Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனம்-மதம்-சாதி கடந்த கலை விழாவும் - அரசியலும்

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான பேரினவாத வன்முறையை எதிர்த்து கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் நடத்திய போராட்டம் போன்று, பாரிஸ் கலை விழா புதிய காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. இனவாத வரலாற்றை மாற்றி அமைக்கக் கூடிய நிகழ்வுகளாக, இனவாதத்தை எதிர்த்து இவை முன்னெடுக்கப்பட்டமையே இவற்றின் சிறப்பாகும்.

இனவாதமே எல்லாம் என்ற பொதுவான அரசியல் உளவியலுக்கு முரணாக, அரசுக்கு எதிராக இனம்-மதம்-சாதி கடந்தும் போராட முடியும் என்பதையும் இந்த விழா பறைசாற்றியுள்ளது. இந்தக் கலை விழாவானது தனக்குள் சொந்த விமர்சனங்கனைக் கொண்டு இருந்த போதும், அதைக் கடந்து சமூகங்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் அதன் நோக்கில் தனது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

இந்த வகையில் சமவுரிமையை முன்னிறுத்தி, கலைக்கான முதல் நிகழ்வாக பாரிஸ் கலை விழா அமைந்தது. சமவுரிமை இயக்கம் தன் பேசுபொருளில் கலைகளை முன்வைத்து இயங்கக் கூடிய, கலைஞர்களற்ற ஒரு பொது சமூக வெளியில் இந்த நிகழ்வு மூலம் காலடியை எடுத்து வைத்திருக்கின்றது.

அதேநேரம் இந்த நிகழ்வு குறித்த விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, எதார்த்தத்தைக் கடந்ததாக அமைவது இதன் நோக்கத்தை சிதைத்துவிடும். இதை கலை மற்றும் கலைஞர்கள் குறித்த விமர்சனத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியல்வாதி கலைஞனை எதிரியாக மாற்றிவிடக் கூடாது. அதாவது இங்கு அறிவியல்வாதி (புறநிலை யதார்த்தத்தின் வெளிப்புற உலக நிகழ்வுகளை ஆராய்கின்றான்) - கலைஞன் (அகநிலைப்பட்ட யதார்த்தத்தின் உட்புறத்தை ஆராய்கின்றான்). இந்த இரு வேறுபட்ட சமூக செயற்பாட்டு அடிப்படையில் உள்ள முரண்பாடு, அதனாலான வேறுபாட்டையும் ஒன்றுக்கு எதிரான மற்றொன்றின் மீதான விமர்சனமாக்குவது தவறானது. சமவுரிமை இயக்கத்தின் நோக்கத்துக்கும் இதன் செயற்பாட்டுக்கும் கூட இது முரணானது.

மறுபக்கத்தில் சமவுரிமை இயக்கத்தின் எதார்த்தம் வெளிப்படையானது. சமவுரிமை இயக்கத்தின் அரசியல் உள்ளடக்கத்தை அரசியல் ரீதியாக முன்வைத்து இரண்டு வருடங்களாகின்றது. இந்த அரசியல் உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டு இயங்குவதற்கு தடையாக, இனவாதமே தொடர்ந்து காணப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக சமவுரிமை இயக்கம் தன்னை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிவிட போராடும் ஒரு நிலையே, இப்பொருளில் கலைசார்ந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்பதே உண்மை. இந்த எதார்த்தம் சார்ந்த அதன் சொந்தக் குறைபாடுகளில் இருந்தே, விமர்சனங்களை உள்வாங்க வேண்டியதாக உள்ளது.

அதேநேரம் சமவுரிமை இயக்கம் இனம்-மதம்-சாதி கடந்து சமவுரிமையை முன்வைத்து அதற்காக உழைக்கக் கூடிய அனைவரையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டதன் மூலமே, பாரிஸ் கலை விழாவை அனைவருக்கும் முன்மாதிரியாக மாற்றி இருக்கின்றது.

இன-மதம்-சாதி கடந்த சமூக செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கிய பின்புலத்தில், சமவுரிமை இயக்கத்தைச் சுற்றி புதிய ஐக்கியத்தை உருவாக்கி இருக்கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள், மாறுபட்ட கருத்துகள் கொண்ட தனிநபர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்ததின் விளைவே இந்தக் கலைவிழா.

பிரான்ஸ் சமவுரிமை இயக்கம்; தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கொண்டிருக்கக் கூடிய கருத்துகள், செயற்பாடுகளை விமர்சனம் செய்வதை கடந்து, புதிய சமூக இயக்க நடைமுறைகள் மூலம் அவற்றை கடக்குமாறு வழிகாட்டி இருக்கின்றது.

இந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் தான் கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலையில் இருந்து இந்த நிகழ்வை விமர்சனம் செய்வற்கு பதில், இனம்-மதம்-சாதி கடந்த சமவுரிமை இயக்கத்தின் நோக்கத்துடன் ஒன்றி நின்று இதை அணுகுவதையே கோருகின்றது. இதன் மூலம் அனைவருடைய சுயவிமர்சனமாக, விமர்சனத்தை மாற்றி அமைக்க சமவுரிமை இயக்கம் விரும்புகின்றது. இன்றைய இனவாத சூழலுக்கு அனைவரையும் பொறுப்புடையவராக்கி அதை மாற்றி அமைக்க முன்வருமாறு அழைக்கின்றது. இந்த வகையில்

1. அனைவரையும் தாங்கள் கொண்டிருக்கக்கூடிய சொந்த கருத்துக்களையும் செயற்பாட்டையும் கடந்து, இனம் மதம் சாதி கடந்த மனிதனை மனிதன் நேசிக்கும் ஒரு புதிய புள்ளியில் இணைந்து கொள்ளுமாறு விட்டுவிடுகின்றது.

2. வெறும் கருத்துகளைக் கொண்டிருப்பதைக் கடந்து, நடைமுறை இயக்கத்தில் இணைந்து பயணிக்குமாறு அனைவருக்குமான புதியதொரு நடைமுறையை முன்வைத்து இயங்குமாறு கோருகின்றது.

3. மேற்கூறிய இரண்டையும் மக்களைச் சார்ந்து செயற்படுவதன் மூலம், புதிய அரசியல் கற்கையையும், நடைமுறையையும் உருவாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றது. கடந்த மற்றும் நிகழ்காலத்தின் தவறுகளை, மக்களுடன் சேர்ந்து பயணிப்பதன் மூலம் தங்கள் அரசியல் நடத்தைகள் மூலம் மாற்றிக் கொள்ளுமாறு விட்டு வைக்கின்றது.

கடந்தகாலம் பற்றிய விமர்சனங்களுக்கு சுயவிமர்சனத்துக்கு பதில் மக்களுடன் இணைந்த செயல்பூர்வமான நடத்தையே. அடிப்படையில் விமர்சனமும், சுயவிமர்சனமுமாகும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுமாறு தூண்டுகின்றது. இதை அடிப்படையாகக் கொண்டு எந்த தனிநபர்களையும், குழுக்களையும் விமர்சனம் செய்வதோ, அவர்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை சமவுரிமை இயக்கத்துக்குள் கொண்டு வருவதை சமவுரிமை இயக்கம் அனுமதிப்பதில்லை.

இந்தச் சரியான அணுகுமுறை பிரான்ஸ் சமவுரிமை இயக்கத்தை தங்களுடைய சொந்த இயக்கமாக கருதி இயங்கும் பொது அரசியல் உள்ளடக்கத்தை அதற்கு வழங்கியது. இந்த விழா அப்படித்தான் வெற்றி பெற்றது. பலருக்கு இன்னும் இதனுடன் இணைந்து பயணிக்க தயக்கங்கள் இருந்த போதும், அதைக் களையும் திசையில் தனது பயணத்தை இந்த விழா தொடங்கி வைத்துள்ளது.

இந்தப் பின்புலத்தில் தான் கலைகளும், கலைஞர்களும் கூட உள்வாங்கப்பட்டனர். இரு மொழி சார்ந்த கலைஞர்களின வேறுபட்ட வளர்ச்சியையும் அதற்கான சூழலையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வகையில்

1.சிங்கள மொழி பேசும் கலைஞர்கள் கலைசார்ந்த மக்கள் கலைப்படைப்புகளை பாரம்பரியமாக கொண்டிருப்பதையும்

2.தமிழ் மொழிக் கலைஞர்களிடம் பாரம்பரியமான மக்கள் கலை தன்மையற்ற நிலைமை இருப்பதையும்

இதனால் கலைப் படைப்பில் சமச்சீரற்ற தன்மையை உருவாக்குவதுடன், அது விமர்சனத்தை உருவாக்கும் என்ற உண்மையை இந்த விழா தனக்குள் கொண்டிருந்தது.

அதேநேரம் கலைகளாக எம்முன் இருப்பவை, பழைய பண்பாட்டு மரபுகள் சார்ந்தவை. கலைப் படைப்புகளாக அவை வெளிவரும் போது, அது கொண்டிருக்கக் கூடிய நிலப்பிரத்துவ கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களையும் இந்த விழா நிராகரித்து விடவில்லை.

இன-மத-சாதியத்தை எதிர்த்து சமவுரிமையின் கொள்கைக்கும், பழைய நிலப்பிரபுத்துவ மரபு சார்ந்த மொழி சாதிய மதப் பெருமையை பேசும் படைப்புகளுக்கும் உள்ள முரண்பாட்டை இந்த விழா தன்னளவில் நிராகரிக்கவில்லை.

இந்தக் கலைப்பயணம் என்பது இனவாதம், மதவாதம், சாதியவாதம் கொண்ட சமூக அமைப்பில் இருந்து, முறித்துக் கொண்ட அல்லது முரண்பட்டுக் கொண்ட அல்லது கலையை முன்னிறுத்திக் கொண்ட கலைஞர்களின் சொந்தப் போராட்டத்துடன் மேடையேறியது. இதனால் கலை சார்ந்த அதன் குறைபாடுகள், எமக்கு இடையிலான முரண்பாடானவையல்ல. ஒரு கலைஞன் உள்ளுணர்வற்றதும், அவனுடையதல்லாத கருத்துக்காக அதை விமர்சனம் செய்வது சமவுரிமையின் நோக்கமல்ல.

இந்த விழா பற்றிய விமர்சனங்கள் எதிர்காலத்தில் சமவுரிமை இயக்கத்தின் நடைமுறை ஊடாக களைய வேண்டிய பணியாகவே கருதுகின்றது.

சமவுரிமை இயக்கத்தின் அரசியல் இயக்கமும் சரி, கலை முயற்சியும் தனக்கான ஆரம்பப் புள்ளியையே இட்டிருக்கின்றது. அதன் குறைபாடுகள் அனைத்தும் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான ஒன்றாக சமவுரிமை இயக்கம் நடைமுறையை மாற்றி அமைக்கின்றது. இந்த வகையில் சமவுரிமை இயக்க செயற்பாடுகள் மீதான விமர்சனங்கள் என்பது, எங்களுடைய சொந்த சுய விமர்சனமாக மாற்றிக் கொண்டு நடைமுறையில் பயணிப்பதையே கோரி நிற்கின்றது.