Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போரும் அரசியலும்

உலகில் உள்ள அனைத்தையும் விட மனிதர்களே மேலானவர்கள். மனிதர்களுக்கு நிகரான ஒன்றை இவ்வுலகில் எங்குமே காணவியலாது. பிரபஞ்சத்தில் இருந்து உருவாகிய இவ்வியற்கைப் பூவுலகில் மனிதர்கள் தோன்றி வளர்ந்து யாவற்றையும் உருவாக்கி வந்திருக்கின்றார்கள். இயற்கையோடு இணைந்தும் போராடியும் கட்டுப்படுத்தியும் தமக்கானவற்றைப் படைத்து வந்திருக்கின்றார்கள். உணவு, உடை, இருப்பிடம், மொழி, மதம் பண்பாடு போன்றவற்றை உருவாக்கி வளர்தெடுத்தெடுத்து வந்திருக்கின்றார்கள்.

மனிதர்களது உழைப்புத் திறனும் மூளையின் வளர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் புதியன. கண்டுபிடிப்பதில் இடையறாத முயற்சியும் மனித குலத்தை முன்னோக்கி எடுத்தும் வந்திருக்கிறது. இத்தகைய மனித வாழ்வுப் பயணம் பல இலட்சம் ஆண்டுகளை கொண்டதாகும். இவ்வாறு மனித குலம் தோன்றி வளர்ந்து இனம் பெருக்கி நவீன அறிவியல் கண்டு வாழ்ந்து வந்த வரலாறு அற்புதமான மானிட வரலாறாக தொடர்கிறது. இங்கே கூர்ந்து அவதானிக்கத்தக்கது மனித இருப்பின் தொடர்ச்சியாகும். இம் மனித இருப்பானது வரலாறு முழுவதும் நெருக்கடிகள், சவால்கள், அனர்த்தங்கள், அழிவுகள் போன்றவற்றை எதிர் கொண்டே வந்திருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள், பஞ்சங்கள், பட்டினிகள் இடப்பெயர்ச்சிகள், கொடிய நோய்கள், சுரண்டல்கள், அரசியல் ஒடுக்குமுறைகள் போன்றவற்றை எதிர்கொண்டு அவற்றைக் கடந்தே மனித வரலாறு முன்னோக்கி வந்திருக்கின்றது.


இவ்வாறு மனித இருப்பிற்குச் சவால் விடுத்து வந்தவற்றில் போரும் அரசியலும் பிரதான இடத்தில் இருந்து வந்துள்ளன. இவை மனித சமூக வளர்ச்சிப் போக்கில் தற்செயலானவை அல்ல. அவை வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில் தோன்றி வளர்ந்து விரிவு பெற்றுள்ளவை. மனிதர்கள் ஆரம்பத்தில் மனிதக் கூட்டத்தினராக வாழ்ந்த போது தமக்கான உணவைத் தாமே கூட்டாகத் தேடிப் பெற்றுத் தம்முள் பகிர்ந்துண்டு வாழ்ந்தனர். இயற்கை அனர்த்தங்களையும் வலிய மிருகங்களையும் கூட்டாக ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்று தமது இருப்பைத் தக்கவைத்தனர். அங்கே தனியுடைமை எதுவுமற்ற ஒரு சமத்துவமான சமூக வாழ்வு இடம்பெற்று வந்தது. ஆனால், மனித உழைப்பின் முயற்சியும் மூளை வளர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் கருவிகளின் கண்டுபிடிப்புக்களும் விருத்திக்கும் இட்டுச்சென்றன. அவற்றின் விளைவாக மனிதர்களிடையேயான அடுத்த்கட்டச் சமூக வளர்ச்சிப் போக்கு உருவாகியது. அதுவே தனிச் சொத்துடைமையின் ஆரம்ப வடிவங்களாகி விரிவு பெற்று முன்னோக்கிச் சென்றது. ஆரம்பகாலச் சொத்துடைமையின் வாயிலாக உள்ளோரும் இல்லாதோரும் என்ற நிலை மட்டுமின்றி உணவைத் தேடுவதிலும் உழைப்பிலும் வேறுபாடுகள் தோன்றின. உழைப்பில் ஈடுபடுவோர் பலராயிருக்க அதில் ஈடுபடாத சிலர் அதன் பலாபலன்களை அனுபவிப்பதான ஆரம்ப நிலைகள் உருவாகின.

அச் சூழலில் உழைப்புப் பிரிவினையும் வர்க்கங்களின் தோற்றமும் தனிச் சொத்துடைமையின் வளர்ச்சியும் சமூக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையாகின. இவற்றின் அடிப்படையாக வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் போராட்டங்களும் உருவாகி வந்தன. இவற்றின் நடுவே தனிச் சொத்துடைமையினதும் சொத்துடைமையாளர்களினதும் பாதுகாப்பிற்காக அரசு என்பது தோற்றம் பெற்றது. அரசு என்ற ஆரம்ப வடிவம் ஆயுதம் தாங்கிய அரச இயந்திரமாக விருத்தி பெற்றது. காலப் போக்கில் அரசு என்ற பலாத்கார நிறுவனத்தைப் பாதுகாக்கும் அரசாங்கங்கள் தோற்றம் பெற்றன. மேலே கூறப்பட்ட வரலாற்றுப் பின்புலத்தின் ஊடாகவே போர் பற்றியும் அரசியல் பற்றியும் ஒருவரால் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ள இயலும்.


எனவே, போர் என்பது சமூக வளர்ச்சிப் போக்கில் தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தோன்றிய ஒன்றல்ல. போர் என்பது வர்க்கங்கள், தேசங்கள், நாடுகள், அரசியற் குழுக்கள் ஆகியவற்றுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒரு கட்டத்திற்கு வளர்ச்சியடைந்ததும் அவற்றைத் தீர்ப்பதற்குரிய அதியுயர்ந்த போராட்ட வடிவமாகும். தனியுடைமை முறைமையும் வர்க்கங்களும் தோன்றியது முதல், போர் என்பது இருந்து வந்திருக்கிறது எனப் போர் பற்றிய மாக்சிய உலகப் பார்வை எடுத்துரைக்கிறது. இவ்வாறு இடம்பெற்று வந்த போர்களை அநீதியான போர், நீதியான போர் என வகைப்படுத்தக்கூடியனவாகவே அவை அமைந்திருந்தன.

தனியுடைமையின் அடிப்படையில் அமைந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பையும் அதன் பொருளாதார நலன்களையும் இருப்பையும் பாதுகாப்பதற்கான போர்கள் நீடித்து வந்தததை ஒரு புறமாகக் காணலாம். மறுபுறத்தில் தமக்கான புதிய சமூகக் கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான போர்கள் இடம்பெற்று வந்துள்ளதையும் காணலாம். முன்னையதில் ஏற்கனவே சொத்துடைமையும் ஆட்சி அதிகாரத்தையும் கொண்ட வரக்க்த்தினர் மேலும் அவற்றை விரிவுப்படுத்திச் செல்வங்களையும் அவற்றுக்குரிய நிலங்களையும் நாடுகளையும் கைப்பற்றவும் போர்களை முன்னெடுத்தனர். பின்னையதில் அடக்கப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தோர் தம்மீது திணிக்கப்பட்ட அடிமை விலங்குளை உடைத்தெறிவதற்காகப் போர்களில் ஈடுபட்டனர். அவை மாற்றத்தைக் குறித்து நின்ற புரட்சி எனும் நிலைக்கான போராகவும் இருந்து வந்தன. எனவே நீதியான போர் மக்கள் சார்பானதாகவும் அநீதியான போர் சொத்துடைமை பெற்ற ஆளும் வர்க்கம் சார்பானதாகவும் இருந்து வந்துள்ளதை வரலாறு முழுவதும் காணலாம்.

இந்த அநீதியான போர் என்பதைப் பழைய புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் வாயிலாகக் காண இயலும். அவை ஒரு தரப்பு நியாயங்களுக்காகத் தத்தமது போர்களை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. அத்தகைய போர்களால் அனாவசியமாக மக்கள் அழிவுற்றமை பற்றி அவை அக்கறை செலுத்தியதில்லை. அடிமைகளின் உழைப்பை உறிஞ்சவும் அவர்களை அடக்கிவைக்கவும் இடம்பெற்ற எந்த ஒரு போரும் நீதியான போர் அல்ல.

அதே போன்று நிலவுடைமைக் காலத்தில் நில அபகரிப்புகளுக்கும் நாடுகளைக் கைப்பற்றவும் செல்வங்களைப் பறித்துக் கொள்வதற்காகவும் மாமன்னர்கள், மன்னர்கள், தளபதிகள் மட்டுமன்றிக் குறு நில மன்னர்கள் போன்றோரும் நடாத்திய போர்கள் யாவும் அநீதியான ஆத்திரமிகு போர்களாகும். அப் போர்களுக்கு ஆளும் அதிகார வர்க்கமாக இருந்தோர் எத்தனையோ இட்டுக்கட்டுக் கதைகளை கட்டி வீரம் வெற்றி தியாகம் என நியாயப்படுத்த முற்பட்டப் போதிலும் அவை யாவும் அநீதியான போர்கள் என்பதில் ஐயமில்லை.


அன்று மட்டுமின்றி, அண்மைய வரலாறுக் காலத்திற் கூட நிலவுடைமை வர்க்கமும் அதனோடிணைந்த கொலனியவாதிகளும் தொடுத்த ஒவ்வொரு போரும் மக்களின் பெரும் அழிவுகளுக்கு உள்ளாக்கிய அநீதியான போர்களே ஆகும். நாடுகளை அடிமைப்படுத்தவும் அவற்றின் வளங்களை சூறையாடிக் கொள்ளவும் அப் போர்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய போர்கள் இன்று வரை நீடித்தபடியே உள்ளன.

நவீன அறிவியலும் உயர் தொழில்நுட்பமும் பெற்றுத் தந்த அதி நவீன ஆயுதங்கள் சமகாலப் போர்களில் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணலாம். அவை புதிய புதிய போர் முனைகள் திறக்கப்படுவதற்கும் ஆயுத விற்பனை பெருகுவதற்கும் வழிவகை செய்கின்றன. இப் போர்களினாற் பல கோடி மக்கள் அழிந்துள்ளனர். ஏகாதிபத்தியப் போர்ப் பாதிப்பில் இருந்து இன்று வரை மீளாத மக்கள் தலைமுறையினர் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பது நோக்கத்தக்கதாகும். அதேவேளை, நீதியான போர்கள் ஒடுக்கப்படும் வர்க்கங்கள் இனங்கள் சமூகங்கள் சார்பாக இடம்பெற்று வந்துள்ளன. அன்று அடிமைச் சமுதாய அமைப்பிலே எசமானர்களை எதிர்த்த அடிமைகளின் போராட்டமாக அமைந்தது ஸ்பாட்டகஸ் தலைமையிலான புரட்சிப் போர். நிலவுடைமையாளர்களை எதிர்த்துப் பன்ணையடிமைகளான விவசாயிகள் தொடுத்த போர்கள் எண்ணற்றவைகளாகும்.

மாபெரும் பிரஞ்சுப் புரட்சியானது தொழிலாளர்களும் விவசாயிகளும் முதலாளிகளும் இணைந்து நிலவுடைமை ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய வழிவகுத்தது. அதன் பின் அதே பிரன்சின் பாரிஸ் நகரிலே தொழிலாளி வர்க்கத்தின் ஆயுத எழுச்சி இடம்பெற்று அங்கிருந்து முதலாளி வர்க்கம் தேற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டது. இரண்டு மாதங்களை தொழிலார்கள் தமது ஆட்சி அதிகார கட்டுப்பாட்டின் கீழ் பாரிஸ் கமியூன் என்ற பெயரில் நிலை நிறுத்தி வைத்திருந்தனர். கொலனித்துவவாதிகளையும் முதலாளி வரக்கத்தினரையும் எதிர்த்து எழுந்த போர்கள் ஏராளமானவை. ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க நாடுகளிலே அவற்றுக்கான வரலாற்றுத் தடயங்களைக் காணலாம். இவை யாவும் மக்கள் சார்பான நீதியான போர்களாகும்.


மேலும், மாபெரும் ஒக்டோபர் புரட்சியும் அதனைத் தொடர்ந்த சீனப் புரட்சி உட்பட தேசிய விடுதலைப் போராட்டங்களாக வெடித்தெழுந்து போர்கள் யாவுமே முற்போக்கான நீதியான போர்களாகும். அதேபோன்று, ஒவ்வாரு நாட்டிலும் தத்தமது ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு சிறிய, பெரிய போராட்டங்களும் நீதியானவையே. இந்திய உபகண்டத்திலும் அதே போன்று ஆசியாவின் பரந்த நிலப்பரப்பெங்கும் மக்களுக்கான நீதியான போர்களைக் காண முடியும். இவற்றிடையே நீதியான போர், அநீதியான போர் என்பதற்குக் கடந்த நூற்றண்டில் இடம்பெற்ற இரண்டாம் உலகப்போர் சிறந்த உதாரணமாகும். ஹிட்லர், முசோலினி, யப்பானிய பிற்போக்காளர்கள் முன்னிற்று முன்னெடுத்த போர் முதலாளித்துவத்தின் உச்சமான பாசிசத்தை நிலை நிறுத்த முன்னின்ற அநீதியான போராகும். அதனை முறியடிக்க சோவியத் யூனியன் தலைமையில் சோவியத் மக்களும் உலக மக்களும் அணிதிரண்டு முன்னெடுத்த பாசிச எதிர்ப்புப் போர் நீதியான போராகும். இறுதியில் அந் நீதியான போரே வெற்றிகொண்டது.


இவ்வாறு மனிதகுல வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ள போர்களையும் அவற்றின் சமூகப் பின்புலமாக அமைந்த பொருளாதாரக் காரண காரியங்களையும் நோக்கும்போது, போருக்கும் அரசியலுக்கும் உள்ள உறவுநிலை பற்றி நோக்குவது தேவையாகிறது. எந்தவொரு போரிலும் அரசியலற்ற போரைக் காணவியலாது. மதத்தின் பெயரிலான போரிலும் இனத்தின் காரணமான போரிலும் அல்லது நாடுகளுக்கிடையிலும் நாடுகளுக்குள்ளேயும் இடம்பெறும் எத்தகைய போரிலும் அரசியல் இல்லாத போரென்று எதனையுங் கூறமுடியாது. ஏற்றத் தாழ்வும் சுரண்டலுங்கொண்ட பொருளாதார சமூக அமைப்பில் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியே அரசியல் என்பது முன்னெடுக்கப்படுகிறது. எனவே வர்க்க சமூகத்தில் வர்க்கங் கடந்த அரசியல் என்பது வெறும் ஏமாற்றேயாகும்.

இத்தகைய வர்க்கம் சார்ந்த அரசியலும் வர்க்கம் சார்ந்த போர்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவாறே பயணித்து வந்துள்ளன. அதாவது, அரசியற் சாராம்சம் இல்லாத போர்களை உலகில் எங்கும் காணமுடியாது. ஏனெனில் அரசியற் குறிக்கோள்களை அடைவதற்குப் போர் தேவைப்படுகிறது. அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அப் போருக்கான குறிக்கோள் அல்லது இலக்கு அடையப்படாதவிடத்து போர் தொடர்கிறது. இதனை, நமது நாடு உட்படச், சமகால உலகெங்கும் காணக்கூடியதாக உள்ளது. போருக்கும் அரசியலுக்கும் உள்ள உறவைப் பற்றி எடுத்துரைக்கும்போது “அரசியலின் நீடிப்பே போராகும்” எனத் தோழர் மாஓ சொன்னது இந்த அர்த்தத்தில்தான். போர் அரசியலாகவும் அரசியல் போர் நடவடிக்கையாகவும் விளங்குகின்றன.

புராதன காலம் முதல் அரசியற் குணாம்சம் இல்லாத போர் எதுவுமே இருந்ததில்லை. ஆனாற் போருக்கு அதற்கேயுரிய விசேட அம்சங்களுண்டு. இந்த அர்த்தத்தில் போரைப் பொதுவாக அரசியலுடன் சம்பந்தப்படுத்த முடியாது. ஆனால் “விசேட நடவடிக்கைகள் மூலம் அரசியலின் நீடிப்பே போர் என்பதாகும்”. எனவே அரசியலை இரத்தம் சிந்தாத போர் என்றும் போரை இரத்தம் சிந்தும் அரசியல் என்றும் கூறலாம்.


 இவ்வாறு எடுத்துரைப்பதன் மூலம் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற வெளிச்சத்தின் ஊடாகப் போரையும் அரசியலையும் அணுகி ஆராயும் மாக்ஸியவாதிகள் போர்களை ஊக்குவிப்பதாகவும் அரசியலை பலாத்காரம் கொண்டதாக மாற்றுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டும் ஆளும் வர்க்கச் சக்திகளும் வல்லாதிக்கவாதிகளும் தம்மைப் போருக்கு எதிரான பலாத்காரமற்ற அகிம்சாவாதிகளாகவும் ஜனநாயகவாதிகளாகவும் காட்டிக்கொள்கின்றனர். ஆனால் அவர்களது உண்மையான சுயரூபம் அத்தகையதல்ல. ஏற்கனவே அரச யந்திரம் என்பதன் ஊடாகப் பலாத்காரத்தைக் கொண்டிருப்பவர்கள் தனிச்சொத்துடைமை கொண்ட ஆளும் வர்க்கத்தினரே. உலகில் வல்லாதிக்கம் செலுத்தி நிற்கும் அவர்களே, உலகின் போர்களது ஊற்று மூலமாக விளங்கிய கொடிய போர்களை முன்னெடுத்து வருகின்றனர்.


 ஆனால் உலகில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் இனங்களும் ஏனைய சமூகங்களின் விடுதலைக்காக நின்று வரும் மாக்ஸிஸவாதிகளும் ஒரு நாளைக்குக் கூட போர் நிகழ்வதை ஆதரிக்கவில்லை. ஆனால், ஆளும் வர்க்கங்களினாலும் வல்லாதிக்க சக்திகளினாலும் ஒடுக்கப்பட்ட மக்களின்மீது போர் திணிக்கப்படும்போது அவ் அநீதியான போரை நீதியான போரினால் எதிர்த்து முறியடிக்க முன் நிற்பர். ஓன்று, போரை அவர்கள் விரும்பவில்லை. இரண்டாவது, அவர்கள் அதற்கு அஞ்சவில்லை என்ற தெளிவான வரையறையுடனேயே அவர்கள் போர் பற்றிய கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். இவ்வாறு போர் பற்றியும் அதற்கும் அரசியலுக்கும் உள்ள தெளிவான உறவையும் வரையறைகளையும் விளங்கிக் கொண்டதாலேயே ஏகாதிபத்தியவாதிகளும் ஹிட்லரின் தலைமையிலான ஃபாசிஸவாதிகள் தொடுத்த போரை சோவியத் மக்களும் அவர்களது பொல்ஷ்விக் கட்சியும் அன்று தோற்கடித்தன. அவ்வாறே யப்பானிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தொடுத்த போரை சீன மக்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தோற்கடித்தன. எனவே அநீதியையும் ஒடுக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் வல்லாதிக்கத்தையும் ஒருவர் எதிர்த்து நிற்கவில்லை என்றால், மக்களோ நாடோ எதிர்த்துப் போர் தொடுக்கவில்லை என்றால் அடிமைத்தனமாக வாழ்வதற்கு மட்டுமே அவர்கள் தகுதியானவர்களாக இருக்க முடியும்.


 போர் அழிவுக்குக் காரணமானது என்பதில் ஐயமில்லை. அது மக்களை அழித்து சின்னாபின்னப்படுத்தும் என்பது உண்மை. அது மனித இருப்பைக் குலைக்கும் விதமான அச்சுறுத்தும் தன்மையினைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதற்காக அதனை எதிர்த்து நிற்காவிடில் அது மேலும் மேலும் மக்களை விழுங்கவும் மனித இருப்பை நாசஞ்செய்யவுமே செய்யும். ஆனால் அநீதியான போர் ஒவ்வொன்றையும் நீதியான போர்கொண்டு எதிர்த்து முறியடிக்கும்போது மனித இருப்புப் பாதுகாக்கப்படுவதுடன் புதிய சமூக அமைப்பும் புதிய சமாதான சூழழும் தோற்றுவிக்கப்படும். கடந்த காலங்களில் சமூக மாற்றங்கள் ஏற்படவும் மக்கள் ஆட்சிகள் மலரவும் போர்கள் உதவியுள்ளன. இவ்விடத்திலேதான் தீய விடயங்களை நல்ல விடயங்களாக மாற்றமுடியும் என்பது நிரூபணமாகி நிற்பதைக் காணலாம்.


 எனவே போர்கள் பற்றிய தெளிவிற்கு அரசியற் கண்ணோட்டம் தெளிவாக இருத்தல் அவசியமாகும். போர் பற்றிய ஒவ்வொரு விடயமும் சரியானதும் தூரநோக்கிலுமான அரசியல் அணுகுமுறை மூலம் கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் போரின் ஊற்று மூலங்களைக் கண்டறிய முடியும். அவற்றைக் கண்டறியாது விட்டால் எத்தகைய போரையும் மக்கள் சார்பாக நின்று எதிர்க்கவும் முடியாது முறியடித்து தேர்க்கடிக்கவும் முடியாது. ஒரு தேசத்தின் மீதோ ஒரு தேசிய இனத்தின் மீதோ போர் ஒன்று ஏவப்படும் போது அதனை வெறும் உணர்ச்சிவசப்பட்ட குறுகிய நிலை நின்று ஆழமற்ற அரசியல் போக்கைக் கடைப்பிடித்து எதிர் கொள்ள முடியாது. தூர நோக்கமும் ஆழ்ந்தகன்ற அரசியல் பார்வையும் அவசியமாகின்றன. திணிக்கப்படும் அல்லது ஏவப்படும் போரின் பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்றுரீதியான பின்புலங்களும் யதார்த்த நிலைமைகளும் அடிப்படைக் காவனத்திற்கு உரியனவாகின்றன. இவை ஒடுக்கலுக்கு உள்ளான மக்கள் மத்தியில் அறிவு பூர்வமாகவும் அரசியல் மயப்படுத்தலாலும் புரிதல்களுக்கு உட்படுத்தப்படல் வேண்டும். இல்லாவிடில் திணிக்கப்படும் போரினால் மக்கள் பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் பெறுவதுடன் தாம் ஆதரித்த வெற்றிபெற இயலாத அரசியலிலும் வெறுப்புற்று விரக்தியடையவர். இவ்வாறான போக்குக்கள் உலக அரங்கில் நமது நாட்டுச் சூழலிலும் காண முடிந்தவைகளாம். எனவே போர் அரசியல் பற்றிய ஆழமான அறிவும் தெளிவும் அவசியமாகின்றன. அதன் மூலமே மனித நோயத்தின் அடிப்படையிலான மனித இருப்பின் மீது உண்மை அக்கறையைச் செலுத்த முடியும்.”

-சி.கா. செந்திவேல்