Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்கள் விடுதலை இயக்கம் வீதிகளில்...

அன்னையரே, புதல்வியரே,

சகோதரிகளே, தோழியரே...

மேலும் ஒரு நாள்

மீளவும் வந்தது மார்ச் 8

என்றும்போல்

சமைப்பது, அழகுபடுத்துவது

ஆடைகளைத் தயார்படுத்துவது

மேலும் பல

பெண்களுக்கு அதுதானே வேலை!

பிள்ளைப் பெறுவாள் பிள்ளை வளர்ப்பாள்

வேறு வேலை இல்லை போலும்

தொலைக்காட்சிகளிலும்

எப்.எம். அலைவரிசைகளிலும்

எப்போதும் கேட்பது ஒரே கதை தான்

 

ஆனால், யாருமே கதைக்காத

மேலும் வேலைகள் பல உண்டு பெண்களுக்கு,

தேயிலைத் தோட்டத்தில் கண்ணீர் சிந்தி

பாலைவனத்தில் வாழ்வை அழித்து

குறைந்த கூலிக்குப் பட்டாடைகளைத் தைத்து

வெளிநாட்டு முதலீட்டாளனை மகிழ்வித்து,

வாழ்க்கையில் எதுவுமே உரிமையில்லா

பெண்கள் எத்தனைபேர், துன்பத்தை மட்டுமே

சுமக்கும்

பொருளாதார செயற்பாட்டின் பங்காளியாக

எந்த மதிப்புமற்ற

எப்போதும் விலைபோகும் சரீரம் அவளது

இலாபம் தேடும் இந்தக் கொடூரச் சமூகம்

பச்சிளம் பாலகி தொட்டு பாட்டி வரை

யாரோ ஒருவனால் பலிக்கடாவாகி

வீசிடுவான் பாதையிலே வாழ்வுதனைப் பாழாக்கி

 

இந்தக் கொடுமையெல்லாம்

எவனோ ஒருவனின் தவறால் தானென எண்ணி

அதனை விதியிடம் சுமத்தி

பார்த்திருப்பதற்கல்ல,

 

பொருளாதாரத்திடமும் பலியாகி

பெண்ணென்றதனால் படும் துன்பமும்...

காலத்தை வெல்ல இருமுனைப் போராட்டம்

போராட்டம்... ஆம் போராட்டம் மட்டுமே

இக்கொடூரச் சமூகத்தை எதிர்த்து

உடனே துவக்க வேண்டும்

போராட்டமதை...

 

உன்னையும், என்னையும்,

நம் எல்லோரையும்

"மனிதப்பிறவி" யாக மதிக்கும் சமூகத்தை

நாம் உருவாக்க

இனி, முன்னிலை வகிக்க வருவீர் துணிந்து

நாம்,

எதிர்காலத்திற்காகப் போராடுவோம்!

- பெண்கள் விடுதலை இயக்கம் FREE WOMEN

இம்முறை சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சம்பிரதாய நினைவூகூரல் விழாக்களுக்குப் பதிலாக, சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நிகழ்ச்சியொன்றை பெண்கள் விடுதலை இயக்கம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. பெண்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள், சமத்துவமின்மை மற்றும் பெண் விடுதலை குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்பு சம்பந்தமாக சமூகக் கருத்தாடலை தொடங்குவதற்காக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்ச்சிகள் நாட்டின் பல பாகங்களிலும் மார்ச் 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை நகரங்கள், கிராமங்கள், வேலைத்தளங்களில் பெண்கள் மத்தியில் வீத நாடகங்கள், கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள், பாடல்கள், நடனம் மூலமாக அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றது பெண்கள் விடுதலை இயக்கம்.