Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்

தமிழ் இனவாதமானது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கும் வண்ணம் முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. இன்று "சுயநிர்ணயம்" என்பது பிரிவினையாகவும் -தனிநாடாகவும் எப்படி முன்னிறுத்தப்படுகின்றதோ, அதே பொருளில் தமிழ் இனவாதம் இயங்குகின்றது.

தமிழ் இனவாதமானது ஒடுக்கும் தனது குறுகிய அரசியலால் தனிமைப்பட்டு அம்பலமாகி விடுகின்றது. அரசியல் ரீதியாக தன்னை முன்னிறுத்த வக்கற்றுப் போகின்றது. இந்த அரசியல்  பின்னணியில் இனவாதமானது வன்முறை கொண்ட கும்பலாக மாறி, ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுகின்றது. இதுதான் புலிகளின் வரலாறு தொடங்கி தமிழீழம் (ஈழம்) கேட்ட ஈழத்து இயக்கங்களின் பொது வரலாறுமாகும். அதேநேரம் போலி இடதுசாரியமானது இதற்கு முண்டுகொடுக்கும், கோட்பாட்டு அரசியல் விபச்சாரத்தை செய்ததே எமது கடந்த வரலாறாகும்.

புலிகளின் அழிவின் பின் வன்முறை மூலம் அக ஒடுக்குமுறைகளை தொடரும் அதிகாரத்தை இனவாதம் இழந்து இருக்கின்றது. அக ஒடுக்குமுறையே தமிழனின் சமூக அமைப்பாக இருப்பதால், தமிழ் இனவாதம் புலிகளுடன் அழிந்துவிடவில்லை. இனவாதத்தை முன்வைத்து பிழைக்கும் இனவாதக் கும்பல்கள், தமிழ் இனவாதத்தை பாதுகாக்க போராடுகின்றது. இந்த பின்னணியில் தமிழினவாத போலி இடதுசாரியக் கும்பல்களும், பேர்வழிகளும் இனவாதத்தைப் பாதுகாக்கும் போலி இடதுசாரிய கோட்பாடுகளை வாந்தி எடுப்பது இன்னமும் தொடருகின்றது. இந்த வகையில் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு போலி தமிழ் இடதுசாரிய இனவாத தர்க்கங்களைப் பார்ப்போம்.

1.ஒடுக்கப்பட்டவனின் இனவாதம் ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானது என்கின்றனர். அதாவது இரண்டு இனவாதமும் ஒன்றல்ல. ஆகவே ஒடுக்கப்பட்டவனின் இனவாதத்தை ஒடுக்கபட்டவர்கள் ஆதரித்து அணிதிரள வேண்டும்.

2.நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் இனவாதக் கோசமே ஒழிய, ஒடுக்கப்பட்டவர்களின் கோசமல்ல. ஆகவே நாம் இலங்கையர் என்பதை எதிர்த்து, நாம் தமிழர் என்பதை உயர்த்த வேண்டும்.

இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிராக சமவுரிமை இயக்கத்தின் அண்மைய  நடைமுறைப் போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோசங்களை எதிர்த்து, தமிழ் இனவாத போலி இடதுசாரிகளின் பித்தலாட்ட தர்க்கங்களே இவை. தமிழ் இனவாதத்தை தங்கள் அரசியல் தெரிவாகக் கொண்ட போலித் தமிழ் இடதுசாரியமானது, புலிக்கு பிந்தைய வலதுசாரியத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த, இந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றது. இந்த வலதுசாரிய தமிழ் இனவாத தர்க்கத்தின் அரசியல் சாரத்தைப் பார்ப்போம்.

ஒடுக்கப்பட்டவரின் இனவாதமானது ஒடுக்கும் இனவாதத்தை விட முற்போக்கானதா!?

 

ஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி, பதில் இனவாதத்தை முன்வைத்ததே தமிழர்களின் அரசியல் வரலாறு. வன்முறை மூலம் தீர்வை முன்வைத்த புலிகள் தொடங்கி வாக்கு மூலம் தீர்வை முன்வைத்த - வைக்கின்ற தேர்தல் கட்சிகள் வரை, ஒடுக்கும் இனவாதத்தை பிற்போக்காக காட்டி தமது இனவாதத்தை முற்போக்காகவே காட்டியது. இப்படி தமிழினத்தின் இனவாத அரசியல் வரலாறு வக்கற்று அம்பலமாகி வரும் நிலையில், இதற்கு இடதுசாரியம் பூசி நியாயப்படுத்த போலி இடதுசாரியம் முனைகின்றது.

ஒடுக்கப்பட்ட இனத்தின் முன், மூன்று அரசியல் தெரிவுகளே இருக்கின்றது.

1.சர்வதேசியம்

2.தேசியம்

3.இனவாதத் தேசியம்

இதில் இனவாதத் தேசியமானது முதல் இரண்டையும் (சர்வதேசியம் - தேசியம்) தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், மக்களை ஏமாற்றும் போலி இடதுசாரியத்தை கட்டமைக்கின்றது. உதாரணமாக 1980 களில் "சோசலிச தமிழீழம்" என்ற கோசத்தை முன்வைத்த புலிகள் தொடங்கி அனைத்து இயக்கங்களும் தம்மைத்தாம் இடதுசாரிய இயக்கமாக காட்டிக் கொண்டன. போலி இடதுசாரியம் பேசும் அறிவுத்துறையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டது. இந்தப் போலி இடதுசாரியமானது சர்வதேசிய மற்றும் தேசியம் தோன்றுவதை கோட்பாட்டளவில் எதிர்த்ததுடன், சர்வதேசியம் தொடங்கி தேசியம் வரையான இயங்குசக்திகளை வன்முறை மூலம் அழிப்பதை நியாயப்படுத்தியது. இன்று இந்த போலி தமிழ் இடதுசாரியமானது, இன்றும் அதே இனவாத அரசியலுடன் களத்தில் சர்வதேசியத்தை எதிர்க்கின்றது.

இங்கு சர்வதேசியம், தேசியம், இனவாதத் தேசியம் மூன்றும் வெவ்வேறு அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டது. அதாவது வெவ்வேறான வர்க்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. எந்த வர்க்கத்தின் நலனை இது கொண்டுள்ளது என்பதில் இருந்து தான் முற்போக்கையும், பிற்போக்கையும் அளவிட முடியுமே ஒழிய, பொது ஒடுக்குமுறையை எதிர்ப்பதில்  இருந்தல்ல.

1.சர்வதேசியமென்பது உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில், அனைத்துவிதமான அக ஒடுக்குமுறைகளையும் (சுரண்டல் உள்ளிட்ட) களையும் உழைக்கும் வர்க்க ஜனநாயக ஆட்சியைக் கோருக்கின்றது.

2.தேசியமென்பது சுரண்டும் வர்க்க தேசிய முதலாளித்துவ தலைமையிலான ஜனநாயகத்தைக் கொண்டு, பிற ஒடுக்குமுறைகளை ஒழிக்கக் கோருகின்றது. இதன் அரசியல் முரணற்ற ஜனநாயகத்தை சாரமாகக் கொண்டு இருக்கின்றது.

3.இனவாத தேசியமென்பது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம், நவதாராளவாத முதலாளித்துவத்தின் தலைமையில் ஜனநாயகமற்ற பாசிசத்தை இனத்தின் பெயரில் கோருகின்றது.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் கடந்தகாலத்தில் சர்வதேசியத்தையோ, தேசியத்தையோ முன்வைக்கவில்லை. மாறாக தமிழ் இனவாதத்தை முன்வைத்து, பாசிசத்தை கட்டமைத்தது. இதுதான் கடந்த வரலாறும், இன்றைய வரலாறும் கூட.

இனவாதம் என்பது தனக்குள்ளான அக ஒடுக்குமுறைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான இழிந்த நவதாராளவாத சுரண்டல் வடிவமாகும்.  இந்த தமிழ் இனவாதத்தின் அரசியல் சாரமென்பது, யாழ் வெள்ளாளிய சாதிய சமூக மேலாதிக்கத்தின் வாழ்வியல் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் தக்கவைத்துக் கொள்ளுகின்றது. இதை தனது  அரசியல் முன்னோக்காக நகர்த்த முனைகின்றது. அதாவது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் நீட்சியே, இனவாதத் தேசியமாகும். குறைந்தபட்சம் முதலாளித்துவத்தின் முரணற்ற தேசியக் கூறை கூட மறுதளிக்கின்றது. தமிழ் இனத்தின் அக முரண்பாடுகளை களைய மறுப்பதும், தன்னால் ஒடுக்கப்படும் மக்களையும் - பிற இன மக்களை ஒடுக்குவதையுமே, தனது அரசியல் சாரமாகக் கொள்கின்றது.

தமிழ் மக்களை ஒடுக்கும் அதே இனவாதம் போல் பிற இனங்;கள் மேலான ஒடுக்குமுறையை செய்வதுடன், ஒடுக்கும் இனவாதம் செய்வது போல் தன் இனத்தின் அக முரண்பாடுகளை ஒடுக்குகின்றது. இங்கு இந்த இனவாதங்களுக்கு இடையில் வேறுபாடு இருப்பதில்லை. தத்தம் இனம் சார்ந்து, தன் இனத்தை ஒடுக்குவதும், பிற இனங்களை ஒடுக்குவதும் நடந்தேறுகின்றது. இதன் போது தன் இனம் மீதான  பிற இனவாத ஒடுக்குமுறையை எதிராகக் காட்டி, தன்னை அணிதிரட்டுகின்றது. இலங்கையில் சிங்கள - தமிழ் - முஸ்லிம் .. இனவாதங்களின் அடிப்படை இது தான். இங்கு இதில் ஒன்றும் முற்போக்காக இருப்பதில்லை. இவை நவதாராளவாத பொருளாதார அடிப்படையைக் கொண்டு, தன்னை முன்னிறுத்துகின்றது. ஒடுக்கும் இனவாதத்தை எதிர்ப்பதை "முற்போக்காக" என்ற வரையறுப்புக்கு அரசியல் அடிப்படை என்பது ஏகாதிபத்திய நவதாராளவாதமாகும்.

உதாரணமாக ஏகாதிபத்தியங்கள் நடத்திய முதலாம் உலக யுத்தத்தில், போலி முற்போக்கு அரசியல் அளவீட்டைக் காணமுடியும். அன்று தொழிலாளர்களை தத்தம் ஏகாதிபத்திய முதலாளிகளுக்காக போராடச் சொல்லி, வர்க்க அரசியiலைக் கைவிட்ட போலி இடதுசாரியத்தின் நீட்சி தான் இது. அதாவது அன்று தாய்நாட்டை பாதுகாப்பதற்கு தேசபக்தி யுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவதே தொழிலாளி வர்க்கத்தின் கடமை என்று கூறிய, அதே போலி இடதுசாரியம்;. ஏகாதிபத்திய எடுபிடிகளாக மாறி, அதே அரசியல் வரலாற்று வழியில்  போலி தமிழ் இடதுசாரியம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட இனவாதம் "முற்போக்கானது" என்கின்றது.

இங்கு இனவாதம் என்பது எப்போதும் ஒடுக்கும் அல்லது ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களை  சார்ந்து இயங்குவதில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கம் சார்ந்து, தன் இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இன்றைய நவதாராளவாதக் கோட்பாடாகும். அது மனித குலத்திற்கே எதிரானது.

நாம் அனைவரும் இலங்கையர் என்பது ஒடுக்கும் கோட்பாடா?

உழைக்கும் வர்க்கமாகிய நாம் அனைவரும் சர்வதேசியவாதிகள் என்பது ஏகாதிபத்திய கோட்பாடா!?. நாம் அனைவரும் இலங்கையர் என்பது பேரினவாதக் கோட்பாடா!? 

குறுகிய இனவாத தேசியவாதிகள் மட்டும் தான், உழைக்கும் வர்க்கம் சர்வதேசிய  அடிப்படையில் இலங்கையராக அணிதிரள்வதை தடுக்க, தமிழரல்லாத அனைத்தையும் பேரினவாதமாக காட்டுகின்றது.

சர்வதேசிய வழியில் தமிழராக அணிதிரள்வதன் பொருள் கூட, அக முரண்பாடுகளை களைவதையே அடிப்படையாக கொள்கின்றது.

இதன் பொருள் உலகெங்கும் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால், உழைக்கும்  வர்க்கமாக எம்மை அணிதிரட்டுகின்றோம். இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. நிபந்தனை விதிப்பவன், சர்வதேசியவாதி கிடையாது. அவன் இனவாதியாகவும். போலியான தமிழ் இடதுசரியாகவுமே இருக்க முடியும்.

சுரண்டும் வர்க்கம் உலகெங்கும் இருக்கின்றது. அது உலகெங்கும் சுரண்டுவதும், அதே அடிப்படையில் அணிதிரண்டு நிற்பதும் நடக்கின்றது. இனவாதம் அதைச் சார்ந்து தான் இயங்குகின்றது. உழைக்கும் வர்க்கமாக இணைவதை மறுக்க, இனவாத நிபந்தனை விதிக்கின்றது.

இலங்கையர் என்பது சர்வதேசியமாகும். அதை மறுப்பதும், தமிழராக முன்னிறுத்துவதும்  முதலாளித்துவ இனவாதமாகும். அது இன்றைய உலகமயமாதலில் நவதாராளவாத எடுபிடித்தனமாகும். போலி தமிழ் இடதுசாரியம் இதைதான் முன்னிறுத்துகின்றது.