Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம்: சமவுரிமை இயக்கம் (பிரித்தானிய கிளை)

நேற்றைய தினம் சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளையினர் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதி செய்வதற்க்கான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்றினை கரோ பகுதியில் நடாத்தி இருந்தது. சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று பல அரசியல் அமைப்புக்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், இணையத்தள எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என தமிழ்-சிங்கள-முஸ்லீம் இனத்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள், ஜனநாயக உரிமை மறுப்புக்கள் குறித்து கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை கூறியதுடன்; இவற்றினை உறுதி செய்ய தொடர்ந்த பல போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் புலம்பெயர் நாடுகளில் மக்கள் மற்றும் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளிற்க்காகவும் குரல் கொடுக்கும் அமைப்புக்கு இவற்றை தெரியப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் நல்லாட்சி என்ற பதாகைக்கு கீழ் புதிய அரசு மகிந்த அடக்குமுறை ஆட்சியையே தொடர்கின்றது. குறிப்பாக அரசியல் கைதிகள் தமது விடுதலை குறித்து உண்ணா விரத போராட்டம் நடாத்திய போது சிறைச்சாலைகள் அமைச்சர் சென்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதனை தடுத்து நிறுத்தினார். மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்த வேளை மக்களின் ஜனநாயக உரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சியான TNA  அதனை செய்யாது, நல்லாட்சி அரசு உங்களை விடுவிக்கும் என அரசிற்கு நற்சாட்சி பத்திரம் வழங்கி போராட்டத்தை குழப்பியது. இன்று அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது ஜனாதிபதி, பிரதமர் இருவரும் கூறுகின்றனர். எதிர்க்கட்சி இது குறித்து கதைப்பதே கிடையாது.

யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்து விட்டது. யுத்தம் காரணமாக பல சகாப்தங்களாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீளக் குடியேற்றப்படாமல் அகதி முகாம்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களின் வாழ்விடங்கள்; ராணுவ முகாம்களாகவும், பல்தேசிய கம்பனிகளின் தேவைக்காகவும், அந்நிய நாடுகளின் தேவைகளிற்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்தது  போல் எதனையும் செய்யாது  இந்த அரசு மீளக் குடியேற்றத்தில் அக்கறையற்று வேறு நோக்கம் கொண்டு செயற்படுகின்றது எனவும் கருத்துக்கள் பரிமாறிக் கொணடனர்.

மேலும் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்காக புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்கு திரும்பி வந்து செயற்படுமாறு தேர்தல் காலத்தில் மைத்திரி-ரணில் கூட்டு அழைப்பு விடுத்திருந்தது. குமார் குணரத்தினம் கடந்த மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர். அவர் நாடு திரும்பி தனது பிரஜாவுரிமையினை மீள வழங்கக்கோரியும் தனது அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதம் செய்யும் படியும் கோரிய வேளை, நல்லாட்சி அரசு அவரை விசா காலவதியாகி தங்கி இருந்த குற்றச்சாட்டில் கைது செய்து திருப்பி அனுப்பாமல் குற்றவாளியாக்கி சிறையில் அடைத்துள்ளது. இந்த சிறைத் தண்டனையானது அரசியல் நோக்கம் கொண்டது. இது தேர்தல் காலத்தில் இவர்கள் வழங்கிய வாக்குறுதியானது பொய்யானது என நிருபித்துள்ளது. இவர்களது நல்லாட்சி பதாகைக்கு பின்னால் தொடர்வது மகிந்த மக்கள் விரோத ஆட்சி என்பதனை உறுதிப்படுத்தி உள்ளது. குமார் என்ற ஒரு தனி நபர் குறித்த விடயமல்ல இது. புலம் பெயர்ந்த அனைத்து அரசியல் செயற்பாட்டாள்களிற்கும் இது தான் தமது கொள்கை என இந்த அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆட்சி போலவே இந்த ஆட்சியும் மனித உரிமை ஜனநாயகம் சம்பந்தமாக ஒரே மாதிரி செயலாற்றுகின்றது எனவும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இறுதியாக அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், குமார் குணரத்தினத்தை விடுதலை செய்து; அவரது அரசியல் செய்யும் உரிமையினை உறுதிப்படுத்தக்கோரியும், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை உடனடியாக மீள அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றவும் வலியுறுத்தி பரந்து பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் வெகுவிரைவில் துண்டுப்பிரசுர விநியோக போராட்டம் ஒன்றினை லண்டன் வெஸ்ற்மினிஸ்டர் பகுதியில் நடாத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.