Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

உள்நாட்டு நிலைமைகள்: புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை. (29,30-08-2014)

தோழர்களே!

எமது புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் 5வது அனைத்திலங்கை மாநாட்டின் நான்காவது நிறைபேரவைக் கூட்டத்திற்காக இங்கு கூடியிருக்கிறோம். கடந்த வருடத்தில் இடம்பெற்ற மூன்றாவது நிறைபேரவைக் கூட்டத்திற்குப் பின்பான ஒரு வருட காலத்தில் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் நாட்டிற்கும் மக்களுக்கும் சாதகமானதும் நன்மைகள் தரக் கூடியதுமான மாற்றங்களோ வளர்ச்சிகளோ இடம்பெறவில்லை. கடந்த மூன்றரை தசாப்த காலத்தில் மிக மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்பட்ட தாராளமய, தனியார்மய, உலகமயமாதல் கொள்கைகளே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்நிய மூலதனத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் சகல வாய்ப்பு வசதிகள் வழங்கப்பட்டதையே காண முடிந்துள்ளது. இவற்றை முன்னெடுப்பதில் அரசியல் அமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பாராளுமன்றம், ஆயுதப்படைகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இவற்றுக்கு முன்னையவர்களின் பாதையில் தொடர்ந்து தலைமை தாங்கி வழிநடாத்துவதில் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் முழுமையான அதிகாரத்தைச் நவீன ஃபாசிச சர்வாதிகாரமாக முன்னெடுத்து வந்துள்ளனர். அதேவேளை சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமக்குரிய தகுந்த கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இலங்கை ஒரு நவகொலனித்துவ நாடாக இருப்பது ஏற்கனவே எமது ஐந்தாவது மாநாட்டினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இவ் அமைப்பு முறையின் கீழ் அடிப்படை முரண்பாடு வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடாகவே இருந்து வருகிறது. இவ் அடிப்படை முரண்பாட்டிற்குள் வர்க்கம், இனம், சாதியம், பெண்கள் ஆகிய தளங்களிலான முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றின் இயங்கு தளங்கள் பற்றியும் பின்புலங்கள் சம்பந்தமாகவும் எமது ஐந்தாவது மாநாடு(2010) தெளிவாகவே வரையறை செய்திருந்தது. மேலும் குறிப்பாக எடுத்துக் கூறுவதனால் நாட்டில் ஏகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் அரசாங்க- தனியார்துறையினர் உள்ளிட்ட 90 சதவீதமான மக்கள் ஒருபுறமாகவுள்ளனர். இன்றும் நாட்டில் 75 சதவீதமான மக்கள் கிராமப்புறங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.நாட்டின் தொழில் செய்வோரின் 11 சதவீதமானோர் விவசாயத்திலும், 30 சதவீதமானோர் கைத்தொழிலும், 58 சதவீதத்தினர் சேவைத்துறையிலும் இருந்து வருகின்றனர். அவர்களின் வருமானம் 49 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேவேளை நகர்ப்புறத்தைச் சேர்ந்த அதிக வருமானம் பெறுவோரின் வருமானம் 8 சதவீதத்திலிருந்து போருக்குப் பிந்திய காலப்பகுதியில் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை நாட்டின் தரகு முதலாளிகள், பெருமுதலாளித்துவ சக்திகள், சொத்து சுகங்கள் தாராளமாகப் பெற்று அனுபவிப்போர், அதிகார வர்க்கத்தினர், அதி உயர் சிவில் அதிகாரிகள், படை உயர் அதிகாரிகள் என்போர் சுமார் பத்து வீதமானவர்களாவர். இத்தகையவர்கள் நாட்டின் செல்வத்தை தமதாக்கி வைத்துள்ளனர்.

இத்தகையோரது செல்வம் சில வருடங்களில் 36 வீதத்திலிருந்து 38 வீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை தொண்ணூறு வீதமான மக்கள் இல்லாமை, போதாமை, பெறமுடியாமைகளால் அவதியுறுகின்றனர். இத்தகைய நிலையானது வர்க்க ஏற்றத்தாழ்வையும் உள்ளுர் வளர்ந்து வரும் வர்க்க முரண்பாட்டினையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. எனவே அடிப்படை முரண்பாட்டு வகைக்குள் நாட்டின் இன மொழி மத பிரதேச குறுகிய எல்லைகளைத் தாண்டிய நிலையில் அனைத்து உழைக்கும் மக்களும் உள்ளடங்கி நிற்கின்றனர். ஆனால் அதனை உணரவும் ஒன்று சேரவும் விடாது இன, மொழி, மத பிரதேச வேறுபாடுகள் மூலம் மக்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். பிரித்தாளும் சூழ்ச்சி தொடரப்படுகிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அரசாங்க தனியார்துறை ஊழியர்கள் தாம் வர்க்க ரீதியில் சுரண்டப்படுவதையும் வர்க்க அரசியல் மூலம் ஒடுக்கப்படுவதையும் கண்டு கொள்ளவிடாது பல பத்து வழிகளில் தடுக்கப்படுகின்றனர். ஜனநாயகம் சுதந்திரம் ஆகிய பெயர்களில் ஏமாற்றப்படுகின்றனர்.இதனை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் உள்ளுர் தரகு முதலாளிய ஆளும் வர்க்கத்தினரும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் பலவழிகளிலும் முன்னெடுத்துவருகின்றனர்.

நவதாராள பொருளாதாரத்தின் கொடூரப் பிடியானது நாட்டில் பொருளாதார நெருக்கடிகளையும் கடுமையான வாழ்க்கைச் சுமைகளையும் மக்கள் மீது திணித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாட பாவனைப் பொருட்களினதும் விலை அதிகரிப்புகள் நாளாந்தம் உயர்ந்து செல்கின்றன. இவற்றுடன் மின்சாரம்,தெலைபேசி,நீர்,போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. வரிகள் நேரடியாகவும் மறைமுகமாவும் மக்களிடமிருந்து வாரி எடுக்கப்படுகின்றன. இவற்றால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டுள்ளது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் ஐம்பதினாயிரம் ரூபாவிற்கு மேல் தேவைப்படுவதாகத் தொழிற்சங்கங்கள் கணக்கிட்டுள்ளன. இதற்குரிய சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் செவிட்டுத்தனமாக இருந்து வருகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 1500 ரூபா மட்டுமே சம்பள உயர்வு வழங்கியது. அதுவும் தனியார் துறையினருக்கு வழங்கப்படவில்லை. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் நியாயாமான சம்பள உயர்வைத் தொழிலாளர்கள் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாட்டில் அறுபத்தைந்து வீதத்தினர் தனியார்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடத்தில் ஆறுலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற இருக்கிறது. வழமை போன்று மலையக ஆதிக்கத் தொழிற்சங்கத்தலைமைகள் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவார்கள் என்பது நிச்சயமானதாகும்.

நாட்டின் 45 வீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகவே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் 45 வீதமான மக்கள் நாள் ஒன்றிற்கு இரண்டு டொலர் வருமானம் பெறுகின்றனர். உலகின் வறுமைக்கோட்டினை அளவிட 2 அமெரிக்க டொலர்களே அளவீடாகக் கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான பொருளாதார நெருக்கடி நிலையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் வறுமை, வேலையின்மை, வீடின்மை, சுகாதாரமின்மை, கல்வி பெற முடியாமை என்பன பாரிய சமூகப் பிரச்சினைகளாகவும் வாழ்க்கை நெருக்கடிகளாகவும் வளர்ந்து செல்கின்றன. சுகாதார, கல்வித்துறைகளில் மக்கள் பெற்றுவந்த சமூக நல உரிமைகள் யாவும் தனியார் மயப்படுத்தலுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பால் பறிக்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறைக்கு உள்நாட்டு உற்பத்தியில் 1.8 வீதமும் சுகாதாரத் துறைக்கு 3.5 வீதமுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கும் எல்லாத்துறைகளிலும் சமூக நலத்திற்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் உரிய முக்கியத்துவம் நிராகரிக்கப்பட்டு தனியார்துறையினரான அந்நிய உள்நாட்டுக் கம்பனிகளது மோசமான சுரண்டலுக்கும் லாப வெறிக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.உதாரணமாக சுதந்திரவர்த்தக வலயத்திற்குளேயும் வெளியேயும் தொழிலாளர்கள் ஊழியர்கள் பிழிந்தெடுக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர்.

நவதாராள பொருளாதாரத்தின் கோரப் பற்கள் நாட்டில் அரும்பி வந்த அனைத்து உள்ளுர் உற்பத்திகளையும் சுயசார்புப் பொருளாதாரத்தையும் கடித்துக் குதறிச் சாகடித்துவிட்டன. இன்று உற்பத்திப் பொருளாதாரம் குற்றுயிராக்கப்பட்டுள்ளது. சிறு கைத்தொழில்கள் யாவும் அழிவுற்றுள்ளன அவ்விடத்தை இறக்குமதிப் பொருட்கள் நிறைத்துள்ளன. விவசாயத்தில் திட்டமிட்ட புறக்கணிப்புகளாலும் அந்நிய விவசாய உற்பத்தி இறக்குமதிகளாலும் விவசாயம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குச் சென்று விட்டது. எஞ்சியவற்றையும் அந்நியக் கம்பனிகளின் உரம், கிருமிநாசினி, விதைகள் மட்டுமன்றி அந்நிய இறக்குமதிகளும் நாசமடையச் செய்து வருகின்றன. இவற்றுக்கும் அப்பால் காலநிலை மாற்றங்கள் மூலமான வரட்சி, கடும் மழை, பெரும் காற்றும் விவசாயிகளை வெறுவீலிகளாக்கியுள்ளன. இவற்றுடன் கூடவே விவசாயக் கடன்கள் மூலம் வங்கிகளும் வட்டியாளர்களும் விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியுள்ளனர். இவற்றின் மூலம் விவசாயிகள் தற்கொலைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளை மேலும் நசுக்கும் நோக்குடன் அண்மையில் விதைகள் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயன்று கடும் எதிர்ப்பால் கைவிட்டது. ஆனால் நாடு கடந்த கம்பனிகளுக்காக (வுசயளெ யேவழையெட ஊழசிழசயவழைளெ-வுNஊ)அதனை நிறைவேற்றுவதில் அரசு உள்நோக்குடன் இருந்து வருகிறது. இவ்வாறு சகல நிலைகளிலும் விவசாயிகள் இன்றைய ஆட்சியினால் கைவிடப்பட்டவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்காக மலையகத்தில் தேயிலை ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலை தொடர்ந்தும் மோசமான வாழ்க்கை நிலை கொண்டதாகவே இருந்து வருகிறது. ஆகக் குறைந்த நாட் சம்பளம் தொடர்கிறது. பெரும் தொழிற்சங்கங்கள் ஆட்சியினருக்கும் தோட்ட முதலாளிகளுக்கும் இணங்கிப் போகும் பிற்போக்குத் தலைமை கொண்ட தொழிற்சங்கங்களாகவே இருந்து வருகின்றன அவற்றினால் தொழிலாளர்களை மிக நுணுக்கமான வழிகளில் தலைவர்கள் வேடமிட்டு ஏமாற்றிக் கொள்ள இயலுமாகவே இருந்து வருகின்றது. மேலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிரச்சினை அவர்களது சுமார் இருநூறு வருடங்களை அண்மிக்கப் போகும் நிலையிலும் ஒரு குளி நிலம் அல்லது ஒரு சொந்த வீடு அற்றவர்களாக இருந்து வருவது தான். அத்தகைய அடிப்படை மனித உரிமையும் வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டு வரும் அநீதி தொடர்கிறது. இருபத்திரண்டு தனியார் கம்பனிகள், அரசாங்க தோட்டக் கூட்டுத்தாபனங்கள,; மற்றும் தனியார் சிறு தோட்டங்களில் தொழில் புரியும் ஆண்களும் பெண்களுமான மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமையை அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளும், அரசாங்கமும், தோட்ட முதலாளிகளும் கவனிப்பதில்லை. தேர்தல்களில் வாக்குகள் வாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறதே தவிர, அதற்கு அப்பால் வேறு எதுவுமே இல்லை. அவர்கள் வர்க்க ரீதியிலும் இன அடிப்படையிலும் சுரண்டப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர். புறக்கணிக்கப்பட்டு உள்வரவும் வெளிப்படையாகவும் ஒதுக்கப்படுகின்னர். இவற்றின் மூலம் மலையகத் தமிழர் தனியான ஒருதேசிய இனம் என்பது மறுக்கப்படுகிறது அவர்களின் தனித்துவங்களை அங்கிகரிப்பது நிராகரிக்கப்படுகிறது.

மேலும்; வெளிநாட்டு ஏற்றுமதியாகும் தைத்த ஆடைகள் உற்பத்தித் துறையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இத்தொழிற்சாலைகள் சுதந்திர வர்த்தக வலயத்திலும் அதற்கு வெளியிலும் உள்ளன. இவற்றில் அதிகமானளவிற்கு இளம் பெண்களே குறைந்த சம்பளத்திலும் வசதிகள் அற்ற தங்குமிடங்களிலும் வாழ்ந்து வருவதுடன் அதிகநேரம் வேலை வாங்கப்பட்டு அந்நிய- உள்நாட்டுக் கம்பனிகளால் மோசமாக சுரண்டப்படுகின்றனர். அதேபோன்று சுதந்திர வர்த்தக வலயங்களில் ஏனைய கம்பனிகளில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்னர். இந்நிலையில் மேன்மேலும் அந்நிய முதலீட்டுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்து வருகின்றது. மிக மலிவான ஊதியத்திலும் அதிக உழைப்பிலும் பயன்பெறலாம் என்ற விளம்பரம் மூலதனமிடக்கூடிய முதலாளித்துவ நாடுகளில் விளம்பரம் செய்யப்படுகின்றது.

இவ்வாறு அந்நிய உள்நாட்டு கம்பனிகள் தொழிலாளர்களது உழைப்பை சுரண்டியும் வளங்களைச் சூறையாடியும் வருகின்றன. ஆத்துடன் இக்கம்பனிகளால் இயற்கைச் கூ+ழல் கெடுக்கப்படுகிறது நிலம்,நீர்,காற்று என்பன மோசமான சூழல் மாசடைதலுக்கு உள்ளாகி உள்ளன அதன் வெளிப்பாட்டு உதாரணமே வெலிவேரியாவின் நிலத்தடி நீர் மாசடைந்ததாகும். அதனை மக்கள் எதிர்த்து போராடினர். இந்த ஆட்சி அம்மக்களை ஆயுதப்படைகள் மூலம் ஒடுக்கி மூன்று உயிர்களைப் பலியெடுத்தது இதேபோன்ற கூ+ழல் மாசடைதல் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன மற்றொரு உதாரணம் வடக்கில் இலங்கை மின்சாரசபை அமைந்துள்ள சுன்ணாகம் மின்உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 100 கிணறுகள் வரை கழிவு எண்ணெய்ப் படிமத்தால் மாசடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொழிலாளர்கள் ஊழியர்கள் வர்க்க சுரண்டலுக்கும் அரசியல் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகும் அதேவேளை நவீன தகவல் தொழில்நுட்பத்துறைகளில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் நவீன சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். நவீன தகவல் தொழில் நுட்பம் மனித முன்னேற்றத்தின் வளர்ச்சியாக காணப்படினும் அவற்றை இன்று ஏகாதிபத்தியம் தமது லாபவெறிக்கும் உலக மேலாதிக்கத்திற்கும் பயன்படுத்தி வருகிறது இது பற்றி மேலும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டியே உள்ளது.

இவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாகவும் விரிவுபடுத்தியும் நோக்கும் போதே நவதாராள பொருளாதாரத்தின் கோரமுகம் தெளிவாகிறது. இதனை பலபத்து வழிகளில் நடைமுறைப்படுத்த முன்னிற்கும் உலகமயமாதலின் நச்சுத்தனங்கள் அம்பலமாகின்றன. சந்தை, லாபம் மேலும் லாபம் என்ற லாபவெறியானது கீழ் மட்டத்திலிருந்து அதி உயர் மட்டம் வரை ஊட்டப்படுகிறது. அதற்கு மனித நேயம் உள்ளிட்ட மனித மாண்புகள் யாவும் பலியிடப்படுகின்றன. பணம் மேலும் பணம் அதிக பணம் தேடும் தனிமனித முயற்சி ஒவ்வொன்றையும் உலகமயமாதல் ஊக்குவிக்கிறது. இத்தகைய நச்சுத்தனமும் நாசகாரமும் விளைவித்து வரும் உலகமயமாதலின் மூலஸ்தானம் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்குலக நாடுகளிலுமே இருந்து வருகின்றன. எனவே இவையாவும் மாக்சிச லெனினிசத்தின் வர்க்கப் போராட்டப் பார்வையின் ஊடான புரிதலுக்கும் தெளிவுபடுத்தலுக்கும் உள்ளாக்கப்படுதல் வேண்டும். அதன் அடிப்படையிலேயே நமது நாட்டின் நவகொலனித்துவ நவதாராள பொருளாதார சமூகக் கட்டமைப்பின் கீழ் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடு என எமது கட்சி வரையறை செய்து வர்க்கப் போராட்டப் பாதையில் பயணித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தொழிலாளர்கள்,ஊளியர்கள் மற்றும் உழகை;கும் மக்கள் மட்டுமன்றி மாணவர்களும் அவ்வப்போது பல்வேறுபட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருவதைக் காணமுடிகிறது

பிரதான முரண்பாடு:

இலங்கையில் பிரித்தானியப் பாராளுமன்ற அரசியலமைப்பு உருவாகுவதற்கு முன்பே இனங்களிடையேயான முரண்பாட்டு விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன. இவற்றை காலனித்துவ வாதிகள் தொடக்கி வைக்க பின் வந்த சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்கம் அதற்கு அவ்வப்போது நீர் ஊற்றி வளர்த்துக் கொண்டது. ஆட்சி அதிகாரத்திற்கும் சுரண்டலை மறைக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துச் செல்லவும் அடி நிலையில் இருந்த இன முரண்பாடு பகை முரண்பாடாக வளர்த்தெடுக்கப்பப்பட்டது. பின் அது இன வன்முறையாகவும் மோதலாகவும் கடும் யுத்தமாகவும் முன் தள்ளப்பட்டது. இந்நிகழ்வுப் போக்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபுறத்திலும் தமிழ்த் தேசியவாத்தின் குறுகிய நிலைப்பாடு மறுபுறத்திலும் பிரதான பாத்திரம் வகித்தன. இன ஒடுக்குமுறை தேசிய இனப்பிரச்சினையாக வளர்ச்சி பெற்றது. இதன் பின்புலத்தில் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும், அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இருந்து வந்த பெரும் பங்களிப்பை எவ்வகையிலும் நிராகரிக்க முடியாது. தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்படாது விட்டால் நாட்டின் எதிர்காலம் அமைதியாகவோ சமாதானமாகவோ சுபீட்சமானதாகவோ இருக்கமாட்டாது என்பது இன்றைய யதார்த்தமாக இருந்து வருகிறது. எனவே எமது கட்சி வர்க்க சுரண்டலையும் வர்க்க ஒடுக்குமுறையையும் மேவி மறைத்து மக்களை திசை திருப்பி நிற்கும் பிரதான முரண்பாடாகத் தேசிய இனப்பிரச்சினை இருந்து வருவதை தெளிவுபடுத்தி வந்துள்ளது. அதற்கான தீர்வையும் வற்புறுத்துகிறது. அத்தகைய தீர்வு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமைந்த ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் சுயாட்சி தீர்வாக இருக்கவேண்டும் என சுட்டிக்காட்டி வருகிறது.

இத்தேசிய இனப்பிரச்சினை என்பது சிங்கள தமிழ் முரண்பாடு எனச் சுருக்கி விட முடியாது. ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களும் ஏனைய பறங்கியர், மலேயர், பழங்குடியினரான வேடர் ஆகிய சிறு சமூகங்களையும் உள்ளடக்கியதே தேசிய இனப்பிரச்சினையாகும். எனவே இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எமது கட்சி விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறி வந்துள்ளது.

ஆனால் தேசிய இனப்பிரச்சினையில் தமிழ்த் தேசிய வாதிகளது நிலைப்பாடு எப்போதும் பழைமைவாத பிற்போக்கானதாகவே இருந்து வந்துள்ளது. யுத்தம் தந்த அழிவுகளுக்குப் பின்பும் அவர்களது நிலைப்பாடு சிங்கள உழைக்கும் மக்களை விரோதிகளாகவும் பேரினவாதிகளாகவும் பார்ப்பதாகவே உள்ளது. அதேவேளை தமக்குச் சமமான சிங்கள மேட்டுக்குடியினருடன் வர்க்க உறவுடன் இருந்தும் வருகிறார்கள். அத்துடன் இன்று அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளுடனும் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளுடனும் பணிவுள்ள விசுவாசத்துடன் தமக்கு ஏதாவது பெற்றுத் தருமாறு கெஞ்சியபடியே இன்றும் இருந்து வருகிறார்கள். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வானது அந்நியத் தலையீட்டினால் வரும் என்றே நம்புகிறார்கள். இது மீண்டும் மீண்டும் அந்நிய ஆதிக்க வல்லரசுகள் மீது நம்பிக்கை வைப்பது மட்டுமன்றி சிங்கள மக்களின் எதிர்ப்பை பெற்று இனப்பிளவை நிரந்தரமாக்கி அதன்மூலம் குறுகிய அரசியல் லாபம் தேடுவதாகும்.

அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தமது தேவை கருதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தையும் அதன் வழியிலான சர்வதேச விசாரணையையும் முன்தள்ளி நிற்கிறார்கள். அந்த விசாரணையால் தமிழ் மக்களுக்கோ அன்றி தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கோ எதுவும் கிடைத்துவிடமாட்டாது. மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கவும் அதன் மூலம் தங்களது காலடிக்கு இட்டுச்செல்லவும் அல்லது அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற மட்டுமே மேற்படி விசாரணை உதவக்கூடியதாகும். அதே வேளை மேற்படி விசாரணையை ராஜபக்ச சகோதரர்களது ஆட்சிஅதிகார நிலைப்பிற்கும் நீடிப்பிற்கும் தகுந்த களமாக பயன்படுத்தி வருகின்றனர் இவ்விசாரணையை எதிர்ப்பதன் மூலம் தம்மை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகச் சித்தரித்தும் வருகின்றனர். அத்தகைய ஒரு சர்வதேச விசாரணையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம், அரசியல் தீர்வு வந்து சேர்ந்துவிடும் என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் வீண் முயற்சியாகும் அத்துடன் தமிழ்த் தேசியவாத தரப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகள் யாவும் பழைய பல்லவிகளாவுள்ளன கடந்தகாலத்தின் அனுபவங்களோ பட்டறிவுகளோ அவர்களிடம் இல்லை.எவ்வித சுயவிமர்சனத்தையும் எந்தவொருதமிழர் தரப்பு கட்சியும் முன்வைக்கத் தயாராவில்லை.

கடந்தகாலத்தில் தமிழர் தரப்புக்கள் முன்வைத்த அத்தனை கொள்கை நிலைப்பாடுகளும் தோல்வியையே தழுவின. அதற்குக் காரணம் வெறும் இன மொழி வழிப்பட்ட பழைமைவாத ஆதிக்க அரசியல் கண்ணோட்டத்தில் அவை அமைந்திருந்ததே காரணமாகும். எனவே தெற்கின் ஒடுக்கப்படும் உழைக்கும் சிங்கள மக்களுடன் இணைந்து நிற்கக் கூடிய நேச நிலைப்பாடுடைய வெகுஜன மார்க்கம் ஒன்றே எஞ்சியிருக்கக் கூடிய சரியான கொள்கையாக இருக்கமுடியும். இத்தகைய ஒரு மாற்று நிலைப்பாட்டை தமிழர் தரப்பு ஆதிக்க அரசியல் தலைமைகளிடம் எதிர்பார்க்க இயலாது. எனவே ஒரு முற்போக்கான தமிழ்த் தேசியவாதத் தரப்பு ஒன்று அரசியல் அரங்கில் முன்னுக்கு வரவேண்டும். அத்தகைய தரப்புடன் எமது கட்சி உட்பட தெற்கின் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் நட்பும் ஐக்கியமும் கொண்டதாக முன்நோக்கி செல்ல முடியும் அத்தகைய முற்போக்கு தமிழ்த் தேசியத் தரப்பினால் மட்மே தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய பரந்த வெகுஜனப் போராட்டத்திற்குரிய பொது வேலைத்திட்டத்தை தோற்றுவிக்க முடியும்

கொலனிய யுகத்தின் தேசிய இனப்பிரச்சினையும் நவகொலனிய காலகட்டத்தின் தேசியப் பிரச்சினையும் வேறுபட்டவையாகும். நவகொலனியச் சூழலில் தேசிய முரண்பாடுகள் எவ்வாறு ஏகாதிபத்தியத்தின் கருவிகளாகின்றன என்பதைக் கருத்திற்கொண்டு தேசியப் பிரச்சினையைக் கையாள வேண்டும். அதன் மூலம் நவீன ஃபாசிசத்திற்குத் தேசியப் பிரச்சினை உரமூட்டுவதைத் தடுக்க முடியும். இதில் மாக்சிச லெனினிச சக்திகளும் ஜனநாயகவாதிகளும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதனாலேயே தேசிய பிரச்சினை இன்று பிரதானமாகிறது. தேசியப் பிரச்சினையை வெறுமனே தேசங்களிடையிலான பிரச்சினையாக நோக்காது அனைத்து தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நோக்குதல் அவசியம். சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அனைத்து சிறுபான்மை சமூகங்களினதும் அடிப்படை உரிமைகளைப் பேணும் வகையில் விரிவுபடுத்துவது பற்றி இன்றைய சுழலில் மாக்சிச லெனினிசத்தை முன்னிறுத்துவோரும் இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் சிந்திக்க வேண்டும் தேசிய இனப்பிரச்சனை பற்றி பேசும் போது சுயநிர்ணய உரிமையுடன் மட்டும் அதன் எல்லையினை சுருக்கி விட முடியாது. ஜனநாயகம்,வர்க்க ஏற்றத்தாழ்வு, சாதியத்தின் தொடர்ச்சி, பெண்கள் மீதான பால் நிலை ஒடுக்குமுறை மற்றும் சமூகநீதி மறுப்புகளும் தேசிய இனப் பிரச்சனைக்குள் உள்ளடங்கியவை என்பது முக்கிய கவனத்தைப் பெறல் வேண்டும்.

தோழர்களே!

நாட்டின் இன்றைய சூழலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது மேன்மேலும் சர்வாதிகாரமாகி வருவது மட்டுமன்றி ஃபாசிசப் பாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் உட்கட்டமைப்பிற்கான அபிவிருத்தி என்பதன் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் கடன் பெறப்பட்டுவருகிறது 2013ன் மொத்த தேசிய உற்பத்தியின் 78.3 வீதம் கடனாக இருந்தது. இதற்குரிய வட்டி முதலுக்கு நாட்டு மக்களே பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இன்று ஒவ்வொரு இலங்கையரும் மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா நாட்டின் உள்நாட்டு வெளிநாட்டு கடனுக்காகச் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். வீதிகள், பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள், துறைமுகங்கள் பாரிய கடன் முதலீட்டில் நிர்மாணிக்கப்படுவது மக்களது தேவைக்கோ உற்பத்திப் பொருளாதரத்தின ;விருத்திக்கோ அல்ல. உலகமயமாக்கலின் நவ தாராள பொருளாதாரத்தின் தேவைக்கானதாகும். அதேபோன்று நகர அபிவிருத்தியும், வீதிகள் கட்டிடங்கள் ,அலங்கரிப்பு நிர்மாணங்களும், ஏழு நட்சத்திர விடுதிகளும், நவீன கடைத் தொகுதிகளும், சூதாட்ட கட்டிடத் தொகுதிகளும், உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திகேயாகும். இவற்றால் பணக்காரர்கள் மேன்மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். வசதி குறைந்தோரும் ஏழைகளும் மேன்மேலும் கீழ்நோக்கி ஏழைகளாகி வருகின்றனர். இத்தகைய அபிவிருத்திகள் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய உலகமயமாதல் சக்திகளுக்கு உவப்பானதேயாகும்.

மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களது ஆட்சியானது அடுத்த ஆட்சிக் காலத்திற்கான திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறத்தில் எல்லாவற்றிலும் ராணுவமயப்படுத்தல் இடம்பெறுகிறது. சிவில் சமூகத்தில் பல்வேறு கூறுகளிலும் இவ் ராணுவ மயப்படுத்தல் இடம்பெறுகிறது. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதி ஒருவர் கூறிய கருத்து கவனத்திற்குரியதாகும். “சிவில் சமூகத்தை இராணுவ மயப்படுத்துவதோ இராணுவத்தை சிவில் மயப்படுத்துவதோ ஆபத்தானது” எனக் கூறியிருந்தார் இவ்ஆபத்து ஏற்கனவே வளர ஆரம்பித்து விட்டது. பெயரளவில் கூறப்பட்டு வந்த ஜனநாயகம் எனப்பட்டது இன்று ஆளும் ஆட்சித்தரப்பால் முற்றாகவே குதறப்பட்டு கால்களின் கீழ் மிதிக்கப்படுகின்றது. பேச்சு, எழுத்து, கூட்டம் கூடும்உரிமை, ஊடகசுதந்திரம் யாவும் அரச கண்காணிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கொண்டுவரப்பட்டுள்ளது இவற்றின் மீது அவ்வப்போது அரச படைகளின் அடக்குமுறைகள் ஏவப்பட்டும் வருகின்றன பாதுகாப்பின் பெயரால் சகல ஜனநாயக நடைமுறைகளும் இல்லதொளிக்;கப்பட்டு வருகின்றன. இன்றும் பயங்கரவாத ஒழிப்பு சட்டம் வலுவுடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது பத்திற்கு மேற்பட்ட அரசபுலனாய்வுக்குழுக்கள் பாதுகாப்பின் பேரில் செயற்பட்டு வருகின்றன அவை யாவும் மக்கள் மத்தியில் அரசாங்க எதிர்ப்பை மோப்பம் பிடிக்கும் குழுக்களாகவே இருந்து வருகின்றன இன்றும் சிறைகளில், தடுப்புமுகாம்களில் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். புணர்வாழ்வில் வெளியே வந்தோர் மீண்டும் கைதாக்கப்படுகின்றனர். குhணமல்போனோர் பற்றிய விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது. இதுவே போருக்குப் பின்னரான இலங்கையில் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே இல்லத்திரனியல் அடையாள அட்டை அறிமுகம் செய்வது பற்றிய பாராளுமன்ற விவாதம் இடம்பெற்றுள்ளது. இத்திட்டம் மிக அபாயகரமானதும் ராணுவ நோக்கம் கொண்டதுமாகும். அதனாலேயே ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக அன்றி இத்திட்டம் பாதுகாப்பு அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. இம்முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் இம்முயற்சி அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவையாவும் நாட்டில் எழுந்துவரும் மக்களின் எதிர்ப்பலைகளை நீண்ட கால நோக்கில் தடுக்கும் முயற்சி மட்டுமன்றி ஃபாசிசத்தின் உச்சம் நோக்கியதுமாகும்.

இவ்வேளை நாட்டின் உருவாகியுள்ள நவீன ஃபாசிசம் பற்றிப் பார்ப்பது அவசியமாகிறது. ஃபாசிசம் என்பது ஐரோப்பாவில் உருவானது. அதன் வர்க்க நலன்கள் எவ்வாறானவை என்பதும் அதற்குரிய ஆதரவுத் தளத்தையும் அத்துடன் அதன் சித்தாந்தத்தையும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு முந்திய காலத்தில் காண முடிந்தது. ஆனால் தற்போதைய சூழலில் ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஃபாசிசம் எவ்வாறு செயற்படுகிறது என்பது கவனத்திற்குரியதாகும். மேற்படி நாடுகளில் காணப்படும். நவீனஃபாசிசத்தில் ஏகாதிபத்தியமும் பழைமைவாதமும் எவ்வாறு மத அடிப்படைவாதம் பேரினவாதம் என்பனவற்றின் ஊடே பொதுவான இயங்கு தளத்தைச் சென்றடைகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நம் முன்னே காணப்படும் நவீனஃபாசிசத்தை அதன் வேறுபட்ட சூழல்களில் அடையாளம் கண்டு வரைவிலக்கணம் காண்பது முக்கியமானதாகும்.

இன்று தெற்கிலே பொதுபலசேனா, ராவனாபலய, ஜாதிக கெலஉறுமய போன்ற சிங்கள பௌத்த அடிப்படைவாத, மதவாத சக்;திகள் முன்னெடுக்கும் ஃபாசிசம் பேரினவாதத் தரகுமுதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்காக்கும் ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு தேவையானதாகும். எனவே அது அரவணைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே முஸ்லீம்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிரான வன்முறைகளில் பொதுபலசேனா ஈடுபட்டும் இன்றுவரை நீதிவிசாரணை அதற்கெதிராக முன்னெடுக்கப்படவில்லை. அளுத்கம வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியாக பொதுபலசேனா இருந்தும் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

இவை யாவும் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியைத் தொடரச் செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியாகும். ஏற்கனவே ஜனநாயகம் என்பது ஒன்றன்பின் ஒன்றாக அடித்து வீழ்த்தப்பட்டு வந்துள்ளது. சட்ட ஆட்சி மூலமான முதலாளித்துவ நீதித்துறை என்பது நிறைவேற்று அதிகாரத்தால் குறிப்பாக பதினெட்டாவது திருத்தத்தால் முடமாக்கப்பட்டு ஃபாசிச சர்வாதிகாரத்தால் ஆளுகை செய்யப்படுகிறது

அதேபோன்று லஞ்சம் ஊழல் கொடிகட்டிப் பறக்கின்றன. அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் ஊழல் பற்றி விசாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு வருடா வருடம் அறிக்கை தந்தபடியே உள்ளது. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன் தண்டனை பெற்றதாகக் கூறமுடியாது. நாட்டில் ஹெரோயின், கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. “குடுநாடு” என்று சொல்லக் கூடிய அளவுக்கு பெருகி உள்ளன. அதேபோன்று கொலை கொள்ளை தாராளமாக இடம்பெற்று வருகின்றன. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வும் வன்முறையும் நாளாந்த நிகழ்வாகிக் காணப்படுகிறது.

நாட்டில் உள்ள பௌத்த இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் அவற்றின் மூலமான பண்பாட்டு விழுமியங்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்றன. ஆனால் அவை யாவும் பெருகிவரும் சமூகக் குற்றங்களையும் சீரளிவுகளையும் மக்கள் விரோத செயற்பாடுகளையும் தடுக்க முடியவில்லை. காரணம் புனிதமான பண்பாடுகள் யாவும் ஏகாதிபத்தியத்தைம் அதன் உலகமயமாதலின் கீழான நச்சுப் பண்பாட்டையும் எதிர்க்கத் தயாராக இல்லை. சிங்கள பௌத்தத்தின் புனித இடம் எனப்படும் கண்டி தலதா மாளிகையைச் சுற்றி அண்மையில் மோட்டார் கார்ப் பந்தயம் இடம்பெற்றபோது அதனை மகாநாயக்கர்களால் தடுக்க இயலவில்லை என்றால் பௌத்த பண்பாடா உலகமயமாதல் பண்பாடா வெற்றி பெற்றுள்ளது என்பதைக் காணவேண்டியுள்ளது.

இதேபோன்று தான் வடக்கில் கோவில்களும் திருவிழாக்களும் முற்றிலும் வணிக மயமாக்கப்பட்டு லட்சம் கோடி எனப் புலம்பெயர்ந்த நாடுகளின் பணம் கொட்டப்படுகிறது. தமிழர்; பண்பாடு, பழைமை, மரபு பற்றிப் பேசும் தமிழ்த் தேசியவாதிகள், இவற்றைச் சமூக அக்கறையுடன் நோக்கி அணுகுவது இல்லை. மதநம்பிக்கை அல்லது கடவுள் பக்தி ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமையாகும் ஆனால். ஆதனை மூடநம்பிக்கை யாக்கி வணிகமயமாக்குவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல ஆனால் உலகமயமாதலின் நச்சுப்பண்பாடு மேற்படி கோவில்களையும், திருவிழாக்களையும் வணிகமயமாக்குவதை ஊக்குவிக்கிறது.மக்கள் தம்மைச் சூழ்ந்து இறுக்கியும் நெருக்கியும் வரும் பொருளாதார அரசியல் பிரச்சனைகளை கண்டு கொள்வதை தடுப்பதற்கும் திசைதிருப்பி வைத்திருப்பதற்கும் கோவில்களும்,திருவிழாக்களும் மற்றும் பழைமைவாத சடங்குகளும் நன்கு பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறே சாதியம் தமிழர்களிடையே புதிய பரிமாணத்துடன் செயல்பட்டு வருகிறது. தீண்டாமை பெருமளவிற்கு ஒழிக்கப்பட்ட பின் இன்றும் பலநிலைகளிலும் சாதியம் முனைப்பாகி உள்ளார்ந்த நிலையில் இறுக்கத்துடன் பின்பற்றப்படுகிறது. இது பற்றிய விரிவான விவாதங்களும், உரையாடல்களும் அவசியம்.எங்கும் எதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் போது சாதியச் சிந்தனை ஊடான அங்கு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது.இதனை வடக்குக் கிழக்கில் குறிப்பாக வடக்கில் தாராளமாகக் காணமுடியும்.

அதேபோன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக முக்கியத்துவம் கொண்ட ஒன்றாக காணப்படுகிறது. பிறப்பில் இருந்து இறப்பு, வரை தொட்டில் முதல் சுடுகாடு வரை பழைமை, மரபு, வழக்கம், சடங்கு சம்பிரதாயம் என்பனவற்றின் ஊடாகப் பெண்ணடிமைத்தனங்கள் பேணப்படுகின்றன. இவற்றைஒற்றைப் பரிமாண நிலை நின்று ஆணாதிக்க செயல்பாடு என மிகச் சுருக்கி வாசித்து விடமுடியாது. ஆணாதிக்கம் உட்பட பழைமை வாத்தின் ஊற்றுமூலக் கருத்தியல்களின் தொடர்ச்சி கண்டறியப்படல் வேண்டும். பரந்த தளங்களில் குறிப்பாகப் பெண்கள் சமூக விழிப்புணர்வு பெறுவதும் செயல்படுவதும .தேவையாகிறது. இதில் சமூகப் பார்வையும் அறிவியல் சார்ந்த சமூக நோக்கும் அவசியமாகின்றது. எனவே நமது சமூகச் சூழலில் குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் பெண்ணடிமைத்தனம் பற்றியும் அதிலிருந்து விடுதலை பெறும் மார்க்கம் பற்றியும் விரித்து பேசப்படுவதும் துணிவுடன் செயற்படுவதும் இன்றைய தேவையாகும்.

மேலும் போர் முடிவுற்று ஜந்து வருடங்கள் கடந்த நிலையிலும் அழிவுகள் இழப்புகளுக்கு உள்ளான மக்கள் குறிப்பாக பெண்கள்,சிறுவர்கள்,முதியோர், கைவிடப்பட்டவர்களாகவே அவலவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். பேரினவாதஇராணுவ ஒடுக்குமுறை அரசாங்கம் இவைபற்றி அக்கறை காட்டவில்லை. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியவில்லை அதேவேளை இராணுவ இருப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு சொந்தமான காணிகள் வீடுகளை அபகரிப்பதில் இராணுவம் முன்னின்று வருகின்றது. ஒருநீண்ட காலத்திட்டத்துடன் பேரினவாத ஆட்சியினர் வடக்கு கிழக்கில் தமது நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே நவகொலனித்துவம், நவதாராளப் பொருளாதாரம், பேரினவாத இராணுவ ஓடுக்குமுறை, அடையாள அரசியல் மூலமான குறுகிய தேசியவாத அரசியல், உலகமயமாதல் செல்வாக்கின் ஊடான பண்பாட்டு சீரழிவுகள் யாவும் சமூகப்பரப்பில் பெரும் நெருக்கடிகள் பிரச்சனைகளைத் தொடர்ந்தும் வளர்த்து வருகின்றன. இவற்றை பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் மக்களிடையே எடுத்துக்கூறி அம்பலப்படுத்தல் வேண்டும். இவற்றுக்கெதிராக மக்கள் மத்தியில் நம்பிக்கையும் துணிவும் ஏற்படுத்தல் வேண்டும். இன்று ஒரு புரட்சிகர வெகுஜன எழுச்சிக்கான சூழல் இல்லையென்பது உணரக்கூடியதாகும். ஆனால் இது நிரந்தரமான ஒன்றல்ல. ஆங்காங்கே இடம் பெற்றுவரும் தொழிலாளர்கள், மாணவர்கள், மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் எதிர்காலத்திற்கான எடுத்துக்காட்டுதல்களாக உள்ளன. ஜனநாயக மறுப்புகளும,; மனிதஉரிமை மீறல்களும், இனஒடுக்குமுறைகளும,; தொழிலாள விவசாய விரோத அடக்குமுறைகளும், நவீனஃபாசிச முன்னெடுப்புகளும் மன்னராட்சி போன்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையும் அதற்குரிய அரசியலமைப்பும் என்றென்றும் நிரந்தரமானவையாக இருக்க முடியாது. ஏமாற்றுகளும் பித்தலாட்டங்களும் அடக்குமுறைகளும் மக்களால் உணரப்படும் போது மக்கள் புரட்சிகர வெகுஜன எழுச்சியில் எழுந்து முன்செல்வார்கள.; அதுவே வரலாறாக இருந்து வந்துள்ளது. அத்தகைய வரலாற்று எழுச்சிக்கு வழிஅமைப்பதும் புரட்சிகரப் பாதையில் அணிவகுத்துச் செல்வதுமே மாக்சிச லெனினிச வாதிகளின் வரலாற்றுக் கடமையாகும். இதனை தத்துவத்தாலும் நடமுறையாலும் முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகரப் பணியை எமது கட்சி முன்னெடுத்துச் செல்லும் என்பதில் உறுதியாகவே இருந்து வருகிறது. அதேவேளை நாட்டின் நேர்மையான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகளோடு கரம் கோர்த்து செல்வதையும் எமது கட்சி வற்புறுத்தி நிற்கின்றது.

கொழும்பு

மத்திய குழு

 புதிய-ஜனநாயக மாச்சிச- லெனினிசக் கட்சி

31.08.2014