Fri12092022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதிசெய்வோம் – பகுதி 10

இரண்டு மாதங்களுக்கு முந்திய உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிப் பேசியிருந்தோம். அது தொடர்பில் சில பின்னூட்டல்கள் உண்டு. அவற்றுடனான உரையாடல் இந்தப் பேசு பொருளின் இடையீடாகக் குறுக்கிடும்.


ஊடக விமர்சனங்கள்

எவ்வாறாயினும் மாநாட்டின் அவசியமும் வெற்றியும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படுவதனை இங்கு வெளிவரும் தினசரிகள் சஞ்சிகைகள் வாயிலாக அறிய முடிகிறது. குறிப்பாக பெப்ரவரி மாதத்தின் “மல்லிகை” மற்றும் “ஞானம்” சஞ்சிகையின் இதழ்கள் மாநாட்டினால் பெற்ற உத்வேகத்தினை மிகுந்த ஆர்வத்தோடு வெளிப்படுத்தியிருந்தன. மாநாட்டுக்காக ஐக்கியப்பட்ட சக்திகளின் குறியீடாக இவ்விரு சஞ்சிகைகளையும் குறிப்பிட முடியும் (மற்றொரு வலுவான சக்தியாக “மீள்பார்வை” மாதமிரு இஸ்லாமியப் பத்திரியைக் குறிப்பிட இயலும், வேறுபல சிற்றிதழ்கள் மற்றும் தனி ஆளுமைகளது இணைவின் வலு இந்த மூன்று சக்திகளது ஐக்கியத்தை வலியுறுத்தும் போது குறைத்து மதிப்பிடப்படுவதாயக் கருதிவிட இடமுள்ளது. அந்த வகையில் அனைத்து சக்திகளது உயிர்ப்பான இணைவின் குறியீடாக இவை கூறப்படுகிறதே அல்லாமல், எந்தவொரு பகுதிச் சக்திகளும் மாநாட்டின் வெற்றியைத் தமக்கானதாக மட்டிடுவது ஆரோக்கியமற்ற எதிர்காலத்துக்கு வழிகோலிவிடும் என்ற எச்சரிக்கையை மனதில் இருத்திக்கொள்வோம்).

அவப்பேறாக தனிமைப்படலும், செருக்கும், தன்முனைப்பும் மேவி அழிவுகளை அதிகம் அதிமாய் விளைச்சலாக்கிவிட்ட எமது தமிழ்பேசும் சமூகங்களில் அத்தகைய அச்சுறுத்தல் மிக்க எதிர்காலத்துக்கான சமிக்ஞையாக அல்லாமல் தொடர்ந்தும் ஆரோக்கியமான பாதையிலேயே மாநாடு குறித்த செய்திகள் இங்கே வெளிப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர், முஸ்லிம்மக்கள், மலையகச் சமூகம் என்பவற்றின் இணைவு சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக அல்லாது இணக்க வாழ்வுக்கான சிறந்த சமிக்ஞையாகவும் வெளிப்பாடு அடைந்து நிற்கிறது. இந்த அவசியங்களையே மாநாட்டை நிராகரிக்கக் குரல் கொடுத்த புலம்பெயர் அமைப்புகளும் தமிழகத்தவரும் கவனிக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.

அவர்களுக்கு எதிராக மார்தட்டி, நாம் வலுபெரிய சாதனையை உங்களுக்கு மாறாக நிகழ்த்திக்  காட்டி விட்டோம் என்று எவரும் தம்பட்டம் அடிக்கவில்லை. தவறான புரிதல்களை இம்மாநாடு அகற்றிவிட்டுள்ளது. அவர்களும் எமது மக்களின் முன்னேற்றத்துக்கு வலு சேர்க்க வேண்டும் எனும் விருப்பினையே மாநாட்டு ஆதரவு தொடர்பிலான அனைத்து செய்திகளும் வலியுறுத்தியவாறுள்ளன. இது மிகுந்த கவனிப்புக்குரியது. மாநாட்டு வெற்றி எந்தவொரு பிரிவினலாலும் தனியே உரிமை கோரப்படவில்லை. அதே வேளை, இது எமது முன்னேற்றத்தின் அறிகுறி என்று வெளிப்படுத்தப்படுகிறதே அல்லாமல் எவருக்கும் எதிரான வெற்றியாகக் கொண்டாடப்படவில்லை.

காய்தல் உவதல்லற்ற நோக்கு

“இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அண்டைய தமிழகம், சர்வதேசம் எடுக்கும் நிலைப்பாடுகள் பற்றி இலங்கையில் வாழும் நாம் காய்தல் உவத்தலின்றி நோக்குதல் வேண்டும். காலம் கற்றுத் தந்த பாடங்களால் காயப்பட்டுப் போன நாம் தந்திரோபாயமாகவும், விவேகமாகவும் ‘இனி’ சில விடயங்களைத் ‘தொடங்க’ வேண்டியுள்ளது. ‘வெள்ளவத்தையில் – இலங்கையில் சர்வதேச மாநாடு 2011, வெற்றிகரமாக இனிதே நிறைவெய்தியது’.  இது விழுந்தவன் எழுந்ததற்கான குறியீடு  அடையாளம்.  நாம் வாழ்கிறோம், எதிர்காலத்திலும் வாழ்வோம், தமிழ் வளர்ப்போம் என்பதற்கான குரல். வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தவர் அனைவரும் ஒன்று கூடியதற்கான அடையாளப் பதிவு இம் மாநாடு. சொந்தங்களைச் சுகங்களை யுத்த வடுக்களை மீண்டும் மீட்டிட்ட அதே வேளை மீண்டும் எழுவோம் என்ற தொனிப் பொருள் அது. எனவே பல்தரப்பினரும் பங்களித்த இம்மாநாடு என்றும் சர்வதேசத்தால் பேசப்படும்.”

இது, மேற்படி வலியுறுத்தியவாறான வெளிப்பாட்டுப்பாங்குக்கான ஒரு பருக்கை உதாரணம். பெப்ரவரி 2011 ஞானம் (இதழ் 129) இல் “ சிறப்படன் நிகழ்ந்த சரவதேச எழுத்தாளர் மாநாடு” எனும் தலைப்பில் ச.முருகானந்தன் எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பந்தி அது.  இறுதி முத்தாப்பாக அவர் கூறுகிறார்

-     “மீண்டும் வேண்டுகிறேன்: சர்வதேச எழுத்தாளர்களே!  நீங்கள் புதிய ரீதியில் சிந்தியுங்கள்.  ஒன்றிணைந்து இயங்க ஒன்றிணையுங்கள். கிடைக்கும் களத்தில் உங்களை நீங்கள் அர்ப்பணியுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஆனால் என்றோ எங்கோ ‘ஓர் நாளிலாவது’ ஒன்றாய் இருங்கள்.”

மக்கள் நல நாட்டம்மிக்க ஒவ்வொரு எழுத்தாளரும் ச.முருகானந்தனின் இந்தக் குரலுக்கு செவிசாய்ப்பது அவசியம். அவர் எந்த ஒரு அணியையும் சார்ந்தில்லாமல் தனித்த ஆளுமையாக இயங்குபவர் என்றவகையில் எதோவொரு திசைக்கு இழுக்கும் உள்நோக்கம் அவரது குலலில் வெளிப்படவில்லை. மக்கள் விடுதலையை நாடும் அணிகளும், தனியாளுமைகளும் இக்குறிக்கோளை வென்றெடுக்க ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்!

றைகூவல்

“யார் யாரெல்லாம் இயக்கங்களுக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் இலக்கியத்தினூடாக சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்களுக்கு எப்போதும் எனது வீடு திறந்திருக்கின்றது”

எனக் கூறும் அஷ்ரப் சிஹாப்தீன் உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இன் செயலாளராக இயங்கியவர். குறித்த அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் மக்களுக்கான  நலன்களை வென்றெடுத்தல் எனும் குறிக்கோள் சாரந்த நிகழ்வாக மாநாடு அமைந்தமைக்கு இவர் மற்றொரு சான்று. அதற்காக குறித்த அரசியல்மார்க்க முன்னெடுப்புக்கு இப்பங்களிப்பை  அரவணைத்துச் செல்லக் கூடாது என்பது பொருளல்ல. இந்தத் தளம் இத்தகையது.  இதன் வாய்ப்பினால் பலம் பெறும் ஐக்கியப்படுத்தல் சரியான மக்கள் விடுதலை மார்க்கத்துக்கு உதவிகரமாக அமையும் எனும் புரிதலுடன், இதனைத் தமது அணிசார் அரசியல் நலன் என்றில்லாமல் மக்கள் தேவை நாட்டம் எனும் வகையில் அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு இத்தளத்தில் செயலாற்ற இயலும்.

“தமிழ் எழுத்துத்துறையிலும் இலக்கியத்திலும் முஸ்லிம்கள் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்” எனும் தலைப்பில் அஷ்ரப் சிஹாப்தீனின் பேட்டி “மீள்பார்வை” 215வது இதழில் (2011பெப்ரவரி04 வெளியீட்டில்) இடம் பெற்றுள்ளது. சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹ_த்தீன். சிஹாப்தீன் குறித்து தரப்பட்ட அறிமுக வார்த்தைகள் இங்கும் அவசியம் என்பதால் அப்படியே தரவேண்டியுள்ளது.

“இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட அஸ்ரப் சிஹாப்தீன் அவர்களது குரல் எல்லோருக்கும் பரிச்சயமானது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணி புரிந்தவர். ஜாமி ஆ நளிமிய்யாவின் பழைய மாணவர். இலக்கியத் தளத்தில் நீண்டகாலமாக இயங்கிவரும் இவர், கவிஞர்களுக்கான ‘யாத்ரா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். இதுவரையில் இவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.  2008ல் கவிதைக்கான தேசிய அரச சாஹித்ய விருது பெற்றவர். அண்மையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இவர் இயங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு குறித்து அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்.”

இயலுமாயின் பேட்டி முழுமையையும் பார்ப்பது அவசியமாயினும், இங்கு எமக்கு அவசியப்படும் பொருள் குறித்தே எடுத்தாள இயலும். “உண்மையில் முஸ்லிம்கள் வேறு தமிழர்கள் வேறு என்கிறவகையில் அங்கு எதுவுமே பார்க்கப்படவில்லை” எனக்கூறிய சிஹாப்தீன் பங்கெடுத்த முஸ்லிம்கள் பட்டியலை விஸ்தீரணமாக முன்வைத்தார். “இவ்வளவும் எப்படிச் சாத்திய மாயிற்று?” என்ற கேள்விக்கு “இதே வினாவை அவ்வப்போது சந்தித்த சில முஸ்லிம் நண்பர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்” எனக் கூறிக் கடந்த காலக் கசப்பான அனுபவங்களினின்றும் மீண்டு, “இப்பொழுது நாம் அதனையெல்லாம் தாண்டி வந்து விட்டோம். இந்த மாநாட்டின் பெறுபேறுகளில் ஒன்றாகவும் அதனைக் கொள்ள முடியும். அங்கு வேற்றுக் கண்ணோடு ஒரு விடயமும் பார்க்கப்படவில்லை” எனவும் வலியுறுத்தினார் சிஹாப்தீன்.

“இந்த நட்பும் பகிர்வும் நல்லுறவை வளர்க்கவும் மேலும் புதிய உத்வேகத்துடனான பல இலக்கியங்கள் பிறக்கவும் விட்டுக் கொடுப்புகள் நிகழ்வதற்கான, நட்பு மேலெழுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் இயங்கிய கலை இலக்கிய உலகம் போரின் காரணமாக ஸ்தம்பித்தது. இந்த மாநாட்டின்  பின் மீண்டும் ஒரு ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது. மொத்தமாகச் சொல்வதானால் இதை தமிழ் எழுத்துச் சூழலில் ஒரு புத்தெழுச்சி என்று சொல்லுவேன்” எனக் கூறும் சிஹாப்தீன் எதிர்ப்புக் குரல் குறித்தும் பிரஸ்தாபித்துள்ளார். “சில இணையத் தளங்கள் மாநாட்டை ஆதரிப்பவர்கள் இலங்கை ஜனாதிபதியின் பிரதிநிதிகள் என்றும் எதிர்ப்பவர்கள் தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்ற அடிப்படையிலிருந்தே செய்திகளை வழங்கின. இதன் மூலம் சில இணையத் தளங்களின் உண்மையான சொரூபங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு இவற்றுக்குக் கவனம் செலுத்துவதில்லை என்ற முடிவை செயற்குழு மேற்கொண்டது. எதிர்க் குரல்களுக்கு அஞ்சி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனமைக்காக பலர் வருந்துவதாகப் பின்னர் அறியவந்தோம்” என்பார் அஷ்ரப் சிஹாப்தீன்.

உண்மையை உணர்வோம்!

அரசுக்கு வலு சேர்த்திருக்கும் என்ற சந்தேகத்தில் மாநாட்டை நிராகரிக்கக் குரல்கொடுத்த இணையத் தளங்களில் சிலவேனும் உண்மை நிலையைக் கண்ட பின்னரேனும் தமது கணிப்பை மாற்றிக் கொண்டிருக்க இடமுண்டு. சென்ற தடவை உரையாடலுக்குப் பின்னூட்டல் வழங்கிய நண்பர்கள் இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்ட இணையத் தளங்களைத் தாமே மீள்பரிசீலனைக்குட்படுத்தலாம். அவை மாறத் தவறின் இங்கு எமது கள நிலவரத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பேணவாவைப் புரிந்து கொள்ளாமல் அவை தமது முடிவையே திணிக்க முனைந்தால், மக்கள் அவர்களைப் புறக்கணித்துத் தமது பாதையில் முன்னேறுவர் (சரியான அரசியல் வழிகாட்டல் இல்லாத இடர்ப்பாடு இங்கு உணரப்படவே செய்கிறது). எவ்வாறாயினும் அனைவரும் ஐக்கியப்பட்டாக வேண்டும் என்ற மக்களின் தாளாத ஆசையின் வெளிப்பாடுதான் இந்த மாநாட்டின் வெற்றி. அரசியல் அக்கறையுள்ளவர்கள் “மக்களிடமிருந்து மக்களுக்கு” என்ற மார்கத்தை முன்னெடுத்தால் மட்டுமே விடுதலை மார்க்கத்தில் மக்களுக்குத் தலைமை தாங்க இயலும்.    “மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்துசக்தி!”

இதனை மறந்து, தாமே வரலாறு படைப்பதாக மமதைகொள்ளும் சில உதிரிகள் இதைத் தமது கோசமாக உச்சரிப்பதண்டு. நடைமுறையில் உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொண்டு இயங்குவதில்லை. தத்தமக்கான தளங்களில் தன்முனைப்போடு தாமே பெரியர் என இயங்கும் சில உதிரிகள் – மற்றவரை அவரது தளத்தில் பெரியர் என்பதாய்ச் சிலாகித்துக் கூறித் தனக்கு அவர்களிடமிருந்து ஆதரவைப்பெறும் வகையில் இணைந்துள்ள எந்த அமைப்பும் ஸ்தாபனமயப்பாட்டுக்குரியது அல்ல. அத்தகைய அமைப்பொன்று மாநாட்டைப் புறக்கணிக்க இங்கே குரல் கொடுத்தது எனக் கூறியிருந்ததால் அதனை இனங்காட்டுமாறு பின்னூட்டலில் கோரப்பட்டுள்ளேன். அதற்கு அவசியமில்லை என்பதால் பெயர் சுட்டி எதுவும் இங்கே இடம் பெறப்போவதில்லை.

புரட்சிகர எழுச்சி சமூகத்துக்குரியதாக வியாபிதமடையும்போது அதனை விரும்பும் அணியொன்றில் சரியான சக்திகள் பெருகிவருவர். அப்போது தன்முனைப்பான உதிரிகள் கட்டுப்படுவர். சரியான ஸ்தாபன அமைப்புச் சாத்தியமாகும். இப்போது புரட்சிகரக் கோட்பாட்டை முன்வைக்கும் அணி எனக்கருதும் ஒன்றுக்கு எவரும் செய்யும் ஆதரவோ இணைவோ அங்கத்துவமோ நிறுத்தப்பட வேண்டும் என்பது இந்த உரையாடல் தொடரின் நோக்கமல்ல. நடை முறையே சிறந்த ஆசான். தொடர்ந்து இயங்கும்போது தவறுகளைத் திருத்த இயலும் எவரும் தவறே செய்யாது வளர்ந்ததில்லை. ஒரு அணி இப்போது தவறுக்குட்பட்டுள்ளதெனில் எப்போதும் திருந்த முடியாது என்பது பொருளல்ல. ஒவ்வொருவரும் தத்தமக்கான சரியான திசைமார்க்கத்தோடு தவறுகளுக்கு எதிராகத் தமது தளங்களில் தொடர்ந்து இயங்கியாக வேண்டும். அதன் பொருட்டு ஐக்கியப்படவல்ல அனைவரோடும் இணைந்தாக வேண்டும்.

தவிர, ஏனையவர்களுக்குத் தீர்ப்புச் சொல்ல நான் யார்? என்வரையியல் மக்கள் விடுதலைக்கான மார்க்கமொன்றில் அனைவரும் ஐக்கியப்பட வேண்டும் என யாசிக்கிறேன்.  ஐக்கியப்படுவோமா?