Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் இலங்கை ஆட்சியாளர்களின் வங்குரோத்து நிலையின் வெளிப்பாடாகும் - முன்னிலை சோஷலிஸ கட்சி

 

ஏப்ரல் 13ம் திகதி உதயன் பத்திரிகை அச்சகத்திற்கு ஒரு குழு தீயிட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகம் தாக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்பே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலை அருவெறுப்போடு வன்மையாக கண்டிக்கும் நாங்கள் பெருமளவில இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நடக்கும் இவ்வாறான தாக்குதல்களின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றோம்.

இன்றைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நவ தாராளமய முதலாளித்துவத்தின் இரண்டாம் கட்டத்தை இலங்கையில் செயற்படுத்துவதற்கு தயாராகி வருகிறது. இலங்கையைப் போன்ற பின்தங்கிய - பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடொன்றில் அதற்கான ஜனநாயக வழிமுறைகள் கிடையாது. கனவுலக அரசியலையும் குரோதத்தின் அரசியலையும் பயங்கரத்தின் அரசியலையும் மக்கள் மீது சுமத்தி விட்டே அரசாங்கம் தனது இலக்கை நோக்கி பயணிக்கிறது. ஒரு புறம் ஆசியாவின் அற்புதத்தைப் பற்றியும் பாரிய அபிவிருத்தியைப் பற்றிய கனவையும் உருவாக்குவதற்காக மக்கள் பணம் கோடிக்கணக்கில் விரயமாக்கப்படுகிறது. சாதாரண ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. சரிந்து விழும் பொருளாதாரத்தின் விளைவாக மக்கள் வாழ்க்கை சரிவடையும்போதும் அதற்கெதிராக மக்களின் எதிர்ப்பு தலை தூக்கும்போதும் அந்தக் கனவு களைந்து விடுவதை அறிந்த அரசாங்கம் இப்போது குரோதத்தையும் பயங்கரத்தையும் பரப்பி வருகிறது. 

 

யுத்த காலத்தில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் இருந்த இடைவெளியை அப்படியே வைத்துக் கொண்டு செயற்படுவதோடு அரசாங்கத்தின் அனுக்கிரகத்தைப் பெற்ற குழுக்களை ஈடுபடுத்தி முஸ்லிம் எதிர்ப்பை நிர்மாணித்திருக்கிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பிரிப்பதே இன்றைய நிலையில் அரசாங்கம் தப்பிப்பதற்கான வழியாக இருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்தின் போலி அற்புதம் குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சக்திகளுக்கு எதிராக பாரிய அடக்குமுறையொன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உதயன் பத்திரிகை தாக்கப்படுவது ஒருபுறம் இனவாதத்தை தூண்டுவதற்கும் மறுபுறம் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை அச்சுறுத்துவதற்கும்தான்.  யுத்தத்திற்குப் பின்னர் கடந்த சில வருடங்களாக ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ந்து தாக்கப்படுவதோடு உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் அதன் ஒரு பகுதிதான்.

 

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக தமிழ் சிங்கள மக்கள் தயாராகி வரும் நிலையிலேயே உதயன் பத்திரிகை அச்சகம் மீதான தாக்குதல் நடந்திருக்கிறது. மக்கள் மத்தியில் புத்தாண்டுக் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கிவிட்டு அரசாங்கமும் ஒரு கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. மக்கள் மீது அதிகமதிகமாக வரியை சுமத்துவதும் அதனை மூடி மறைப்பதற்காக போலி எதிரிகளை உருவாக்குவதும் அரசாங்கத்தின் கொண்டாட்டமாக இருக்கிறது. புத்தாண்டு கொண்டடாட்டங்களின் இறுதியில் மின் கட்டணமும், பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படவிருக்கிறது. அதோடு மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படக் கூடும். இவை அனைத்தையும் உள்ளடக்கியே உதயன் பத்திரிகை மீதான தாக்குதலை நோக்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பந்தமாக புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் ஒன்றுமே புரியாமல் இருக்கும் மக்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துவது இந்த அடக்குமுறை நடவடிக்கைகளின் பின்னர் மிக விரைவாக மக்கள் மீது சுமையேற்றும் அரசாங்கத்தின் கொள்கை வழமைபோல் செயற்படுத்தப்படும் என்பதையும் அதேபோன்று அவற்றை மறக்கடிப்பதற்காக இனவாதத்தையும்இ மதவாதத்தையும் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையுமேயாகும்.

 

அரசாங்கத்தின் இந்த தாக்குதல்களின் நோக்கம் தமிழ் சமூகத்தை இனவாதத்தின் பக்கம் தள்ளிவிடுவதும் அதனை பயன்படுத்தி சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் இனவாதத்தை விதைப்பதும் பாரிய பயங்கர நிலைமையொன்றை உருவாக்கி தமது கருத்துக்கு மாற்றமான கருத்து சமூகமயமாவதை தடுப்பதுவுமே என்பது தெளிவு. தாக்கியவர்கள் யார் என்பது தெரியும் சந்தர்ப்பத்தில் தாக்குதல் நவ தாராளமய முதலாளித்துவத்தின் வெளிப்பாடு என்று ஆகும்போது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமே  அதற்கு எதிராக போராட வேண்டும். நாட்டு மக்களுக்கிடையிலான அனைத்து இனவாதங்களுக்கும் எதிரான செயற்பாடும் வடக்கில் நிலவும்; மிலிடரி ஆட்சிக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதும் அவ்வாறான போராட்ட மாதிரியை கட்டியெழுப்புவதன் மூலமே சாத்தியப்படும். எனவே அதற்காக ஒன்று சேருமாறும் போராடுமாறும் இலங்கை மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.