Wed04172024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏமாற்றல் வெற்றி, மக்கள் படுகுழியில்!

ஜனவரி 08ம் திகதிக்குப் பின்னர் புதிய ஜனாதிபதியொருவரும், பிரதமரொருவரும் நியமிக்கப்பட்டு அரசாங்கமும் அமைந்தாயிற்று. இப்போது மைத்திரி, ரணில் மற்றும் சம்பிக போன்றவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சந்திரிகாவும் சேர்ந்து குசினி கபினட்டில் அங்கம் வகிக்கும் கூட்டரசாங்கம் நடக்கிறது. இப்போது 100 நாட்கள் முடிந்துவிட்டன. மக்களின் வயிற்றெரிச்சல் எப்படிப் போனாலும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தவர்களின் ஆர்ப்பரிப்பானது ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் உருவாக்குவது.

மற்றும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதுதான். இவர்களுக்கு வாக்களித்து மக்கள் ஒருபுறம் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தார்கள். சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமென்றார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறி விட்டதா? இல்லை. ஆனால், 19வது அரசியலமைப்பு திருத்தத்தினால் நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்துவிட்டதாக அரசாங்கம் தம்பட்டமடிக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால தனது அதிகாரத்தை கைவிட்ட வள்ளலாகி விட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எனப்படும் பிசாசின் பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையா? இல்லை. 19வது அரசியலமைப்புத் திருத்தம் ஒருவகையில் அதிகாரப் போட்டிதான். அரசியலமைப்பு திருத்தத்தினால் நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்தும் பாதுகாக்க, சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால போன்றவர்கள், ஹெல உருமையவின் சம்பிகாக்கள் ஊடாக பெரிதாக சத்தமிடப்பட்டது. இந்தத் திருத்தத்தின் ஊடாக பிரதமர் தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள முயன்றார். மலையை குடைந்ததில மண்ணாங்கட்டிதான் மிச்சம். கடைசியில் என்ன நடந்தது?

2010 ஏப்ரல் 18ம் திகதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீள அமைக்கப்பட்டதும், சாகும் வரை ஜனாதிபதியாக இருப்பதற்காக திருத்தப்பட்ட உறுப்புரையும் மேலும் சில சிறு விடயங்களும் மாத்திரம் நீக்கப்பட்டனவேயன்றி எந்த பெரிய மாற்றமும் இல்லை. இறுதியில், பொது மக்கள் மீது சுமத்தும் “அவர்களின் அதிகாரத்தை” அதிகரித்துக் கொண்டது தான் மிச்சம்.

பிசாசுகளை உருவாக்கும் போது, நிறைவேற்று அதிகார முறைமையையும் அப்படியே வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் அதிகாரத்தை 20வது திருத்தத்தினூடு மேலும் அதிகரித்துக் கொள்கிறார்கள். பிசாசின் 32 பற்களில் பழைய கடைவாய் பல்லை பிடுங்கிவிட்டு மேலும் சில பற்களை கூர்மையாக்கி விஷமூட்டியிருக்கிறார்கள். இதுதான் “அவர்களது ஜனநாயகத்தின்” தன்மை.

சரியான ஜனநாயகம் நாட்டு மக்களுக்கே கிடைக்க வேண்டும். கைது செய்பவர்களை விசாரணைக்காக 24 மணித்தியாலத்திற்கு பதிலாக 48 மணித்தியாலம் தடுத்து வைத்திருக்கும் சட்டம் இவர்களின் நல்லாட்சியில் மாறியுள்ளதா?

பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டதா?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டதா?

யுத்த காலத்தில் வடபுல மக்களிடமிருந்து அபகரித்த நிலங்கள் அனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்பட்டனவா?

யுத்தம் காரணமாக நடாத்திச் சென்ற இராணுவ முகாம்கள் வடக்கு, கிழக்கிலிருந்து அகற்றப்பட்டனவா?

கடந்த காலங்களில் நடந்த கடத்தல்கள் காணமலாக்கல்களுக்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைத்ததா?

உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், பிக்குகள் மீதான அடக்குமுறை நின்றுவிட்டதா?

இல்லை. நிலாமாடத்தில் இருப்பவர்கள் தமது அதிகாரத்தை அங்குமிங்குமாக கொஞ்சம் பகிர்ந்து கொண்டு கீழ் மாடியில் உள்ள எமது தோளில் மேலும் சுமையை கூட்டினார்களேயன்றி குறைக்கவில்லை. பின்புற கதவால் அரசாங்கத்திற்குள் நுழைந்துள்ள ஜேவிபி சொல்கிறது சூழ்ச்சி தோற்றுவிட்டது என்று.

நாம் சொல்வது இதுதான்; ஏமாற்றல் வெற்றி, மக்கள் படுகுழியில் என்று.

இப்போது, ஊழல் மோசடிகளை உண்மையாகவே நிறுத்துவதற்கும், ஒவ்வொரு கட்சியும் பிரபலமடைய மேற்கொள்ளும் ஊடக கண்காட்சிகளுக்குமிடையில் வித்தியாசம் உண்டு. நல்லாட்சி உண்மையானால் ஊழல் மோசடி, முறைகேடுகள் குறைந்திருக்க வேண்டும். பாரிய ஊழல் மோசடிகளை நிறுத்தினால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால், அப்படி நடந்துள்ளதா? உண்மையிலேயே இல்லை. ஆனால், திருடர்களை பிடிப்பது பற்றிய ஊடக கண்காட்சிகள் மட்டுமே நடக்கின்றன.

இதைத்தான் கடந்த ஜனவரி 08ம் திகதி நாங்கள் சொன்னோம் முகமாற்றத்தை நிறுத்திவிட்டு திரும்புவோம் இடதுசாரியத்தின் பக்கம் என்று. மக்கள் உண்மையான வெற்றியை பெறுவதற்காகவே இடதுசாரியத்தின் பக்கம் திரும்ப வேண்டும். இடதுசாரியத்தை பலப்படுத்துவது என்பது வேறொன்றுமல்ல, நீடித்த உண்மையான வெற்றியை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுதான். பிசாசுகளை உருவாக்கும், திருட்டை சட்டபூர்வமாக்கும், ஆயுள் முழுக்க பட்டினியில் வைக்கும், விரக்தியை வளர்க்கும் ஒட்டுமொத்த முறைமையையும் மாற்றியமைக்க திரும்புவோம் இடதுசாரியத்தின் பக்கம் என்று முன்னிலை சோஷலிஸக் கட்சியினராகிய நாங்கள் கூறுகிறோம்.

முன்னிலை சோஷலிஸக் கட்சி