Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதத்திற்கெதிரான இன ஜக்கியம்

இன்று எமது நாடு இனவாததின் காலபோகத்தில் உள்ளது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக விதைக்கப்பட்ட இனவாத அரசியலின் விளைச்சலை இன்று எம்நாட்டு மக்கள் அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதமும், சிறுபான்மையினரிடையே உள்ள தமிழ்த்தேசிய இனவாதமும்தான் எம்நாட்டு மக்களின் "இனவாதவித்தாகும்".

சுதந்திரத்திற்கு முன்பாகவே இனவாத அரசியல் முளைவிட ஆரம்பித்தாலும், சுதந்திரத்தின்பின் மாறிமாறி வந்த இனவாத அரசுகளின் வினையாற்றல்கள்தான் சிறுபான்மையினரிடையே இனவாதமாக தோற்றம் பெற்றது. இதை மலையக மக்களின் குடியுரிமை இல்லாதாக்கப்ட்டதுடனும், தனிச் சிங்களச சட்டத்தின் வருகை கொண்டும் காணமுடியும். "சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா பற்றிய அச்சங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன.

தமிழர்கள் என்றாலே தென்னிந்தியர்கள்தான் எனவும், இப்பார்வை கொண்ட, தென்னிந்தியப் படையெடுப்புக்கள் மூலம் நடைபெற்ற பாதிப்பான சம்பவங்களை சிங்கள மாணவர்கள் இன்றும் சரித்திரமாகவே பாடசாலைகளில் படிக்கின்றார்கள்." ஆகவே சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இந்த அச்ச அரசியலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியே யூ.என்.பி.யும் டி.எஸ். சேனநாயக்காவும் மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை இலங்கையில் பல நடுநிலையான இனவாதமற்ற வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள். மனிதனது பலவீனங்களை ஆளும் வர்க்கங்கள் தமக்கு சாதகமாக பாவிப்பர். இன-உணர்வானது மனிதர்களை வேறுபடுத்தவும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடாமல் தடுக்கவும், பயன்படுத்தப்படும் என்பதை இந்நடவடிக்கைகள் கொண்டு நாம் காணமுடியும்.

அடுத்து தனிச்சிங்கள சட்ட மசோதாவின் வருகைக்கும் சிற்சில வரலாற்றுக் காரணிகளும் உண்டு. பிரித்தானிய ஆட்சியின் கீழ் மதமாற்றத்தைக் கருத்தில் கொண்டு கிறிஸ்தவ-கத்தோலிக்க பாடசாலைகள், அமெரிக்க மிசனரி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் ஆங்கிலம் கற்கும் வசதியும், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் அரச உத்தியோகங்களை பெறும் வாய்ப்பும் பெருமளவாகின. கிறிஸ்தவ நிறுவனங்கள் மத மாற்றத்தை இலக்காகக் கொண்ட போதிலும், நாளாவட்டத்தில் உயர்வர்க்க பௌத்த-இந்துவத்தின் நல்லுறவைப் பேணுவதில் கவனம் செலுத்தின.

நல்லுறவின் நிமித்தம் அமெரிக்க மிசனரிப் பாடசாலைகளில் வருகை கொழும்பு தவிர்ந்த ஏனைய மாகாணங்களை விட, வடக்கில் எண்ணிக்கையில் பெருமளவானது. இதனூடாக இலங்கையின் ஏனைய பகுதிகளைவிட யாழ்ப்பாணம் ஆங்கிலக் கல்வியை கற்கும் வசதியை பெறலாயிற்று. இக்காலத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்து படித்த சிங்கள புத்திஜீவிகளும், சிங்கள அரசியல்வாதிகளும் கணிசமானோர் உளர். அத்துடன் இப்பாடசாலைகளில் யாழின் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆங்கிலக் கல்வியை கற்கும் பெறுபேறைப் பெற்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் இம்மிசனரிப் பாடசாலைகளில் கல்வி கற்க முடியாது என்றொரு பாகுபாடான நிலையையும், தமிழ் மக்கள் மத்தியில் "இருவிதமான தமிழர்கள்" உள்ளனர் என்பதையும் நாம் இவ்விடத்தில் கண்டு கொள்ளவேண்டும். இதில் பிரித்தானிய ஆட்சியினரின் பிரித்தாளும் நடவடிக்கையும் கண்டு கொள்ளமுடியும்.

இவ்வாறான "விசேட" பாகுபாடு கொண்ட ஆங்கிலக் கல்வியூட்டல் நடைமுறை மூலம் கல்வி கற்ற "உயர்-இந்து, உயர் சமூகத்தின் நடுத்தரவர்க்கம்" பிரிட்டிஸ் ஆட்சியின் சகல அரசாங்க செயற்பாட்டகங்களிலும், சகல அரசாங்க-கூட்டுத்தாபனங்களிலும் உயர்-பதவிகள் முதல், சாதாரண பதவிகள் வரை பதவிகளை வகித்தனர். இவ்உயர்-சாதாரண பதவி வகிப்புகள் மலையகத்தையும் விட்டுவைக்கவில்லை.

தவிரவும், மேலும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சீதோஸன நிலையாலும, அதன் பொருளாதாரம் கடும் உழைப்புடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்த காரணத்தாலுமே (ஆங்கிலக் கல்வியைக் கற்றதொரு பெரும் கூட்டம்) இச்சூழ்நிலை உருவாகியது. என்ற உண்மையையும் நாம் மனம் கொள்ளவேண்டும்.

அத்துடன் இக்காரணிகளாலேயே பிரிட்டிஸ் ஆட்சியினரால் ஊக்குவிக்கப்பட்ட இன்னொரு நடவடிக்கையான சிறுவியாபார ஊக்குவிப்பாலும், குடாநாட்டின் பெரும்பாலானோர் வடக்கைவிட இலங்கையின் ஏனைய மாகாணங்களின் பெரு-சிறு வியாபாரநிலையங்களை வியாபித்தனர்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் அரசாங்க உயர்-சிறு உத்தியோகங்களிலும், சிங்களப் பிரதேசங்களில் நடாத்திய பெரு-சிறுவியாபரங்களிலும் செலுத்திய செல்வாக்குகள், அதனுடன்கூடிய மென்போக்கு நடவடிக்கைகள் யாவும் தனிச்சிங்கள சட்டம் வரும்வரையும், அது இனக்கலவரமாக மாறும்வரையும் சிங்கள மக்கள் மத்தியில் எவ்வித பகைமை உணர்வையும் ஏற்படுத்த வழிகோலவில்லை. எனவே இப்பகையுணர்வானது பண்டாரநாயக்காவின் இனவாத அரசியல் கொண்ட பாராளுமன்ற பிரவேசத்திற்கு ஊடாகவே ஊட்டம் பெறுகின்றது.

பண்டாரநாயக்காவின் அரசியல் பிறப்பிடம் இனவாத யூ.என்.பி.யே ஆகும். அக்கட்சி இலங்கையில் சிங்களமே ஆட்சி மொழியாக ஆகவேண்டுமென களனி மாநாட்டில் தீர்மானம் எடுத்த பொழுதும் அதனுடனேயே இருந்தவர். 56-ல் அதிலிருந்து பிரிந்த பொழுது, யூ.என்.பி யின் அடிப்படைக் கொள்கையை (தனிச்சிங்களத்தை) தானே தத்தெடுத்துச் சென்று அதை இனவாத அரசிலாக்கி, தன் பாராளுமன்ற வெற்றியை பெற்றெடுக்கின்றார்.

இனவாத அரசியலாளர்கள் நாட்டு மக்களுக்கு நாட்டின் உண்மை நிலைகளை (அரசியல்-பொருளாதார-வேலையில்லா-வெளிநாட்டு-உள்நாட்டுக்கடன், இதனுடன் பின்னிப்பிணைந்த ஏனையவைகள்) உள்ளவாறு சொல்லமுற்படமாட்டார்கள். சொல்லமுற்பட்டால, மக்கள் இவர்களை இல்லாதாக்கிவிடுவார்கள். அதற்காக தங்கள் அரசியலை தொடர, பொய்களால் உண்மைகளை மூடிமறைக்கவே முற்படுவர். தவிரவும் தொடர் இனவாத அரசியல் கொண்டு பிழைக்கவும், அதைத் தொடரவும் சாதிய-இன-மத-மொழிப் பிரச்சினைகளை மக்களின் பிரதான முரண்பாடுகளாக்கி, மக்களை தங்களுக்குள் மோதவிடுவர்.

இந்நிலையில் மேற்சொன்னவைகளை தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதில் தமிழ் இனவாதத் தேசியமும், சிங்களப் பேரினவாதத்திற்கு சளைத்தவர்கள் அல்லர். சிங்கள இனவாதத்தை தமிழ் மக்களுக்கு இலகுவாக இனம் காட்டும் இவர்கள, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இனவாதங்களையும் இதில் தங்களுக்கு உள்ள "போரினவாத"ப் பாத்திரத்தையும் பூசிமெழுகியபடி, மிகத்தந்திரமாகவே தம் இனவாத அரசியலை செய்து வருகின்றனர்.

இதில் இவர்களின் "பேரினவாத" அரசியல் திமிரை மலையக-முஸ்லிம் மக்களிற்கான அரசியல் செயற்பாட்டிற்கு ஊடாகவும், அம்மக்களின் அபிலாஷைகளை மிக இலேசாக நிராகரிக்கும் தன்மைகளுக்கு ஊடாகவும் காணமுடியும். அத்தோடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தாழ்த்தபட்ட மக்களை அடக்கி-ஒடுக்கி நடாத்தும் அடிமை அரசியலுக்கு ஊடாகவும் காணமுடியும்.


இங்கு ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தமிழ் இனவாதத் தேசியம் எப்பொழுதும் தமிழ் மக்களது பிரச்சினைகளை இனவாத உணர்வலைகளுக்கு ஊடாக கிளர்ந்தெழவைக்கும். அதேவேளை தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாதாரண சிங்கள மக்களுக்கும், சிங்கள முற்போக்கு சக்திகளுக்கும் எடுத்துச் செல்லாமலும், சொல்லாமலும் திட்டமிட்டு தனிமைப்படுத்தி அந்நியமாக்கும். இவ்வகையில் சிங்கள-தமிழ் இனவாதிகள் எனப்படுவோர் ஏகப்பெரும்பான்மையான சாதாரண மக்களின் நலன்களுக்கு எதிரான பிரதான எதிரிகள் ஆவர். இவர்களின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கையின் அரசியல் விடுவிக்கப்பட வேண்டும். சமூக விஞ்ஞானக் கண்ணோட்ட நோக்கில் எம் நாட்டின் சாதாரண சிங்கள-தமிழ் மக்கள் இனவாதிகள் அல்லர். சிலவேளைகளில் சமூக நெருக்கடிகளின் போது, இனவாதத்திற்கு ஆட்படுகின்றனர். ஆனால் தாங்கள் இனவாதத்திற்குள் ஆட்படுவதற்கான தாற்பரியங்களைக் கணடறிந்தால், இனவாதத்தையும், அதற்கான இருப்பையும் இல்லாதாக்குவார்கள். ஏனெனில் எம்மக்களே எம்நாட்டு வரலாற்றின் உந்துசக்தி!