Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

NDMLP யாழ்நகரில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் சுருக்கம்

ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்பு நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுத்தல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும் மதவாதிகளும் இவற்றில் முன் நிற்கின்றன. இவற்றுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டல்களும் உண்டு.

 

இத்தகைய நடவடிக்கைகள் இனப்பிளவுகளுக்கும் இனமோதல்களுக்கும் வழி வகுக்கின்றன. இதன் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கமும் இந்திய அமெரிக்க வல்லரசு சக்திகளுமே இலாபமடைந்து தத்தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்கின்றன. இந் நிலையில் தமிழ் மக்கள் தமது சொந்தத் தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்ளும் புதிய அரசியல் திசை மார்க்கத்தைக் கண்டறிந்து முன்னெடுக்க முன்வரல் வேண்டும். தோல்வியடைந்த கொள்கைகளையோ அல்லது ஆட்சி மாற்றம் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியையோ அன்றி இந்தியா அமெரிக்கா என நம்பி நின்றோ தமிழ் மக்கள் எவற்றையும் பெறப்போவதில்லை. எனவே தெளிவான கொள்கையும் தொலை நோக்குடைய வெகுஜனப் போராட்டங்களும் யதார்த்தபூர்வமான அரசியல் தந்திரோபாயங்களுமே இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகிறது. இதனை எதிர்வரும் மேதினத்தில் எமது கட்சி வற்புறுத்துகிறது.

இவ்வாறு புதிய ஐனநாயக மார்க்சிச லெனிசிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் யாழ் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எடுத்துக்கூறினார்.கட்சியின் வட பிராந்திய பணிமனையில் 22.04.2012 அன்று காலை 10 மணி அளவில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.கட்சியின் அரசியல் உறுப்பினர்களான சோ.தேவராஜா தணிகாசலம் கா.செல்வம் கதிர்காமநாதன் இளைஞர் அணியின் சார்பில் த.பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் இன்றைய நிலையில் இரண்டு முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. ஓன்று, மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகள். இரண்டாவது, தீர்வுக்குக் கொண்டு வரமறுக்கப்படும் தேசிய இனப்பிரச்சினை. முன்னையது நாட்டின் அனைத்து மக்களையும் பொருட்கள் மீதான தொடர்விலை ஏற்றங்களாகவும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பாகவும் சமூக நெருக்கடிகளை வளர்த்துச் செல்வதாகவும் காணப்படுகின்றது. பின்னையது தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்கள் மீதான, குறிப்பாக வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையாக நீடித்துச் செல்கிறது.

இவற்றின் மத்தியில் கூறப்படும் சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் தொழிற் சங்க உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு தனிநபர் சர்வாதிகாரம் கோலோச்சுவதையே காணமுடிகிறது, இவை பற்றி மகிந்தசிந்தனை அரசாங்கம் கவலைப்படுவதாகவோ உரிய தீர்வுகளைக் கொண்டுவர முயற்சிப்பதாகவோ இல்லை. அங்கே குடும்ப சர்வாதிகாரமே மேலோங்கி அதிகாரத்தின் உச்சமாகக் காணப்படுகிறது.

இவற்றுக்கெதிராகக் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் மனித உரிமை அமைப்புக்களும் சில ஊடகங்களும் தத்தமது எல்லைக்குள் நின்றவாறு எதிர்புக்களையும் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வந்த போதிலும் அவை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படவில்லை. இப்பலவீனத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. அவ்வாறே தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வைக் கொண்டு வர விடாப்பிடியாக மறுத்து தனது பேரினவாத நிலைப்பாட்டை முன்னெடுத்தும் வருகின்றது.அதன் மூலம் ஜெனிவாத் தீர்மானத்தை தானே வரவழைத்து தன் தலையில் தன் கைகளாலே மண்ணை போட்டு நிற்கிறது.

மேலும் செந்திவேல் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்குப் பதிலும் வழங்கினார். தேசிய இனப்பிரச்சினையின் தீர்வின்மை பற்றிக் கூறும் போது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை என்பது ஒரு நூற்றாண்டு காலவளர்ச்சி பெற்ற பிரச்சினையாகி இன்று பிரதானமான ஒன்றாகக் காணப்படுகின்றது. பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து நோக்குவோர் இதனைச் சிறு விடயமாகவும் பிரிவினையாகக் காட்டப்படும் ஒன்றாகவுமே காணுகின்றனர்.

அவ்வாறு நோக்கும் ஆளும் சிங்கள தரகு முதலாளித்துவப் பேரினவாத சக்திகளும் ஏனைய பேரினவாத நிறுவனங்களும் அவற்றின் தலைவர்களும் உழைக்கும் சாதாரண சிங்கள மக்களை இன மத மொழி விசக் கருத்துக்களால் திசை திருப்பி வைத்திருக்கின்றனர்.

இதனை எதிர்ப்பதாகக் கூறும் தமிழ்த் தலைமைகள் இன ஒடுக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கு சரியானதும் யதார்த்தபூர்வமானதுமான கொள்கைகளையும் உரிய தந்திரோபாயங்களையும் முன்வைக்காது பேரினவாதத்திற்குப் பதில் குறுந் தமிழ்த் தேசியவாதத்தையே முன்னெடுத்துவந்துள்ளன. அதனை வாக்குகள் பெறும் பாராளுமன்றப் பேரம் பேசும்பொருளாகவும் வீரம் பேசும் அகிம்சை அரசியலாகவும் முன்னெடுத்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியே முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்ட அரசியலாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. யாவும் தோல்வியடைந்து தமிழ் மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து இன்னும் சரியான திசை காண முடியாத அரசியல் வனாந்தரத்தில் விடப்பட்ட மக்களாகவே இருந்து வருகின்றனர்.

அதே வேளை தமிழ்த் தலைமைகள் எவ்விதமான சுயவிமர்சனமோ சுய அரசியல் மதிப்பீடுகளோ இன்றித் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் காலகட்ட வாக்குப்பெட்டி நிரப்பும் அரசியலுக்கு திரும்பிச் செல்ல நிற்கிறார்கள். இதுவரையான அரசியல் அனுபவங்கள் வரலாற்றுப் பட்டறிவுகள் மூலம் சமகாலத்துக்கான தூர நோக்குடைய ஒரு கொள்கையையும் அதற்கான தந்திரோபாயங்களையும் வகுத்து முன்னெடுக்க முடியாது தமது நம்பிக்கை முழுவதையும் இந்தியாவிடமும் அமெரிக்க மேற்குலகத்திடமும் எதிர்பார்த்து நிற்கும் கையறு நிலையிலே காணப்படுகின்றனர். இந்நிலை தமிழ் மக்களுக்கு மேன்மேலும் நெருக்கடிகளையும் வெவ்வேறு நிலைப்பட்ட அழிவுகளையுமே தேடித்தரவல்லதாகக் காணப்படுகிறது.

பரந்த அடிப்படையிலும் தூர நோக்குடனும் யதார்த்தபூர்வமானதுமான குறைந்தபட்ச முற்போக்கான தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை எடுத்து நாட்டின் இடதுசாரி ஜனநாயக முற்போக்குசக்திகளுடன் இணைந்து நிற்கும் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்கு வருவதே தமிழ் தேசிய இனத்தின் மீது நேர்மையான அக்கறை கொண்ட தேசியவாத சக்திகளின் இன்றுள்ள கடமையாகும். இல்லாதுவிடின் பழைய பாதையில் சென்று அழிவுகள் தந்த கொள்கைகளைத் தூக்கி நிற்பதாகவே இருக்கும். இதனை இளந்தலைமுறையினர் அறிவியல் பூர்வமாகவும் அறிவு ரீதியாகவும் சிந்தித்து முன்னெடுக்க முன்வரல் வேண்டும்.

எமது கட்சியின் நிலைப்பாடு சுயநிர்னைய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்குகிழக்கு இணைக்கப்பட்ட சுயாட்சியேயாகும். இவ்வாறான சுயாட்சித் தீர்வில் முஸ்லீம் மக்களும் மலையகத்தமிழ் மக்களும் சுயாட்சி உள் அலகுகள் மூலம் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

மேற்கூறிய பிரச்சினைகளைப் போராட்டங்களாக முன்னெடுக்க வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்தே இம்முறை எமது மே தினக் கூட்டங்களை யாழ்ப்பாணம், அட்டன், கொழும்பு, வவுனியா ஆகிய நான்கு இடங்களில் நடாத்துகின்றோம்.

யாழ் நகரில் பொதுக்கூட்டமும் சுன்னாகத்திலிருந்து சைக்கிள் பேரணியும் நடாத்தவுள்ளோம்.

அட்டன் நகரில் மலையக மக்கள் எதிர்நோக்கும் இன வர்க்க அடிப்படையிலான பிரச்சினைகளை கோரிக்கைகளாக வைத்து ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து புரட்சிகர ஐக்கிய மேதினமாக நடாத்துகின்றோம்.

மே தினம் உலகத் தொழிலாளர்களின் பேராட்டதினம். இரத்தம் சிந்தி எட்டு மணி நேர வேலையைப் பெற்ற அப் புரட்சிகர நினைவு நாளை வர்க்க இன சாதிய பெண்கள் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்ட தினமாக புரட்சிகர எழுச்சியுடனேயே எமது கட்சி முன்னெடுத்து வந்துள்ளது. இம்மேதினங்களின் ஊடாக உழைக்கும் மக்களை அரசியல் விழிப்புணர்வுக்கும் வெகுஜன அணி திரள்வுகளுக்கும் ஒரணி திரட்ட முடியும் என நம்புகின்றோம்.


22.04.2012
கா.செல்வம் கதிர்காமநாதன்.
வட பிராந்திய செயலாளர்.

நன்றி - துலா