Fri12092022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதி செய்வோம் – பகுதி 08

“சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு” கொழும்பில் ஜனவரி 6 முதல் 9வரை நடந்து முடிந்த சூழலில், இங்கு எமது பேசுபொருளை அது தொடர்பில் அமைத்துக்கொள்ள அவசியமுள்ளது. தவிர்க்க முடியாது காலதாமதமாகிய எமது சந்திப்பின் தொடர்ச்சியில், பௌத்த – சிங்களப் பேரினவாத நிலைப்பாடு தொடர்பில் பேச வேண்டும் என்ற திட்டமிருந்தது. அதனைப் பின் போடும் வகையில் இந்த மாநாடு இடையீடு செய்துள்ளது.

 

கண்மூடித்தனமான எதிர்ப்பு!

அவ்வளவுக்கு முக்கியத்துவம் மிக்கதா மாநாடு?.  கண்மூடித்தனமாய் எதிர்த்தாக வேண்டும் எனும் ஏதோவொரு கட்சி சார்பில் செயற்படுபவருக்கு முக்கியத்துவமற்ற நிகழ்வாக அது அமையலாம். குறிப்பாக, மாநாட்டைப் புறக்கணிக்க அறை கூவிய புலி சார்பாளர்களுக்கு அப்படியாயிருக்கலாம். நாடு கடந்த ஈழப் புலி வாலைப் பிடித்து இழுபட்டு வீராவேசம் பேசியபடி, ஈழப் போராட்டத்தில் மக்களைப் புறக்கணித்த புலிகளின் தவறு பற்றி நுண்ணாய்வுப் பிரகடனங்கள் விடுக்கும் போலிப் புரட்சி வேடதாரி உதிரிகளின் ‘அமைப்பாக்க’ முழக்கமாயும் மாநாடு புறக்கணிக்க வேண்டியதே எனும் கருத்து அமைந்திருந்தது.

 

ஆயினும், அந்த அமைப்பாக்கமற்ற அமைப்பின் உதிரிப்புரட்சி வேடதாரிகளில் பலரும் மாநாட்டில் பங்கேற்றனர், அல்லது பார்வையாளராய்க் கலந்துகொண்டனர் எனும், அநதவகையில் மாநாடு புறக்கணிக்கலியலாததாய் அமைந்தது. மாநாடு குறித்த பத்திரிகைச் செய்திகள் சுட்டிக்காட்டிய மண்டபம் நிறைந்து வெளித் தள்ளித் ததும்பிய கூட்டம் அலை மோதிய மாநாடு எனும் விடயம் அர்த்தமற்ற மிகைப்படுத்தலல்ல. தமிழ்ச்சங்க மண்டபம் கொள்ளளவில் சிறியதேயாயினும், இத்தகைய மாநாட்டில் எதிர்ப்பார்க்கப்பட்டதையும் விட அதிகமாகவே எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆர்வாலர்கள் கலந்து கொண்டார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர்.

புறக்கணிப்புக் கூச்சல் தோல்வியே!

 

இந்தியாவிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வந்தோர் இதனுடன் ஒப்பிடும் போது குறைவாயினும்; கணிக்கத்தக்க கனதியை ஏற்படுத்தவல்லவர்கள் வருகை தந்திருந்தனர். இது மிகப் பிரதானமான அம்சம். மாநாட்டுப் புறக்கணிப்பு பற்றிய கூச்சல் தோல்வியேயாயினும், ஓரளவுக்கு இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் அது கவனிக்கப்பட்ட துண்டு.  அதேவேளை இலங்கையினுள் அக்கோரிக்கை படுதோல்வியைத் தழுவியுள்ளது.

இதன் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த கவனிப்புக்குரியது. இலங்கை மண்ணில் வாழும் தமிழ்பேசும் எமக்காகத்தான் எனக்கூறிக் கொண்டு நாடு கடந்தவர்கள் போடும் கூப்பாட்டின் போலித்தனத்தை, இது பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தியுள்ளது. எமது அவசியத்தின் பேரில் இத்தகைய ஒரு மாநாடு அவசியம் என்ற உணர்வே மிகப்பெரும்பாலோரிடம் வெளிப்பட்டதைக்  காணமுடிந்தது.

மாநாட்டுத் தொடக்க விழா, மண்டபத்தின் கொள்ளளவைக் கேள்விக்குட்படுத்திய போதிலும், அமர்வுகள் மூன்றிடங்களில் பிரித்து நடாத்தப்பட்டமையால் கலந்து கொண்டவர்கள் திருப்தியுற முடிந்தது. ஒரே வேளையில் தாம் விரும்பிய இரு அமர்வுகளை எதிர் கொண்ட பார்வையாளர்களிடம் சில சங்கடங்கள் காணப்பட்ட போதிலும், இத்தகைய சர்வதேச மாநாடொன்றில் அது தவிர்க்கவியலாதோர் இரண்டில் மிகுந்த முக்கியத்துவமுள்ள ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியதுதான்! மாநாட்டு கட்டுரைகள் முழுதாகத் தொகுக்கப்படின் இக்குறை பாதகமற்றதாகவியலும்.

ஒவ்வொரு அமர்வும் கோவைச் செம்மொழி மாநாட்டை விடவும் செழிப்பாக அமைந்திருந்தன. ஆரோக்கியமான கருத்தாடல்கள் இடம்பெற்றன. சில வேண்டத்தகாத அம்சங்கள் வெளிப்பட்ட போதிலும், அமர்வுகளின் காத்திரமான பங்களிப்புடன் ஒப்பிடப்படும்போது மன்னிக்கத்தக்கனவாய் அமைந்தன. மாநாட்டில் பங்கேற்றவர்களிடம் குறைபாடுகள் என்ன எனக்கேட்டபோது, குறிப்பாகச் சொல்வதை விடவும் சில விடயங்கள் பலவீனமாயினும், இது முதல் முயற்சி எனும் வகையில்  பெரிதுபடுத்த முடியாது என்பதற்காகவே குறிப்பிட்டனர்.

மாநாட்டின் தவறுகள்

அவ்வாறு கவனிக்கத்தக்கதல்லாத குறைபாடுகள் தாம் இருந்தன என்பதற்கு இல்லை.  பாரதூரமான தவறுகள் இருந்ததுண்டு.  இது தொடர்பில் 7.1.2011 வெளியான ‘மீள்பார்வை’  கவனிப்புக்குரியது . “சர்வதேச எழுத்தாளர் மாநாடு: ஒரு புதுக்கதை”  எனும் தலைப்பில் றியாஸ் குரானா மாநாட்டின் ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் கருத்தை முன்வைத்து “விளிம்பு நிலையில் வைத்துப் பார்க்கப்படும் சிறு சமூகங்களின் அரசியல் இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஆதரவாக என்ன செய்யப்போகிறார்கள்?”   எனும் கேள்வியை எழுப்பியிருந்தது (அப்படி எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை என்ற ஆதங்கம் தொக்கி நிற்கின்றது).

மறுபக்கம் (05வது பக்கம்) ஏறத்தாழ முழுவதும் மாநாடு பற்றியது. கீழ் அரைப்பக்கம் வரவேற்று – மேல் அரைப்பக்கத்தின் முக்காற் பங்கு கண்டிக்கப்பட வேண்டியதெனக் கூறப்படுவது சார்பானவை. அதன் காற்பங்கில் படுத்திருக்கும் சிங்களப் பேரினவாத அரசியல் நடிகருக்கான பகிரங்கக்கடிதம். ‘நாங்களும் இருக்கிறம்’ எனும் தலைப்பில் ‘மாற்றுப்பிரதி வெளியிடப்பட்ட பிரசுரம்’  மேல்வரும் பந்தியுடன் நிறைவுற்றது. “இலக்கியம், அரசியல் போன்ற வெளிகளில் சிறுகதையாடல்களுக்கான உரிய இடத்தைக் கோருகிறோம். அதற்கான இடம் வழங்கப்படாத இம்மாநாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்”.

முன்னதாக இதற்கான விளக்கம் அமைந்திருந்தது. முதல் இரு பந்திகள் இப்படி, அயல் நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்கும், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே அரசியல், இலக்கியச் சிந்தனைப் பரிமாறலைச் சாத்தியப்படுத்துவதோடு, அவர்கள் எதிர்காலத்தில் இணைந்து பல்வேறு இலக்கிய அரசியல் பணிகளை முன்னெடுக்கவும் இந்த மாநாடு வாய்ப்பளிக்கும் என நம்பியிருந்தோம்.

ஆனால் இன்று கொழும்பில் நடத்தப்படட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒரு குழுநிலை அளவிலான செயற்களத்தைக் கொண்டதாகவே உணரமுடிகிறது. விரிந்த தளத்தில் இதன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால்,  இந்த மாநாட்டின் செம்மையும் விரிவும் முக்கியத்துவமும் வேறாக அமைந்திருக்கும். அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமுமாகும்.

பொதுவான இலக்கியச் செல்நெறி கவனிக்கப்பட்ட அளவுக்கு எதிர்ப்பு இலக்கியக்களம் பார்க்கப்படாதது மட்டுமன்றி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குரல் இங்கு ஓங்கியொலிக்கப்பட்டிருந்தது. சிங்கள, தமிழ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களது இலக்கியம் போதிய கவனம் பெறப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக  கடந்த 25 ஆண்டுகால எதிர்ப்பிலக்கியம் அல்லது ஜனநாயகத்துக்கான போராட்டம் எனக் கருதும் இலக்கியமும், அத்தோடு இருபெரும் கதையாடல்களுக்கு எதிரில் செயற்பட்ட முஸ்லிம்கள், என்றைக்குமாக மலையைச் சுமக்கும் மலையக மக்கள், தலித்கள், போராளிகளாக தம்மை அறிவித்துக் கொண்டவர்கள், பிற உதிரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விளிம்பு நிலை இலக்கியச் செயற்பாடுகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்றது -மாற்றுப்பிரதி வெளியிட்ட பிரசுரம்.

இத்தகைய கண்டனங்களை வெளியிட்ட இரு கட்டுடுரைகளும் பூரண புறக்கணிப்பைக் கோரவில்லை. மாநாட்டில் கலந்து கொண்டு மேற்படி சிறுகதையாடல்களுக்கான களம் தேடும்முயற்சியை வலியுறுத்துவனவாயே அவை அமைந்திருந்தன.

ஆதரவும் எதிர்ப்பும்!

“சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வரவேற்கிறோம்!.  இலங்கையிலிருந்து புகலிடத்திலிருந்தும் எழுத்தாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கை”  எனும் தலைப்பிலான பகுதி முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருந்தது.  இம் மாநாட்டுக்கு அரசு தொடர்பு எவ்வகையிலும் கிடையாதென்பதைக் கூறி  “இன்று இலங்கையில் ஊடகச் சுதந்திரம் அரசால் கடுமையாக அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாநாடு தேவையா என எழுப்பப்படும் எதிர்ப்புகளையும் நாம் நிராகரிக்கிறோம்”  என்பதை வலியுறுத்துவது அந்த எழுத்தாளர்களது அறிக்கையின் அடிப்படைக்குரல்.  “இலங்கையில் மாநாடு நடத்துவது  எமது  பிறப்புரிமை. முப்பது வருடகால யுத்தத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்களிடமிருந்து இலங்கை அரசாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இன்னபிற ஆயுதக் குழுக்களாலும் பறிக்கப்பட்ட கருத்து-எழுத்து உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நெடிய போராட்டம் எம்முன்னே உள்ளது. அந்த நெடிய பாதையில் இவ்வாறான ஒரு மாநாடு நடைபெறுவது ஒரு முன்னேற்றகரமான புள்ளியென்றே கருதுகிறோம்” என்பது மேற்படி அறிக்கையின் எழுத்தாளர்களது குரல்.

இந்த மாறுபட்ட கருத்துக்களுடன் இறுதியில் மாநாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தியதான அறிக்கையையும் வெளியிட்ட ‘மீள்பார்வை’  இஸ்லாமியப் பத்திரிகை என்பது கவனிக்கத்தக்கது. தனிமைப்பட்ட தமிழ் மாநாடாக அல்லாமல் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமானது என்கிற வகையில் முஸ்லிம் எழுத்தாளர்கள் கனிசமான அளவில் பங்கேற்றிருந்த மாநாடாக அமைந்திருந்தது.

எமது மண்சார்ந்த விடயங்கள்!

எமது மண் சார்ந்து இந்த விடயங்கள் மிக மிகப் பெரிய வீச்சுக்கள் என்பதற்கு காரணம் உண்டு. மக்கள் மத்தியில் எழுச்சியுறும் ஐக்கியத்துக்கான அவாவின் வெளிப்பாடுதான், மக்களின் பிரதிநிதிகளான எழுத்தாளர்கள் மத்தியில் ஒன்று பட்டு இவ்வாறு ஒரு மாநாடு அரங்கேற்றப்பட வேண்டும் என்ற செயல் வேகம் ஏற்பட்டமை அதன் அமைப்பாக்கம் எனும் வகையில் முறபோக்கு அணியினரும் ஞானம் சஞ்சிகையினரும் பிறரும் ஒருங்கிணைந்து மாநாட்டினைச் சாதனையாக்கியமை  வரவேற்பிற்குரிய ஒன்று.

கோட்பாட்டு ரீதியிலான குறைபாட்டில் பிரதானமாக தலித் அரங்கு ஒன்று தவிர்க்கபபட்டு, தப்பிக்கும் முயற்சியாக -நலிவுற்றோர் இலக்கியம் போதியளவு கவனிப்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளதா? எனும் கருத்தாடல் நிகழ்வு இது தொடர்பில் காத்திரமான விவாதத்தை எழுப்பியிருந்தது.

பிரதானமாக, அக்கருத்தாடல் அரங்குக்குத் தலைமை தாங்கிய தெனியான் அதனைத் தொடக்கி வைத்தார். முடிவில் சபையோர் குறிப்புரையில் புலம்பெயர் இலக்கியச் சந்திப்புகளில் தலித் இலக்கியம் முதன்மைக் கவனிப்பைப் பெற முடிந்துள்ள போது இங்கே ஏன் தவிர்க்கப்பட்டது? எனும் கேள்வியைச் சுசீந்திரன் எழுப்பியிருந்தார். இந்த விவாதங்கள் வேறொரு தளத்தில் அவசியம் பேசப்பட வேண்டும் (அடுத்த எமது சந்திப்பில் கூடப் பேச இயலும்.!)

இங்கு எமக்கு அவசியமாவது எமது மண்ணின் யதார்த்ததைப் புலம் பெயர்நதோர் பூரணமாக உணர்வதென்பதே.. இவற்றை எவ்வடிவில் வெளிப்படுத்தப் போகிறோம்?.  மக்களின் ஐக்கிய அவாவின் வெளிப்பாடாக  காத்திரமான உரையாடலகள் தேவை.  இவை  இந்நிகழ்வுகளுக்கு ஊடாக சாத்தியப்படும், சாத்தியப்படுகின்றன. இதனைக் குழப்புவதற்கு புலம் பெயர் உயர்சாதிய வர்க்கத் தரப்பு எடுக்கும் முயற்சியை எவ்வகையில் முறியடிக்க முயற்சிக்கப் போகிறோம்?. எமது மண்ணின் யதார்த்தத்துக்கு உகந்த தீர்வுக்கு முயலும் எத்தனிப்புகளில், புலம்பெயர் எழுத்தாளர்களில் எமக்கு  உறுதுணையாகத் துணிந்து இங்கு வந்த சக்திகளை மேலும் வலுவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? மேலும் வலுவான ஐக்கியத்தை எப்படிக்  கட்டியெழுப்பலாம்?

(தொடரும்)