Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அநியாயம் நிறைந்த உலகில் நமக்கு மட்டும் நியாயம் வேண்டிக் கேட்க முடியாது – அருந்ததி ராய்.

இந்திய அரசின் போருக்கு எதிராக  லண்டன் பொதுக் கூட்டம்: 12 ஜூன் 2011

 

மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் கனிம வளங்களை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்தியப் பெரும் வணிக நிரறுவனங்களுடன் இணைந்து கொள்ளையிட்டுச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இப்படி பல ஆயிரக்கணக்கிலான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ள மாநிலங்களில் ஒரிசா, சத்திஸ்கார், ஜார்கண்ட், ஆந்திரம் போன்ற பழங்குடிகள் வாழும் பகுதிகள் முக்கியமானவை. தங்கள் வாழ்வும் வளமும் பறிபோவது கண்டு இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடிகள் போராடிவருகின்றனர். மலைகள, ஆறுகள், நிலம் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரங்கம் தோண்டவும், ஆலைகள் அமைக்கவும் இந்திய அரசு விற்று வருவது கண்டு சகிக்காத இந்தப் பகுதி மக்களின் போராட்டம் முன்னெப்போதும் காணாத பெரும் வீச்சைக் கண்டு வருகிறது. ஏற்கனவே வறுமையில் உழலும் இந்த மக்கள் கொடுரமான முறையில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போராடும் மக்கள் மீது போலீசைக் கொண்டு நடத்தும் அடக்குமுறைகள் இந்திய அரசுக்கு புதியவை அல்ல. அனால் தற்போதைய அடக்குமுறையில் காந்தியவாதிகள், ஜனநாயக இயக்கங்கள், அரசு சாராத நிறுவனங்கள், இன்ன பிற சில்லறை அரசியல் கட்சிகள் அனைவரும் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.

 

சிதம்பரம் தலைமையிலான உள்நாட்டு அமைச்சகம் ஏறக்குறைய சாட்சிகள் இல்லாத, அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்திய ராணுவத்தையும் விமானப் படையையும் இறக்கி விட்டுள்ளது. ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவமும், போலிசும், ராணுவப் படிகளும், விமானப் படைப் பிரிவுகளும் இந்த மாநிலங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்திய அரசின் புள்ளி விபரப்படி நாட்டின் மிகவும் வறுமை வாய்ந்த இந்தப் பகுதியில் உலகின் அதி நவீனப் படைகள் ராக்கெட்டுகள், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் அடங்கிய படைகள் இறக்கப்பட்டுள்ளனர். அனைத்து இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அந்தப் பகுதியை விட்டு விரட்டியடிக்கப் பட்ட பின்னர் மாவோயிஸ்டுப் புரட்சியாளர்கள் போராடும் மக்களுக்கு தலைமையளித்து வருகின்றனர். எனவே, இந்தப் பழங்குடி மக்களின் எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் மீதான போர் என்று சிதம்பரம் வருணிப்பது ஒரு வகையில் உண்மையே.

ஏகாதிபத்தியப் போர்

எப்படிப் பார்க்கிலும், இந்தப் போர் ஏகாதிபத்தியங்களுக்காக அதன் ஏவலர்களான மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் நடத்தும் போர். இதன் நோக்கங்களை ஐரோப்பிய மக்களுக்கு விளக்கும் முகமாக இங்கிலாந்து நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்திய உழைப்பாளிகள் சங்கம் ((Indian workers Association-Great Britain) பொதுக் கூட்டங்கலையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி மாணவர்கள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் பிரச்சாரம் வருகிறது. இந்தக கொடூரமான போர் குறித்த விழிப்புணர்வு ஐரோப்பிய நாடுகளின் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று சேரும் வண்ணம் பிற சர்வதேச அமைதி இயக்கங்களுடன் இணைந்து லண்டன் நகரில் ஒரு பெருந்திரளானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமது மனித நேயக் கடமையை நிறைவேற்ற வேண்டி ஐரோப்பியப் பொதுமக்களை கேட்டுக கொள்ள இந்தியாவிலிருந்து அருந்ததி ராய், ஸ்வீடன நாட்டு எழுத்தாளர் ஜேன் மிர்தால், நேபாளப் புரட்சி இயக்கத்தின் செயல் வீரர்கள் கலந்து கொண்டு பேசினார். இக்கொட்டத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.

ஜேன் மிர்தால்

ஸ்வீடன நாட்டின் பிரபலமான பொருளாதார அறிஞர் குன்னர் மிர்தால் அவர்களின் மகனும் பிரபல எழுத்தாளருமான ஜேன் மிர்தால் கடந்த நாற்பது வருடங்களாக இந்தியப் புரட்சிகர இயக்களைக் குறித்து மேற்குலகில் எழுதியும் பேசியும் வருபவர். இந்தியப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து மாவோயிஸ்டுக் கட்சியை உருவாக்கிய பின்னர் அதன் செயலர் கணபதி அவர்களை முதன் முறையாக நேரடியாகக் கண்டுபேசி மேற்குலகின் பிரபல பத்திரிகைகளில் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரும் பணிகளை விரிவாக எழுதிவருபவர். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காக எவ்வாறெல்லாம் பசப்புரைகளைப் பேசி கொள்ளையடித்து வருகின்றன; ஈவிரக்கம் அற்றவகையில் படுகொலைகளை நடத்தி வருகின்றன என்பது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

பழங்குடியினர் மீதான இந்திய அரசின் இந்தப் போர் காலனிய ஆதிக்கத்தின் துவக்கத்தில் அதன் பிதாமகனும் காட்டு மிராண்டியுமான கொலம்பஸ் தலைமையில் ஐரோப்பியர்கள் நடாத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்பானதே. காலனியாதிக்கக் காலத்தியச் சட்டங்களைப் பின்பற்றியே இன்னமும் இந்திய அரசு பழங்குடியினரின் நிலங்களைப் பிடுங்கி அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கி வருகிறது. நடைமுறையில் பழைய காலனியச் செயல்பாட்டுக்கும் இப்போதைய செயல்முரைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை.

இந்திய அரசு வடக்கே உத்தரப் பிரதேசம் தொடங்கி தெற்கில் ஆந்திரம் வரையில் ஒரு காலனியாதிக்க அடக்குமுறை அரசு போலவே வதைத்து வருகிறது. இங்கே நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரிசாவின் வளமான வெற்றிலைக் கொடிக்கால் விளையும் நஞ்சை நிலங்களை கொரியாவின் போஸ்கோ கம்பெனிக்காக சுரங்கம் அமைக்க இந்திய அரசு பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது ஆயிரம் படையினர் (இருபது பட்டாலியன்கள்) குவிக்கப்பட்டு விவசாயிகள் நாளுக்கு இத்தனை விவசாயிகள் என்ற வகையில் விரட்டப்பட்டு வருகிறார்கள்.

மக்களின் நிலங்களைப் பிடுங்கி தனியாருக்கு அளிக்கும் இந்திய அரசு இதை ‘பொதுப் பணிக்காக’ செய்வதாகச் சொல்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை அளிக்கும் இப்பணியை எப்படி பொதுப் பணி என்று சொல்வது?

இத்தகைய வன்முறை இந்திய மக்களை மட்டும் அல்லாது இந்தியா என்ற நாட்டின் இருப்பையே கேள்விக்குரியதாக்கி வருகிறது.

ஆண்டுக்குப் பத்து சதம் வளருவதாக சொல்லப்படும் இந்தியாவில் உண்ண உணவின்றி நூற்றுக்கு நாற்பது பேர் வறுமையில் உழல்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி இந்தியாவுக்குத் தேவையில்லை, மாறாக இந்திய மக்களுக்கு உணவளிக்கும் விதமான சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை.

இந்திய மக்களின் வீரம் செறிந்த எதிர்ப்புப் போராட்டங்களை இந்தியாவில் மட்டும் அல்லாது, ஐரோப்பிய நாடுகளில்  உள்ள ஊடகங்கலும் முழுதும் மறைத்து செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. இப்படி செய்திகளை மறைத்து வருவது இங்கே ஐரோப்பாவில் ஒன்றும் புதிய வழக்கம் அல்ல. முதல் உலகப்போருக்கு முந்திய காலத்திலும், அதன் பின்னர் இரண்டும் உலகப் போருக்கு ஜெர்மனியின் ஹிட்லர் தயாராகிக் கொண்டிருந்த காலத்திலும் இதுதான் நடந்தது.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயப்பெல்ஸ் கோண்டு வந்த பத்திரிக்கை ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் இதைத்தான் செய்தது. கூடவே, பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளம், கைக்கூலி, அந்தஸ்து இன்று அந்த வேலையை திறம்படச் செய்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஆதரவு அளித்த எந்த ஒரு பத்திரிகை ஆசிரியரும் தண்டிக்கப்படவே இல்லை. அவர்கள் அளித்தது வந்த பொய்ச் செய்திகள் தான் போருக்கு ஊக்கம் அளித்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் அது தான் இன்று இங்கே ஐரோப்பாவிலும் அங்கே இந்தியாவிலும் நடக்கிறது.

உலகம் முழுக்க உள்ள அரசுகள் இந்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. நடுநிலை வகிப்பதாகச் சொல்லும் ஸ்வீடன போன்ற நாடுகள் கூட ஏகாதிபத்தியப் போர்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, இந்திய அரசின் இந்தப் போரை ஐரோப்பாவில் உள்ள நியாயம் அறிந்த நல்ல உள்ளம படைத்தோர் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கடமைப் பட்டு உள்ளார்கள்.

அருந்ததி ராய்

மத்திய இந்தியாவில் இந்திய அரசு நடத்தி வரும் போர் குறித்து எழுதியும் பேசியும் பிரபல இந்திய நூல் ஆசிரியர் அருந்ததி ராய் சிதம்பரம் தலைமையில் நடத்தப் பட்டு வரும் இந்த மனிதாபிமானம் அற்ற இந்தப் போரின் கொடுமை குறித்து விரிவாக விளக்கினார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களில் நடந்து வந்த போர் இன்று இந்தியாவின் இதயத்திற்கு வந்திருக்கிறது. போராடும் தேசிய இனங்களான நாகர்கள், மிசோக்கள், மனிப்புரிகள், அஸ்சாமிகள், போடோக்கள், காஷ்மிரிகள் மீது இந்திய அரசு அறுபது ஆண்டுகளாக நடத்தி வரும் போரின் தொடர்ச்சியாகவே இந்தப் போரையும் நாம் பார்க்க வேண்டும். இந்தத் தேசிய இனங்கள் அனைத்தும் சிறுபான்மையான பழங்குடிகள் அதிலும் பலர் கிறித்தவம் அல்லது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிருபானமையினர்.

எவ்வாறு அஸ்சாமிகளின் நில வளமும் கனி வளமும் இந்திய அரசுக்குத் தேவையோ அதைப் போலவே, மத்திய இந்தியப் பழங்குடிகளின் நிலம் தேவை. எனவே தான் இந்தப் போர் நடக்கிறது.

இரண்டு லட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு நிற்கும் போது மக்கள் எப்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த முடியும். எனவே, ஆயுதம் தாங்கிய போர் என்பது தவிர்க்க முடியாதது. அதைத்தான் மாவோயிஸ்டுகள் தலைமையில் பழங்குடிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். நியாயம் மிக்க இந்தப் போராட்டத்தை சிதம்பரம் கொடுமையான வழியில் ஒடுக்கி வருகிறார்.

தான் நிதி அமைச்ச்சராவதற்கு முதல் நாள் வரை வேதாந்தா என்ற சுரங்கக் கம்பெனியின் இயக்குனராக இருந்தவர் சிதம்பரம். பல காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நில ஒதுக்கீடுகள் இவர் அமைச்சரானவுடன் மிக விரைவில் நடைபெறுகிறது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்திய அரசின் அமைச்சர்களை இயக்குவது யார் என்று.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில காலம் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசும் போது இந்தியாவை அடிமையாக்கி ஆட்சி புரிந்த இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். காலனிய ஆட்சி வழங்கிய சட்டங்கள், போலிஸ், நீதிமன்றங்கள் அனைத்தும் பிரிட்டன் இந்தியாவிற்கு வழங்கிய கொடிகள் என்றும் அவை மிகவும் உதவியாக இருப்பதாகவும் மன்மோகன் சிங் புகழ்ந்தார். அது உண்மை தான்- அதே காலனிய காலச் சட்டங்கள், நீதி மன்றங்கள், போலிஸ், ராணுவம் போன்ற அமைப்புகளைக் கொண்டு தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் மன்மோகன் புகழ்ந்த காரணத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இலங்கைப் போரில் இந்தியா

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடும் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் தற்சமயம் இந்தியா அரசும், அரசியல்வாதிகளும் காத்துவரும் அமைதி பற்றியும் அருந்ததி பேசினார்:

தமிழ் மக்கள் அனைவரையுமே ஒட்டு மொத்தமாகப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு பெரும் பேரழிவு ஆயுதங்களுடன் குண்டு மழை பொழிந்து ஒரு இனத்தையே அழிக்கும் போர் அங்கே நடந்திருக்கிறது.  மருத்துவமனைகள் குறி வைத்துத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக பெருந்திரளான மக்கள் கொன்று ஓழிக்கப்பட்டிருக்கின்றர். ஆனால், இதுபற்றி இந்தியாவில் அனைவரும் மவுனமாக இருந்து வருகின்றனர்.

இந்த மயான அமைதியில் உறைந்திருப்பது  கொலைகளுக்கு உதவியாக இருந்த இந்திய அரசு மட்டும் அல்ல. கூடவே, இந்திய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகைகள், மக்கள் உரிமை அமைப்பினர், ஜனநாயகவாதிகள், போராடும் மக்கள் இயக்கங்கள் கூட இது விசயத்தில் மவுனமாக இருக்கின்றனர். இந்த மனச் சாட்சியற்ற மவுனம் பல காலம் இந்திய மக்களை வதைக்க இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள  வேண்டும்.

சின்னஞ்சிறு நாடான இலங்கை பல பத்து ஆயிரம் மக்களைக் கொன்று தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக் கொண்டது போலவே தாமும் தாம் விரும்பும் ஒடுக்குமுறைகளைச் சாதித்துக் கொள்ளவே இந்தியா போன்ற பிற தெற்காசிய நாட்டு அரசுகள் இவ்வாறு அமைதியாக இருந்து வருகிறார்கள். நமக்கு வருத்தம் தரும் வகையில் பிற போராடும் இனங்களான காஷ்மீரிகள் போன்றோர் கூட இதில் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனாலும், இது சரியல்ல.

இலங்கைப்போருக்கு நேரடி உதவி செய்த சீன, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசியாவில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் தாமும் இலங்கையின் வழியைப் பின்பற்றுவது பற்றி மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இலங்கைத் தமிழ் மக்கள் மீது நடந்தது போன்ற ஒரு இன ஒழிப்பு இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பதால் இந்திய அரசின் அரசியல் கட்சிகளின் மவுனம் ஒன்றும் புரியாததல்ல.

இந்த மவுனத்தை, நாம் அனுமதிக்க முடியாது, அதை உடைத்தே ஆக வேண்டும். ஒரு இனமோ அல்லது ஒரு பிரிவினரோ அழிக்கப்படும்போது நாம் அதைக் கண்டனம் செய்யாவிட்டால் சில காலம் கழித்து அது நம் மீதே வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அதைக் கண்டித்தே ஆக வேண்டும். அநியாயங்கள் நிறைந்த இந்த உலகில் நமக்குத் தேவையான நியாயத்தை மாத்திரம் நாம் கேட்டுப் பெற்று கொண்டு விட முடியாது. நியாயம் என்பது அனைவருக்குமான தேவை, எனவே, அனைவருக்கக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

பவானி

18/06/2011