Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"இலங்கைக் கடலில் சீனா மீன்பிடிப்பதில்லையாம்!" மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன

சர்வதேச கடற்பரப்பிலே தான் மீன்பிடி நடப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கண்டு பிடித்துள்ளார். மீனை அள்ளிச் செல்லும் பன்நாட்டு மீன்பிடி ஒப்பந்தங்களைப் போடும் அரசு, அதை சர்வதேச கடலில் மீன்பிடி என்று திரித்து இலங்கை மீனவர்களின் முதுகில் குத்திவிடுகின்றனர்.

அண்மையில் இதே அமைச்சர் பொதுபலசேனாவின் சர்வதேச மற்றும் புலி தொடர்புகள் பற்றிய அம்பலப்படுத்தல்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மேலான அக்கறையின்பாலானது என்ற பொது மாயையை ஏற்படுத்தி இருந்தார். அது உண்மையானதல்ல என்பதை, சர்வதேச கடற்பரப்பில் தான் மீன்பிடி நடப்பதாக கூறுகின்ற அவரின் அடுத்த உளறல், அவரின் அரசியல் பித்தலாட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் சீன மீன்பிடி மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினும் தான் அதில் ஈடுபடுகின்றது என்று அதற்கு நியாயம் வேறு கற்பிக்கின்றார். என்ன வக்கிரம்?

இலங்கை மீனவர்களின் கடலையும், கரையையும், சந்தையையும் மட்டுமல்ல மீன்வளத்தையும் மீன்பிடி உபகரணங்களையும் கூட இழந்து வருகின்றனர். மீனைப் பிடிக்கக் கூடிய வளத்தை இலங்கை மீனவர்களிடமிருந்து நவதாராளவாத அரசு இன்று பறித்தெடுக்கின்றது. இதைத் தான் இலங்கை அரசு சார்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்திருக்கின்றார்.