Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இறந்தவர்களின் தோத்திரம்

அருள் நிறைந்த அம்மா வாழ்க
டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்
உம்முடனே இருக்கக் கடவதாக
பெண்களுக்குள் தமிழ்நாட்டில்
ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்
தமிழர்களின் திருவயிற்றின்
கனியாகிய கன்னித்தாயே
முள்ளிவாய்க்காலில் மரித்த எங்களுக்காக
எங்கள் மரணநேரத்திலும்
டெல்லி சர்க்காரை
சங்காரம் வேண்டாமென்று
வேண்டிக் கொண்ட தாயே
எங்கள் சந்ததியினருக்காக
நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்
எங்கள் சந்ததியினரை இரட்சித்தருளும்
அவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.
முள்ளுக் கிரீடம் அணிந்து
சிலுவையில் அறையப்பட்டு
மரணித்தார் நாதர் இயேசு
நாங்கள் பிறருக்காய் மண்ணுக்குள்
மரணிக்கப்பட்டோம் தாயே.
உயிர்த்தெழுந்து நாங்கள் வருகிறபோது
தாயே உமக்கே தோத்திரம்
உண்டாகக் கடவது.

 

 

எங்களுக்காக டெல்லி சர்க்காரின் சகாயமாய்
சிலுவை சுமப்பதற்கும் சாரீரம் தருவதற்கும்
சத்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

ஆச்சர்யத்துக்குரிய ஜெயா மாதாவே
வாக்குத்தத்தத்தின் லலிதப் பெட்டியே
பரலோகத்தினுடைய வாசலே
சமாதானத்தின் இராக்கினியே
தங்கள் இந்தியநாடு இலங்கையிலும்
காஷ்மீரிலும் தண்டகாருண்யத்திலும் செய்த
போர்க்குற்றங்கள் அனைத்தையும் பொறுத்தருளும்
டெல்லியின் திருவுளப்படி நடப்பதற்கு வேண்டிய
மன இருதய கீழ்ப்படிதலை மகிந்தவுக்கு
என்றும் கொடுத்தருளும் தாயே.

 

 

பலிகொடுத்தவர்களின் வேண்டுதல்

டெல்லி சர்க்காரின் இராக்கினியே
மாமனிதர்களுடைய சரணமே
சர்வலோகத்துக்கும் நாயகியே
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாயிருக்கிறோம்
எப்படியாவது எங்களை இரட்சிக்க வேண்டும் என்று
டெல்லியை மன்றாடும் தாயே
மாதாவே ஆண்டவளே உம்மை நம்பினோம்
எங்களைக் கைவிடாதேயும்.
விசேஷமாய் நாங்கள் சாகும்போது
பிசாசுகளுடைய தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு
உம்முடைய டெல்லித் திருக்குமார்களின் பாதங்களுக்கு
நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையிரும்.
இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து
உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம்.
இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே
கட்டளை பண்ணியருளும் தாயாரே மாதாவே ஆண்டவளே.

-சிறி

முன்னணி (இதழ் -2)