Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மக்கள் ஆசிரியர் சங்கம்

அண்மையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் அவ் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் தொடர்பான பொதுக் கலந்துரையாடலை மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடல் 2015.06.27 ஆம் திகதி காவத்தை இ/ஸ்ரீ கிருஸ்ணா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மக்கள் ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளார் உட்பட சங்க செயற்குழு உறுப்பினர்கள் தலைமை வகித்த இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற அரசியலை மையப்படுத்திய பிரபல ஆசிரியர் சங்மொன்றின் அநாகரீகமான குழப்பும் நடவடிக்கைகளையும் மீறி ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சங்கத்தின் தலைவர் எஸ். மோகன் தமது தலைமை உரிமையில் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தோற்றம், அதனது கொள்கை, வேலைத் திட்டம் என்பனவற்கை எடுத்துக் காட்டியதுடன் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடு ஆசிரியர்களின் பொருளாதார பிரச்சினைகளை பற்றி மட்டும் பார்ப்பதாக அல்லாமல்; மாணவர்களின் கல்வி கற்பதற்கான சுதந்திரம், கட்டாயக் கல்வி, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி, ஆசிரியர்களின் கற்பிப்பதற்கான சுதந்திரம், கல்விச் சமூகத்தின் ஐக்கியப்பட்ட செயற்பாடுகள் என பரந்துப்பட்ட வகையில் கல்வி உரிமைகளை வெல்வதற்கான திட்டங்களை கொண்டுள்ளது என விளக்கினார். வழமையான ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பார்வை, நோக்கு, செயற்பாடு என்பவற்றில் இருந்து மக்கள் ஆசிரியர் சங்கம் மாறுபட்டு நிற்கின்றது எனவேதான் அண்மையில் வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் அவர்களின் கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்ற கோசத்தை கடந்து இந்நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், அவ் அநீதிகள் மாணவர்களின் கல்வி உரிமையையும் ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்களையும் அவர்களின் கௌரவத்தையும் பாதிப்பதை உணர்ந்தே இவ்வாறான கலந்துரையாடலை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களுடன் மேற்கொள்கிறது என்றார்.

அதனை தொடர்ந்து ஆசிரியர் உதவிளார் நியமனத்தில் உள்ள அநீதிகள் தொடர்பாக பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் விளக்கமளிக்கையில், மலையக தலைவர்கள் தங்கள் பெற்றுக் கொடுத்தாக கூறும் எதனையும் முறையாக பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவே இருந்துள்ளனர். ஆசிரிய பிரமாண குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றுள்ளவர்களின் தகைமை மற்றும் அவர்களை ஆட்சேர்ப்பதற்கு பின்பற்றிய நடவடிக்கை முறைகளை வைத்து பார்க்கும் போது அவர்களை ஆசிரிய சேவை தரம் 3-ஐஐற்கு சேர்த்துக் கொள்ள முடியும். எனினும் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் இல்லாத ஆசிரிய உதவியாளர் என்ற பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் பொதுவாக ஆசிரியர்கள் செய்ய வேண்டிய அதே பணியை குறைந்த வேதனத்துடன் செய்வதற்கு நிற்பந்திக்கப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு இதே தகைமையை கொண்டவர்கள் ஆசிரியர் சேவை தரம் 3-ஐஐற்கு சேர்க்கப்பட்ட நிலையில் இம்முறை ஆசிரிய உதவியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளமை அநீதியானது.

வழமையாக மலையக மக்களின் கல்வில் அக்கறை கொள்ளாத ஆளும் அரசாங்கங்கள் மலையக ஆசிரியர் நியமனத்திலும் தனது பாரபட்சத்தை காட்டியுள்ளது. பல்வேறு இழுத்தடிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நியமனக் கடிதம் பெறுவதற்கான அனுமதிக் கடிதம் போன்றதொரு கடிதம் வழங்கப்பட்டது. இதேநிலைதான் மலையக மக்களின் காணி உரித்து விடயத்திலும் இருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் தற்செயலானவையல்ல. இவைத்திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்தின் போது டன்பார் மைதானத்துக்கு அழைக்கப்பட்டு நியமன கடிதம் வழங்கப்பட்ட நிகழ்வு ஆசிரியர்களை அகௌரவப்படுத்துவதாகவே இருந்தது. இந்நிலையில் ஆசிரிய உதவியாளர் என வழங்கப்பட்ட நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியர் சங்கம் என்ற வகையில் மக்கள் ஆசிரியர் சங்கம் தயாராக உள்ளது. எனவே இப்பிரச்சினைகளில் சம்பந்தபட்டவர்கள் என்ற வகையில் ஆசிரியர்கள் உதவியாளர்களின் நிலைப்பாடு பற்றி திறந்த கலந்துரையாடலுக்கும் அதனூடாக நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்குகின்றோம் என்றார்.

கலந்துரையாடலின் போது கருத்துக்கூறிய ஆசிரிய உதவியாளர்கள் தங்களது குடும்ப பொருளாதார நிலைமைகள் பற்றி எடுத்து கூறியதோடு பெற்றார்களை கவனிக்க வேண்டிய காலத்தில் தொழில் கிடைத்த போதும் தொடர்ந்து அவர்களிடமே தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினர். சிலர் இதற்கு முன்னர் அதிக சம்பளத்துக்கு வேலை செய்து அதனை கைவிட்டு இந்த நியமனத்தை பெற்று பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டனர். இந்நிலைமை ஐந்து வருடங்களுக்கு தொடருமாயின் தங்களினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முறையாகவும் இதயுசுத்தியுடனும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் கூறினர். இந்த நியமனத்தில் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் உரிமைகளுக்கு அப்பால் சென்று பேச முடியாது என்றே நாங்கள் எண்ணி இருந்தோம் எனினும் மக்கள் ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டல் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குறிப்பிட்டனர். இந்த அநீதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பாக வழக்கு தொடர முடியுமாக இருந்தால் பாதிக்கபட்டவர்களாக முன்னிலையாவதற்கு தயாராக இருப்பதாக சிலர் முன்வந்தனர். 

இந்த விடயம் பற்றிய பரந்துபட்ட கலந்துரையாடலை மலையகம் முழுவதும் உள்ள ஆசிரிய உதவியாளர்களுடன் உடனடியாக மேற்கொண்டு பிரச்சினைகளை சட்ட ரீதியாக அணுகுவதற்கு மக்கள் ஆசிரியர் சங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளும். இது தொடர்பான விடயங்களை ஆசிரிய உதவியாளர்கள் 071-6070644 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என செயற்குழு சார்பாக செயலாளர் இரா.நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார்.