Sat12022023

Last updateSun, 19 Apr 2020 8am

அப்பனும் அம்மையாய்....

அம்மாவில்லாமலும் அப்பா இல்லாமலும் நாங்கள் பிறப்பதில்லை. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வீட்டில் சச்சரவும், தர்க்கங்களும், மனத்தாங்கல்களும் இல்லாத வீடுகளும் இருப்பதில்லை. அம்மா பெறுமாதம் வரைக்கும் சுமக்கின்றாள். ஈன்ற ஒவ்வொரு பொழுதிலும் பிரசவ வலியில் துடிக்கின்றாள். அவள் ரணப்படுகின்றாள். பிள்ளையின் பசி அழுகுரல் கேட்டால் அவளுக்கு நெஞ்சில் பால் சுரக்கின்றது. பாலூட்டுகின்றாள். இதுவரையும் அப்பாவால் செய்ய முடியாதவைகள் இவைகள்.

ஆனால் ஒரு அப்பாவாலும் பிள்ளையை தோளில் சுமக்க முடியும். பிள்ளை பசிக்கன்றி வேறு உபாதைகளுக்கு தூக்கத்திலிருந்து விழித்தழுதால் அப்பாவாலும் கண்விழித்து தூக்கியணைத்து பிள்ளைக்கு வேண்டியதை செய்ய முடியும். தாலாட்டுப் பாடவும் தட்டிக்கொடுக்கவும், உறங்க வைக்கவும், உணவு ஊட்டிவிடவும் முடியும்.

பிள்ளை நோய்வாய்ப்படுகின்ற போது வைத்தியரிடம் கூட்டிச்செல்ல முடியும். வீட்டில் இருந்து பராமரிக்க முடியும். தைரியமூட்டி, மனவலிமையூட்டி அறிவூட்டி அன்புகாட்டவும் முடியும். பிள்ளை சுதந்திரமாக தனது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க அதற்கான தன்னைத் தானே செப்பனிட,  துவண்டு போகாமல் தடைகளை எதிர்த்துப் போராடவும் தனது சுயத்தோடு தன்கால்களில் உறுதி கொள்வதற்கும் சமூகத்திலும் தன்னைப் பொருத்திக்கொண்டும் அங்குள்ள அநீதிகளை எதிர்த்துக் கொண்டும் போராடி வாழ்வதற்கும் பொருத்தமான வேளைகளில் ஒத்தாசைகளையும் உதவிகளையும் தந்துதவ முடியும். விரும்பினால் வழித்துணையாகப் போகவும் முடியும்.

சமூக நலன்களுக்கு மேற்படாத தன் சொந்த நலன்களைப் பிள்ளைகளுக்காக துறக்கவும் முடியும். இதற்குள் தனது சொந்தப் பொழுதுபோக்கு, வேலைநேரம், பண வருவாய் தரும் உத்தியோகம் என்பவற்றை தியாகம் பண்ணவும் முடியும். தன்வலிமையைக் குறைத்து தானிருந்தும் உதவ முடியாத நிலைக்குள் தன்னையே தள்ளிச் சென்று வீழ்த்தி விடாதபடி தன்னை மற்றவர்களுக்காகக் காப்பாற்றி தூக்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய சொந்தத் தேக ஆரோக்கியம், சொந்தச் சேமிப்பு என்பவற்றை மற்றவர்களுக்காகப் பராமரித்து ஆனாலும் இவ்வாறான வேளைகளில் அவற்றை இரண்டாம் பட்சமாக்கி நடக்கவும் முடியும்.

இவையெல்லாம் தாய்க்கு மட்டுமே உரிய குணங்கள், தந்தைக்கில்லை என்று அடியோடு தந்தையர்களை தள்ளி வைக்கும் அன்னையர் தினப்பதிவுகள் ஒன்றை மறந்து விடுகின்றன. தாய்க்கு, தாயின் தாய்மைக்கு மேலாகவும், இந்தக் கடமைகளைச் சுமத்திப் பிழித்தெடுக்கும் ஆணாதிக்கம் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஏனெனில் ஆணாதிக்கம் இல்லாத அல்லது அதன் தாக்கம் தளர்ந்து போன சமூகத்தில் மேற்படி கடமைகள், பிள்ளைகள் மீதான ஈடுபாடுகள் சமூக விஞ்ஞான வழிப்படி மனிதப் பண்புகளாப் பார்க்கப்படுகின்றனவே தவிர தாய்ப் பண்புகளாக அல்ல. தாய்க்கு தாயின் கவுரவத்தையும் தந்தைக்கு தந்தையின் கவுரத்தையும் அவை வழங்குகின்றன. ஆணாதிக்கத்தை துறந்தால் தந்தையர்களே நீங்கள் அன்னையரை விடவும் அதிகம் தாழ்ந்து போக போக மாட்டீர்கள்.

தாயை அல்லது எதிர்கால தாயை, மனைவியை அடுப்பங்கரைக்குள் பூட்டிவைத்து விட்டு, கல்வி மற்றும் ஏனைய விடயங்களிலிருந்து தள்ளியிருக்கும்படியும் செய்து விட்டு, அவளைத் தியாகியாய் (தியாகியே தான்) ஆக்கிவிட்டு தங்களது ஆணாதிக்கத்தினால் அவள் மீது ஏற்படுத்தப்பட்ட சுமையை மறந்தும் மறைத்தும் அவளைப் போற்றுகின்ற ஆண்கள் பலபேர்.

முதலாளி தனக்கு அதிகம் இலாபம் கிடைக்கும்படி அடிமாடாய் உழைக்கும் தொழிலாளியின் மனம் மகிழப் பாராட்டுவதும், தேவையானால் சிறு சன்மானமும் தரும் நடவடிக்கைக்கு ஈடானதே இது. ஒரு தாயினுடைய வலிமைக்கும் மேலாக சுமக்க முடியாத குடும்பத்திற்கு இருக்கக்கூடிய பொதுக்கடமைகளை எல்லாம், ஆயுள் பூராவும் தாய்க்குரித்தானதென அடையாளப்படுத்தி, இலக்கியப்படுத்தி, கலாச்சாரப்படுத்தி, அவள் தானே இவற்றையிட்டு பெருமை கொள்ளும்படி பக்குவப்படுத்தி வைக்கும் வஞ்சகப் பாராட்டுக்கள் பற்றியும் கவனம் கொள்க.

ஆனால் தாய் மேல் உரித்தான அன்பும் கவனமும் அக்கறையும் கொண்டவர்கள் இதற்குள் அடக்கமல்ல.