Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு!

வன்னி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் மற்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி குடும்பத்தினரும், உறவினரும் தகவல் அறிய முடியாமலும் அதற்க்காக போராட முடியாத நிலையிலும் இருந்த நிலையில் தெற்கிலிருந்து வந்த "மக்கள் போராட்ட இயக்கத்தின்" தோழர் லலித்துடன் இணைந்த குகன்- இருவரும் சேர்ந்தே முதன் முதலில் காணாமல் போனவர்களை தேடும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கும், குடும்பத்தினருக்கும் காணாமல் போனவர்களின் விடுதலைக்காக போராட அன்று இருந்த அச்ச நிலையினை இவர்களின் போராட்டம் போக்கியது.

காணாமல் போனவர்களுக்காக போராடியதற்க்காகவும் தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்காகவும் உழைத்த இருவரையும் மகிந்த அரச படை கடத்தி சென்று காணாமல் போகச் செய்தது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெகுஜன அமைப்பான "சம உரிமை இயக்கம்" தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்று சிங்கள மக்களை தமிழ்-முஸ்லீம் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வைப்பதன் மூலம் இலங்கை மக்களிடம் புரையோடிப்போயுள்ள இனவாதத்தை களைவதனை தனது நோக்காக கொண்டு செயற்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சம உரிமை இயக்கம் பல போராட்டங்களை இலங்கை மற்றும் ஜரோப்பா எங்கும் தொடர்ச்சியாக கடந்த ஜந்து வருடங்களாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக சிறைக்கைதிகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த கைதிகளின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் உள்பட இலங்கை முழுவதும் பரவலாக சம உரிமை இயக்கத்தினால் “இப்போதாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்!”, “இப்போதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த புதன் அன்று (14/10/15) அரசியல் சிறைக்கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்; இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு புகையிர நிலையத்தின் முன்னால் சம உரிமை இயக்கம் நடாத்தியிருந்தது. அத்துடன் ஜனாதிபதி அவர்களிடம் ஒரு கைதிகளின் உடனடி விடுதலை குறித்து மகஜர் ஒன்றும் குடும்பத்தினர் மூலம் வழங்கப்பட்டது.

இந்த போராட்ட நிகழ்வு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் முக்கியத்துவத்தை பெற்றிருந்தது. அரசிற்கும் சில மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளிற்கும் ஒரு நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் போராட்ட எழுச்சியினை மழுங்கடிக்கும் சில செயற்பாடுகள் நேற்றும், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருவதனை அவதானிக்கலாம்.

அரசியல்வாதிகளின் இனவாத தீயில் பிரிந்து இருந்த மக்கள் கைதிகளின் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடுதனை கண்டு சகிக்க முடியாத அரசியல்வாதிகளின் செயற்பாடே இந்த சாணி அடிப்பும் கிழிப்புமாகும். ஆனால் சம உரிமை இயக்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தமது நீண்ட தொடர்ச்சியான போராட்டத்தில் இருந்தும் இனவாத நடவடிக்கைகளிற்கு எதிரான தனது செயற்பாடுகளில் இருந்தும் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என் உறுதி கொண்டுள்ளது.