Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

DEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.

இங்கு யாழ்ப்பாணத்தில, சில வருடங்களாக யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சில சிங்கள NGO - முதலாளிகள் மேற்குநாடுகளின் நிதியில் இதை நடத்துகிறார்கள். கடந்தவருடம் கூட இதை பற்றி விரிவாக எழுதியிருந்தேன். இப்போ, நான் இங்கு பதியப்போவது இந்த பட விழாவில் திரையிட மறுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு படத்தைப்பற்றி. புலம்பெயர் நாடுகள் உட்பட இலங்கையில் தம்மை அதிதீவிர ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், சமுகப் போராளிகள், மார்க்சிசவாதிகள், இடதுசாரிகள் என கூறிக்கொள்வோர் சிலர் DEMONS IN  PARADISE  என்ற படம், மேற்படி படவிழாவில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதாகக்  கூறி - அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர். ஆத்திரப்படுகின்றனர். போராட்டத்துக்கு அறிவித்தல் விடுகின்றனர். டெமோன் இன் பரடைஸ் என்ற படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிடுகின்றனர்.

ஆனால், இதே நபர்கள் ஆண்டாண்டு காலமாக புலியெதிர்ப்பை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராகவே செயற்படுபவர்கள். இன்று மேற்படி படத்தை திரையிட வேண்டுமென இவர்கள் கூப்பாடுபோடுவதன் காரணமே, அந்தப் படத்தின் அடித்தளம் - பிரச்சார வீச்சு எல்லாம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கான மறுமுனைவுக்கு எதிராக இருப்பதுதான் என்பது எனது கருத்து !

 

பிபிசி இல் இந்தப் படத்தைப் பற்றிய விவரணத்தில் "இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதாசனிடம் விளக்குகிறார் ஜூட்.

"இலங்கைப் போர் இறுதிக் கட்டத்தில் இருக்கும்போது, விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.

(இப்படத்தின் கடைசிப்பகுதியிலும் இயக்குனர் மேற்கண்ட வசனத்தை கூறுகிறார் )

சரி, புலிகள் அழிய வேண்டுமென கருதுவதும், அவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் அவரவரது சுய விருப்பம் என வைத்துக்கொண்டாலும், "தமிழ் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை" என ஜூட் ரத்னம் கூறுவது தான் அவரின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது.

புலிகள் இயக்கம் உட்பட எல்லா இயக்கங்களும் சுயமாக வானத்திலிருந்து குதிக்கவில்லை. இந்நாட்டின் அரச அதிகாரத்தை காலகாலமாக வைத்திருக்கும் பவுத்த -சிங்கள- அகங்காரவாதிகளின், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அரசியலின் உற்பத்திப்பொருளே புலிகள் உட்பட அனைத்துத்  தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களாகும்! ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட புறப்பட்டதனால்,  புலிகள் உட்பட தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களின் தவறுகளை விமர்சிக்கக் கூடாது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்காகப் போராட வந்த எல்லோரும் - அரசியற் தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே! இங்கு எவரும் புனிதர்களில்லை.

ஆனால், அவ் விமர்சனம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதாக- மனித சமுதாயத்தின் மேம்பாட்டை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும். சிதைக்கப்பட்ட - அழிக்கப்பட்ட -ஒடுக்கப்பட்ட மனிதம் மறுபடியும் துளிர்ப்பதற்கானதாக இருக்கவேண்டும்.

அதை விடுத்து, புலிகளை விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் பேரினவாத சக்திகளுக்கும் அதன் அரச இயந்திரத்துக்கும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள எதிர்ப்பை தணிப்பதற்கான- இனவாதப் போரை நியாயப்படுத்துவற்கான பிரச்சாரத்தை இத் திரைப்படத்தினூடாக மேற்கொள்வதென்பது நியாயமற்ற செயல்.

இப்படம் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் மீது எந்த வித கருசனையும் இல்லாமல், ஒட்டுமொத்தமான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதமாக சித்தரிக்கிறது. இப்படத்தை நான் சிங்கள முற்போக்காளர்கள், கல்வியாளர்கள் என கூறிக்கொள்வோர் பலருடன் கடந்த வருடம் பார்க்க நேர்ந்தது. அப்போ, " தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, அரசுக்கு சார்பாக இப்படி ஒரு படத்தை, இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக, ஒரு இனவெறி பிடித்த சிங்களவரால் கூட எடுக்க முடியாது." என என்னுடன் இப் படத்தைப் பார்த்த "அரைகுறை" இனவாத- புத்திசீவி கூறினார். தயான் ஜயதிலக்க போன்ற இனவாத புத்திசீவிகள் இப்படத்தை தலையில் வைத்துக் கொண்டாடுவதே இப் படத்தின் நோக்கம் என்னவென்பதை வெளிப்படையாக விளங்கிக் கொள்ள முடியும்.

யாழ். திரைப்பட விழா கொண்டாடும் அனோமா ராஜாகருணாவும் அவரின் தொண்டரடிப்பொடிகளும்,  தமிழ் தேசிய விடுதலையைப் பொறுத்தளவில், DEMONS IN  PARADISE  இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் கருத்தை ஒத்தவர்களே. அதனால், அனோமா யாழில் இப்படத்தை திரையிட மறுத்தார் என்பது நம்பமுடியாத ஒன்றாகவே எனக்குப் படுகிறது. ஜனநாயகத்தை தமிழ் பிரதேசத்தில் கட்டியெழுப்புவதற்காகவே யாழ்ப்பாண திரைப்பட விழாவை கொண்டாடுவதாகக் கூறி, சர்வதேச நாடுகளிடம் பெரும் நிதி பெறும் அனோமா ராஜகருணா இப்படத்தை திரையிட மறுத்திருப்பார் என நான் நம்பவில்லை. இப்படத்தை திரையிட மறுப்பதாக பொய்யான கதையை கட்டிவிட்டு, "ஆழம் பார்த்து" பின் இப்படத்தை திரையிடலாம் என்பதே இவர்களின் திட்டம்.

இதன் மூலம் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் "தமிழ் மக்களின் ஜனநாயகமற்ற தன்மையை அம்பலப்படுத்திவிட்டு .... ஜனநாயகத்தை காப்பாற்ற படத்தை திரையிடலாம்" என்பதே இவர்களின் திரைக்கதையின் one-liner அல்லது tagline. அத்துடன் இப்போதும் 30 வருட போரினால் அல்லது புலிகளினால் உருவாக்கபட்ட ஜனநாயக மறுப்புப் "புத்தி" இப்போதும் தமிழ் மக்களிடம் உள்ளது என்று கூறி, மேலதிகமாக சர்வதேச நாடுகளிலிருந்து நிதி பெறலாம் என்பதும் இவர்களின் திட்டமாக  இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில், இந்தப் படம் யாழில் வெளியிடப்படல் வேண்டும். கூடுமானவர்கள் - சிந்திக்க கூடியவர்கள் இதைப் பார்க்கவேண்டும். இதன் மூலம் எவ்வாறு தமிழ் தேசியவிடுதலைக்கு எதிராக பிரச்சாரங்கள் சர்வதேசிய ரீதியில் இனவாதிகள் மற்றும் அவர்களின் அடிவருடிகளால் முன்னெடுக்கப்படுகிறதென்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

பிற்குறிப்பு : இந்த குறிப்பை எழுதியுள்ள நான், இப்படத்தை கடந்த வருடம் ஆவணி மாதம் கொழும்பில் பார்த்து விட்டேன். அத்துடன், யாழ்.சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு கொண்டுள்ளேன். மற்றும் இந்தப் படத்தின் இயக்குனர் ஜூட் அவர்களை சந்தித்து உரையாடியதுமுண்டு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி