து நிற்கிறார்கள்.

வேலை நேரத்தை எட்டு மணித்தியாலங்களாகக் குறைக்கும்படி 1886 இல் மே முதல் நாளன்று சிக்காக்கோ நகரில் போராடிய தொழிலாளர்களின் போராட்டம் கொடிய இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. தங்களது நியாயமான கோரிக்கைகளை வெல்வதற்காய் அவர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி தமது இன்னுயிர்களையும் தியாகம் செய்தார்கள். அத் தியாகிகளின் நாளே உலகமெங்கணும் வாழும் தொழிலாளர்களின் உரிமைப் போராட்ட நாளாக மேதினமாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, தோழர்களே சமவுரிமை இயக்கம் மேதினத்தில் கலந்து கொள்வதற்கு தயாராகுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறது. உங்களது வேலைத் தளங்களிலிருந்து நேரத்தினை பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டிற்காகவே இக் கடிதத்தினை போதியளவு கால அவகாசத்துடன் அனுப்புவதென தீர்மானித்தோம்.

நன்றி

சமவுரிமை இயக்கம். (லண்டன்,பிரான்ஸ்,நோர்வே,டென்மார்க்)