Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்க யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் அறைகூவல்

ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது  மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும்  யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் அறைகூவல்


இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ்,முஸ்லீம்,மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும் கிடைக்கமாட்டாது. அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்கள் மாறுவார்களே தவிர இன்றைய பேரினவாத தரகு முதலாளித்துவ ஆட்சி அமைப்தே நீடித்துச் செல்லும்.

இத்தகைய சூழலில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் மக்களும் ஏனைய தேசிய இனங்களும் தமக்குள் ஜக்கியப்பட்டு புதிய அரசியல் திசை மார்க்கத்தில் தூரநோக்குடனான தெளிவான மாற்றுக் கொள்கைகளை முன்னெடுக்கும் பொது வேலைத்திட்டத்துடன் செயற்பட முன்வர வேண்டும் அத்தகைய அரசியல் பொது வேலைத்திட்டத்தின் மூலம் பரந்து பட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் சக்தியைக் கட்டி எழுப்புதல் வேண்டும். அதற்கான திடசங்கற்ப்பத்தை போராட்டத்தில் பிறந்த இப் புரட்சிகர நாளான மேதினத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.


இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச. லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் யாழ் நகரில் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புக்களும் நடாத்திய புரட்சிகர மேதினக்கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். கட்சியின் வடபிராந்திய செயலாளர் தோழர்.கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்படி மேதினக் கூட்டத்தில் தோழர். செந்திவேல் தொடர்ந்து உரையாற்றும்போது.


இன்றைய இலங்கையின் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகளுக்கு ஆட்சி மாற்றம் வந்து விட்டால் யாவும் தீர்ந்து விடும் என்ற பாராளுமன்ற வழிபாட்டுக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. அந்த ஆட்சி மாற்றம் ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சியின் மூலம் ஏற்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.இரா.சம்பந்தன் தலைமையில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை அழைத்து கூட்டு மேதினம் நடாத்துகிறார்கள். தமிழ்த் தலைமைகள் எவ்வித கூச்சமும் வெட்கமும்  இன்றி யாழ் நகரத்தையும் பொது நூலகத்தையும் எரித்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைத் தமது பதினேழு வருட ஆட்சிக்காலத்தில் கொன்றழித்த ஜக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மேதினம் நடாத்துகிறார்கள். முன்பும் இதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத் தலைமையானது இறுதி யுத்தத்தை நடாத்தி தமிழ் மக்களை அழித்த தளபதி சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி தமிழ் மக்களை கேட்டவர்கள். இவர்களது கூட்டு உழைக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கான ஜக்கியத்தை முன்வைத்த கூட்டு அல்ல, முற்றுமுழுதான தமிழ் சிங்கள மேட்டுக்குடி உயர்வர்க்க அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கான கூட்டேயாகும். இதனை நம்பித் தமிழ் மக்கள் ஏமாறுவார்களேயானால் மீண்டும் அழிவுகளையும் நாசங்களையும் தேடிக்கொள்ளவே முடியும்.


இன்றைய ஆட்சியை முன்னெடுக்கும் மகிந்த சிந்தனை அரசாங்கம் முற்று முழுதான பேரினவாத தரகு முதலாளித்துவ ஏகாதிபத்திய வழிகாட்டலிலான அரசாங்கமாகும். தனி நபர் சர்வாதிகாரமும் குடும்ப ஆட்சியும் அதன் போக்கைத் தீர்மானிக்கின்றன. இத்தகைய ஆட்சி முறை பாசிச உச்சகட்டத்தையே நோக்கிச் செல்லுகிறது. இத்தகைய ஆட்சிக்குத் தான் பழைய சாயம் வெளுத்த இடதுசாரிகளும் சில தமிழ், முஸ்லீம் உயர் வர்க்ககத் தலைமைகளும் கை உயர்த்தி ஆதரவு கொடுத்து வருகின்றார்கள. உழைக்கும் சிங்களத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒடுக்கப்படும் தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்களும் வர்க்க அடிப்படையில் அணி திரண்டு போராரவேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை காணப்படுகிறது.அதற்கான காலம் கனிந்து வருகிறது.


இவ்விடத்தில் ஒரு முக்கியமான விடயம் காணப்பட வேண்டியதாகும். ஆளும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் பின்னால் இந்தியப்  பிராந்திய  மேலாதிக்க வல்லரசு இருந்து வருகிறது அதே வேளை ஆட்சி மாற்றத்தைக் கோரும் ஜக்கியதேசியக்க்சியின் பின்னால் அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் இருந்து வருகின்றன. இத்தகைய அந்நிய சக்திகளின் மீது நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்த்தலைமை எனப்படுவோரும் இலகு காத்த கிளிபோல் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்தலைமைகள் கடந்த காலத்தில் இருந்து எதையுமே பிடிக்காது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் பிற்போக்குத் தலைமைகளாகவே இவர்களிடம் இருந்து வருவது, வெறியூட்டும் இன உணர்வும், இனவாதமும் என்ற குறுகிய தமிழ்த் தேசியவாதமேயாகும். இவற்றை மூலதனமாகக் கொண்டே தமது தமிழர் மேட்டுக்குடி ஆதிக்கப் பிற்போக்கு அரசியலை முன்னெடுத்துவருகிறார்கள். இதே நிலைதான்  தென்னிலங்கையிலும் இருந்து வருகிறது. அங்கு பேரினவாதமும் பெருமுதலாளித்துவமும் ஆட்சி செய்கிறது. அதனால் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். பௌத்தசிங்கள அடிப்படைவாதிகளும் பேரினவாதிகளும் வெறிகொண்டு  அலைகிறார்கள். அதன் அண்மைய வெளிப்பாடே தம்புள்ள முஸ்லீம் பள்ளிவாசலும், இந்துக் காளி கோவிலும் தாக்கப்பட்டமையாகும்.


எனவே இனமத மொழி பிரதேச உணர்வுகளைத் தூண்டி வெறித்தனமாக்கிக் கொள்வதன் மூலம், ஆளும் வர்க்கத்தினரும் அந்தந்த தேசிய இனம் மத்தியிலான ஆதிக்கப்பிற்போக்கு அரசியல் சக்திகளும் வாக்குப்பெட்டி பாராளுமன்ற சுகபோக அரசியலை இலகுவாகவே செய்து கொள்கிறார்கள். இவற்றை நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் வர்க்க மக்களும் விவசாயிகளும் உழைக்கும் வர்க்க மக்களும் உரியவாறு உணர்ந்து புதிய திசையில் வெகுஜன அரசியல் பாதையில் பயணிக்க முன்வரல் வேண்டும். இதுவே எமது கட்சியின் இன்றைய புரட்சிகர மேதின செய்தியாகும்.


மேலும் இம் மேதினக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் க.தணிகாசலம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் த.பிரகாஷ் பெண்கள் அமைப்புப் பிரதிநிதி ஈஸ்வரி தர்மலிங்கம், தொழிற்சங்க வெகுஜன அமைப்புக்களின் சார்பாக ஆர்.தவராஜா,  ரி.வி.கிருஷ்ணசாமி, ஏ.சீவரட்ணம் ,மு.தியாகராஜா ஆகியோர் உரையாற்றினர். உரைகளின் இடையே கட்சியின் கலைக்குழுவினர் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.

இம் மேதினக் கூட்டத்திற்கு முன்பாக சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து பி.ப2.30 மணிக்கு செஞ்சட்டைகளும், செம்மொழிகளும் முழங்க அட்டைகளும் கொண்ட பலமுந்நூறுக்கு மேற்பட்டோர்  சைக்கிள் பேரணியாக புரட்சிகர முழக்கங்களுடன் யாழ் நகர் நோக்கி காங்கேசன்துறை வீதிவழியாக கூட்டத்தை வந்தடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செம் மேதினம் யாழ்ப்பாணத்தில் களைகட்டியிருந்தது. அதே வேளை கட்சியின் தலைமையில் அட்டன்,கொழும்பு, வவுனியா,ஆகிய பிரதேசங்களிலும் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் மேதினக் கூட்டங்கள் இடம்பெற்றன.

02.05.2012