Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சகோதரத்துவம் வளர்க்கும் மாவில்லாறு!

மாவிலாற்றை வைத்து அரசியல் சூதாட்டமாடி, கிழக்கிலும் வடக்கிலும் பெருக்கெடுத்த இரத்த ஆறு, முள்ளிவாய்கால் வரை பாய்ந்தது. தெற்கில் இனவாத - மதவாத சக்திகளால் முஸ்லீம் சகோதரர்களின் இரத்தம் ஆறாய் ஓடுகையில், இப்போ மாவிலாறு இனங்களிடையேயான ஒற்றுமைக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை ஆற்றின் நீரைத் தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

நீர் இன்றி ஆயிக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய பிரதேசங்களில் மட்டும் சுமார் 22,500 ஏக்கர் நெல் வேளாண்மை செய்கை நீர் இன்றி அழியும் ஆபத்தை எதிர்நாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதிகளில் மாவிலாறு நீரை நம்பி நெல் பயிரிட்டுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகள் தமது பயிர்களை பாதுகாப்பதற்கான முயற்ச்சிகளில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.

கண்டல்காடு என்னுமிடத்தில் கிளையாக பிரிந்து கடலை நோக்கி செல்லும் மகாவலி கங்கை நீரை தடுத்து மாவிலாறு பக்கம் திருப்புவதற்காக அந்த இடத்தில் தற்போது மண் மூடைகளை அந்த பிரதேசங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் அடுக்கிவருகின்றனர்.

நீர்ப்பாசன இலாகாவின் அனுமதியுடனும் ஆலோசனையுடனும் இந்த பணி முன்னெடுக்கப்பட்டாலும், அது எந்தளவுக்கு பலன் தரக கூடியதாக அமையும் என தம்மால் உறுதிபட கூறமுடியாது என அந்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளில் ஓரவரான பி.மதிபாலசிங்கம் தெரிவித்தார்.

கடலுக்கு செல்லும் மகாவலி ஆற்று நீரை மண் அணை போட்டு தடுத்து மாவிலாறுக்கு திருப்புவதென்றால் சுமார் 8000 மண் மூடைகள் தேவைப்படுவதாக நீர்ப்பாசன இலாகா அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டின் தெற்கில் தற்போது இனங்களிடையே முறுகல் நிலையொன்று தோன்றியுள்ள போதிலும், மாவிலாறு பிரதேசத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகள் கூட்டாக செயல்படுவதை இங்கு காண முடிவதாக எமது செய்தியாளர் இரா. உதயகுமார் கூறுகின்றார்.

2005ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச்திலிருந்த மாவிலாறு நீர்பாசன கதவை திறக்க அவர்கள் மறுத்த நிலையிலே, இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் ஆரம்பமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: BBC 2014-06-22