Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜே.வி.பியின் சிவப்பு வேசமும் - சுமந்திரனின் நவதாராளவாதமும்

மேதினத்தில் ஜே.வி.பியும் - சுமந்திரனும் சந்திக்கும் புள்ளி, தேர்தல் முறை மூலம்   நவதாராளவாத முதலாளித்துவத்தை முன்னெடுப்பதில் இருக்கும் வர்க்க ஒற்றுமை தான். இதே போல் மக்களை ஏமாற்ற பௌத்த சிங்கள சிந்தனையை ஜே.வி.பி. கொண்டிருந்தது போல், எதிர்மறையில் வெள்ளாளிய தமிழ் சிந்தனையை சுமந்திரன் கொண்டிருந்ததால், முதலாளித்துவ அணிகளின் ஒத்த குறிக்கோள் மேதினத்தில் ஒரு அணியாக அணிதிரளவைத்தது.

மேதினத்தை கேலிக்குள்ளாக்குவதும், விடுமுறையாக மாற்றுவதும், முதலாளிகள் தொழிலாளர்கள் சேர்ந்து கேளிக்கைகளுடன் பொழுதைப் போக்கும் தினமாக மாற்றுவதே, மேதினம் குறித்த முதலாளித்துவ உள்ளடக்கமாகும்;. அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர வர்க்கக் கூறுகளை அழிப்பதையே, ஆளும் வர்க்கமும் அரசும் தனது  நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. அதேநேரம் புரட்சிகர சக்திகளை, புரட்சிகர வேசம் போட்டவர்களைக் கொண்டு அழிப்பதுமாக இருக்கின்றது.

 

இந்தப் முதலாளித்துவப் பின்னணியில் ஜே.வி.பி. போன்ற போலி இடதுசாரிகளைக் கொண்டு, புரட்சிகர சக்திகளை காயடிப்பது நடக்கின்றது. இம் முறை ஜே.வி.பி. வெட்கம் மானமின்றி மேதினத்தை தொழிலாளர் விரோத உணர்வுடன் நடத்தியது.

பௌத்த சிங்கள நவதாராளவாத சிந்தனைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்திய ஜே.வி.பி., வெள்ளாளிய தமிழ் சிந்தனையின் பிரதிநிதியும் அரசுக்கு முண்டு கொடுக்கும் நவதாராளவாத தூண்களில் ஒருவரான சுமந்திரனுடன் சேர்ந்து, மேதினத்தைக் கொண்டாடியதன்  மூலம், தனது முதலாளித்துவ குணாம்சத்தை தொழிலாளர் உணர்வாக்க முயன்றது.

இதற்காக ஜே.வி.பி. புரட்சிகர திகதியை மட்டும் மாற்றவில்லை. உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற மார்க்சின் வர்க்க அரசியலை கேலிக்குள்ளாக்கும் வண்ணம் தொழிலாளர்களை தமிழர் - சிங்களவராக பிரித்திருக்கின்றது. புரட்சிகர அரசியலுக்குப் பதில் தேர்தல் வழிமுறை மூலம் வாக்குப் பெறுவதே கட்சிக் கொள்கையான பின், பௌத்த – சிங்கள சிந்தனையை தனது கொள்கையாக்கி வாக்குப் பெறுவதை இலக்காகக் கொண்டிருகின்றது. யாழ் மேதினத்தின் தார்ப்பரியம் இதுதான்.

புரட்சியாளனாக காட்டிக்கொள்ள போலி இடதுசாரிகளின் அரசியல் நடைமுறை, வெளி வேசம் போடுவது தான். சுமந்திரன் சிவப்பு உடையை அணிந்து தொழிலாளர்களுக்கு காட்சியளித்தது போல், சிவப்புக் கொடி பிடிப்பதன் மூலம் புரட்சியாளனாக நடித்து மக்களை ஏமாற்றுவதே ஜே.வி.பி. அணுகுமுறையாக மாறி இருக்கின்றது.

தொழிலாளிகளின் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து மேதினத்தை கொண்டாடுகின்ற முதலாளிகள் போல், போலி இடதுசாரிகள் ஆளும் வர்க்க பிரதிநிதிகளுடன் சேர்ந்து புரட்சிகர உணர்வை நலமடிக்க கொண்டாடுகின்றனர்.

உலக தொழிலாளர்களை இன-மத அடிப்படையில் பிரித்து, தமிழ் இனவாதிகளுடன் சேர்ந்து  மேதின நிகழ்வை நடத்திய ஜே.வி.பி.யானது, நவதாராளவாத முதலாளித்துவத்தின் நல்ல எடுபிடியாக தன்னை நிறுவிக் கொண்டது.

தேர்தல் கட்சிகள் மக்கள் புரட்சியை முன்வைப்பதில்லை. நவதாராளவாத முதலாளித்துவ ஆட்சியை அமைக்கும் உரிமையையே கோருகின்றது. இதற்கு மாறாக தேர்தல் மூலம் புரட்சியை கொண்டுவர முடியாது. அதாவது தேர்தல் மூலம் இடதுசாரியத்தையோ, சமூக ஜனநாயக பொருளாதாரத்தையோ கொண்டுவர முடியாது. தேர்தல் மூலம் முன்வைக்கும் போலி இடதுசாரியமானது, நடைமுறைக்கு வரமுடியாத வெற்றுக் கொள்கைகளும், மக்களை ஏமாற்ற (சிவப்பு) வேசத்தையுமே போட முடியும். இதைத்தான் ஜே.வி.பி. செய்கின்றது.