Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

"சமவுரிமை இயக்கம்" இன்றைய காலத்தின் தேவை! பாரிஸ் கூட்டத்தில் மனோ.

இனவாதச் சேற்றுக்குள் மூழ்கியுள்ள சமகால இலங்கை அரசியல் சூழ்நிலையில் அதைக் களைந்தெறிய முற்பட்டுள்ள சமவுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு 22-12-ல் பாரிஸில் நடைபெற்ற சமவுரிமை இயக்க நிகழவில் கலந்து கொண்டு பேசிய "ஓசை" மனோ குறிப்பிடட்டுள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், தமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க மேற்குலக நாடுகள் உட்பட ஏனைய சர்வதேசத்திடமும் சொல்லியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் நலன்களுக்காவே தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகமும் அதன் தலைமையும் இதுவரை சொல்லாத இடம் சாதாரண சிங்கள மக்களிடம் மட்டுமேயாகும். அம்மக்களின் ஏகப்பெரும்பான்மையோருக்கு தமிழ் மக்கள பிரச்சினைகள் பற்றி சரிவரத் தெரியாது. இவைகளை சரிவர அம்மக்களுக்கு எட்டப்பட வைப்பின் அவர்களே இலங்கையின் சகல இனவாதங்களையும் முறியடிப்பர் எனக்குறிபிட்டார்.

சமவுரிமை இயக்கத்தில் இனவாதத்திற்கு எதிரான அனைவரும் ஐக்கியப்பட வேண்டும்!... ரயாகரன்

சமவுரிமை இயக்கம் இன்றைய இலங்கையில் இனங்களுக்கிடையில் இல்லாதாக்கப்பட்டுள்ள இனஐக்கியம், சமத்துவம், சமவுரிமை ஆகியவற்றிற்காக சாதாரண சிங்கள - தமிழ்- முஸ்லீம் மக்களுக்கிடையில் தன் வேலைகளைச் செய்து வருகின்றது. இந்நோக்கில் இதன் பாற்பாற்பட்ட சகலரும் இவ்வமைப்பில் இணைந்து வேலை செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மனித உரிமை மீறல்கள் மகிந்த அரசிற்கு கைவந்த கலை!... இலங்கை ஓருமைப்பாட்டு மையத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை

மகிந்த அரசு மக்கள் விரோதம் - மனித உரிமை மீறல்கள் உட்பட மானிடத்திற்கு செய்யப்படக் கூடாத எல்லா அக்கிரமங்களையும் செய்வதில் கைவந்த கலைகளைக் கொண்ட அரசாகும். இவைகளை தேசிய சர்வதேசம் கண்கூடாக கண்ட ஆதாரங்களக்கு ஊடாக நிரூபித்தாலும், அவையத்தனையையும் துச்சமென மறுத்து தூக்கி எறிகின்றது. இது மகிந்த குடும்பத்தின் மெத்தனத் திமிர்த்தனப் போக்கையே சுட்டி நிற்கின்றது எனக் குறிப்பிட்டதுடன், இத்திமிர் கொண்ட அரசிற்கெதிராக இலங்கையில் சமவுரிமை இயக்கத்துடன் ஏனைய ஐக்கியப்படக்கூடிய சகல சக்திகளும் ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும் என்றார்.

மனிதவுரிம சமவுரிமைக்கான போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சி என்றும் பக்கபலமாக உள்ளது.... ரஞ்சன்

இலங்கையில் மனித உரிமைக்கான போராட்டங்கள், சமவுரிமைக்கான போராட்டங்களில் மட்டுமல்ல, இவ்வரசிற்கு எதிராக ஏனைய அமைப்புகளால் நடாததப்படும் எல்லாவகையான போராட்டங்களிற்கும் தமது கட்சி உறுதுணையாக செயற்படும் என அக்கட்சியின் உறுப்பினர் ரஞசன் நேற்றைய பாரிஸ் நிகழவில் தெரிவித்தார். இவ் அரசால் கட்சியின் அன்றாட நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாவதுடன், அதன் முன்னிலை ஊழியர்கள் தாக்கப்படும், கடத்தப்படும், கொலை செய்யப்படும் அபாயங்களும் உள்ளன. இவை அனைத்தையும் தாண்டியே கட்சி செயற்படுகின்றது எனத் தெரிவித்தார்.

கூட்ட நிகழ்வில் இலங்கையில் இருந்து உரையாற்றிய சமவுரிமை இயக்கத்தின் செயலாளரின் உரையும் நேரடி அஞ்சலாகியது.