Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்

ஆணாதிக்க இந்தியப் பார்ப்பனிய சமூக அமைப்பில் பெண்களின் சுதந்திரமற்ற வாழ்க்கை முறைமை தான், பெண்கள் குற்றவாளிகளை இனம் காண முடியாமைக்கான காரணமாக இருக்கின்றது. பணம், அதிகாரம், கவர்ச்சி.. போன்றவற்றை சமூக அந்தஸ்தாகவும், அதையே தனது இலக்காகவும் கொண்ட மனிதன், அதிலும் ஒரு பெண் சமூகத்தில் அப்படிப்பட்ட ஆணாக ஒருவனை தெரிவு செய்வது அவளின் குற்றமல்ல. இதைத்தான் இந்திய சமூகம் வழிகாட்டுகின்றது.

பகுத்தறிவுக்கு முரணான ஆணாதிக்க சாதிய சமூக அமைப்பு பற்றிய புரிதலை பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பது மறுக்கப்படுகின்றது. சாதிக்குள் தேர்ந்தெடுக்கும் வரையறையைக் கொண்டு, பெண்ணை வழிகாட்டுகின்றது. சாதிய சமூகமானது பொதுவான மனிதத்தன்மையைக் கண்டுகொள்ளமுடியாத வண்ணம் பெண் வளர்க்கப்படுவதால், குற்றவாளிகளைப் பகுத்தறியும் தன்மையை சாதியப் பெண்கள் இழந்து விடுகின்றனர். இதைத்தான் பாலியல் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

பெண் உடல் என்பது ஆணின் உடைமை. ஆணின் சுகத்துக்கான நுகர்வுப் பண்டம். நவதாராளவாதத்தில் பெண் உடலென்பது சந்தைப் பொருள். பெண் உடல் என்பது ஆணின் பாலியல் தேவைக்கான (சரக்கு) பொருள். அதை வாங்கவும், விற்கவும், பலாத்காரமாக அடையும் உரிமையையும் ஆணுக்கு, ஆணாதிக்க சமூகம் கொடுக்கின்றது. இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் பொதுக் கண்ணோட்டம்.

இந்த சமூகப் பின்னணியில் பெண் நுகர்வுக்குரிய பாலியல் பண்டமாகவும், நிலப்பிரபுத்துவ அடிமைப் பொருளாகவும் கட்டமைக்கப்பட்ட இந்திய பார்ப்பனிய சமூக அமைப்பில், பெண்ணின் சுதந்திரம் என்பது சிறைதான். இந்தப் பின்புலத்தில் காமவெறி பிடித்த நுகர்வாக ஆணின் வக்கிரத்தின் சூதுவாதை பெண் இனம்கண்டு கொள்ள முடியாதளவுக்கு, பெண் பகு;தறி முடியாதவளாக வளர்க்கப்படுகின்றாள்.

இப்படிப்பட்ட சூழலில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான ஆணாதிக்க குரல்கள் கூட, பெண்களின் சுதந்திரமான வாழ்க்கையின் தெரிவுக்கு வேட்டு வைக்கக் கோருக்கின்றது. முன்பு போல் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் சுதந்திரமான நடமாட்டத்தையோ, தெரிவுகளையோ செய்ய முடியாத வண்ணம், ஆணாதிக்க அதிகாரத்தை பெண்களுக்கு எதிரானதாக மாற்றி இருக்கின்றது. அதாவது அடிப்படைவாத பார்ப்பனிய ஆணாதிக்கக் குடும்ப அமைப்புக்குள் பெண்ணை கொண்டு வரும் அங்கீகாரத்தை, பொள்ளாச்சி நிகழ்வு பெண்களுக்கு எதிராக அரங்கேற்றி இருக்கின்றது.

மறுபக்கத்தில் சட்டம், நீதி முதல் அனைத்தும், ஆணாதிக்க சமூக அமைப்பின் அதிகாரத்தின் ஊடாகவே அனுகுகின்றது. ஆணாதிக்க அதிகாரத்தின் அத்துமீறல் பெண்களின் உடலை சூறையாட, இதற்கு எதிரான ஆணாதிக்கக் குரல் என்பது பெண் உடலை கட்டுப்படுத்திய அடக்கியாளவுதற்குமானதாகின்றது.

ஆணின் வளர்ப்பும், நடத்தையும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக இருக்க, அதை நியாயப்படுத்தும் வண்ணம் பெண்ணின் நடத்தையை கட்டுப்படுத்துவதாகவே சமூகத்தின் எதிர்வினை மாறுகின்றது. ஆணாதிக்க சமூகத்தின்;; விளைவாகவே இந்த குற்றங்கள் நடக்கின்றது என்பதற்கு பதில், பெண்களின் சுதந்திரமான நடத்தையையே இதற்கு காரணமாகக் காட்டி, பெண்ணின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கோருகின்றது. இந்த பின்னணியில் பெண்ணின் நடத்தைகள் குறித்தும், அவளின் தெரிவு குறித்தும் பேசப்படுகின்றது. இந்த ஆணாதிக்க பின்னணியானது  குற்றவாளிகளைத் தண்டிப்பதை மட்டும் கோரவில்லை, பெண் எப்படி வாழ வேண்டும் என்ற பார்ப்பனிய ஆணாதிக்க குடும்ப அமைப்பை - பெண் கடைப்பிடிப்பது எப்படி அவசியம் என்பதையும் முன்வைக்கின்றது.

இந்திய பார்ப்பனிய ஆணாதிக்க சமூக அமைப்பில், பெண் என்பவள் ஆணின் அடிமை. இங்கு ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குற்றமாக இருப்பதில்லை. இதுவே காவிப் பாசிசமாக மாறும் போது, பிற மத, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் என்பது அதிகாரத்தின் அடையாளமாக அங்கீகரிக்கப்படுகின்றது. பார்ப்பனிய சிந்தனையிலான இனவாதமானது, பிற இனப் பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவதை இனப்பெருமையாக கருதுகின்றது. இப்படிப்பட்ட நாட்டில் பார்ப்பனியம் காவிப் பாசிசமாக காப்பரெட் மயமாகும் போது, ஆணாதிக்க அதிகாரம் என்பது  பெண்ணை பலாத்காரமாக நுகர்வதற்கான ஜனநாயகமாக கருதுகின்றது.

உலகளவில் மூலதனம் குவிகின்றதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி என்பது, விதிவிலக்காக மாறுகின்றது. அதிகாரத்தையும் - செல்வத்தையும் சட்டத்தின் ஆட்சிக்குள் கொண்டு வருவது என்பது, கேள்விக்குள்ளாகி வருகின்றது. இந்தியா போன்ற நவதாராளவாதம் வீங்கி வெம்பும் நாடுகளில், செல்வக் குவிப்பானது சட்டத்துக்கு புறம்பானதாகவே நடந்து வருகின்றது. பொருளாதாரக் கட்டமைப்பில் நடக்கும் இந்த சட்டவிரோத செயற்பாடு, பண்பாட்டுத் தளத்தில் லும்பன்தன்மை கொண்டதாக வெளிப்படுகினறது.

நவதாராளவாத சமூக அமைப்பு என்பது சட்டத்தின் வழியில் ஆட்சியையோ, பொருளாதார கட்டமைப்பையோ உருவாக்க முடியாத நாடுகளின், சட்டவிரோத கும்பல்களின் துணையுடன் தான் நுழைகின்றது.

சட்டத்துக்கு விரோதமான சட்டவிரோத வன்முறை கும்பல்கள் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவது, அடக்கியாள்வது என்பது நவதாராளவாத குணவியல்பு. அந்த சட்ட விரோதக் கும்பலில் அடியாட்களாக, கூலிப்படையாக பொலிஸ் மாறுகின்றது அல்லது பொலிசை  மாற்றுகின்றது. இதற்கு தலைமை தாங்கும் ஆட்சி படிப்படியாக பாசிசமாக மாறுகின்றது.

திடீர் பணக்கார கும்பல்களின் ஆட்சி அதிகாரமாக மாறுகின்றது. இவர்களின்  நடவடிக்கைக்கு சட்டத்தின் ஆட்சி செல்லுபடியாகாது. இவர்களின் குற்றங்கள் அனைத்தும் அரசு, பொலிஸ், நீதிமன்றம் தொடங்கி ஊடகங்களின் துணையுடன் தான் அரங்கேறுகின்றது.

இந்த பின்னணியல் நீண்டநாட்களாக பெண்கள் மீது நடந்த பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள், பொலிஸ் துணையின்றி நடந்து இருக்கவே முடியாது. அரசியல்வாதிகளின் தயவின்றி இது தொடர்ந்து இருக்கவே முடியாது. ஊடகங்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்கவே முடியாது.

பணத்திற்கும், அதிகாரத்திற்கும் சோரம் போய்விட்ட நவதாராளவாத அதிகாரமய்யங்களின் பின்னணியிலேயே இந்தக் குற்றங்கள் நடந்து இருக்கின்றன. ஊடக ஜனநாயகத்தின் பெயரில் விபச்சாரத்தின் பக்கபலத்துடன் நடந்து இருக்கின்றது. இது எதைக் காட்டுகின்றது? குற்றம் நடந்த பின்னணியில் பலரும் தங்களுக்கான பங்காக, பெண்களை தங்கள் பங்குக்கு வன்புணர்வு செய்திருக்கின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகின்றது.

இன்று குற்றக் கும்பலே விசாரணை செய்யும் கேலிக் கூத்து, பொள்ளாச்சியில் அரங்கேறி அம்பலமாகின்றது. மக்கள் அதிகாரங்கள் மூலம், மக்கள் மன்றங்களில் குற்றவாளிகள் நிறுத்தப்படுவதையே, மானிட வரலாறு கோரி நிற்கின்றது.