Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

சமவுரிமை இயக்கம் தனது பிரதான நோக்குகளில் ஒன்றான அனைத்து அரசியற்கைதிகளையும் விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்வைத்து தனது போராட்ட நடவடிக்கைகளை இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுத்து வருகின்றது. அதன் நீட்சியாய் அனைத்து அரசியற்கைதிகளுக்குமான விடுதலையைக் கோரி கனடிய சமவுரிமை இயக்கம் முன்னெடுக்க இருக்கும் போராட்ட நிகழ்வில் உங்களையும் கலந்து ஆதரவளிக்குமாறு கோருகின்றது.

30 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இக் கொடிய அழிவு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னரும் கூட, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கிய அரசியற்கைதிகள் கொடூரமான அவசரகால தடுப்புச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நீதிவிசாரணையும் இன்றி நீதிக்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மதிப்பீடுகளின் படி புலிகள் இயக்கத்தின் முன்னைநாள் போராளிகள் உள்ளடங்கலாக 228 பேராக உள்ள இக்கைதிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கைதிகளும் அடங்குவர். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றின் அறிக்கைகளின்படி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தினைச் சிதைக்கும் சித்திரவதை, பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்வு, நீதி விசாரணைக்குப் புறம்பான மரண தண்டனைகள் போன்றவைகள் மேற்கொள்ளப்படுவது அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கின்றன.

ஏசியன் றிபியூன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 228 பேர்கள் அடங்கலாக மொத்தம் 650 முறைப்பாடுகள் இன்னும் விசாரணையின்றி கிடப்பில் இருக்கின்றன. பாலியல் துஷ்பிரயோகத்துக்கும், வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்ட 75 அரசியற்கைதிகளும், அவர்களோடு இன்னும் பல அரசியற்கைதிகளும் 1997 ம் ஆண்டு முதல் இன்றுவரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எந்த வழக்குரைஞர்களின் உதவியோ அல்லது சட்டவியல் அனுசரணைகளோ வழங்கப்படாமல் 10 தொடக்கம் 20 வருடங்களாக கூட தொடர்ந்து சிறையினுள் அவலப்படுகின்றனர். நல்லாட்சி வழங்குவதாக கூறிக்கொண்ட அரசாங்கத்தின் மேல் இவை கடுமையான குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

தங்களது சொந்த விடுதலைக்காக, அனாதரவான அரசியற்கைதிகள் சிறைச்சாலைக்குள்ளே தாங்களே உண்ணாவிரதப் போராட்டம் நடாத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். 2015 ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தபோது எல்லா அரசியற்கைதிகளையும் விடுவிப்பதாகத் அறிவித்திருந்தார். ஆனாலும் ஒரு சில விதிவிலக்குகள் தவிர மிகப் பெரும்பான்மையான அரசியற்கைதிகள் காலவரையறையேதுமின்றி இன்னமும் சிறைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக புதிய ஜனாதிபதி சிறிசேன கூறியிருந்தபோதிலும்

அரசாங்கம், நீதித்துறை, பொலிஸ் மற்றும் இராணுவம் போன்றவற்றின் தன்னிச்சையான, பொறுப்பற்ற தன்மையில் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. நாட்டில் ஜக்கியத்தையும் சமாதானத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமாயின் அனைத்து அரசியற்கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தெளிவானது.

மிக அதிகளவிலான இலங்கைப் புலம்பெயர் சமூகம் ரொறன்ரொவில் இருப்பதால், இலங்கையிலுள்ள அனைத்து அரசியற்கைதிகளினதும் விடுதலையை வெற்றிகரமாகக் கோருவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

அமைதி ஆர்வலர்கள், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைந்து இந்த சட்டவிரோத நிலைமைகளின் கீழ் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நூற்றுக்கணக்கான மக்களுக்காக குரல் எழுப்புவதன் மூலம் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத்தர அணிதிரள்வதுடன் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.

இலங்கையில் சமாதானம், ஜனநாயகம், நீடித்த அமைதி, நீதியினைப் பெற்றுக்கொள்வது, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வது எங்கள் எல்லோரினதும் பலத்தினால் முடியும்.

அனைத்து அரசியற்கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!

சமவுரிமை இயக்கம் - கனடா

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

416-917 0549 / 647-883 8859 / 416-801 1654