Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்

1987 ஆம் ஆண்டு மார்ச் 28ம் திகதி மாலை 6.30 மணியளவில் நான் (இரயாகரன்) காணாமலாக்கப்பட்டேன். வெளியுலகில் எனக்கு என்ன நடந்தது என்பது, பொது மக்களுக்கு தெரியாது. 80 நாட்களின் பின் நானாக தப்பிய பின் தான், புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதும், அவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்ய இருந்த செய்தி பொது மக்களுக்கு தெரிய வந்தது. ஆம் புலிகள் மக்களின் ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சினர். தங்கள் நடத்தைகள் மூலம் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி, சமூகத்தை சிறுகச்சிறுக பாசிசமாக்கிக் கொண்டு இருந்த காலத்திலேயே நான் காணாமலாக்கப்பட்டேன். மக்களை அறிவூட்டக்கூடிய, மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய, ஜனநாயகத்தினை கையாளக்கூடிய நபர்களை காணாமலாக்கி கடத்திச் செல்வதும், இனந்தெரியாத நபர்களின் போர்வையில் கொன்று விடுவதே புலிப் பாசிசத்தின் அரசியல் தெரிவாக இருந்தது.

புலிகள் தவிர்ந்த பிற இயக்கங்களும் 1986 முன் இதைத் தான் செய்தன. 1986 பின் பிற இயக்கங்களை அழித்த பின், தாம் அல்லாத அனைவரையும் புலிகள் கொன்றனர் அல்லது காணாமலாக்கினர். இதன் மூலம் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சமூகமாக, சமூகமே படிப்படியாக பாசிசமாகியது. ஜெர்மனியில் கிட்லரின் ஆட்சியின் கீழ் சமூகம் எப்படி பாசிசமாகியதோ, அதேபோன்று புலிப்பாசிசமே தமிழ் சமூகத்தின் பொது மொழியானது.

இன்று இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடத்தும்  போராட்டம், இறுதியுத்தத்திலும் - புலிகளின் அமைப்பில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பானதே. இதைவிட காணாமலாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, வெவ்வேறு வரலாற்றுக் காலத்திற்கும், பல அரசியல் பின்புலமும் கொண்டு காணப்படுகினறது. பல அடுக்குகள் கொண்ட இலங்கைப் பாசிசமானது, இயக்கங்கள் - அரசு என்ற இரண்டு எதிர் முகாம்களில் கோலோச்சியிருந்தது. தமிழ் - சிங்கள – முஸ்லிம் இன மத வாதம் மூலம் மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்கும் பாசிசமாக இயங்கியது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளை மறுக்கவும், சிலர் கொழுக்கவும் முடிந்தது. இதுதான் இலங்கையின் பாசிச வரலாறு.

இன்று முகிலன் காணாமலாக்கப்பட்ட பின்னணியில், இந்திய சமூகத்தை பாசிசமயமாக்கி வரும் சமூகப் பின்னணியில் நடந்தேறி இருக்கின்றது. தூத்துக்குடி படுகொலைகளையும் - வன்முறையையும், எப்படி, யாரால் நடத்தப்பட்டது என்பதை, ஆதாரமாக வீடியோ காட்சி மூலம் வெளியிட்ட அன்று முகுந்தன் காணாமலாக்கப்பட்டார். தூத்துக்குடி ஸ்ரெலைட் கம்பனியின் அடியாளாக பொலிசும் - ஸ்ரெலைட் கம்பனியின் கூலிப்படையும் இணைந்து, மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க நடத்திய வன்முறையை அம்பலப்படுத்திய பின்னணியில்,  முகுந்தன் காணாமலாக்கப்பட்டார். முகுந்தன் காணாமலாக்கப்பட்ட பின்னணியில் பொலிசும் - ஸ்ரெலைட் கூலிப்படையும் இருப்பது வெளிப்படையான உண்மை. அனைவரும் மறுக்க முடியாத உண்மையும் கூட, மறுபக்கத்தில் இதன் மூலம் பயத்தை விதைத்து விடுவதன் மூலம், அடங்கியொடுங்கிய சமூகமாக்க கார்ப்பரேட் காவி பாசிசம் முனைகின்றது.

மக்கள் ஜனநாயகத்தை கையில் எடுத்துப் போராடும் போது, அதை ஒடுக்க பாசிசம் என்பதே இந்திய ஆளும் வர்க்கத்தின் தெரிவாகி இருக்கின்றது. சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மூச்சும் நெரிக்கப்படுகின்ற அளவுக்கு, இந்தியாவெங்கும் காவிப் பாசிசம் திணிக்கப்படுகின்றது. இதன் மூலம் இந்தியா பாசிசமே கார்ப்பரேட் மயமாகி வருக்கின்றது. சட்டம், நீதி தொடங்கி அரசு கட்டமைப்பே காவி மயமாகி வருகின்றது. மீண்டும் முதலாளித்துவத்தின் சட்ட ஆட்சி தோன்ற முடியாத அளவுக்கு, ஆட்சியமைப்பு காவிமயமாகி இருக்கின்றது. பார்ப்பனிய சிந்தனை காவி முகமூடியை அணிந்து கொண்டுள்ளது.

ஜனநாயகத்தைக் கண்டு அஞ்சும் ஆட்சி பாசிசமாகி விடுகின்றது. சட்டம் தொடங்கி யார் ஆள்வது என்பதை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை வரை பாசிசமாகிவிட்டது. இதையே பழக்கப்படுத்தி விடுவதற்கு, பாசிசம் தேர்ந்தெடுப்பது இனவாதமும், மதவாதமும், சாதிவாதமுமே. இனம், மதம், சாதி போன்ற குறுகிய மனப்பாங்கை மனிதர்களின் சிந்தனை முறையில் புகுத்திவிடுவதன் மூலம், இந்தியாவில் பார்ப்பனிய சிந்தனையை காவி மயமாக்கி விடும் பொது நிகழ்ச்சியே அரசியல் - தேர்தல் முறையாகியுள்ளது.

சாதியை முன்னிறுத்தி தேர்தல் கட்சிகள், இனத்தை முன்னிறுத்திய தேர்தல் கட்சிகள், மதத்தை முன்னிறுத்திய தேர்தல் கட்சிகள் .. அனைத்தும் காவிமயமாக்கும் பார்ப்பனிய பொது சிந்தனையின் அங்கமாக, எதிரெதிர் முனைகளில் இயங்குகின்றது. மக்களை குறுகிய அடையாளங்களுக்குள் திணித்து, காவிமயமாக்குவது நடந்தேறுகின்றது.

தேர்தல் மூலம் ஆட்சி மாற்றமே பாசிசத்துக்கு எதிரான போராட்டம் என்பது கானல் நீர். பாசிசத்துக்கு எதிராக மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டம் தான் பாசிசத்தை முறியடிக்கும். முகிலனின் போராட்டம் அதைத்தான் உணர்த்துகின்றது. இன்றைய சூழலில் கொல்லப்படும் அறிவுஜீவிகள் வரிசையில், முகிலன் காணாமலாக்கப்பட்டுள்ளார். முகிலன் எங்கே என்பதற்கான போராட்டம் பாசிசத்துக்கு எதிரானது என்பதுடன், பாசிசத்துக்கு எதிரான முகிலனின் போராட்ட வழியில் போராடுவதே, பாசிசத்துக்கு எதிரான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும்.