Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும்

கடந்த மூன்று நாட்களாக, இந்தியப் பத்திரிகைகள் தொலைக் காட்சிகளில் ஒரே ஒப்பாரி: மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மாவட்ட ஒரு நல்ல ஆட்சித்தலைவரைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். கொலைகார்கள். ஐயோ என்ன இது மோசம். மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. அவர்களோடு பேசக்கூடாது அவர்களுடனான போரை தீவிரப்படுத்த வேண்டும். விமானங்களைக் கொண்டு தேடவேண்டும். முடிந்தால் ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு அவர்களை மீட்க வேண்டும்! இப்படிப் பலவாறாக பேச்சு! உளறல் !

 


இதில் என்ன உண்மை
மாவோயிஸ்டுக் கட்சியின் ஆயுதப் படைப் பிரிவினர் ஒரிசாவில் உள்ள மல்கான்கிரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், உள்ளூர்ப் பொறியாளர் ஒருவரையும் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். மல்கான்கிரி ஒரு அரசின் எந்த வசதியையும் பெறாத ஒரு மாவட்டம். மிகவும் வளமான இங்கே வற்றாத ஆறுகளும், அணைகளும், விலை மதிப்பில்லாத கனிம வளங்களும் கிடக்கின்றன.
இதுவரை  எந்த ஒரு அதிகாரியும் சென்று பார்க்காத ஒரு குக்கிராமத்தை இந்த அதிகாரி சென்று முதல் முறையாக சென்று பார்வையிட்ட பொழுது அவர் கடத்திச் செலலப்பட்டார். ஒரிசா ஆந்திரா மாநில எல்லையில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் சூழ்ந்த 150 கிராமங்களில் இந்தக் கிராமும் ஒன்று. இங்கே மின்வசதி ஏதும் இல்லை. அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைத் தொடங்கிவைக்க இந்த அதிகாரி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அங்கே அருகில் இருக்கும் பாலிமேலா நீர்த்தேக்கம் மிகப் பெரிய அணைகளில் ஒன்று, கூடவே, நீர்மின் நிலையமும இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்கும் மேலாகியும் இன்னும் இந்தக் கிராமத்திற்கு ரோடும் இல்லை. மின்சாரமும் இல்லை. அதனாலதான் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட தன்னுடைய ஜீப் வண்டியில் போகமுடியாமல் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.
அதைவிடக் கொடுமை இந்தக் கிராமத்தின் கரையில் எடுக்கப்படும் மின்சாரம் இந்த மக்களுக்கு விளக்கு எரிக்கக்கூட கொடுக்கப் படவில்லை. ஆனால், இங்கு எடுக்க்கபடும் மின்சாரம் மாநிலம் முழுதும் சென்று இந்திய தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்கு முதல் முறையாகச் சென்ற ஒரு அதிகாரியைத்தான் அந்த ஊரில் தங்கி இருந்த மாவோயிஸ்டுகள் கடத்திக்கொண்டு போய்விட்டார்களாம். சாதாரணமாகப் பார்த்தால் இதில் என்ன ஆச்சர்யம். ஒரு வேளை இந்த அதிகாரியைப் பார்த்து மக்கள் பயந்துபோய்க் கூட இதைச் செய்திருக்கலாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் குடியிருக்கும் கிராமத்தைக் கூட காலி செய்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வந்திருக்கலாம் என்று அந்த அப்பாவி மக்கள் நினைத்திருக்ககூடும் ?
அதைவிடுங்கள். கடத்திக் கொண்டு போன பின்னர் மாவோயிஸ்டுகள் என்ன கேட்கிறார்கள் ?  இதோ அவர்களது கோரிக்கைகள்:

1.        மல்கான்கிரியில் வாழும் பழங்குடிகள் போலவே ஒரிசா முழுவதும் சுமார்  800 பேர் எந்தவிதமான குற்றச் சாட்டுகளும் இல்லாமல்   ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். ஒன்று – அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிந்து வழக்குத் தொடுங்கள். அல்லது – வழக்கு முடியும் வரை அவர்களை ஜாமீனில் விடுங்கள். இந்திய அரசியல் சட்டம் சொல்வதை அவர்கள் கேட்கிறார்கள்.
அமைதியாகச் சொன்னால் இந்த அதிகாரிகள் கேட்கப் போவது இல்லை என்பதால் அவர்கள் ஒரு அதிகாரியைப் பிடித்து தங்கள் மத்தியில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கக்கூடும்?

2.       மாவோயிஸ்டு தலைவர் என்று குற்றம் சாட்டி வழக்கு ஏதும் இன்றி பிடித்து வைத்துள்ள பிரபலமான ஆந்திர எழுத்தாளர் சங்கத் தலைவர் ஒருவரை ஜாமீனில் விடுவிக்கச் சொல்கிறார்கள். அவர் மீது எந்த வழக்கும் இல்லை. பதியப்பட்ட 6 வழக்குகள் அனைத்தும் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி ஆகிவிட்டது. ஆனாலும், அவரை நீதிமன்றம் விடுவித்த மறு வினாடி இன்னொரு வழக்கில் போலீஸ் கைது செய்து உள்ளே வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை வெளியில் விடச் சொல்லுவதில் என்ன தவறு ?

3.      ஆந்திர மாநிலத்தில் அநாதை இல்லம் நடத்திவந்த பெண் ஒருவரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்து மல்கான்கிரி ஜெயிலில் வைத்திருக்கிறார்கள். ‘அந்தப் பெண்ணின் கணவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் எனவே, அவரும் மாவோயிஸ்ட்’ என்று சொல்லிக் கைது செய்து விசாரணை இல்லாமல் ஜெயிலில் வைத்திருக்கிறது ஒரிசா போலீஸ்.  அந்தப் பெண்ணை விடுவிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அதுவும் ஜாமீனில்தான் விடச் சொல்லிக் கேட்கிறார்கள். அவர் நடத்தும் அநாதை விடுதி இன்னும் இருக்கிறது, அவர் எங்கும் ஓடி விடமாட்டார். இதில் என்ன தவறு. அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள்.

4.       நாராயணபட்டினம் என்ற ஊரின் அருகே இந்திய தொழில் நிறுவனமான டாட்டாவின் இரும்பு ஆலைகளுக்காகவும், சுரங்கங்கள் தோண்டவும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காலி செய்யப்பட்டுவருகிறார்கள். சில மாதங்கள் முன் அமைதியாக நடந்த ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பொழுது  பலர் புல்டோசர் எந்திரம் ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஒரு எழுபது வயது முதியவர் வழக்கு எதுவும் இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியில் விடச்சொல்லிக் கேட்ர்கிறார்கள். அதில் என்ன தவறு ? அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் கேட்கிறார்கள்.

5.       கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போலீசுடன் மோதல் நடந்ததாக சொல்லி இருபத்து ஐந்து பேர் இங்கே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இபாடிக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளில்’ கைக் குழந்தைகள் முதல் நடமாட முடியாமல் படுக்கையில் கிடந்த மூதாட்டிகள் வரை அடக்கம். இந்தக் கொலைகளைப் பற்றி நியாயமான வகையில் விசாரிக்கக் கேட்கிறார்கள்.  எல்லாக் கொலைகளையும் விசாரிக்க வேண்டும் என்று இந்திய சட்டங்களும் நீதிமன்றங்களும் சொல்வதைத்தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு ?

ஆனால், இந்தியத் தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் என்ன சொல்லி வருகின்றன:

மாவோயிஸ்டுகளின் அநியாயமான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது.
அவர்களுடன் எந்த சமாதானமும் செய்து கொள்ளக் கூடாது.
அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
நியாயமான கோரிக்கைகளைக் கூட இந்திய அரசும் அதன் போலீஸ் அமைச்சர் சிதம்பரமும் கேட்கும் நிலையில் இல்லாதபொழுது பழங்குடி மக்கள் வேறு எப்படித்தான் நியாயம் கேட்பார்கள்.

அம்பானிக்காக வழக்கு என்றால் உச்ச நீதிமன்றம் கூட ராத்திரியில் கதவைத் திறந்து வைத்து விசாரிக்கும். இருபது ஆயிரம் கொலை செய்த  போபால் விச வாயு வழக்கில் கம்பெனி முதலாளியான மகேந்திராவுக்கு ஒன்றரை ஆண்டு தண்டனை. வழக்கு விசாரிக்க எடுத்துக்கொண்ட இருபத்து ஐந்து ஆண்டுகள் அவர் ஜாமீனில் இருந்தார். வழக்கு முடிவில் மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
உலகம் அறிந்த கொலைகாரனை சிறை வைக்க இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இல்லை. ஆனால், அதே நீதிமன்றங்கள் வழக்கேதும் இல்லாமல் ஆயிரக் கணக்கான அப்பாவிகளை ஆண்டுக் கணக்கில் சிறை வைத்தால் கூட யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இதைக் கேட்க இந்தப் பத்திரிகைகள் அல்லது தொலைக் காட்சிகளுக்கு நேரம் இருப்பதே இல்லை.

இப்போது பரிதாபம் என்னவென்றால் இப்படி ஒரு மாவட்டம் இந்தியாவில் இருப்பது கூட பல தொலைக் காட்சிகளுக்குத் தெரியவில்லை. ஒரு சினிமா நடிகர்கள் உள்ளாடை இல்லாமல்  விருந்துக்குச் சென்ற விஷயம் விரிவாக விவாதிக்கப்படும் இந்த தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இப்படி ஒரு மாவட்டம் இருப்பதோ, அங்கே அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் சிறையி இருப்பதோ தெரிய நியாயம் இல்லைதான்.

இந்தக் கடத்தல் மூலம் மாவோயிஸ்டுகள் இப்படியெல்லாம் கூட இந்தியாவில் இருக்கிறது என்ற விபரங்களைக் தெரியக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

இந்த மாதம் முதல் வாரத்தில், ஐந்து போலிஸ்காரர்கள் அருகில் உள்ள சத்திஸ்கார் மாநிலத்தில் கடத்தப்பட்டபோது அரசாங்கமும் தொலைக்காட்சிகளும் அவர்களைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அக்னிவேஷ் என்ற மனித உரிமை ஆர்வலர் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியில் கொண்டு வந்தார். அந்த விபரத்தைக்கூட ஒரு தொலைக் காட்சியும் பத்திரிகையும் முறையாக வெளியிடவில்லை.
அந்த ஐந்து பேரும் மாவோயிஸ்டுகளால வெளியில் விடப்பட்ட போது மக்கள் முன்பு பேசிய உருக்கமான காட்சிகள் அடங்கிய வீடியோ படங்கள் இங்கே:
http://www.youtube.com/watch?v=ckzfd8Qua30

நூற்றுக் கணக்கான கிராம மக்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள்,மனித உரிமை ஆர்வலர் அக்னிவேஷ்  முன்னிலையில் விடுவிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் சொன்னது:

நாங்கள் பிடிபட்ட போது எங்களை மாவோயிஸ்டுகள் கொன்று விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர்களோ,    பிடிபட்ட எங்களுக்கு வேளை தவறாமல் உணவு கொடுத்தார்கள்.

மாவோயிஸ்டுத் தோழர்கள் தங்கள் சகோதரர்களைப் போல எங்களைக் கவனித்து சமமாக உட்கார்ந்து பேசி எங்களை சமாதனப் படுத்தினார்கள்.
ஒருதடவைகூட  திட்டவோ வசைபாடவோ இல்லை. மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள்.

நாங்கள் ஏழைக்குடும்பங்களில் இருந்து போலீஸ் வேலைக்கு சென்று இருக்கிறோம் என்பதால் அரசாங்கம் எங்களைப் பற்றிக் கவைப்படாமல் இருந்தது. எங்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் எங்களை விடுதலை செய்து விட்டார்கள்.

பவானி

22/02/2011