Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மோடி ஆட்சிக்கு வந்த பின்பும், தொடரும் இந்திய மீனவர்களின் கைதுகள்

மகிந்த அரசை எதிர்க்கின்றவர்கள், மீனவர்கள் கைதுகளை சட்டவிரோதமானதாகக் காட்டுகின்றனர். இதைத் தடுக்க மோடி அரசு வக்கற்றுள்ளதாக கூறி, மோடி அரசை இதன் மூலம் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

இந்திய இனவாதிகள் முதல் இடதுசாரிகள் வரை, மீனவர் விடையத்தில் முரணற்ற வகையில்  இதையே செய்தியாகவும், அரசியலாகவும் முன்வைக்கின்றனர். இலங்கைத் தமிழினவாதிகளும் இதையே தங்கள் கொள்கையாக கொள்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு அன்றாடச் செய்திகளையும், ஆக்கங்களையும், அரசியலையும் முனனெடுக்கின்றனர்.

இதன் மூலம் இலங்கை கடல் இறைமையை மீறுவதை அங்கீகரிக்கக் கோருகின்றனர்.  சட்டவிரோதமான மீன்பிடியை, இந்திய மீனவர்களின் உரிமையாக காட்ட முற்படுகின்றனர்.  தடைசெய்யப்பட்ட வழிமுறையிலான மீன்பிடியைத் தடுப்பது, மீனவர்களுக்கு எதிரானதெனக் காட்ட முற்படுகின்றனர்.  இலங்கை மீனவர்களின் பாரம்பரிய வாழ்வுரிமையை இந்திய மீனவர்கள் அழிப்பதை, கண்டுகொள்ள வேண்டியதில்லை என்கின்றனர். இயற்கை வளங்களை அழிப்பதை இட்டு அக்கறைப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்கின்றனர். இந்த மனிதவிரோத செயலை மூடிமறைக்க, "கச்சதீவு" பற்றிய ஒன்றாக இதைத் திரித்துக் காட்டுகின்றனர்.

கைதாகும் இந்திய மீனவர்களை வைத்து மகிந்தாவை எதிர்ப்பவர்களும், மகிந்த-மோடியை எதிர்ப்பவர்களும், மோடியை எதிர்ப்பவர்களும் சரி, அனைவரும்; கைதாகும் மீனவர்களை வைத்து  செய்வது அரசியல் மோசடியாகும்.

மகிந்த அரசு இலங்கை மீனவர்களின் நலனில் இருந்து இந்த கைதுகளைச் செய்யவில்லை என்ற உண்மையை முன்னிறுத்துவதும், கைதிகளை நடத்தும் முறையைப் பற்றியும் கேள்விக்குள்ளாக்கலாமே ஓழிய, வேறுவிதத்தில் இதை அணுகுவது மக்கள் சார்ந்ததல்ல. மாறாக குறுகிய தமிழினவாதம் சார்ந்ததும், இந்திய பிராந்திய மேலாதிக்கத்தின் நாட்டாமை சார்ந்ததுமே, இங்கு அரசியல் ஆக்கப்படுகின்றது. இதைச் சுற்றி இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியல் இவற்றைப் பாதுகாக்கின்றது.