Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தவின் வீழ்ச்சி “நரகத்தில்" விடப்பட்ட சிறு "இடைவேளை "

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை (06:15) அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.  இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மஹிந்த இந்த முடிவை எடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரிமாளிகையில் இருந்து செல்வதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார் 

இத் தேர்தலில் எது நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டதோ அது நடந்துள்ளது. அதாவது ஆட்சி மாற்றமல்ல - முக மாற்றம். மஹிந்த தலைமையிலான மக்கள் விரோதக் கும்பலை - அதே அரசியல் வரலாற்றைக் கொண்ட முன்னாள் அதிபரும் - ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து வீழ்த்தியுள்ளனர். முக்கியமாக, தென்னிலைங்கையில் பெற்ற வாக்குகளை விட மைத்ரியின் வெற்றிக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே அடித்தளமாக உள்ளன. அந்தவகையில், மஹிந்த அரசின் இனவாத அரசியல், யுத்தக் கொடுமைகள், இராணுவ ஆட்சி என்று தமிழ் தேசிய இனத்தின் மீது செலுத்திய ஒடுக்குமுறையே இவ் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இவ் வீழ்ச்சி “நரகத்”தில் இருக்கும் மக்களுக்கு சிறு "இடைவேளை " கொடுக்கும்.

இதற்கு மேல் வேறு ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. தமிழ் தேசியப் பிரச்சனையோ, இலங்கை மக்களின் பொருளாதாரப் பிரச்சனையோ வரப்போகும் ஆட்சியாளர்களால் தீர்த்து வைக்கப்பட மாட்டாது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைப்பே மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரும். 

தேர்தலில் பங்குகொண்ட இடதுசாரி முன்னணி எண்ணிக்கையில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. அது இடதுசாரி முன்னணியின் தேர்தலில் பங்கு கொண்டதற்கான காரணமும் அல்ல. தேர்தல் காலத்தில் கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி, இடதுசாரியத்தை - இடதுசாரிய வேலைத் திட்டத்தை மக்களிடம் கொண்டு போவதே முக்கிய வேலையாக - காரணியாக இருந்து. அந்த வகையிலும், அரசியல் நடைமுறைகளிலும், ஸ்தாபன ரீதியிலும் பல புதிய அனுபவத்தையும், இடதுசாரியத்தை முன்னெடுப்பதற்கான புதிய வழிகளையும் இத்தேர்தல் பங்கெடுப்பு எமக்கு திறந்து விட்டுள்ளது. 

ஒடுக்கப்படும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உண்மையான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் நல்லாட்சியை உருவாக்கப் போராடும் சக்திகளுக்கு தற்போது கிடைத்துள்ள அரசியல் "வெளியானது" மிகவும் இன்றியமையாதது. இந்;நிலையில் இடதுசாரியத்தை வளமூட்டி, மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து மக்கள் நலன் விரும்பிகளும் ஒன்றிணைய வேண்டும்!