Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரத்தினம் மீதான அடக்குமுறை நிலை

தோழர் குமார் குணரத்தினத்தின் இலங்கை வருகையும் அவர் இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் குறித்து நாட்டில் கருத்தாடலொன்று நடந்து வரும் இச்சந்தர்ப்பத்தில், அதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக உங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்கு முரணான நிலைமையே நாட்டில் நிலவியது. முந்தைய அரசாங்கத்தில் மாற்று அரசியல் கருத்துடையவர்கள் அடக்குமுறைக்கு பலியாகினார்கள். அதற்காக அரசாங்கத்தின் சட்ட ரீதியான இராணுவமும், சட்டரீதியற்ற ஆயுதக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டன. அநேகமானோர் கடத்தப்பட்டுவதற்கும் காணாமலாவதற்கும் உட்பட்டதுடன், அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தும் நிலையும் காணப்பட்டது.

இந்த அடக்குமுறை அடித்தட்ட மக்களிலிருந்து ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகரீதியிலான கருத்துக்களை வழங்குபவர்கள் வரை பரவலாக செயற்பட்டது. இதனால், பல அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இலங்கையிலிருந்த சிலர் காணாமலாக்கப்பட்டதுடன் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். லலித் - குகன் போன்ற அரசியல் செயற்பாட்டாளர்களும், லசந்த, எக்னலிகொட போன்ற ஊடகவியலாளர்களும் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இப்படியாக பெரும்பாலானோரால் தமது உயிர் பாதுகாப்பை உறுதி செய்து அரசியலில் ஈடுபட முடியாத நிலைமை, ஜனநாயகத்திற்கு முரணான நிலைமை நாட்டில் உக்கிரமடைந்தமையால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு முறைகளை கையாள வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த ஜனநாயக விரோத நிலைமைகளின் காரணமாகவே தோழர் குமார் குணரத்தினமும் வெளிநாடு செல்ல நேரிட்டது. அவரது உயிர் பாதுகாப்பு சம்பந்தமாக ஆபத்தான நிலை இருந்ததுடன் 2012 ல் அவர் கடத்தப்பட்டமையும் அவரை படுகொலை செய்ய முயன்றமையும் காரணமாக அவருக்கு உயிராபத்து இருந்தமை உறுதியாகியது.

ஆனால், வெளிநாட்டில் இருந்து கொண்டு மாத்திரம் அரசியல் ஈடுபடும் எண்ணத்தோடு அவர் இருக்கவில்லை. இலங்கைக்கு மீண்டும் வந்து அரசியலில் ஈடுபடும் நோக்கத்திலேயே அவர் இருந்தார். முந்தைய ஜனநாயக விரோத நிலைமைகளின் முன்னால் ஆளும் குழுக்கள் தமது அரசியல் இருப்பு சம்பந்தமாக நெருக்கடியில் விழும்போது அதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியுமென்பதை கட்சி என்ற வகையில் நாம் அறிந்து வைத்திருந்தோம். அரசியலில் அவ்வாறு நெருக்கடியில் விழும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துவது சம்பந்தமாக வரலாற்று உதாரணங்கள் எம்மிடம் உள்ளன. வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் அவ்வாறான சந்தர்ப்பங்களை அரசியலில ஈடுபடும் உரிமையை இயக்கத்திற்கு பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக பயன்படுத்தியுள்ளோம்.

1971 அடக்குமுறையின் பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பெற்றுக்கொள்ள, ஐக்கிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி மாறும் சந்தர்ப்பத்தை மக்கள் விடுதலை முன்னணி பயன்படுத்தியது. 1989 அடக்குமுறையின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பெற்றுக் கொண்டது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து மக்கள் ஐக்கிய முன்னணியிடம் ஆட்சி மாற்றப்படும் சந்தர்ப்பத்திலேயேயாகும். இம்முறை ராஜபக்ஷ ஆட்சி அரசியல் ரீதியில் பலவீனமடைந்து அதிகாரம் சம்பந்தமாக சவாலுக்குட்பட்டிருந்த சந்தர்ப்பத்தை நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் உரிமையை தோழர் குமார் குணரத்தினத்திற்கு பெற்றுக் கொள்ள தீர்மானித்தோம். அதற்கேற்ப 2015 ஜனவரி 01ம் திகதி அவர் மீண்டும் இலங்கை வருவதற்கான வாசல் திறக்கப்பட்டது.

ஆனால், புதிய அரசாங்கம் பல்வேறு சட்டங்களை போட்டு அவர் இலங்கையில் தங்கி இருப்பதையும், இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதையும் தடுப்பதற்கு தயாராவது தெரிகிறது. ஒருபுறம் முந்தைய ஜனநாயக விரோத நிலைமைகளினால் இலங்கையிலிருந்து வெளியேற நேரிட்ட அனைவரையும் மீண்டும் நாடு திரும்புமாறு ஊடகங்கள் வாயிலாக பகிரங்க அழைப்பு விடும் அரசாங்கம், மறுபுறம் அவ்வாறு வருபவர்களை ஏதோவொரு சட்டத்தை பயன்படுத்தி அடக்குவதற்கும் நாட்டிலிருந்து வெளியேற்றவும் முயற்சிக்கிறது.

பல்வேறு கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நிதி மோசடிகள் சம்பந்தமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக் எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், தோழர் குமார் குணரத்தினம் தொடர்பில் குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருப்பது பாதுகாப்புச் செயலாளர்தான் என்பதிலிருந்து இந்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்பு தெரிகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஜனநாயகம் சம்பந்தமான வாக்குறுதிகளை வழங்கினாலும், குறுகிய காலத்திற்குள்ளேயே அவை மீறப்படுகின்றன. ஜனநாயகம் என்பது தான் விரும்பும் அரசியல் கருத்தை கொண்டிருப்பவர்களை அரசியலில ஈடுபட அனுமதிப்பது மாத்திரமல்ல, உடன்பட முடியாத கருத்துடையவர்களினதும் அந்த உரிமையை ஏற்றுக் கொள்வதுதான். முந்தைய ராஜபக்ஷ ஆட்சியும் இதைத் தான் செய்தது. தமக்கு எதிரான அரசியல் கருத்துடைய நபர்களினதும், அமைப்புகளினதும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை பறிக்கப்பட்டது. அந்த நிலைமையை மாற்றியமைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அப்படியான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுவதை குமார் குணரத்தினத்தின் சம்பவம் வெளிக்காட்டுகிறது.

இது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படடும் கடுமையான தாக்குதலாகும். இந்த நிலைமையை தோற்கடித்து இலங்கையில் வாழவும், இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் விரும்பும் சகலருக்கும் அதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும். அது தோழர் குமார் குணரத்தினத்தின் பிரச்சினை மட்டுமல்ல, முந்தைய ஜனநாயக விரோத சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்ட அனைவரினதும் உரிமை சம்பந்தமான பிரச்சினையாகும். எனவே, அதற்காக உங்களது பங்களிப்பையும், இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க உங்களது தலையீட்டையும் எதிர்பார்க்கின்றோம்.

முன்னிலை சோஷலிஸக் கட்சி
2015.01.30