Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாருக்கு வாக்களிப்பது!?

மக்களின் அன்றாட சமூகப் - பொருளாதார வாழ்வுடன் ஓன்றுபட்டு ஒன்றி வாழ்வதும் - போராடுவதுமே அரசியல். இந்த வகையில் சமூக செயற்பாட்டாளனாக மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து ஒன்றி வாழாத ஓருவன், தேர்தல் மூலம் வெற்றி பெற்று மக்களுக்கு பணியாற்றப் போவதாகக் கூறுவதே மோசடியாகும். இதுதான் இன்று தேர்தல் அரசியலாக இருக்கின்றது. இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது தேர்தலாகவும், அதில் வெற்றி பெறுவதே சமூக சேவையாகவும் இட்டுக் காட்டுகின்றனர். இந்த அரசியல்  பின்னணியிலேயே, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதையே ஜனநாயகமாகவும் காட்டுகின்றனர்.

இன்று உள்ளுராட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கி இருக்கின்றவர்களில் 99.9 சதவீதமானவர்கள், மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த சமூக நடைமுறைகளில் ஈடுபடாதவர்கள். தேர்தல் மூலம் கிடைக்கும் அரசு அதிகாரங்கள் மூலம் மக்களை மொட்டை அடிக்கவும், தங்கள் சொந்த வாழ்க்கையை செழுமைப்படுத்தவுமே களமிறங்கி இருக்கின்றனர். தேர்தல் மூலம் வெல்வது என்பது, இலகுவாக பணத்தை சுருட்டிக் கொள்வதற்கான இடமாக மாறி இருக்கின்றது.

 

தேர்தலில் வெல்வதற்காக மக்களை ஏமாற்றி வாக்குப்பெறுவது என்பதே கட்சிகளின் கொள்கையாகவும் – நடைமுறையாகவும் இருக்கின்றது. மக்களைப் பிரித்து மோதவிட்டு வாக்குகளளைப் பெறுவதே, அரசியலாகி இருக்கின்றது. இனம், மதம், சாதி, பால், பிரதேசம், நிறம் .. என்று மக்களை பிரித்து ஒடுக்குவதன் மூலம், மக்களை மோத வைப்பதையே மக்கள் நலன் சார்ந்த கொள்கையாகக் காட்டுகின்றனர். இந்தப் பிரிவினைவாத ஓடுக்குமுறை அடிப்படையிலேயே வேட்பாளர்களை தெரிவு செய்வதும், வாக்குகளைப் பெறுவதுமே அரசியலாகி இருக்கின்றது. இதற்கு பின் இருப்பது, தனிப்பட்ட சுயநலம் தான்.

மக்கள் நலன் சார்ந்த சமூகப் – பொருளாதார கொள்கைகளுக்கு இன்றைய தேர்தல் அரசியல் இடமில்லை. இது தான் இன்றைய தேர்தல் ஜனநாயகத்தில் அடிப்படை உண்மை. அதாவது இன்றைய சமூகப் – பொருளாதார ரீதியான உலகளாவிய நவதாராளவாத முறைமையை, தேர்தல் அரசியல் மூலம் மாற்ற முடியாது. யார் எதைச் சொல்லி வென்றாலும் - ஆட்சிக்கு வந்தாலும், ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்ய முடியாது. தேர்தல் கட்சிகளின் இன்றைய நிலை இது தான்.

இதில் இருந்து மாறுபட்டதே தேர்தல் கட்சிகள் அல்லாத புரட்சிகரக் கட்சிகள். புரட்சிகரக் கட்சிகளை வேறுபடுத்துவதே, நவதாராளவாத சமூகப் - பொருளாதார கொள்கை குறித்து அதன் நிலைப்பாடுகள்தான். புரட்சிகர கட்சிகள் நவதாராளவாத சமூகப் – பொருளாதார அடிப்படைகளை, மக்கள் சக்திகள் மூலம் மாற்றுகின்ற கொள்கையை முன்வைக்கின்றனர். இந்த வகையில் மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களுடன் இணைந்து பயணிப்பவர்களாக இருக்கின்றனர். தேர்தல் என்பது அவர்களைப் பொறுத்த வரையில், நவதாராளவாதத்துக்கு எதிரான தங்கள் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கான ஓரு அரசியல் வெளி. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவர், மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர். தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இருக்கும் சிறப்புச் சலுகை, மற்றும் பொருளாதார வளங்களை, ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு பயன்படுத்துபவராக இருப்பவர்கள். இது தான் புரட்சிகர கட்சிகளை வேறுபடுத்துகின்றது.

இங்கு தேர்தல் கட்சி என்பது நவதாராளவாதத்தை முன்னெடுப்பதாகவும், புரட்சிகரக் கட்சி என்பது நவதாராளவாதத்தை எதிர்த்து போராடுவதாகவும் இருக்கின்றது. இந்த அடிப்படை வேறுபாடு தான், மக்கள் மத்தியில் உண்மையாகவும் - நேர்மையாகவும் செயற்படுவது யார் என்பது குறித்து, வெளிப்படையான எதார்த்தத்தை நடைமுறையில் இருந்து வேறுபடுத்திக் காட்ட முடியும்.

ஏகாதிபத்திய உலகமயமாதலை முன்னெடுக்கும் இன்றைய நவதாராளவாத அரசுகளும் இதன் கொள்கைகள் - வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகள் மூலம் மேலிருந்து திணிக்கப்பட்டு வந்தது. இந்த முரண்பாட்டையும் - இடைவெளியையும் கடக்க, நவதாராளவாத உள்ளுராட்சி அதிகாரத்துக்காக அடிமட்டங்களில் இருந்து போட்டியிட வைக்கின்றது. இதன்  மூலம் கிராமங்களிலும் - நகரங்களிலும் நவதாராளவாத கொள்கைகளை கொண்டு செல்லும் உள்ளுர் பிரதிநிதிகளை இந்த தேர்தல் மூலம் உருவாக்கி இருக்கின்றது. கிராமங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட நவதாராளவாத பிரதிநிதிகளை மோதவிடுவதன் மூலம், மக்களை நவதாராளவாத கொள்கை அடிப்படையில் பிரித்து வாக்களிக்க வைக்கின்றது.

ஏகாதிபத்திய தன்னார்வ அமைப்புகள் மக்கள் மத்தியில் சமூக உதவித் திட்டங்களை முன்னெடுத்ததன் மூலம், மக்களின் சுயங்களையும் அழிக்கின்ற அதே அரசியல் பின்னணியிலேயே, நவதாராளவாத பிரதிநிதிகளை உருவாக்கும் வண்ணம் உள்ளுராட்சி தேர்தலை முன்நகர்த்தி இருக்கின்றது.

மக்களைச் சார்ந்த மக்கள் திரள் புரட்சிகர அரசியல் மற்றும் சுய சமூக செயற்பாடுகளை முற்றாக அழிக்கின்ற வண்ணம், நவதாராளவாத தேர்தல் கொள்கைகள் மூலம் கிராமங்களையும் - நகரங்களையும் தேர்தல் மூலம் சூறையாடி வருகின்றது. மக்களை சூறையாடும் நவதாராளவாத கொள்கைக்கு ஆதரவான ஓருவரைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருகின்றது. இது தான் உள்ளுராட்சி தேர்தல் மூலம், மக்களுக்கு கூறும் உலகளாவிய செய்தியாகும்.

மக்களைச் சூறையாடும் இந்த நவதாராளவாத கொள்கைகளையும் - திட்டங்களையும்  எதிர்க்கின்ற, புரட்சிகர சக்திகளை ஆதரிப்பதும், அப்படி ஓருவர் இல்லையென்றால் வாக்களிக்காது புறக்கணிப்பதே புரட்சிகர அரசியல் செயலாகும். இதே போன்று நவதாராளவாத வேட்பாளருக்கு எதிராக கருத்துகளை முன்வைப்பதே, இன்று புரட்சிகர கருத்தும் - புரட்சிகர அரசியலுமாகும். இதுதான் எம்முன்னுள்ள ஒரேயொரு அரசியல் தேர்வாகும். இல்லாத அனைத்தும், எம்மை நாம் ஏமாற்றுகின்றதும் - பிறரை ஏமாற்றி பிழைக்கும் பித்தலாட்டமுமாகும்.