Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆனையிறவும் போன உயிர்களும்

உயிர் பிரிந்து இலங்கை மக்கள்
விம்மியழுத கண்ணீர்
கருமணியின் கனல் வெப்பத்தே
உப்பளத்து விழைச்சலையும் மிஞ்சும்
கூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கி
போரின் சின்னமாய் முதலிட்டான்......

 

தெருப்புழுதி எழா ஈரம் கண்ணீராய்
நேசித்த மண்ணெல்லாம்
வெறுப் புற்று பேதலித்து -- இழப்புற்ற
உறவுகளின் தவிப்புகளாய்
இழந்து போய் எஞ்சியோரும் சிதறுண்டு
மகிந்த மன்னவர் கொடையிது-

இளகுவதற்கு ஏது மற்று மனித மனங்கள்
இரும்பாகிக் கிடக்கிறது
குருதியில் கிடந்துளன்று கொடுமிருளில்
விழி விரிய மறுக்கிறது
படு குழியில் வீழ்த்திய விடுதலைப் போரெண்ணி
விரல்கள் புடைக்கிறது

ஆனையிறவு திண்டது
அன்னம்மாவோட பிள்ளையை
ஆய்சாவிட பிள்ளையை
அப்புகாமியோட பிள்ளையையும்
போரில் வென்றதாய் தூக்கிநிறுத்தி
பிணம் திண்டோர் கைகளில் கிடக்கிறது

சேற்றில் உழுதவர் பாதத்தும்
கூலிக்குப் போரிட்ட சிப்பாயுக்கும்
செயற்கைக் கால் பொருத்திக் கிடக்கிறது
வீட்டு நிலத்து மண்ணில் குழந்தை
விரல் கொண்டு கீறிய சித்திரம்
பேயாட்சிப் பூட்சில் நசிகிறது......

மாற்றம் வெடிக்கும்
மனம் நோகுமுள்ளங்கள் சீற்றமுறும்
ஊழிக்காற்றையும் ஊடறுத்துப் பயணிக்கும்
உழைப்பவர் கரங்கள் ஒன்று சேரும்
குருதியில் கொழுப்பவர் சதியினை தகர்க்கும்