Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தென்னாசிய பாசிச நகர்வுகள்

தேசியவாதமும் இனவாதமும் மதவாதமும் பாசிசத்திற்கு என்றும் பயனுள்ள கருவிகளே. ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கச் சிந்தனையை பாசிசம் பயன்படுத்தினும், பாசிசம் என்பது, வெறுமனே அடையாளப் பகைமையைப் பற்றியதல்ல. அதனுட் சுரண்டும் அதிகார வர்க்க நலன்கள் பொதிந்துள்ளன. வலதுசாரிச் சிந்தனை, தேசியவாதம், அதிகார அடுக்குமுறை, சமத்துவப் பகை, முதலாளியச் சார்பு, போர் முனைப்பு, அகச்சார்புச் சித்தாந்தம், நவீனத்துவ எதிர்ப்பு என்பவற்றை பாசிசத்தின் தலையாய பண்புகளென ஐரோப்பிய மாக்சியர்கள் கொள்வர். அவற்றுள் முதலாளியச் சார்பு அடிப்படையானது.

இரண்டாம் உலகப் போரின் பின், ஐரோப்பிய மக்கள் பாசிசத்தை அறிந்து கொண்டனர். எனவே, சில முன்னேறிய முதலாளிய நாடுகளிற், பாசிசம் போருக்கு முன் பெற்ற பெரும்பான்மை ஆதரவைப் போருக்குப் பின் பெறவில்லை. எனினும் முதலாளிய வல்லரசுகளின் ஆசிகளுடன் 1970களின் இடைப்பகுதி வரை பாசிச சர்வாதிகாரிகள் ஸ்பெயினையும் போர்த்துக்கலையும் ஆண்டனர். இரண்டாம் உலகப் போரையடுத்த கிரேக்க உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்டுக்களை முறியடித்து ஒரு தசாப்தம் கழிய அங்கு பாசிச ராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் பயனாக ஐரோப்பிய பாசிச ஆட்சிகள் விழுந்தபோதும் மேலை முதலாளியத்தின் தெரிவுகளில் ஒன்றாக பாசிசம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.

1980கள் தொட்டு, ஐரோப்பிய பாசிசம், தன்னை வெளிப்படையாக அதிகாரத்தின் மையத்திற் அடையாளப்படுத்தாமல், அரசாங்கத்தின் மீது அழுத்தஞ் செலுத்துவதுடன் சிறுபான்மையினரைத் தொடர்ச்சியாக இலக்கு வைத்து அச்சுறுத்தும் நவ பாசிசமாக இயங்கிவருகிறது. பொருளாதார நெருக்கடிகளின் போது, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிச், சமூகத்தின் உள்ளேயே ஒரு எதிரியைக் கட்டமைத்துப் பிரச்சனைக்கான பழியைப் அந்த எதிரியின் மீது சுமத்த இனவாதம் பயன்பட்டுள்ளது. கொலனியத்துடன் ஒட்டிப் பிறந்த நிறவாதமும் மேற்குலகப் பண்பாட்டின் மேம்பாடு பற்றிய கற்பிதங்களும் பாசிசத்துக்குப் பயன்படுவன. இன்று வரை, நவ பாசிசம் அவற்றைப் பயன்படுத்திவருகிறது.

முதலாளிய, சீர்திருத்தவாதக் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, மக்களிடையே புரட்சிகர இடதுசாரிப் போக்கு வலுப்படும் நிலைமைகளில், அதற்கு மாற்றாக முதலாளியம் நவ பாசிசத்தை முன்னிறுத்தும் என்பதை கிரேக்கத்தில் ஒரு மாற்று இடதுசாரி அணி சென்ற ஆண்டு துரிதமாக வளர்ந்தபோது “தங்க விடியல் (Golden Dawn)” என்ற நவ பாசிசக்கட்சியும் எழுந்தமை நினைவுட்டியது.

தொடக்கத்திற் குறிப்பிட்ட பாசிசப் பண்புகளையுடைய சர்வாதிகார ஆட்சிகள் பல அமெரிக்க ஆதரவுடன் ராணுவச் சதிப்புரட்சிகள் மூலம் தென்னமெரிக்க நாடுகளில் 1970களிலும் 1980களிலும் உருப்பெற்றன. சோவியத் ஒன்றியத்தின் சரிவின் பின், கம்யூனிச மிரட்டல் என்பது சர்வாதிகார ஆட்சிகளை நியாயப்படுத்தப் பயனற்றுவிட்டது. மக்களின் கடும் வெறுப்பைச் சந்தித்த அவ் ஆட்சிகள் 1990களில் அடுத்தடுத்து வீழ்ந்தாலும், அவை ஏற்படுத்திய அழிவு பெரிது.

இன்று ஆசியாவிலே ஒரு பாஸிஸ அலை எழுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்களால் ஆட்சிக்கு வந்த பாஸிஸவாதிகளைப் போலன்றித், தென்னாசிய பாஸிஸவாதிகள் 1930களின் இத்தாலிய, ஜேர்மனிய பாஸிஸவாதிகளைப் போல ஒரு வெகுசன ஆதரவுத் தளத்தை எழுப்பி அதனூடு ஆட்சியில் அமர முயலுகின்றனர். ஆட்சிக்கு வர உடனடி வாய்ப்பில்லாத போது, மதவாதப் பிரசார மூலமும் மதவாத வன்முறை மூலமும் தமது ஓடுக்குமுறைத் திட்டங்கட்கு உடன்படுமாறு ஆட்சியாளர்களை வற்புறுத்துகின்றனர்.

மதஞ்சார்ந்த தேசியமும் தேச அடையாளமும் தேசப்பற்றும், அத்தேசிய அடையாளமற்ற சக சமூகத்தினரைப் பகையாகக் காட்டலும் தென்னாசிய பாஸிஸத்தின் தேவைகளாயுள்ளன. கொலனி ஆட்சிகட்கு எதிரான எழுச்சிகளின் தொடக்க நிலையில் மக்களை அணிதிரட்ட மதம் பயன்பட்டபோதும், அவ்வெதிர்ப்பு விடுதலைக் கோரிக்கையாகி மக்கள் இயக்கங்களாகிய சூழ்நிலையிற், கடும் மதவாதச் சக்திகள், நேரடிக் கொலனிய எதிர்ப்பிலிருந்து விலகிப், பிற இன, மத அடையாளங் கொண்டோருடனான போட்டியிற் தமது கவனத்தைக் குவித்தன. அப்போட்டியிற் பொதிந்திருந்த முதலாளிய-பிரபுத்துவ வர்க்க நலன்கள், கொலனி ஆட்சியாளருடன் ஒத்துழைக்குமாறு அவர்களைத் தூண்டின.

தென்னாசியாவில் எழுந்துள்ள இந்துத்துவ, இஸ்லாமிய, பௌத்த மதவாத அரசியற் சக்திகள் இந்தியா, பாக்கிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிற் பேரினவாத அரசியலை முன்னெடுக்கின்றன. தம் உடனடிச் சூழல்களில் இலக்குவைக்க வாய்ப்பான சிறுபான்மை யினரை அவை வெளிப்படையாக இலக்கு வைக்கின்றன. எனினும், அவற்றின் முக்கியமான பகைவர்கள் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுப்போரும் இடதுசாரிகளுமேயாவர்.

ஏகாதிபத்தியமும் வலதுசாரி மதவாதமும் வர்க்க நலன்களில் ஒன்றுபடுவதால் அவற்றிடையே நட்புண்டு. குறிப்பான சில முரண்பாடுகள் இருப்பினும், இந்திய இந்துத்துவவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி முகவர்களாகவும் இடதுசாரிகள் பழங்குடிகள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்போரைப் பொது எதிரிகளாகக் கொண்டும் உள்ளனர். பாக்கிஸ்தான், பங்ளாதேஷ் அரசுகளுடனான மோதலில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்டாலும், சவுதி அராபியத் தொடர்புகள் அவர்களின் ஏகாதிபத்தியப் பகையைத் தணிக்கிறது. இடதுசாரி விரோதம் அவர்களை ஏகாதிபத்தியத்துக்கு நெருக்குகிறது. சுன்னி-ஷியா முஸ்லிம்களிடையே திட்டமிட்டுப் பகையை வளர்க்கும் அமெரிக்க-சவுதி சூழ்ச்சியிலும் அவை பங்காளிகளாக உள்ளன.

தேரவாத பௌத்த மதவாதம் முதலிற் சிங்களப் பேரினவாதத்தினூடு தலைநீட்டிய போதும், பிக்குக்களின் அமைப்புக்களும் பௌத்த மதவாத அமைப்புக்ளும் பலகாலமாக இருந்து வந்த போதும், சிஹள உருமயவின் தோற்றத்துடனேயே சிங்கள பௌத்த அரசியல் வெளிப்படையாகத் தோன்றியது. அதன் தொடர்ச்சியான ஜாதிக ஹெல உருமய, தேர்தலில் பெற்ற சிறு வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தவறிய போதும், மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் அதன் செல்லாக்கைப் புறக்கணிக்க இயலாது. பௌத்த பாசிசத்தின் மையமாக ஜாதிக ஹெல உருமய உள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான போர்முனைப்பின் மூலம் எழுச்சிபெற்ற அதன் பௌத்த பாசிசம் இன்று நன்கு கட்டமைக்கப்பட்ட பௌத்த பாசிசக் குண்டர் படைகளாக வலுப்பெற்று வருகிறது. முஸ்லிம்கள் அதன் பகிரங்க இலக்காக உள்ளனர். அதன் முஸ்லிம் விரோத முன்னெடுப்புக்கட்கு அரச நிறுவன ஆதரவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்குலகின் போர்க்குற்ற நெருக்குவாரங்களை அது வெறுத்தலும் தனது எதிர்காலம் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவிற் தங்கியுள்ளமையை அது அறியும். ஆட்சிக் கவிழ்ப்பினூடோ அது இல்லாமலோ இலங்கையில் ஒரு சிங்கள பௌத்த அடக்குமுறை ஆட்சி அமையும் அபாயம் நிசமானது.

தென்னாசியாவில் உடனடியான பாசிச மிரட்டலை இலங்கை மிகவும் எதிர்நோக்கும் நிலையில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே பாசிசத்தை முறியடிக்க இயலும். எனவே இலங்கையின் ஜனநாயக, முற்போக்கு. இடதுசாரிச் சக்திகளின், குறிப்பாகச் சிங்கள இடதுசாரிச் சக்திகளின், பொறுப்புப் பெரியது. மகிந்த சிந்தனை ஆட்சியுடன் நட்புப் பேணி அதன் பாசிச முனைப்பை மாற்ற இயலாது. எனவே பாசிச மிரட்டலைத் தடுப்பதை மகிந்த சிந்தனை அரசாங்க எதிர்ப்பிலிருந்து பிரிக்க இயலாது என்பதை அனைத்து இடதுசாரிகளும் உணரவேண்டும்.

குறிப்பு: ஆசிரியர் தலையங்கம் - செம்பதாகை இதழ் 16 -ஜனவரி – மாச் 2013