Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவுகள், முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றதா?

இலங்கையின் தேசிய-இன-மத முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றோம் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலங்கள், இன-மத அரச ஒடுக்குமுறைகளை சட்ட வடிவமாக்குகின்றது. அதேநேரம் இலங்கை மக்கள் சட்டரீதியாக  நாட்டின் மீது கொண்டிருந்த இறைமையை இல்லாதாக்கி, அதை மூலதனத்திற்கு தாரை வார்க்கின்றது. இதைத்தான் இந்தப் புதிய சட்ட மூலம் பொதுவாக கொண்டிருக்கின்றது. 

புதிய சட்ட மூலம் தொடர்பாக தமிழ் மொழி பேசும் தமிழ் - முஸ்லீம் தரப்புகள், தம்மின மக்களை அடக்கியொடுக்கும் தங்கள் அரசியல் அதிகாரம் என்ன என்ற குறுகிய அர்த்தத்தில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதப் பொருளாக்குகின்றனர். அதேநேரம் சிங்கள தரப்புகள் தமிழ் மொழி பேசும் மக்களை அடக்கியொடுக்கும் உரிமை தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற அடிப்படையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதத்துக்குள்ளாக்குகின்றனர். இந்த இரு எல்லைக்குள் நின்று சட்ட மூலம் குறித்து நடக்கின்ற விவாதங்கள், தேர்தல் வருவதால் இனவாதமாக கூர்மையடைகின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை, பதிய சட்ட மூலத்தைக் கொண்டு ஒடுக்குவது எப்படி என்பதே இன்று அரசியலாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இந்த அரசியல் அமைப்பு சட்ட மூலத்தை குறிப்பாகவும், சுருக்கமாகவும் பார்ப்போம்.

 

நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் புதிய சட்ட மூலம் 

இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறி, நாட்டின் மீதான மக்கள் இறைமையை மறுப்பது தான் இந்தச் சட்டமூலத்தின் நோக்கமும், உள்ளடக்கமுமாகும். புதிய அரசியல் அமைப்பு முன்மொழிந்துள்ள உறுப்புரிமை மூன்று, இலங்கையின் இறைமை குறித்துப் பேசுகின்றது. அது கூறுகின்றது "இலங்கையின் இறைமை மக்களுக்குரியதல்ல" என்கின்றது. அதாவது இலங்கையின் இறைமை இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது. அப்படியாயின் நாட்டின் இறைமை யாருக்கு உரியாது!?

மக்களின் இறைமையிலான "ஆட்சித் தத்துவங்களும், அடிப்படை உரிமைகளும், வாக்குரிமைகளும்;" இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது புதிய சட்ட மூலம். அதாவது இவை எதுவும் மக்களைச் சார்ந்து இருக்காது. மனிதனின் அடிப்படை உரிமைகள் முதல் வாக்கு மூலம் தெரிவும் ஆட்சிக் கோட்பாடுகளும் ஆட்சிமுறையும் மக்களைச் சார்ந்து இருக்காது. அப்படியானால் இது யாருக்;கானது!?

நாட்டின் மீதான இறைமை நவதாராளவாத முதலாளித்துவ நலன்களுக்கு உட்பட்டதாக இருக்குமென புதிய சட்டமூலம் தெளிவாக முன்வைக்கின்றது. மக்களின் இறைமையை மறுப்பதை  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக  இனவாதிகள் முரண் இன்றி ஏற்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கை மக்களின் இறைமையை மறுத்து, ஆளும் வர்க்கத்தின் இறைமையாக்கும் புதிய சட்டமூலத்தை முன்னிறுத்தவே, இனவாதம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதான் இந்த சட்டமூலத்தின் பின்னுள்ள சூக்குமம்.

நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் உறுப்புரிமை மூன்று, அது யாருக்கானது என்பதை உறுப்புரிமை நாலு மூலம் விளக்குகின்றது. அதாவது "சட்டமாக்கல், ஆட்சித்துறை, நீதி .." அனைத்தும், உறுப்புரிமை மூன்று குறிப்பிடும் அடிப்படையில் இறைமையற்ற மக்களுக்கானதல்ல என்கின்றது. உறுப்புரிமை ஐந்து நாட்டின் இறைமை என்பது "சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு இருக்குமாறு" வரையறுக்கின்றது. இந்த வகையில் "மனித வளங்கள், புவியல் வளங்கள், பயன்பாடுகள்" அனைத்தும் சர்வதேச நவதாரளவாத இறைமைக்கு உட்பட்டதாக புதிய சட்ட மூரம் வரையறுக்கின்றது. இதை ஓட்டுமொத்த நாடும், மாகனசபையும் மீற முடியாது என்கிறது. இதையெல்லாம் மக்கள் கண்டு கொள்ளாது திசை திருப்பவே "பிரிவினைவாதம்" என்ற பூச்சாண்டியை இந்த சட்ட மூலம் முன்னிறுத்தி நவதாரளவாத சட்ட மூலத்தை  சட்டமாக்க முனைகின்றது.

 

"மனித வளங்கள், புவி வளங்கள், பயன்பாடுகள்" என்பது மனித உழைப்பு, இயற்கை அடிப்படைகள், அதன் பயன்பாடுகள் இலங்கை மக்கள் சார்ந்து இருக்காது. அது "சர்வதேச சட்டத்தின் அங்கீகரிக்கப்பட்டவாறு இருக்குமாறு" அதாவது உலகமயமாதல் மூலதனத்தின் சுரண்டல் நலனுக்கு ஏற்றவாறு இருக்கும் என்கின்றது.

மக்களையும், நாட்டின் வளத்தையும்; சுரண்டிக் குவிக்கும் சுரண்டும் வர்க்கத்தின் இறைமையே, இ;னி நாட்டின் கொள்கை மற்றும் நடைமுறை என்று புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலம் முன்வைக்கின்றது.

 

தேசிய, இன, மத முரண்பாட்டை இந்த சட்டமூலம் தீர்வு காண்கின்றதா!?

தேசிய, இன, மத முரண்பாட்டுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும், முன்னிலைச் சோசலிசக் கட்சியும் கொண்டிருக்கும் தீர்வு என்பது, தேசங்களுக்கு தன்னாட்சியும், தேசிய இனங்களுக்கு சுயாட்சியும், மதங்களுக்கு தனி மனித உரிமைக்கு உட்டபட்டதே மதம் என்ற அடிப்படை வரையறைகளையும் கொண்ட தீர்வுகளைக் கொண்டிருக்கின்றது. இதுவல்லாத எந்தத் தீர்வுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை, இதை எதிர்த்து அரசியல்ரீதியாக, தீர்வுக்காக  போராடுகின்றது.

இந்த வகையில் தேசிய, இன, மத முரண்பாடுகள் சார்ந்த பிரச்சனைக்கு, புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கும் தீர்வுகள் தீர்வுகளேயல்ல என்ற வகையில், புதிய அரசியல் அமைப்பைச் சட்டத்தை எதிர்க்கின்றது.

இன்று முகமாற்ற "நல்லாட்சி" அரசு முன்வைக்கும் தீர்வு என்பது, 13வது திருத்தச் சட்டம் மூலம் உருவான மாகாணசபையை, எப்படி ஒற்றை ஆட்சிமுறைமைக்கு உட்படுத்துவது என்பதே. ஒற்றை ஆட்சிமுறைமைக்கு முரணாக மாகாணசபை கொண்டிருக்கக் கூடிய சுதந்திரத்தைப் பறிப்பதே, அரசு முன்வைக்கும் தீர்வு பொதியாகும். இதைத்தான் "நல்லாட்சி" அரச இனவொடுக்குமுறைக்கு தீர்வாக முன்வைக்கின்றது. 

இலங்கையில் தேசங்கள், தேசிய இனங்கள் இருக்கின்ற வரலாற்றுப்; பின்னணியில், அவர்கள் மேலான ஒடுக்குமுறைகளே முரண்பாடுகளாக மாறின. இந்த முரண்பாட்டுக்கு தேசங்கள், தேசிய இனங்கள் அடிப்படையிலும், முரணற்ற ஜனநாயக அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இதுவல்லாத மாகாணசபைத் தீர்வு என்பது மோசடி.  

மாகாணசபை என்பது பிரதேசரீதியான ஆட்சி வடிவங்களே ஒழிய, அது முரண்பாட்டுக்கான தீர்வேயல்ல. பிரதேசரீதியான ஆட்சி வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட மாகாண சபைகளில் இரண்டு, அதாவது வடக்கு - கிழக்கு தமிழ் மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாக இருக்கின்றது. இதனால் இதைத் தேசங்கள், தேசிய இனங்களுக்கான தீர்வென்பதும், அது கொண்டிருக்கும் அதிகாரம் பிரிவினைக்கான அடிப்படை என்று கூறுவது, ஒடுக்கும் இனவாதிகள் முன்வைக்கும் கண்கட்டு வித்தையாகும்.

இப்படிப்பட்ட இந்த இனவாதிகள் தங்கள் ஒடுக்கும் இனவாதத்தை மூடிமறைத்துக் கொள்ள, சிங்களத்தில் "ஒற்றை ஆட்சி" என்றும், தமிழில் "ஒருமித்த நாடு" என்கின்ற மோசடியை அரங்கேற்றுகின்றனர். இப்படி அரசியல் அமைப்புரீதியான இனவாத ஒடுக்குமுறைக்கு, முகமூடி போட்டு மக்களை இன ரீதியாக பிரித்து திசைதிருப்ப முனைகின்றனர்.

அரசின் இனவொடுக்குமுறையே தேசங்கள், தேசிய இனங்களின் முரண்பாட்டுக்கான அடிப்படையாகும். அரசின் அரசியல் அமைப்பு வடிவிலான இனவொடுக்குமுறையை இனம் கண்டு அதைக் களையாத வரை, தீர்வுகள் என்பது போலியானது, புரட்டுத்தனமானது. புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலம் பௌத்த மதத்தை இலங்கையில் முதன்மையான மதமாக முன்னிறுத்துவதும், பௌத்தத்தை அரசின் ஒரு உறுப்பாக அரசியல் அமைப்புச் சட்ட மூலம் முன்வைப்பதன் பொருள், பௌத்த – சிங்கள இனவாத ஒடுக்குமுறையே, நாட்டின் ஆட்சிக் கொள்கையாகவும் - நடைமுறையாகவும் இருக்கும் என்பது தான். பௌத்த - சிங்கள ஆட்சி அமைப்பு மூலம், மக்களின் அடிப்படை இறைமையை பறித்து, நவதாராளவாத சக்திகளின் இறைமையாக மாற்றி விடுகின்றது என்பதே இதன் பின்னுள்ள சூக்குமமாகும். 

 

 

 

 

 

தொகுப்பாக

புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலமானது மதச் சார்பற்ற, இன சார்பற்ற, இலங்கை மக்கள் சார்பானதாக முன்வைக்கப்படவில்லை. நவதாராளவாத உலகமயமாதலுக்கு எதிராக, இலங்கை மக்களின் இறைமையை முன்வைக்கவில்லை. மாறாக இலங்கை மக்களை இன - மத ரீதியாக பிளந்து, நாட்டின் மீது இலங்கை மக்கள் கொண்டிருந்த இறைமையைப் பறித்து விடுகின்றது, புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலம்.