Fri12092022

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமல் போன அம்மா....

இது வெறும் கதையல்ல. என் வாழ்வின் நடந்த உண்மைச் சம்பவம்.

அந்த நாளை இப்ப நினைத்தாலும் என் இதயம் இப்போதும் இரத்தம் சொட்டுகிறது. வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் துரோகம் செய்து விட்டேன் என்ற குற்றவுணர்வு என்னை நெடுகலும் வாட்டி வதைக்கின்றது. மறக்க வேண்டும் மறக்க வேண்டும் என்ற போதெல்லாம் இந்த நினைவு ஏதோ ஒரு வடிவில் வந்து என்னைக் கட்டிப் போட்டுவிடுகின்றது.

குழந்தைத்தனமாகவும் ஒரு விளையாட்டுப் பிள்ளை போலும் இருந்து விட்டேனே என்றெண்ணி என்னை நானே நொந்து எனக்குள்ளே கூனிக்குறுகிப் போகிறேன்.

ஏறக்குறைய ஓரு முப்பத்தினாலு முப்பத்ததைந்து வருடங்களுக்கு முன்னர். எனது அட்வான்ஸ் லெவல் பரீட்சைக் காலம். பரீட்சை தொடங்குவதற்கு முதற்கிழமையே எனக்கும் என் சக நண்பர்கள் சில பேருக்கும் மகிழ்சியெண்டால் சொல்ல முடியாத மகிழ்ச்சி.

ஏனென்றால் பரீட்சை நடக்கப் போற இடமோ பக்கத்துக் கேர்ல்ஸ் ஸ்கூல். எங்கடை பள்ளிக்கூடத்திலே ஆட்ஸ் படிப்பது கொஞ்சப் பேரெண்ட படியால் தான் பக்கத்துப் பெண்கள் பாடசாலை என்று அறிவிப்புச் சொன்னது.

அந்த நாளும் வந்தது. எட்ட இருந்து ரசித்த பெண்களை கிட்டவிருந்து ரசிக்கப் போறோமே என்ற ஆவல் மேலோங்கியிருந்தது.

மண்டபத்தினுள் நுழையும் போது முதலிருந்த அந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் எனக்கு தோன்றவில்லை. அங்கிருந்த அமைதியும் அந்தப் பெண்கள் எல்லோரும் தலையைத் தொங்கவிட்டு குனிந்திருந்த விதமும் பரீட்சைப் பொறுப்பாளராய் நின்ற ஒரு ஆணின் தோற்றமும் என்னைப் பயம் கொள்ள வைத்தது.

நான் எனது இருப்பிடத்தை கண்டு பிடித்து அமர்ந்து கொண்டேன். பொறுப்பானவர்களில் இந்தப் பெண் ரீச்சர் தான் இதற்குப் தலைமைப் பொறுப்பு என்ற அறிவுறுத்தல்களோடு பேப்பர்களும் வழங்கப்பட்டது.

பேப்பர்களின் சிறு சிறு சலசலப்புகளின் பின் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவிற்கு மண்டபம் அமைதியானது. யன்னல்கள் இல்லாத இடைவெளிகளினால் வந்து போகும் காற்றும் சுற்றி வளர்ந்து நின்றிருந்த அசோக் மரங்களிலிருந்து வந்த அந்தச் சுகந்தமும் என்னவோ மனதுக்கு இதமளித்தது.

ஒரு அரைமணி நேரம் தாண்டியிராது, யாரோ எழுந்து நடந்து வரும் செருப்படிச் சத்தம் அந்த மண்டபத்தின் மௌனத்தைக் கலைத்தது. அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடி என்னருகே வந்து நின்றது.

என்னையறியாத இனம் தெரியாத ஒரு பயம், இருந்தாலும் ஒருமாதிரி என்னைத் திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிறேன். அந்தப் பொறுப்பான ரீச்சர் என்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.

ஒரு நாப்பதோ நாப்பத்தைந்து தாண்டியிருக்க கூடிய வயதிருக்கலாம், ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். நெற்றியில் ஒரு சிறு பொட்டு. கூர்மையாய் என்னைக் குத்திப் பார்த்தபடி இருந்த கண்கள். அவவின் தோற்றமோ அவரது பார்வையோ என்னைப் பயப்படுத்தவில்லை.

மற்றப் பெண் மாணவிகள் என்னை தப்பா நினைத்திடுவார்களோ என்ற ஆதங்கத்தில் மீண்டும் பேப்பருக்குள் மூழ்கத் தொடங்கினேன்.

அவவும் அப்படியே ஒரு சுற்று வலம் வந்து தனது ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டார். மீண்டும் அமைதி காத்தது பரீட்சை மண்டபம்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும் அதே செருப்புச் சத்தம். அது மீண்டும் என்னோக்கியே வந்து என்னருகில் நின்றதை உணர எனக்கு கனநேரங்கள் எடுக்கவில்லை. சில வினாடிகளின் பின் மீண்டும் அவ தானாய் விலகிச் சென்றா...

மேலும் சில நிமிடங்கள் கழிந்திருக்கும், அங்கு நின்ற ஆண் பொறுப்பாளர் எழுந்து நின்று இன்னும் பதினைந்து நிமிடங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்ற போது மனது படபடவென்று அடித்துக் கொண்டது.

திடீரென அந்தச் ரீச்சர் மிகவும் வேகமாக நடந்து வந்து என்னருகில் நின்றா. இந்தச் ரீச்சரின் இந்தச் செயல் என்னை மேலும் மேலும் எரிப்பூட்டியது. எல்லா மாணவர்களினது பார்வையும் என்னை நோக்கியே திரும்பிய போது எனக்கு வெட்கமாயும் கூச்சமாயும் இருந்தது.

மிகவும் தலை குனிந்து என்காதருகே வந்து 'கெதியாய் எழுதி முடி" என்று எனக்கச் சொன்னது பக்கதிலிருந்த சில பெண்களுக்கும் பின்னாலிருந்த கணேசுக்கும் கேட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இன்னும் ஒரு மணித்தியாலத்தின் பின் அடுத்த பரீட்சை தொடங்கும் என்ற அறிவித்தலோடு எல்லோரும் வெளியேறினோம்.

எல்லோரும் என்னையே வந்து சூழ்ந்து கொண்டார்கள். "என்ன மச்சான், ரீச்சர் உன்னைச் சுற்றியே வட்டம் போடுறா... ஏதும் காசு குடுத்துக் கூட்டிக் கொண்டு வந்தனியோ..." என்று கேலியும் கிண்டலும் அடித்தார்கள். அவர்கள் இப்படியெல்லாம் சொல்ல அந்த ரீச்சர் மேல் எனக்கு கோபம் கோபமாய் வந்தது.

மீண்டும் பரீட்சை ஆரம்பமானது. வழமை போல் அந்தச் ரீச்சர் என்னருகே வருவது என் பேப்பரை உற்று உற்றுப் பார்ப்பது திரும்பிப் போவதுமாய் இருந்தார்.

அன்றைய நாள் முடிவடைந்த போது எல்லோரும் எழுந்து வெளியே செல்லும் வேளையில் அவ என்னை தன்னருகே வரும்படி சைகை காட்டினார். நானும் பயந்து பயந்து தயங்கி தயங்கிச் சென்றேன்.

ஆம்பிளைப் பிள்ளை என்ன கையிலே நீளமாய் நகம் " நீ... நாளைக்கு வரும் போது உந்தக் நகத்தையும் வெட்டி தலைமயிரையும் வெட்டி ஒழுங்கா அழகாய் வர வேண்டும்"; என்று சொன்ன போது இவவுக்குப் பக்கத்தில் நின்ற மற்ற இளம் ரீச்சரும் ஓம் என்று சொல்லு என்பது போல் எனக்குத் தலையாட்டினார்.

இங்கே என்ன நடக்குது.... இவையெல்லாம் யார்... என்ற கேள்விகளோடு ஒன்றுமே போசாமல் அப்பாடா என நினைத்து வெளியேறினேன்.

அடுத்த நாளும் வழமை போலவே.... ஆனால் கொஞ்சம் வித்தியாசம்... "இண்டைக்கு நல்ல கோப்பி போட்டுக் கொண்டு வந்தனான், இடைவேளைக்கு வந்து குடி" என்ற போது எனக்கு ஒரு மாதிரியாப் போச்சு.

வெளியே வந்த போது பரீட்சையில் என்ன வந்தது யார் யாரெல்லாம் எப்படி எழுதினீர்கள் என்பதை விட என்னைப் பற்றியே கதையே பள்ளிக் கூடம் முளுவதும் தீயாய் பரவியது.

கடைசி நாள் வந்தது. அந்தச் ரீச்சர் அடிக்கடி என்னைச் சுற்றியே வந்தா நின்றா போனா....திரும்பத் திரும்ப வந்தா போனா.... ஆனா ஒன்றுமே கதைக்கவில்லை.

எல்லாம் முடிந்து வெளியேற முயன்ற போது அவ என்னைக் கூப்பிட.... நானும் போய் பக்கத்தில் நின்றேன்.

தம்பி.... உன்னைச் சிரமமபபடுத்திப் போட்டேன் போலே கிடக்கு.. ஏதோ தெரியவில்லை உன்னைப் பார்த்த போது என் மகனைப் போலவே அப்படியே அச்சாய் இருக்கிறாய்;.... வாய் மூடிச் சிரிக்கும் உன்ரை சிரிப்பு... கட்டி காந்தமாய் இழுக்கும் அவன்ரை அதே கண்கள் அவன்ரை அதே துடியாட்டம்.... அவன்ரை நடையுடை பாவனையெல்லாம் நீ.... சரியா அவனைப் போலைத் தானய்யா.... அவனின்று இருந்திருந்தால் உன்னைப் போலவே இன்று அவனும் பரீட்சை எடுத்திருப்பான்.... என்று சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழத்தொடங்கினா...

எனக்கு என்ன சொல்வதென்றே என்ன செய்வதென்றே தெரியவில்லை. திகைச்சுப் போய் சிலையாய் விறைத்து கல்லாய் நின்றேன்.

என்ன ரீச்சர் இப்படி என்றபடி அந்த இளம் ரீச்சர் வந்து அவவின் தோளைப் பிடித்தபடி என்னையும் நிமிர்ந்து பார்த்து போகும் படி சைகை காட்டினா.... மனமின்றி உயிரற்ற சடலம் போல் வெளியே வந்தேன்.

வெளியே ஓடிவந்த அந்த இளம் ரீச்சர் தப்பா நினைக்காதேங்கோ.... அவவுக்கு இருந்த ஒரேயொரு மகன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் ஏதோ இயக்கத்துக்கு எண்டு போன போது கொஞ்சப் பேர் கடலிலே வைச்சு சுடப்பட்டு கரையொதுங்கினது ஞாபகம் இருக்குமல்லே.... அதிலே இவவின் பொடியனும் .......

இந்தச் ரீச்சர் குடும்பத்தை எனக்கு நன்றாகவே.... நீண்ட நாட்களாய் எனக்குத் தெரியும். உன்னைப் பார்த்த முதல் நாளே அந்தப் பிள்ளை தான் எனக்கும் ஞாபக்தில் வந்தான் எனக் கூறிவிட்டு அந்த ரீச்சர் மறைந்து போனார்.

பொடியளோடு தர்மலிங்கண்ணா கடையிலே தேனீர் குடிச்சுப் போட்டு திரும்பி வரும் போது அந்த அம்மா பஸ்ஸ்ராண்டில் நின்றா... அவவுடன் போய் கதைப்பதா விடுவதா என்ற மனநிலையில் அவவைப் பாத்தபடியே போய்க் கொண்டிருந்தேன். அவவும் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக் கொண்டு நின்றா....

எத்தனையோ வருடங்கள் கடந்தாலும் அந்தப் பார்வை இப்பவும் என் கண்களுக்குள்ளே நிக்கிறது......

அன்று போராட்டம் என்று தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து இன்று முள்ளிவாய்காலில் எல்லாம் முடிஞ்சு போச்சு என்று சொல்லும் இந்தக் காலம் வரையும் இந்த அம்மாக்கள், தங்கள் பிள்ளைகளை தேடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இன்று காணாமல் போனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று அரசுக்கு எதிராகச் செய்யும் இந்தப் போராட்டங்களைப் போல, இந்தத் தமிழ் இயக்கங்கள் போராட்டத்துககென்று ஆக்களைக் சேர்த்த காலங்களிலே இந்த அம்மாக்கள் அன்றும் இந்தக் கொடிகளையும் கோசங்களையும் உயர்த்தியிருந்தால்..... இன்று எத்தனையோ அழிவுகளிலிருந்து நாம் தப்பியிருக்கலாம்.

கத்திபடாத காயங்களாய் இரத்தம் சிந்தாத சோகங்களாய் இந்தப் புத்திர சோகங்கள்... எங்கள் அம்மாக்களில், அன்றும் இன்றும் என்றும்.

முற்றும்.

பிற்குறிப்பு:

1984 ம் ஆண்டு இங்கு வெளிநாடு என்று வந்த நான் 2004 ம் ஆண்டு மீண்டும் நாடு செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு போன போது எனது நண்பன் ஒருவனின் உதவியோடு அந்த ரீச்சர் பற்றி தெரிந்திருந்த சில தகவல்களுடன் தேடிச் சென்ற போது, அவா கணவன் இறந்த பின்னர் ஒரு மன நோயாளியாய் அனாதையாய் திரிந்து இறந்து போனார் என்றும் செய்தி அறிந்து திரும்பி வந்தேன்.