Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு எதிராக அணிதிரள்வோம்!

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் வேலைக்கு திரும்பாது தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் ஆயின் இன்று 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வேலைக்கு திரும்பி பணியை தொடராவிடின், தொழிலை இழந்தவர்களாகக் கருதப்படுவர் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இன்று நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ள ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று எட்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏழு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நீதிமன்றத்தினால் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிற்கு நல்லாட்சி வழங்குவதாக கூறி ஆட்சியில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கம், பதவி ஏற்ற நாள் முதல் மேற்குலகம் எமது நாட்டை சகல விதங்களிலும் சுரண்டும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கையினை தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றது.  அதன் ஒரு அங்கமாக  தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை   அமூல்படுத்தி வருவதுடன் ஏகாதிபத்தியங்களிற்கும் பல்தேசிய கம்பனிகளுக்கும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்க அனுமதி வழங்கியுள்ளது. 

பல்தேசிய காப்பிரேற் நிறுவனங்களின் லாபத்திற்காக தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் போராடும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. நிரந்தர வேலைக்கு பதில் இடைநிலை கம்பனிகளின் ஊடாக நிரந்தரமற்ற வேலை என பல வழிகளில் மனித உழைப்பை கொள்ளையிட இந்த அரசு சட்டங்கள் மூலம் வழி அமைத்து கொடுத்துள்ளது. 

1980இல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையை பறித்து நடுவீதியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தள்ளினான். இன்று அவனின் மருமகன் ரணில் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து கொண்டதுடன், அவர்கள் எந்நேரத்திலும் வேலையை விட்டு விரட்டி அடிக்கும் நிலைமைக்கு வழி திறந்து விட்டுள்ளான். 

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் நியாயபூர்வமான போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதாக இடதுசாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான "தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்" அறிவித்துள்ளதுடன் பரந்து பட்ட போராட்டங்களையும் முன்னெடுக்க இருப்பதாக ஊடக அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.