Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”

இலங்கையில் இன்று காணப்படும் “பிரச்சனைகளை” பட்டியல் போட ஆரம்பித்தால் அது ஒரு புத்தகமாகிவிடும். பிரதேச சபை தொடக்கம் அரசாங்கம் வரை குடிமக்கள் பல வகைப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

நிர்வாக அதிகார துர்ப்பிரயோகம்-ஊழல்-நிதி மோசடி-இராணுவ பொலிஸ் அத்துமீறல்-சட்ட மீறல்-நீதி விலகல்-காணி-காணாமற் போனோர்-கடத்தப்பட்டோர்-கைதிகள்-அகதிகள்-பெண்கள்-குழந்தைகள்-ஒப்பந்தங்கள்-விசாரணைகள்-வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என எழுதிக் கொண்டே போகலாம். இவை மத்தியில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி-சுகாதாரம்-வாழ்க்கைச் செலவு பாரிய பிரச்சனைகளாகும். இவைகளுக்கும் மேலாக எம்மை ஆளும் அரசாங்கத்திற்குள்ளே பிரச்சனைகள். அரசாங்கத்தின் திட்டங்களிலும் பிரச்சனைகள். இவை யாவற்றையும் ஊடறுத்தபடி நிற்கிறது இலங்கையின் “இனப்பிரச்சனை”.

இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வு நாட்டின் குடிமக்களின் புரிந்துணர்வு-நட்பு-தோழமை-கூட்டுறவு-கூட்டுழைப்பு என்பவற்றிலேயே தங்கியுள்ளது. அதற்கான முயற்சிகள்-முன்னெடுப்புக்கள்-போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி அடிபடுகிறார்கள். சிறைப்படுகிறார்கள். சட்ட விரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். கடத்தப்படுவதற்கான முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன.

 

இன்று நாட்டின் அரசியலில் தலைமை தாங்கும் “தேசியவாதிகள்” ‘குடிமக்கள் அனுபவிக்கும் இத்தனை பிரச்சனைகள் மத்தியிலும் நாட்டில் “சாதியம்” காப்பற்றப்பட வேண்டும்’ என்பதில் மிகக் கண்ணும் கருத்தாகவும் அதி தீவிரமாகவும் செயற்படுகிறார்கள். 

காலனித்துவ ஆட்சியாளர்கள் முதல் சுதந்திர ஆட்சியாளர்கள் வரை இலங்கையில் சாதியக் கண்ணோட்டமே அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. “தேசியம்” என்ற கோரிக்கையின் ஆரம்பப் புள்ளியே இந்த “சாதியம்”தான். இலங்கையின் எந்தத் தேசியவாதிகளினதும்-இனவாதிகளினதும் வரலாற்றுப் பின்னணிகளை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தோமானால் இந்த உண்மையை பளிச்செனப் புரிந்து கொள்ள முடியும். இதில் நாட்டில்  வாழும்அ னைத்துப் பிரிவினரும் உள்ளடங்குவர். 

19 மார்ச் 1883ல் ஆங்கிலேயர் இலங்கையில் உருவாக்கிய 16 உறுப்பினர்கள் (10 அதிகாரிகளும் 6 அதிகாரமற்றவர்களும்) அடங்கிய “சட்ட சபை”யில் அதிகாரமற்றவர்கள் பட்டியலில் ஐரோப்பியர்கள் சார்பில் 3 பேரும் சிங்களவர்-தமிழர்-பறங்கியர் சார்பில் என 3 பிரதிநிதிகளும் ஆங்கிலேய ஆளுனர்களால் நியமிக்கப்பட்டனர். 

1889ல் உறுப்பினர்கள் தொகை 18 ஆக அதிகரிக்கப் பட்டபோது  மேலைநாடு(கண்டிச்) கீழைநாடு(கரையோரச்) சிங்களவர் பிரதிநிதிகள் எனப் பிரிக்கப்பட்டு புதிதாக இஸ்லாமியர் சார்பாக புதிய பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட்டார். 

1910ல் மேலும் உறுப்பினர் தொகை 21 ஆகியபோது அதில் இலங்கையின் படித்தவர்கள்-சொத்துடையவர்கள் என ஆங்கிலேயரால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின் மத்தியில் இருந்து தேர்தல் மூலம் 4 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அதில் 2 ஐரோப்பியர்கள் 1 பறங்கியர் 1 இலங்கையர் அடங்குவர்.

 

இந்த படித்தவர்கள்-சொத்துடையோர் அடங்கிய இலங்கையர் வாக்காளர் பட்டியலில் உறுப்பினர் பதவிக்கு சிங்களவரான மார்க்கஸ் பெர்னாண்டோ-தமிழரான பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். 2934 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பட்டியலில் இருந்து 2626 பேர் வாக்களித்தனர். அதில் 1645 வாக்குகள் (89.5வீத) பெற்று இராமநாதன் தெரிவானார். பெர்னாண்டோ 981 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் தமிழ்-சிங்கள இனத் தேசிய எல்லை கடந்து “சாதியமே” வெற்றியைத் தீர்மானித்திருந்தது. படிப்பிலும் சொத்திலும் செல்வாக்கிலும் சமமாகவும் இனத்தில் பெரும்பான்மையினரைச் சார்ந்தவராக இருந்தும் கரையார (கரவா) சாதியினரான பெர்னாண்டோ தோற்கடிக்கப்பட்டு வேளாள சாதியினரான இராமநாதன் வெற்றிபெறுவதற்கு ஒரேயொரு காரணமாக அமைந்தது தமிழ்(வேளாள)-சிங்கள(கொவிகம) சாதிய ஒருமைப்பாட்டின் வெளிப்பாடே.

இலங்கையில் இன்று வரை எமது அரசியல் பயணம் இந்த “சாதிய” அணுகுமுறையிலேயே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்-2009 பின்-2009 சம்பவங்களை-அரசியல் கூட்டுக்களை-பிளவுகளை-குத்து வெட்டுக்களை சற்று ஆழமாக ஆராய்ந்தால் “சாதியத்தின்” கொடூரம் நன்கு புரியும். அதன் பரிமாணத்தை-செல்வாக்கை-ஆளுமையை இன்று எமது மக்களின் பிரச்சனைகளை அரசியல்வாதிகள் கையாளும் நடைமுறைகள் ஊடாக மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். வடக்கிலிருந்து கிழக்குக்கு ஆறுமுகநாவலரையும் அயலில் இருந்து நம்நாட்டுக்குள் சிவசேனாவையும் தேரில் வைத்து இழுத்து வருவது சாதியத்தை மேலும் வலுப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்துவதற்கான தந்திரமே.

கடந்தகால இயற்கை-செயற்கை அனர்த்த அனுபவங்களுக்குப் பின்பும் இலங்கைக் குடிமக்களை ஒருவருடன் ஒருவர் இணைய விடாமல்-அணுக விடாமல்-உரையாட விடாமல்-தொடர்பாட விடாமல் தடையாக இருப்பது இந்த “சாதியமே”. அமைப்புக்கள் தோன்றுவதும் - உடைவதும் - புதிய அமைப்புக்கள் தோன்றுவதும் “சாதியம்” திரைமறைவில் நின்று இயங்குவதானாலேயே.

சாதி இருக்கலாம். சாதிப் பெயர்கள் இருக்கலாம். அது ஒரு வரலாற்றுப் பதிவு. ஆனால் “சட்டத்தின் முன் சகலரும் சமம்” என்ற சனநாயகக் கோட்பாட்டில் கீழ் அரசியல் உரிமைகள் கோருவோர் ‘சாதியின்-பாரம்பரியத்தின்-தேசவழமையின்’ பெயரால் ஒரு சக மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவன் இரண்டாந்தரப் பிரசையாக மிதிக்கப்படுவதையும் ஏற்றுக் கொண்டிருப்பது சாதிய ஆதிக்கமே.

சாதியம் இன்று பல வகையான வடிவங்களில்-தளங்களில் இயங்குகிறது. அதன் ஆதிக்கம் பல படிநிலைகளில் முனைப்புப் பெற்று மக்களைக் கூறுபோட்டு மோத விட்டு இனவாத ஆதிக்க சக்திகள் தங்கள் அதிகாரத்தை மேலும் மேலும் வலுப்படுத்த வழி சமைத்துக் கொடுத்தபடி உள்ளது. அரசியலை-அதிகாரக் கட்டுமானத்தை-சமய பீடங்களை ஊடறுத்துப் பார்த்தால் சாதியப் பரிமாணம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம்.

நாட்டின் “குப்பை மேட்டு” அனர்த்தம் ஆகட்டும் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் அனர்த்தம் ஆகட்டும் யாவுமே சாதிய நீரோட்ட அரசியல் - அசமந்தப் போக்கினால் ஏற்பட்ட விளைவுகளே.  

தங்கள் கிராமத்தின் மத்தியில்-தங்களுடைய ஊர்க் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் வைத்து பிணங்களை எரிப்பதை தடை செய்யக் கோரி மக்கள் இரவு பகலாக கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்துகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களின் அடிப்படை சுகாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அரச சட்ட நிர்வாகம் “உங்களுக்கெல்லாம் உரிமை ஒரு கேடா” என்ற சாதிய மனப்பாங்குடன் உரிமை வேண்டி போராடிய மக்களை சிறைக்குள்ளே தள்ளியுள்ளது. இதனை மக்கள் பிரதிநிதிகளும் சாதியக் கணிப்பீடு காரணமாக அதனைக் கணக்கில் எடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி உள்ளனர். இந்த வேடிக்கை பார்த்தலில் ஒரு முக்கிய சாராம்சம் அடங்கியுள்ளது. இந்த மயானப் பிரச்சனையில் முட்டி மோதிக் கொண்டிருப்பது காலங்காலமாக ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இரு சமூகங்களே. இதனால் “சாதியத்தின்” காவலர்கள் ‘எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த இரு சமூகங்களையும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவிடாமல் ‘கொம்பு சீவி விட்டு’ ‘பொலிஸ்’ அடிதடி முதல் கோர்ட்-சிறைச்சாலை என அலைய வைப்பது இந்த சாதியத்தின் சமயோசித சிந்தனையே. 

தாங்கள் ‘ஒரு தனித் தேசிய இனம்’ எனக் கூறி ஜ.நா.சபைக்கு விண்ணப்பம் செய்வோர் தங்கள் இனத்தின் ஒரு பகுதி மக்களின் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான சுகாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கு எதுவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அதற்கு “சாதியம்” அனுமதிக்கவில்லை. 

இதே சாதியம்தான் நடந்து முடிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தன் கைவரிசையைக் காட்டியது. அது “எங்கடை பெடியள்” என்ற பதத்தின் ஊடாக போராட்ட அமைப்புக்களை மோத வைத்தது. “சாதிப் பெயர்கள்” சூட்டி இயக்கங்களை கொச்சைப் படுத்தியது. கொலைகளை ஊக்குவித்தது. அவற்றை நியாயப்படுத்தியது. அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை அதிகாரத்திற்கான யுத்தமாக வளர்த்தெடுத்தது. நடாத்தி முடிக்கப் பெற்ற கூட்டுப் படுகொலைகளை அன்று ஆதரித்த இந்த சாதியம் இன்று “இனப்படுகொலை” என்ற பதாகையுடன் உலக நாடுகளிடம் கையேந்திபடி அலைகிறது. இன்று இலங்கையில் “தேசியம்” என்ற கோரிக்கையை முன் வைக்கும் சகல தரப்புத் தலைமைகளும் ‘சாதியம்’ என்னும் அளவுகோலுடன் தான் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

“கையில் வெண்ணை இருக்க எண்ணெய் தேடி ஊர் ஊராக அலைந்த” கதையாக பிரச்சனைகளுக்கான தீர்வு நாட்டின் குடிமக்கள் கையில் இருக்கையில் நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து நாட்டு மக்களைச் சுரண்டும் உலக புதிய பொருளாதாரக் கொள்ளைக்காரக் கும்பல்களிடம் தேசியம் என்ற பெயரால் விண்ணப்பம் கொடுப்பது சாதியத்தின் சாதுரியமே.

இதனைக் குடிமக்கள் நாம் இப்போதே நிராகரித்து பொது நோக்குடன் சிந்தித்துச் செயற்படாத வரை நாட்டின் எந்தப் பிரச்சனையும் தீராதது மட்டுமல்ல நாட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்களின் “கொத்தடிமைகளாக” நாமும் நமது சந்ததிகளும் வாழ வேண்டிய சூழல் மேலும் மேலும் விரிவாக்கம் அடையும் ஆபத்தும் உண்டு.