Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"இலங்கையில் வர்க்க போராட்டமும் வர்க்க கட்சியும்" - சிறிகரன்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் சிறிகரன் ஆற்றிய உரை

“தனிநாடு ஒன்றினை தாபித்துக்கொள்வது தான் தமிழ் தேசியத்தினை வெற்றிகொள்ளும் அறுதியும் இறுதியுமான வழி. 

தமிழீழம் பிரிந்து தனிநாடாகும் போது அது ஒரு சோசலிசத் தமிழீழம் ஆகும்.

ஒரு சோசலிசத் தமிழீழம் அமைகிறபோது மட்டும் தான் தென்னிலங்கை மக்கள் இனவாதத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் இனவாதத்திலிருந்து விடுவிக்கப்படுவதன் ஊடாக மட்டும் தான் சிங்கள மக்கள் தமக்கான வர்க்க விடுதலையை நோக்கி நகர முடியும். அவர்களும் ஒரு சோசலிசக் குடியரசை நிறுவிக்கொள்வதற்கு தமிழீழ சோசலிசத் தனியரசு தான் தவிர்க்கமுடியாதபடி ஒரு முன்நிபந்தனையாக உள்ளது. 

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் சோசலிசக் குடியரசுகளாக தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஏகாதிபத்தியங்களுககு தென்னாசியாவில் படுகுழி அமைக்கும் வகையில்  விழுகின்ற பாரிய ஒரு அடியின் ஆரம்பப்பொறியாக இருக்கும். 

பிராந்தியத்தில் சோசலிச வழியில் விடுதலைப் போராட்டங்கள் பற்றிக்கொண்டு அண்டை அயல்நாட்டு மக்களின் விடுதலைக்கும் வழி வகுக்கும். 

எனவே சோசலிச தமிழீழம் என்பது வெறுமனே ஒரு தனிநாட்டுக்கான தனிநாட்டுக்குள்ளான போராட்டம் அல்ல. அது பிராந்திய ரீதியில் பலநாடுகளை தொற்றிக்கொண்டு சோசலிசத்தினை நோக்கி நகர்த்தும். எனவே சர்வதேசரீதியிலும் தீர்மானகரமான போராட்டமாகும். எனவே தமிழீழப் போராட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் முன்னிறுத்தும் ஒரு போராட்டமாகும். எனவே அது வர்க்கப்போராட்டமும் கூட.”

இந்த விளக்கங்களோடு ஆவேசமாக முன்னெடுக்கப்பட்ட தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் இன்று 30 வருடங்களுக்குப் பின் யுத்தங்கள், அழிவுகள், அவலங்கள் கடந்து எங்கு வந்து நிற்கின்றது?

சோசலிசத் தமிழீழம் இல்லை, அல்லது வெறுமனே தமிழீழம் அதுவும் இல்லை. ஆகக் குறைந்தது தமிழ் தேசியத் திரட்சியாவது ஏற்பட்டுள்ளதா? இல்லை

தமிழ் தேசியத் திரட்சி ஏற்படுவதற்கான உள்ளக முரண்பாடுகள் களையப்பட்டிருக்கிறதா எனில் அதுவும் இல்லை.

தனது சொந்த தேசியவளங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை அது முன்தள்ளி இருக்கின்றதா? இல்லை

ஒரு தேசத்தின் உருவாக்கம் என்பது ஏகாதிபத்திய பொருளாதாரத்தை நிராகரித்து சொந்த நாட்டின் சுய பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவாகுவது. இவற்றுள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று இந்த 30 வருட தனிநாட்டு போராட்டத்திற்கு பிற்பாடும் யுத்தத்தின் அழிவுக்குப் பிற்பாடும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் யார்?

அதே பழைய முகவர்கள் தான்.

தமிழ்மக்கள் இவ்வளவு அழிவுகளையும் சந்திக்க அன்று அடிகோலியவர்கள் தான் இன்றும் மீள வந்துள்ளார்கள் “தமிழ்தேசியம்” என்ற உச்சாடனத்தோடு. “தமிழ்த்தேசியம்” என இன்றுவரையும் திரட்சியடையாத தமிழ்மக்களின் முதுகில் இந்த வலதுசாரிகள் சவாரி செய்கிறார்கள்.

அவர்கள் கூறுகின்ற பொருளாதார வழிமுறை என்ன?

இந்தியா, மேற்குநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்திய – நவதாராளமய பொருளாதாரத்தை மறுத்து தேசிய (தமிழ்தேசிய பொருளாதாரத்தை ) பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிப்பவர்களா?

அவர்கள் நவதாராளவாத பொருளாதாரத்தின் பங்குதாரர்களான ஆட்சியாளர்களின் பக்கத்தில் தமிழ்மக்கள் சார்பில் ஒரு அங்கமாக இருக்கிறபோது எப்படி அது சாத்தியமாகும்?

அவர்கள் தமிழ்மக்களுக்கு கூறுகின்ற அரசியல்தீர்வு என்ன? தமிழ்த்தேசியமா? நவதாராள பொருளாதாரத்தின் தொங்குதசைகள் எப்படி தமிழ்த் தேசியத்தினை முன்னெடுக்க முடியும்?

அது வெறும் பொய் அல்லவா?

இதே நவதாராளமயப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் இலங்கை அரசோடு தமிழ்மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து கொண்டாலும் சரி சேராவிட்டாலும் சரி நவதாராளாமயப் பொருளாதாரமயத்தின் ஆக்கிரமிப்புக்குள் தமிழ்மக்கள் அகப்பட முடியாமல் தனித்திருக்க முடியுமா?

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற நவதாராளமயப் பொருளாதாரமய கொள்கையிலிருந்து தமிழ்மக்கள் தள்ளியிருந்துவிட முடியுமா? அதன் வீச்சுக்குள் அகப்படாமல் எப்படி தப்பியிருக்க முடியும்?

நவதாராளமயத்தின் வீச்சுக்குள் அகப்படாமல் தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து விட முடியுமா?

உலகம் முழுவதும் நாடுகளின் இறையாண்மை, எல்லை, தேசியம் எல்லாவற்றையும் தாண்டிப் பாய்ந்து வருகின்ற பெரும்மூலதனத்தின் வலிமையான பிடிக்குள் அகப்படாமல் தன்னைத் தனியே எவ்வாறு காத்துக்கொள்ளும்?

நவதாராளமயப் பொருளாதாரம் விளைவிக்கின்ற நெருக்கடிகள், மக்களின் வாழ்வாதாரங்களை பலவகைகளில் இலங்கையில் எந்தப்பாகுபாடுமின்றி சூறையாடி வருகின்றது. பாதிக்கப்படுகின்ற மக்கள் போராடுகிறார்கள்.

அவற்றுக்கு எதிரான போராட்டம் சிங்கள மக்கள் மத்தியில் முனைப்புப் பெற்று நாளாந்தம் வெடித்துக்கிளம்புகிறது. நெருக்கடிகள் மக்களைப் போராட நிர்ப்பந்தித்து வருகின்றது.

தனியார்மயமாகும் கல்வி நிறுவனங்கள் இலவசக்கல்விக்கு உலைவைக்கும் வகையில், கல்வியை வியாபாரமாக்க அனுமதிக்கப்படுகின்றன. இது சிங்கள மக்களை மட்டும் பாதிக்கின்ற நவதாராளமய விளைவா? இது தமிழ்மக்கள் மத்தியில் இலவசக் கல்வியை பறித்தெடுக்க மாட்டாதா?

பறித்தெடுக்கும் எனில் தமிழ்மக்கள் இதற்கெதிராக போராட வேண்டாமா?

பெருவாரியான ஏக்கர் காணிகள், காடுகள், விளைநிலங்கள், தோட்டங்கள் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு யாருக்கு விற்கப்படுகிறது? 

வெளிநாடுகளின் மூலதனத்துக்கு விலைபேசி விற்கப்படுகிறது. இந்தியா, சீனா, மேற்குநாடுகளுக்கு அரசே அவற்றை விலைபேசி விற்பதற்காக அபகரித்துக் கொள்கிறது.

இந்தக் காணி அபகரிப்பு தனியே தமிழ்பிரதேசங்களில் மட்டும் நடந்துவிடவில்லை.

எனவே இந்தக் காணி அபகரிப்பு என்பது தனியே இனரீதியானது என்பது அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது நவதாராளமயம்.

2008ம் வருடம் அமெரிக்காவின் வோல் வீதியில் (Wall Street) பங்குச்சந்தை சரிந்த கையோடு தொடங்கி முழு உலகிலும் வியாபித்த நிதி நெருக்கடியை இதுவரையும் சகாய நிலைக்கு கொண்டுவர வக்கில்லாத ஏகாதிபத்தியம் முதற் கொண்டு உலக முதலாளித்துவமானது அதற்கு தீர்வு காண்பதற்காக உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் பொருளாதார அழுத்தங்களை அதிகரித்து வருகின்றது. 

வரலாறு முழுக்க போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கின்றது. விசேடமாக ஓய்வூதியம், கல்வி, சுகாதாரம் போன்ற சமூக பாதுகாப்புகள் பறிக்கப்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் உலக மக்கள் முகம் கொடுக்கும் இந்த அனுபவத்திற்கு இப்போது இலங்கைச் சமூகமும் முகம் கொடுத்து வருகின்றது.

இந்தப் பிரச்சனைகள் எதுவும் தமிழ்மக்களுக்கு செல்லுபடியாகாது என்று தமிழ்மக்கள் வாழாதிருக்கும் நிலையில் இருக்கமுடியுமா?

நவதாராளவாத பொருளாதாரத்துக்குள் நாடு, நாட்டுக்குள்ளான இனம் என்ற பாகுபாடுமின்றி எல்லோரும் சிக்கிக் கொண்டுள்ளோம்.

இலங்கை நாடு இதற்கு விதிவிலக்கல்ல. இனம், மதம், மொழி, கலாச்சாரம் என்று நாங்கள் கூவிக்கொண்டிருக்கின்ற போது எங்களுடைய எல்லோருடைய வாழ்வையும் நாம் யார் எவர் என்ற எதையும் பாராது அழிவுக்குள் கொண்டு செல்லும் நவதாராளவாத அந்தியப் பெருமூலதனத்தின் ஆதிக்கம் எங்களை சுனாமி போல் அள்ளிச் செல்ல உள்நுழைந்துள்ளது.

இந்த அனுபவத்திற்கு இப்போது இலங்கைச் சமூகமும் முகம் கொடுத்து வருகின்றது. இவ்வாறு உலகம் பூராவும் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் மாத்திரமல்லாமல், ஏகாதிபத்தியமும், உலக முதலாளித்துவமும் தனது போலி அபிவிருத்திக்காக ஒட்டுமொத்த மானுட சமூகத்தினதும் இருப்பை கடுமையான சவாலுக்கு ஆட்படுத்தி, முழு உலகையும், சூழலையும் பாரிய அழிவிற்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. 

உலகளவில் ஏகாதிபத்திய நவதாராள வேலைத்திட்டத்தினால் துன்புறும் மக்கள் அதற்கு எதிராக உலகு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுவது இன்றைய நிலையில் இன்றியமையாததாகும். 

ஆகவே, ஏகாதிபத்திய நவதாராள வேலைத்திட்டத்திற்கு எதிராக உலகம் பூராவும் வாழும் இடதுசாரிகளும், முற்போக்குவாதிகளும் இதற்கு தலைமை ஏற்க வேண்டியுள்ளது. 

நவதாராளவாதத்தை இலங்கையில் அறிமுகம் செய்த பின்பு கடந்த நான்கு தசாபதங்களாக அதிகாரத்திற்கு வந்த பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்கள், இந்த நவதாராள மறுசீரமைப்புகளை முறையாக செயற்படுத்தி வருவதுடன் மக்கள் எதிர்ப்பின் காரணமாக சில திட்டங்களை கைவிடும் நிலையும் ஏற்பட்டது. 

வளர்ச்சி அடையாத பொருளாதாரத்தில் கட்டமைப்பு ரீதியான பல மாற்றங்களை கடந்த ராஜபக்ஷ ஆட்சிவிட்ட இடத்திலிருந்து மைத்திரி - ரணில் கூட்டாட்சி ஏற்கனவே செயற்படுத்தத் தொடங்கி விட்டது. 

தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் போன்ற உழைக்கும் மக்கள் தலையில் மேலும் சுமையேற்றும் இந்த கட்டமைப்புசார் மாற்றங்களை உடனடியாக தோற்கடிக்க வேண்டும். 

அதற்கு சகல ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் இலங்கை உழைக்கும் மக்களின் தலைமையில் அணிதிரள வேண்டும். 

இதற்காக இடதுசாரிகள் உட்பட சகல முற்போக்காளர்களும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்று ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தேசிய ஏஜென்ட்டுகளுக்கும் எதிராக முதலாளித்துவ முறைக்கு எதிரான போராட்டத்தின் பக்கம் சகல பிரிவினரையும் நாடு முழுவதும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளது.

நவதாராள பொருளாதாரம் தேசங்களையும் தேசியத்தையும் பொருளாதார கலாச்சார ரீதியில் அழித்து அவை எல்லாவற்iயும் ஏகாதிபத்தியத்தின் மூலதனத்துக்குள் கொண்டுவருகின்ற முதலாளித்துவம் ஆகும்.

இந்த முதலாளித்துவத்தினை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள் தென்னிலங்கையில் வர்க்கப் போராட்டமாக முன்னெழுந்து வருகின்றபோது தேசிய இனப்பிரச்சனையே பிரதான முரண்பாடு என்று தமிழ்மக்கள் அதற்குள் முடக்கப்படுவது என்பது தமிழ்மக்களை மறுபுறத்தில் நவதாராளமயப் பொருளாதாரத்துக்கு தாழ்பணிய வைத்து தமிழ்த் தேசியத்தை அடியோடு அழிப்பதிலேயே முடியும். 

தேசிய இனப்பிரச்சனை இன்று தமிழ்மக்கள் மத்தியில் பிரதான முரண்பாடாக கற்பிக்கப்படுகிறது.

நவதாராளவாத பொருளாதார ஏகாதிபத்திய மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பிரதான முரண்பாடாக தமிழ்மக்கள் எழுந்துவருவதற்கு முட்டுக்கட்டைபோட்டு தேசியப்பிரச்சனை பிரதானமானது என முன்தள்ளுவோமாயின் அது வர்க்கப்போராட்டத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகம்.

நவதாராள பொருளாதாரம் என்பது வர்க்கப் போராட்டத்தினை இன மத தேசிய பாகுபாடுகள் இன்றி முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பிரதான முரண்பாடாக இன்றி முன்தள்ளியுள்ளது-

எனவே பலமான ஒன்றிணைந்த வர்க்கப்போராட்டம் இலங்கை மக்கள் முழுமைக்குமான வர்க்கக்கட்சியொன்றில் தலைமையில் முன்னெடுக்கப்படுவதற்காக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய முன்நிற்கிறோம்.